Tuesday, July 17, 2018

Nuncupative Will - வாய்மொழியாகச் சொல்லிய உயில்


Nuncupative Will (வாய்மொழி உயில்):

நன்குபேட்டிவ்வாய்மொழியாகஎழுதாதஎன்று பொருள். Nuncupative Will என்பதை சட்டத்தின் பொருளில், “வாய்மொழியாகச் சொல்லிய உயில்என்பர். பொதுவாக உயில் என்பது எழுதி வைக்கும் பத்திரம். ஒருவர், தனது கடைசி ஆசையை உயில் மூலம் எழுதி வைப்பார். ஆனால், போர்களத்தில் இருக்கும் போர் வீரர்கள், தன் நெருக்கடியான நிலையில் இருக்கும்போது, தன் உடன் இருக்கும் நண்பர்களிடம், தன் கடைசி ஆசையைச் சொல்லி வைப்பர். அப்படி சொல்லி வைக்கும் உயில் போன்ற ஆசைகளுக்குநன்குபேட்டிவ் உயில்என்பர். இதை சட்டமும் அனுமதிக்கும். இப்படிப்பட்ட அவசர வாய்மொழி உயில்களுக்கு, சாதாரண உயில்களுக்கு தேவைப்படும் சாட்சிகள் அவசியமில்லை. அதை எழுதி வைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. நண்பரிடம் சொன்னால் மட்டும் போதும்.
காலியஸ் என்ற கிரேக்க போர் வீரன் ஏதென்ஸ் நகரில் இருந்தான். அவன் 5-ம் நூற்றாண்டில் ஆட்சியும் செய்தான். இந்த காலியஸை, காலிஸ்-2 என்பர். ஏனென்றால், இவனின் தாத்தா பெயரும் காலியஸ். எனவே அவரை காலியஸ்-1 என்பர். காலிஸ்-2, 490-ம் ஆண்டு மரத்தான் போரில் கலந்து கொண்டான். அந்த போரில் எதிரி ஒருவன், தங்கப் புதையல் இருப்பதை காட்டிக் கொடுத்தாகவும், அவனை கொன்று இந்த தங்கப் புதையலை ஒரு சாக்கடைக் குழியில் இருந்து காலியஸ் எடுத்துக் கொண்டதாகவும் பேசிக் கொள்வர். அதனால், அப்போது இருந்த புலவர்கள், காலியஸைசாக்கடை பணக்காரன்என்று வஞ்சப் புகழ்ச்சியில் பாடல்கள் பாடினராம். Laccopluti (or enriched by the ditch) என்று அவனைப் புகழ்வார்களாம். இந்த காலியஸ், ஒருமுறை தன் எதிரிகள் ரகசியமாக தன் தலையை கொய்வார்கள் என்று பயந்து, அதனால் ஏதென்ஸ் மக்கள் சபையிலேயே தன் உயிலை வாய்மொழியாக எல்லோரும் கேட்கும்படி கூறி இருக்கிறான்.
ரோமன் சட்டம் வந்த காலத்தில், அப்போது உயிலை வாய்மொழியாக, குறைந்தபட்சம் ஏழு பேர்கள் முன்னிலையில் சொல்லி வைக்க வேண்டுமாம். அப்படி சொன்ன உயில் வார்த்தைகளை மாற்ற முடியாதாம். இப்படிப் பட்ட உயில்களுக்குத் தான் அப்போது நன்குபேட்டிவ் உயில் என்று பெயர் ஏற்படுத்தி இருந்திருக்கிறார்கள்.
பொதுவாக, ஆரம்ப காலங்களில், தனக்கு வாரிசு இல்லாதவர்கள் மட்டும் இப்படிப்பட்ட உயில்களை சொல்லி வைத்து இருக்கிறார்கள். வாரிசுகளுக்கு சொத்து இல்லை என்றோ அல்லது குறைவான சொத்து கொடுத்து இருந்தால், அப்படிப்பட்ட உயிலைச் சொன்னவரின் மனநிலை சரியாக இருந்ததா என்ற கேள்வியும் எழுமாம்.
பொதுவாக, சாதாரண மக்கள் உயில் எழுதும் /சொல்லி வைக்கும் பழக்கம் அப்போது இல்லை. போருக்குச் செல்லும் போர் வீரர்கள் மட்டுமே இப்படிப்பட்ட உயில் வார்த்தைகளைச் சொல்லும் பழக்கும் இருந்திருக்கிறது. பின் காலங்களில் சாதாரண மக்களும் உயில் எழுதி வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர். அப்படி எழுதி வைக்கும் உயில்களில் சாட்சியாக இருப்பவர் தகுதி உடையவராக இருக்க வேண்டுமாம். பெண்கள், அடிமைகள் சாட்சியாக இருக்க முடியாதாம். இப்போது இருந்த வழக்கப்படி, ஆண்களாக இருந்தால் அவர்களின் 14 வயதுக்குப் பின்னரே உயில் எழுத முடியுமாம். பெண்களாக இருந்தால் அவர்களின் 12 வயதுக்கு பின்னர் எழுதலாமாம்.
பழைய ஏற்பாடு நூலில் நோவா உயில் ஏழுதி வைத்தாக சொல்லப்படுகிறது. அதேபோல் ஜாக்கப் தன் சொத்துக்களை அவரின் மகன் ஜோசப்-க்கு உயில் மூலமே கொடுத்திருக்கிறார். சர்ச் சட்டங்கள், ரோமன் சட்டத்தை ஒட்டியே வந்துள்ளன. எந்த தேவாலயத்தையும் உயில் மூலம் கொடுக்க முடியாது. சர்ச் சட்டப்படி, ஒரு உயிலை பாதிரியார் முன்னிலையில் எழுதி, இரண்டு சாட்சிகள் முன்னலையில் கையெழுத்து செய்து வைக்க வேண்டுமாம்.
உயில் எழுதிய பின்னர், ஏதாவது அதில் சேர்க்க வேண்டும் என்றால், துணையாக, கொடிசில் என்று பத்திரம் எழுதி அத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ரோமன் சட்டப்படி, ஒரு உயிலில் அசையும் சொத்தையும் அசையாச் சொத்தையும் கொடுக்கலாம். ஆனால் ஆங்கிலேய சட்டப்படி, பொருள்களை கொடுக்க வேண்டும் என்றால் லிகசி அல்லது பெக்குஸ்ட் (legacy or bequest) என்று பரிசாக கொடுக்க வேண்டும். அசையாச் சொத்துக்களை கொடுக்க வேண்டும் என்றால் டிவைஸ் (devise) என்று ஏற்படுத்தி வைக்க வேண்டுமாம். ரோமன் உயில்கள் எழுதி வைத்த நாளில் இருந்தே பேசப்படும் வகை சேர்ந்தது. ஆனால் ஆங்கிலேய உயில்கள் உயிலை எழுதி வைத்தவர் இறந்த பிறகே பேசப்படும் வகையைச் சேர்ந்தது. ரோமன் உயில்கள் எழுதிய பின்னர், அவர் சம்பாதித்த சொத்துக்களை சேர்க்க முடியாது. ஆனால், ஆங்கிலேய உயில் வகைகளில், இனி சம்பாதிக்கும் சொத்துக்களையும் சேர்த்து உயில் எழுதி வைக்கலாம். ஆங்கிலேயர்கள் உயில்கள் சட்டம் 1540 என்று கொண்டு வந்தனர். The Statute of Wills, 1540.
வாய்மொழியாகச் சொல்லிய உயிலை நன்குபேட்டிவ் உயில் என்பர். அதேபோல், தன் கையாலேயே எழுதிய உயிலை ஹாலோகிராபிக் உயில் (Holographic Will) என்பர். இந்த ஹாலோகிராபிக் வகை உயிலை தன் கையாலேயே அவரே எழுதி வைப்பதால், அவர் தனியே கையெழுத்து ஏதும் இந்த உயிலில் தனியாக போட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஆரம்ப கால உயில் என்று யோசித்தால், 1236-ல் மன்னர் ஹென்றி-3 காலத்தில் உயில் வழக்கம் வந்ததாக நம்பப்படுகிறது. ஒரு விதவை, தன் நிலத்தில் உள்ள பயிர்களை பொறுத்து உயில் எழுதி வைத்தாராம்.
ஆங்கிலேய சட்டமான The Wills Act 1837 வந்தபிறகு, 21 வயது முடிந்த ஒருவர்தான் உயில் எழுதி வைக்க முடியும். ஒவ்வொரு உயிலையும் எழுதி, அதன் அடியில் கையெழுத்துச் செய்ய வேண்டும் என்றும், குறைந்தது இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கையெழுத்தும் செய்திருக்க வேண்டும் என்று சட்டம் வந்தது. இதில், சாட்சிக்கு சொத்து கொடுத்திருந்தாலும், அல்லது சாட்சியின் மனைவி/கணவருக்கு சொத்து கொடுத்திருந்தாலும் அந்த உயில் செல்லாமல் போய்விடும்.
பின்னர் வந்த சட்டங்களில், உயில் எழுத நினைப்பவர் 18 வயது முடிந்தவராக இருக்க வேண்டும் என்று மாற்றம் ஏற்பட்டது.