Sunday, February 14, 2016

Justice ஆன்டனின் ஸ்கேலியா

ஜஸ்டிஸ் ஆன்டனின் ஸ்கேலியா (Justice Antonin Scalia)

அமெரிக்கா சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக இருந்த நீதிபதி ஸ்கேலியா நேற்று (13.2.2016) இயற்கை மரணம் அடைந்தார்; தூக்கத்திலேயே இவரின் உயிர் பிரிந்ததாம்; இவர் சுமார் 30 வருடங்கள் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றினார்;

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டை சுருக்கமாக “ஸ்காட்டஸ்” SCOTUS என்பர்: அதாவது The Supreme Court of The United States  என்பதன் சுருக்கம்; அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் 9 நீதிபதிகள் இருப்பர்; அதில் ஒருவர்தான் இறந்த நீதிபதி ஆன்டனின் ஸ்கேலியா; இவருக்கு 79 வயதாகிறது; 

இவரின் பெற்றோர்கள் இத்தாலி நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள்; அமெரிக்காவில் குடியேறியவர்கள்; எனவே இவர் இத்தாலிய-அமெரிக்கர் ஆவார்; இவருடைய தகப்பனார் இவர் பிறக்கும்போது கிளார்க்காக வேலை பார்த்தார்: பின்னர் கல்லூரி பேராசிரியர் ஆகிவிட்டார்; இவரின் தாயார் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை; நன்றாகப் படிக்கும் மாணவர் இவர்; பட்டப்படிப்பில் முதல் மாணவராகவும் வந்தார்; ஸ்காலர்ஷிப் பெற்று படித்தவர்; ஹாவர்டு பல்கலையில் சட்டம் படித்தவர்; வக்கீலாக இருந்தார்; சட்டக் கல்லூரியில் ஆசிரியராகவும் இருந்தார்; 

அமெரிக்க ஜனாதிபதி ரொனால்டு ரீகன் பதவி காலத்தில் இவர் சொலிசிட்டர் ஜெனரலாக வர ஆசைப்பட்டு, அது முடியாமல் போகவே, கொலம்பியா மாவட்ட சர்க்யூட் கோர்ட்டின் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, பின்னர் சுப்ரீம் கோர்ட்டுக்கு 1986ல் நியமிக்கப்பட்டு, 30 ஆண்டுகள் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்து பல வழக்குகளில் நீதி வழங்கி, நேற்றுடன் அமெரிக்க மண்ணிலிருந்து மறைந்தார்; அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல கர்த்தர் அருள் புரியட்டும்;

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதிகளை, அமெரிக்க ஜனாதிபதி பரிந்துரை செய்வார்; அதை அமெரிக்க செனட் சபை அங்கீகாரம் அளிக்கும்; அப்படி நியமிக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதி தன் ஆயுள் உள்ளவரை நீதிபதியாக இருக்கலாம்; அவராக விலகிக் கொள்ள நினைத்தால் விலகிக் கொள்ளலாம்; வயது உச்சவரம்பு ஏதும் கிடையாது; (இந்தியாவில் வயது உச்சவரம்பு உள்ளது);


Friday, February 12, 2016

ஸ்டாம்புகள் பலவகை: (Impressed Stamps)

ஸ்டாம்புகள் பலவகை: (Impressed Stamps)
ஸ்டாம்புகள் பல வகைகளில் உள்ளன; “முத்திரைத்தாள்கள்” என்று ரூபாய் நோட்டில் காணப்படுவதுபோல தலைப்பகுதி பேப்பர் இருக்கும், அதன் கீழ் எழுதுவதற்கான இடம் காலியாக உள்ள பேப்பராக இருக்கும்: இந்த பேப்பர்களில் இந்திய மத்திய அரசின் முத்திரை இருக்கும்; இதை “Impressed Stamps” என்பர்; இந்த முத்திரைத் தாள்களிலும் பல வகை உண்டு; சொத்துக்களை வாங்கும்போது, பத்திரம் எழுதிப் பதிவு செய்து கொள்வதற்கு உள்ள முத்திரைத் தாள்களை “நான்-சுடீஷியல்” Non-Judicial ஸ்டாம்ப் பேப்பர் என்று சொல்கிறார்கள்; அதாவது “நீதிமன்றம் சாராத அல்லது நீதிமன்றம் சம்மந்தமில்லாத ஸ்டாம்பு பேப்பர் என்று இதன் பொருள்; கோர்ட்டில் வழக்கு போட வேண்டும் என்றால் கோர்ட்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்: அவ்வாறு கோர்ட் வழக்குகளுக்கு செலுத்தும் கட்டணத்தை இதேபோல ஒருவகை ஸ்டாம்ப் பேப்பர் மூலமே செலுத்த வேண்டும்; அத்தகைய கோர்ட் பீஸ் ஸ்டாம்புகளுக்கு “சுடீஷியல் ஸ்டாம்ப்” Judicial Stamps என்று சொல்வர்;
சொத்து வாங்கும்போது உபயோகிக்கும் “நான்-சுடீஷியல் ஸ்டாம்ப் பேப்பரும்”, கோர்ட்டில் வழக்குப் போடும்போது கட்டணமாக செலுத்தும் “சுடீஷியல் ஸ்டாம்ப் பேப்பரும்” கண்ணால் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருக்கும்; ஆனால், சொத்துக்கு உபயோகிக்கும் பேப்பரில் Non-Judicial என்று எழுதப்பட்டிருக்கும்; கோர்ட்டுக்கு கொடுக்கும் ஸ்டாம்ப் பேப்பரில் Judicial Stamps என்று எழுதப்பட்டிருக்கும்;
இவை இல்லாமல், லேபில்கள் என்னும் ஒட்டுவில்லைகள் இருக்கும்; இதை அட்ஹெசிவ் ஸ்டாம்ப் Adhesive Stamps என்பர்; அதில் பல வகைகள் உண்டு; அந்தந்த தேவைக்கு ஏற்ப இந்த ஒட்டுவில்லைகள் இருக்கும்; பணம் கொடுக்கல் வாங்கல் செய்யும்போது, ரெவின்யூ ஸ்டாம்ப் என்னும் ஒட்டு வில்லைகளை பயன்படுத்த வேண்டும்; கடன் வாங்கும்போது, புரோ நோட் எழுதுவதற்கு இந்த ரெவின்யூ ஸ்டாம்ப் உபயோகப்படும்; பணம் பெற்றுக் கொண்டேன் என்று சொல்லும் ரசீதுகளுக்கும், சம்பளம் வாங்கிக் கொண்டேன் என்று ரசீது கொடுப்பதற்கும் இந்த ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்ட வேண்டும்; ரூ.5,000 பணத்துக்கு குறைவான பணத்துக்கு ரசீது கொடுத்தால் அந்த ரசீது பேப்பரில் இந்த ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்ட தேவையில்லை; அதற்குமேல் உள்ள அதாவது ரூ.5,000-க்கு மேல் பணம் பெற்றதற்கு கொடுக்கும் ரசீதுகளுக்கு கண்டிப்பாக ரூ.1 மதிப்புள்ள ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்ட வேண்டும்: அதற்குமேல் எவ்வளவு பணமாக இருந்தாலும் இந்த ஒருரூபாய் ரெவின்யூ ஸ்டாம்பே போதும்; புரோ நோட் என்னும் கடன் பத்திரத்துக்கு ஒரு வெள்ளை பேப்பரில் கடன் பெற்றதையும் அதை திருப்பிச் செலுத்துவேன் என்று உறுதிகூறி எழுதி அதில் 25 பைசா காசுக்குறிய ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்ட வேண்டும்; எவ்வளவு பணம் கடன் பெற்றாலும் இந்த 25 பைசா  ரெவின்யூ ஸ்டாம்பே போதும்; அந்த ஸ்டாம்பின் மீது கையெழுத்துச் செய்தால் போதும்; பெரும்பாலும் புரோ நோட்டுக் கடனை, ஒரு ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கொள்கிறார்கள்; இது தவறு; புரோ நோட் கடனுக்கு ரெவின்யூ ஸ்டாம்பே போதும்; அதுதான் சட்டத்தில் சொல்லி உள்ளது; எனவே ஸ்டாம்ப் பேப்பரில் புரோ நோட் எழுதக் கூடாது; அப்படி எழுதினால் அது சட்டப்படி செல்லாது;
இவை இல்லாமல், நோட்டரி வக்கீல் முன்பு எழுதிக் கொள்ளும் அபிடவிட்டுகள், உறுதிமொழிகள் இவைகளில் நோட்டரி வக்கீல் கையெழுத்துச் செய்யும்போது, அதில் “நோட்டரி ஸ்டாம்ப் லேபிள்” Notary Stamp என்னும் லேபிளை ஒட்டி கையெழுத்துப் பெற வேண்டும்;
இவை அல்லாமல், இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு இன்சூரன்ஸ் ஸ்டாம்ப் வில்லைகள் Insurance Stamp என்று தனியே உள்ளது; அதையே அந்த வேலைகளுக்குப் பயன்படுத்த வேண்டும்;
இவை அல்லாமல், கம்பெனிகள் வைத்திருக்கும், விற்பனை செய்யும் ஷேர்களை விற்கும்போதும், வாங்கும்போதும், அந்த பத்திரங்களில் Share Stamps உள்ளன; அவைகளையே அதற்குப் பயன்படுத்த வேண்டும்;
எந்தெந்த வகைக்கு ஒட்டுவில்லை என்னும் Adhesive Stamp உபயோகிக்க வேண்டும் என இந்திய ஸ்டாம்ப் சட்டம் 1899ல் பிரிவு 11ல் சொல்லப்பட்டுள்ளது; அது –
Sec.11 of the Indian Stamp Act 1899:
“The following instruments may be stamped with adhesive stamps, namely –
(a)     Instruments chargeable with the duty not exceeding twenty paise except of bills of exchange payable otherwise than on demand and drawn in sets;
(b)     Bill of exchange, and promissory notes drawn or made out of India.
(c)     Entry as an advocate, vakil or attorney on the roll of a High Court;
(d)     Notarial acts; and
(e)     Transfers by endorsement of shares in any incorporated company or other body corporate.
**


Monday, February 8, 2016

இந்திய சாட்சியச் சட்டம்-2

இந்திய சாட்சியச் சட்டம்-2
ஒரு “நிகழ்வை” (fact) அது நடந்ததாகவோ, அல்லது அது நடக்கவில்லை என்றோ நிரூபிக்க வேண்டும்;
மூன்று வழிகளில் ஒரு நிகழ்வை கோர்ட் ஏற்றுக் கொள்ளலாம்;
(1)அவ்வாறு அது நடந்ததாகச் சொன்னால், அது அப்படி இல்லை என்று நிரூபிக்கும்வரை, அந்த நிகழ்வு நடந்ததாக நிதிபதி “கருதிக் கொள்ள” அல்லது ஏற்றுக் கொள்ள வேண்டும்; இதை “May presume” என்கிறது இந்த சாட்சியச் சட்டம்; அல்லது அது நடந்ததற்கு உரிய சாட்சியத்தை நீதிபதி கோரலாம்;
(2)அதேபோல, ஒரு நிகழ்வு நடந்ததாக  நிரூபித்து விட்டால், அது அப்படி நடக்கவில்லை என்று வேறு ஒரு சாட்சியம் மூலம் நிரூபிக்காதவரை, “கட்டாயமாக அந்த நிகழ்வு நடந்தது” என்றே நீதிபதி கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும்; இதை “Shall presume” என்கிறது சாட்சியச் சட்டம்;
(3)அதேபோல, இந்த சாட்சியச் சட்டத்தில், சில நிகழ்வுகளை தனியே நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை; அது அப்படியே இருப்பதாகவே கோர்ட் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும்; அது நடந்திருக்காது என்று கருதும் வேறு ஒரு சாட்சியத்தை கோர்ட் ஏற்றுக் கொள்ளக் கூடாது; இதை “Conclusive proof” என்கிறது சாட்சியச் சட்டம்; இந்த நிகழ்வை எதிர்த்து நிரூபிக்கும் எந்த சாட்சியத்தையும் கோர்ட் ஏற்றுக் கொள்ளவே கூடாதாம்;
அதாவது--
சில விஷயங்களை, அதற்கு எதிர்க்கருத்து வரும்வரை, வேறு வழியில்லாமல், ஏற்றுக் கொள்ளலாம் என்பது முதல் வகையைச் சேர்ந்த may presume  என்று கூறலாம்; உண்மை இருக்கும் அல்லது இல்லாமலும் இருக்க வாய்ப்பிருக்கும் என்பதே இதன் பொருள்;
அவ்வாறு வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்ட சில விஷயங்களை, அதற்கு எதிர்க்கருத்தே வராவிட்டால், “கண்டிப்பாக” அது “நிரூபிக்கப்பட்ட உண்மை” என்றே ஏற்றுக் கொள்ளலாம்; அது உண்மைதான் என்றே ஒரே முடிவாக ஏற்றுக் கொள்வது என்பது இதன் பொருள்;  இது Shall presume வகை;
அவைகள் இல்லாமல், சட்டத்தில் சில உண்மைகளை “அப்படியே ஏற்றுக் கொள்ளவும்” என்று குறிப்பிடப் பட்டள்ளது; எனவே அவைகளை கோர்ட் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்: அதை மறுத்துச் சொல்லும் அல்லது இல்லை என்று நிரூபிக்க முயலும் எந்த சாட்சியத்தையும் கோர்ட் ஏற்றுக் கொள்ளக் கூடாது; இது Conclusive proof வகை;
**


இந்திய சாட்சியச் சட்டம்-1

 இந்திய சாட்சியச் சட்டம், 1872 
(The Indian Evidence Act, 1872
இந்த சாட்சியச் சட்டமானது பிரிட்டீஸ் ஆட்சி காலத்தில் 1872-ல் ஏற்படுத்தப் பட்டது; அதை சுதந்திர இந்தியாவும் அப்படியே ஏற்றுக் கொண்டது; இந்த சட்டத்தின்படிதான், நாம் சாட்சியங்கள் என்று சொல்லும், வாய்மொழி சாட்சியத்தையும், ஆவண சாட்சியத்தையும் கோர்ட்டுக்கு கொடுக்க முடியும்; இந்த சட்டமானது, “எந்தெந்த சாட்சியத்தை ஏற்கலாம்; எவைகளை ஏற்க முடியாது” என்று தெளிவுபடுத்தி சொல்லி உள்ளது; இந்த சட்டமானது, சிவில் வழக்குகளுக்கும், கிரிமினல் வழக்குகளுக்கும் பொதுவானதே; அதேபோல, கோர்ட்–மார்ஷல் என்று சொல்லும் ராணுவக் கோர்ட்டுகளுக்கும் இதே முறைப்படிதான் சாட்சியம் அளிக்க வேண்டும்; இந்த சட்டமானது 1872ம் வருடம் செப். மாதம் 1ம் தேதியிலிருந்து அமலில் இருந்து வருகிறது; மிகச் சிறப்பாக எழுதப்பட்ட சட்டங்களில் இதுவும் ஒன்று;
‘சாட்சியம்’ என்பதை Evidence என்று பொருள் கொள்ளலாம்; ஒரு நீதிமன்றத்தில், ஒருவர், தான் வாய்மொழியாக சொல்லும் சொற்களும், ஆவணமாகக் கொடுக்கும் பத்திரங்களும் ‘சாட்சியம்’ என்னும் Evidence ஆகும்; வாய்மொழியாகச் சொன்னால் அதை ‘வாய்மொழி சாட்சியம் அல்லது Oral evidence என்றும், ஆவணத்தைக் கொடுத்தால் அதை Documentary evidence என்னும் பத்திர சாட்சியம் எனவும் சொல்கிறது இந்தச் சட்டம்; இவைகளை, நீதிபதிகள் சீர்தூக்கிப் பார்த்துத்தான் நீதி வழங்க வேண்டும் என்பது இதன் பொதுவிதி;
ஒரு நிகழ்ச்சி நடந்ததை (நல்லதோ, கெட்டதோ) நிகழ்வு அல்லது fact  என்று சொல்கிறது இந்தச் சட்டம்; (சினிமாவில், இதை ‘சம்பவம்’ என்று வேடிக்கையாகச் சொல்வதைப் பார்த்திருப்போம்);
அவ்வாறு ஒரு நிகழ்வு நடந்ததை, வாய்மொழி சாட்சியம், ஆணவ சாட்சியம் இவைகளைக் கொண்டு முடிவு செய்வார் நீதிபதி;
அந்த ‘நிகழ்வு’ நடந்துள்ளது என்று அதைக் கொண்டே நீதிபதி முடிவுக்கு வருவார்; (A fact is said to be proved when, after considering the matter, the Court believes it to exist or considers its existence so probable that a prudent man ought, to act upon the supposition that it exists);
அதேபோல், சாட்சியங்கள் மூலம், அந்த நிகழ்வு நடக்கவில்லை என்று நிரூபித்தால், அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்ற முடிவுக்கு வருவார் நீதிபதி; (A fact is said to be DISPROVED when, after considering the matters before it, the Court believes that it does not exist, so probable that a prudent man ought to act upon the supposition that it does NOT exist.);
ஆனால், அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாகவோ, நடக்கவில்லை என்றோ எந்த சாட்சியமும் தெளிவு படுத்தவில்லை என்றால், அந்த நிகழ்வு நிரூபிக்கப்படவில்லை என்றே முடிவுக்கு வருவார்; (A fact is said NOT to be proved when it is neither proved nor disproved.)
**



Credibility of a witness

Credibility of a witness:

Sec.155 of the Indian Evidence Act,1872:

Sec.155: Impeaching credit of witness:
The credit of a witness may be impeached in the following ways by the adverse party, or with the consent of the Court, by the party who calls him:-
(1)   by the evidence of persons who testify that they, from their knowledge of the witness, believe him to be unworthy of credit;
(2)   by proof that the witness has been bribed, or has accepted the offer of a bribe, or has received any other corrupt inducement to give his evidence;
(3)   by proof of former statements inconsistent with any part of his evidence which is liable to be contradicted;
(4)   when a man is prosecuted for rape or an attempt to ravish, it may be shown that the prosecutrix was of generally immoral character.
Explanation: A witness declaring another witness to be unworthy of credit may not, upon his examination-in-chief, give reasons for his belief, but he may be asked his reasons in cross-examination, and the answers which he gives cannot be contradicted, though, if they are false, he may afterwards be charged with giving false evidence.
Illustrations:
(a)   A sues B for the price of goods sold and delivered to B. C says that be delivered the goods to B. Evidence is offered to show that, on a previous occasion, he said that he had not delivered the goods to B. The evidence is admissible.
(b)   A is indicted for the murder of B. C says that B, when dying, declared that A had given B the wound of which he died. Evidence is offered to show that, on a previous occasion, C said that the wound was not given by A or in his presence.
**

Saturday, February 6, 2016

இந்து பெண்களின் சொத்துக்களில் வாரிசுரிமை

Hindu Women property rights
இந்து பெண்களின் சொத்துக்களில் வாரிசுரிமை:
இந்துக்களுக்கு தனியே, “சொத்து வாரிசுரிமைச் சட்டம்” உள்ளது; அதற்கு The Hindu Succession Act 1956 என்று பெயர்;
இந்து சொத்துரிமையை விளங்கிக் கொள்ள, இதிலுள்ள சில அடிப்படைச் சட்ட நுணுக்கங்களையும் புரிந்து கொள்ள வேண்டும்;
இந்து சொத்துக்கள் பல வகைப்படும்:
(1)   பூர்வீகச் சொத்து;
(2)   இந்து ஆணின் தனிச் சொத்து; (இதில் ஒரு இந்து ஆண், தனியே தன் பணத்தைக் கொண்டு கிரயம் வாங்கிய சொத்தும்; தானமாகவோ, செட்டில்மெண்டாகவோ, யாரிடமிருந்தாவது கிடைத்த சொத்தும், அடங்கும்);
(3)   இந்து பெண்ணின் சொத்துக்களும் இதேபோல பலவகைப்படும்;
ஒரு இந்து பெண்ணுக்கு சீதனமாக கிடைத்த சொத்து;
ஒரு இந்து பெண் தனியே கிரயமாக வாங்கிய சொத்து;
ஒரு இந்து பெண்ணுக்கு, அவளின் கணவர் மூலமோ, கணவரின் வழியாகவோ வாரிசு முறையில் கிடைத்த சொத்து;
அதேபோல, ஒரு இந்து பெண்ணுக்கு, அவளின் தாய், தகப்பன் மூலம் வாரிசு முறையில் கிடைத்த சொத்து;
இதில் ஒரு இந்து-ஆணின் சொத்துக்கு தனியே வாரிசுரிமை சொல்லப் பட்டுள்ளது; அதேபோல, ஒரு இந்து-பெண்ணின் சொத்துக்கு தனியே வாரிசுரிமை சொல்லப் பட்டுள்ளது;
இங்கு ஒரு இந்து பெண்ணின் சொத்தின் வாரிசு உரிமையைப் பற்றி மட்டும் பார்க்கலாம்:
ஒரு இந்து பெண், தன் சொத்தை விட்டுவிட்டு இறந்து விட்டால், அவளின் சொத்துக்களுக்கு யார் யார் வாரிசு என்பதைப் பார்க்கலாம்:
அவளின் தனிச் சொத்தாக இருந்தால்;
1)      அவளின் தனிப்பட்ட சொத்துக்களில், அவள் இறந்தபின், அவளின் கணவர், மற்றும் அவளின் குழந்தைகள் வாரிசுகளாக அவளின் தனிச் சொத்துக்களை எடுத்துக் கொள்வர்; (அவளின் சீதனச் சொத்தும், அவளின் தனிச் சொத்து என்றே கருத வேண்டும்);
2)      கணவர் இல்லாவிட்டால், அவளின் குழந்தைகள் எடுத்துக் கொள்வர்;
3)      அவளுக்கு குழந்தைகள் இல்லாவிட்டால், அவளின் இறந்த கணவரின் வாரிசுகள் எடுத்துக் கொள்வர்; (அதாவது அந்த சொத்து அவளின் கணவர் சொத்தாக கருதப்படும்);
அவளுக்கு குழந்தை இல்லாமல் அவள் இறந்துவிட்டால்:
அவளுக்கு, அந்தச் சொத்து, அவளின் கணவர் மூலம் கிடைத்த சொத்தாக இருந்தால்:
4)      அவளின் கணவர் எடுத்துக் கொள்ளலாம்; கணவரும் இல்லை என்றால், இறந்த கணவரின் வாரிசுகள் எடுத்துக் கொள்ளலாம்; (கணவரின் தாயார், கணவரின் உடன்பிறந்தவர்கள் எடுத்துக் கொள்ளலாம்);
5)      ஆனால், அந்த சொத்து, அவளின் தாய், தந்தை மூலம் கிடைத்த சொத்தாக இருந்தால் (அதாவது அவள் பிறந்த வீட்டில் பாகத்தில் கிடைத்த சொத்தாக இருந்தால்), அவளுக்கு குழந்தை இல்லை என்பதால், அந்த சொத்து, அவளின் கணவர் உயிருடன் இருந்தாலும் அவருக்குபோகாது: அதற்கு மாறாக, அவளின் தந்தைக்கு போய் சேரும், அவளின் தந்தை இல்லாதபோது, அவளின் தாய்க்குப் போய்ச் சேரும்; தாயும் இல்லாதபோது, அவளின் இறந்த தந்தையின் வாரிசுகளுக்குப் போய் சேரும்;
குழந்தை இல்லாத ஒரு இந்து பெண் இறந்துவிட்டால், சொத்து எங்கிருந்து அவளுக்கு கிடைத்ததோ, அவர்களுக்கே திரும்பப் போய் சேரும் என்பது இதிலிருந்து தெளிவாகும்;
**


Friday, February 5, 2016

கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள்

Compulsory Registrable Documents
கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள்
இந்திய பதிவுச் சட்டம் 1908 (The Indian Registration Act 1908) என்பது பிரிட்டீஸ் அரசு கொண்டு வந்து, இந்திய அரசு ஏற்றுக் கொண்ட ஒரு சட்டம்; இதில் “இந்திய” என்ற வார்த்தையை 1969ல் இருந்து நீக்கி விட்டார்கள்; (இந்தியாவில் இருக்கும் சட்டங்கள் எல்லாமே இந்தியச் சட்டங்கள்தானே!); இந்த பதிவுச் சட்டத்தில்தான், பத்திரங்களை பதிவு செய்யவதைப் பற்றிய சட்ட விபரங்கள் சொல்லப்பட்டுள்ளன;
இந்த பதிவுச் சட்டத்தின் பிரிவு 17(1)ன்படி சில பத்திரங்களை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது; அவ்வாறு “கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்” என்று சொல்லி உள்ள பத்திரங்களை, பதிவு செய்யாமல் விட்டுவிட்டால், அவைகள் சட்டப்படி செல்லாது; அந்த பத்திரங்களைக் கொண்டு உரிமை கோர முடியாது; கோர்ட்டில் அந்த பத்திரங்களை ஒரு சாட்சியமாக (Documentary evidence) எடுத்துக் கொள்ள முடியாது;
பொதுவாக அசையாச் சொத்துக்களை (Immovable properties) பதிவு செய்து கொள்ள வேண்டும்; ஆனால் அதிலும் குறிப்பாக சில பத்திரங்களை கட்டாயப் பதிவில் சேர்த்துள்ளார்கள்;
கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டிய பத்திரங்களின் விபரம்;
(1)     அசையாச் சொத்தின் “தானப் பத்திரம்” (Gift deed) எழுதிக் கொடுத்தால், அதை கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்;
(2)     அசையாச் சொத்தில் உள்ள சொத்துரிமையை மாற்றிக் கொடுத்தாலும், விற்பனை செய்தாலும், விட்டுக் கொடுத்தாலும், விடுதலை செய்தாலும், அந்தப் பத்திரங்களை கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்; அவ்வாறு கொடுக்கும் உரிமை அன்றே இருந்தாலும், பின்ஒருநாளில், அதாவது இனிமேல் தருகிறேன் என்று சொல்லி இருந்தாலும் அதையும் கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்;
(3)     அசையாச் சொத்தில் உள்ள உரிமையை விட்டுக்கொடுப்பதற்காக பணம் பெற்றுக் கொண்டால், அந்தப் பத்திரங்களை கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்;
(4)     வருடக் குத்தகைப் பத்திரங்கள் (Yearly Leases) கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்; வருடக் குத்தகை என்பது ஒரு வருடம் அல்லது அதற்குமேல் உள்ள காலத்துக்கு குத்தகை ஒப்பந்தம் செய்து கொள்வது; (நகரங்களில் உள்ள வீட்டு வாடகைகள், பொதுவாக மாத வாடகையாக 11 மாதங்களுக்கே செய்து கொள்ளப்படும்; எனவே வீட்டு வாடகை பத்திரங்கள் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது;)
(5)     அசையாச் சொத்துக்களைப் பொறுத்துப் பெறப்பட்ட கோர்ட் டிகிரிகள், கோர்ட் உத்தரவுகள், அவார்டுகள் இவைகளை அல்லது அந்த டிகிரியை வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுக்கும் அசைன்மெண்ட் பத்திரங்களை (Assignment of Decree, Order or Award) கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்;
(6)     அடுக்குமாடிக் கட்டிடங்களை தனி ப்ளாட்டுகளாக கட்டிக் கொடுக்கச் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களை (Agreement relating to construction of multiunit house building on land) கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்:

மேற்சொன்னவை அல்லாமல் மற்ற பத்திரங்களை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் ஏதும் இல்லை;
 அதைப்பற்றிய விபரம் கீழே;
(1)     சில ஏற்பாடுகளைச் செய்து கொள்ளும் பத்திரங்கள்;
(2)     கம்பெனிகளின் ஷேர்களின் பத்திரங்கள் (Shares relating to Joint Stock Company);
(3)     கம்பெனிகள் கொடுக்கும் டிபன்சர் பத்திரங்கள் (Debenture issued by company);
(4)     கம்பெனி டிபசன்பர் பத்திரங்களை மாற்றிக் கொடுக்கும் பத்திரங்கள்;
(5)     அசையாச் சொத்தின் எந்த உரிமையையும் மாற்றிக் கொடுக்காத பத்திரங்கள்:
(6)     கோர்ட் டிகிரிகள், கோர்ட் உத்தரவுகள்; any Decree or Order of a Court; இவைகளை பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை; (ஆனால், அந்த வழக்கில் சம்மந்தப்படாத அசையாச் சொத்தைப் பொறுத்த அந்த கோர்ட் ஒரு டிகிரி கொடுத்திருந்தால், அதை கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்; அதாவது, வழக்கில் அந்த அசையாச் சொத்து சம்மந்தப்பட்டிருந்தால், அந்த டிகிரியை பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை; வழக்குக்கு சம்மந்தமில்லாத வேறு ஒரு அசையாச் சொத்தைப் பொறுத்து, பார்ட்டிகளுக்குள் சமாதான டிகிரியை கோர்ட் மூலம் பெற்றிருந்தால், அந்த கோர்ட் டிகிரியை கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்);
(7)     அரசாங்கம் எழுதிக் கொடுக்கும் அசையாச் சொத்துக்களின் கிராண்ட் பத்திரங்களை (Government Grant) பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை; (அரசாங்கம் விற்கும் அல்லது இலவசமாக கொடுக்கும் அசையாச் சொத்தின் பத்திரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை;
(8)      நில மேம்பாட்டுச் சட்டம் 1871ன்படி கொடுக்கும் கொலேட்டிரல் செக்யூரிட்டி கடன் பத்திரங்களை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை;
(9)     விவசாய கடன் சட்டம் 1884ன்படி கொடுக்கும் கடன் பத்திரங்களை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை;
(10)  அறக்கட்டளை சட்டம் 1890ன்படி அதில் உள்ள ஒரு டிரஸ்டி, அந்த டிரஸ்ட்டின் சொத்தை வேறு ஒரு டிரஸ்டிக்கு பொறுப்பு ஒப்படைக்கும் பத்திரத்தை பதிவு செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை;
(11)  ஒரு அடமானப் பத்திரத்தில் பெற்ற அடமானக் கடனை, திருப்பி கொடுக்கும் ரசீது பத்திரத்தை, பதிவு செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை; (ஆனாலும் அதை பதிவு செய்து கொண்டால், சொத்தின் வில்லங்க சான்றிதழிலேயே தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்);
(12)  கோர்ட் ஏலம் மூலம் விற்பனை செய்து, ஏலம் எடுத்தவருக்கு வழக்கும் கிரய சர்டிபிகேட் (Sale Certificate) என்னும் பத்திரத்தை பதிவு செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை; (ஆனாலும், வழக்கில் உள்ள பார்ட்டிகள் அந்த சொத்தை ஏலத்தில் விடுவதற்கு மனுச் செய்து அதன் மூலம் கோர்ட் ஏலம் கொண்டுவந்து விற்பனை செய்தால், அந்த விற்பனை பத்திரத்தை கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்: ஏனென்றால், அது கோர்ட்டே விற்பனை செய்த பத்திரம் அல்ல);
**


வெளிநாடுகளில் எழுதிக் கொள்ளும் பத்திரங்கள்

வெளிநாடுகளில் எழுதிக் கொள்ளும் பத்திரங்கள்
சொத்துக்களைப் பொறுத்து பத்திரம் எழுதி அதன் மூலமே அதிலுள்ள உரிமையை வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுக்க முடியும்;
பத்திரங்களை இந்தியாவிலும் எழுதிக் கொள்ளலாம், இந்தியாவுக்கு வெளியில், அதாவது வெளிநாட்டிலும் எழுதிக் கொள்ளலாம்; அந்த பத்திரங்களை எழுதும்போது, அதற்குறிய ஸ்டாம்ப் பேப்பரில் எழுத வேண்டும்;
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஒரு பத்திரத்தை எழுத வேண்டும் என்றால், அவர்கள் வசிக்கும் வெளிநாட்டிலேயே எழுதி கையெழுத்தும் செய்து கொடுக்கலாம்; அந்த வெளிநாட்டில், இந்திய ஸ்டாம்ப் பேப்பர்கள் விற்பனைக்கு கிடைக்காது; எனவே அவ்வாறு வெளிநாட்டில் எழுத வேண்டிய பத்திரங்களை “வெறும் வெள்ளைத்தாளில்” எழுதி அல்லது கம்யூட்டர் மூலம் பிரிண்ட் எடுத்து, அந்த பத்திரத்தை அங்குள்ள ஒரு நோட்டரி வக்கீல் அல்லது இந்திய ஹைகமிஷன்/ கான்சல் அதிகாரியின் முன்னிலையில், எழுதியவர் கையெழுத்துச் செய்து, அந்த அதிகாரியின் அட்டெஸ்டேஷன் பெற்று, அந்தப் பத்திரத்தை இந்தியாவுக்கு தன் உறவினருக்கு அனுப்பி வைக்க வேண்டும்; அதை அந்த உறவினர், கலெக்டரிடம் அல்லது பத்திரப் பதிவு அதிகாரியான சார் பதிவாளரிடம் எடுத்துச் சென்று அதற்குறிய ஸ்டாம்ப் கட்டணத்தை செலுத்தி அந்த பத்திரத்தை இந்தியாவில் உபயோக்கித்துக் கொள்ளும் உரிமையே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்; அப்படி ஸ்டாம்ப் கட்டணம் செலுத்தி சட்டபூர்வமாகச் சரி செய்து கொள்வதை அட்சூடிகேஷன் (Adjudication) என்பர்; இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த அட்சூடிகேஷன் வேலையை, அந்த பத்திரம் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குள் (கொரியர்/தபால் மூலம்) வந்த சேர்ந்த நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் செய்து கொள்ள வேண்டும்;
பொதுவாக, இந்தியாவில் சொத்து வாங்குவதற்காக, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவில் உள்ள தங்களின் உறவுகளுக்கு பவர் பத்திரம் எழுதி அங்கிருந்து இவ்வாறு அனுப்பி வைப்பர்;
காமன்வெல்த் நாடுகள் என்று சொல்லும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, நீயூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பிரான்ஸ், போன்ற நாடுகளில் “நோட்டரி பப்ளிக்” (Notary Public lawyer) என்ற வக்கீல் இருப்பர்; அவர்களின் முன், இந்த பத்திரங்களை கையெழுத்து செய்து அவர்களின் அட்டெஸ்டேஷனையும் பெற்ற இந்தியாவுக்கு அனுப்பி வைக்கலாம்;
இந்த நாடுகள் தவிர, மன்னர்கள் ஆளும் மற்ற நாடுகள், நோட்டரி நடைமுறை இல்லாத நாடுகளான, சௌதி ஆரேபியா, யூஏஇ, போன்ற நாடுகளில், இந்திய தூதரகங்கள் இருக்கும்; அங்கு இந்திய தூதர் என்னும் இந்திய கான்சல் அதிகாரி இருப்பார்; அல்லது இந்தியாவின் விவகாரங்களைப் பார்க்கும் மத்திய அரசின் அதிகாரி இருப்பார்; அவரிடம் சென்று, இத்தகைய பத்திரங்களை கொடுத்து அவரின் அட்டெஸ்டேஷன் பெற்று அதை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கலாம்;
அப்படி எழுதி, அட்டெஸ்டேஷனும் பெற்று இந்தியாவுக்கு அனுப்பிய பத்திரங்களை, மேலே சொன்னமுறையில் “அட்சூடிகேஷன்” செய்தவுடன், அந்த பத்திரத்தை இந்தியாவில் உபயோகித்துக் கொள்ளலாம்; அவ்வாறு பெற்ற பவர் பத்திரங்களின் துணையுடன் இந்தியாவில் சொத்து வாங்கிக் கொள்ளலாம்; வைத்திருக்கும் சொத்தை விற்றுக் கொள்ளலாம்; சொத்தின்பேரில் பாங்க் கடனும் வாங்கிக் கொள்ளலாம்; வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரின் இந்திய பவர் ஏஜெண்ட் இந்த வேலைகளை இந்தியாவில் செய்து கொள்ளமுடியும்;
அந்த பவர் பத்திரத்தில் எந்த வேலையை செய்வதற்காக பவர் கொடுக்கிறார் என்பதை தெளிவாக எழுதி இருக்க வேண்டும்; இது குழப்பத்தை தவிர்க்கும்; இப்படி வெளிநாட்டில் வசிப்பவர் கொடுக்கம் பவர் பத்திரத்தினால், அவர் இந்தியாவுக்கு பறந்து வர வேண்டிய அவசியம் இல்லை;
**


செட்டில்மெண்ட் பத்திரமும், தானப் பத்திரமும்

செட்டில்மெண்ட் பத்திரமும், தானப் பத்திரமும்
செட்டில்மெண்ட் பத்திரத்தை (Settlement Deed) “ஒரு குடும்ப ஏற்பாட்டுப் பத்திரம்” என்கிறார்கள்; இது ஒரு வகையில் “தானப் பத்திரம்தான்” (Gift Deed); ஒருவர் தனக்குச் சொந்தமான சொத்துக்களை இந்த செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் தன் குடும்பத்தில் உள்ள தன் உறவுகளுக்கு பிரித்து கொடுக்கும் பத்திரம்; ஒருவருக்குச் சொந்தமான சொத்தை அவர் வாழ்நாளிலேயே, தன் குடும்பத்தில் உள்ள மற்ற உறவினர்களுக்கு கொடுப்பதால் செட்டில்மெண்ட் பத்திரம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது; ஆனால், ஒருவர் தன் சொத்துக்களை, தன் வாழ்நாளுக்கு பின்னர் தன் உறவினர்களுக்குச் சேரும்படி எழுதி வைக்கும் பத்திரத்தை “உயில் பத்திரம்” என்கிறார்கள்;
தன் வாழ்நாளிலேயே, ஒருவர் தன் சொத்துக்களை, தன் உறவுகளுக்கு கொடுக்கும் பத்திரமான இந்த செட்டில்மெண்ட் பத்திரம் எழுதிக் கொடுக்கும்போது, அந்த சொத்தைப் பெறுபவர் “குடும்ப உறவினராக” இருக்க வேண்டும் என இந்திய ஸ்டாம்ப் சட்டம் சொல்கிறது;
குடும்ப உறவினர் என்பவர்கள் யார் யார் என்றும் அதே இந்திய ஸ்டாம்பு சட்டம் கூறிஉள்ளது; அதன்படி, தந்தை, தாய், கணவன், மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி, இவர்கள் மட்டும்தான் “குடும்ப உறுப்பினர்கள்” என்று அந்த சட்டம் சொல்லி உள்ளது; பின்னர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், இந்த “குடும்ப உறுப்பினர்” என்ற உறவுகளை விசாலப்படுத்தி, “அண்ணன், தம்பி, அக்காள், தங்கை” இவர்களையும் அதில் சேர்த்துக் கொண்டது;
இந்த குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு யாருக்கும், ஒருவர் தன் சொத்துக்களை செட்டில்மெண்ட் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதை “தானமாகத் தான்” (Gift) கொடுக்க முடியும்; மாறாக குடும்ப ஏற்பாடு என்னும் இத்தகைய செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் கொடுக்க இயலாது;
மேலே சொன்ன குடும்ப உறுப்பினர் அல்லாத வேறு நபர்களுக்கு, ஒருவர் தன் சொத்துக்களை கொடுக்க நினைத்தால், அதை “தானப்பத்திரம்” என்னும் கிப்ட் பத்திரம் (Gift Deed) மூலமே கொடுக்க வேண்டும்;
செட்டில்மெண்ட் பத்திரத்துக்கும், தானப் பத்திரத்துக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை; இரண்டுமே ஒருவகையில் “தானம்” தான்; மேற்சொன்ன குடும்ப உறவினர்களுக்குள் கொடுத்தால் அது செட்டில்மெண்ட் பத்திரம்; அதையே வெளி நபர்களுக்குக் கொடுத்தால் தானப் பத்திரம் அவ்வளவே; ஆனால், இவ்வாறு கொடுக்கும் பத்திரத்துக்கு அரசுக்கு செலுத்தும் ஸ்டாம்ப் கட்டணத்தில்தான் வேறுபாடு; குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுக்கும் செட்டில்மெண்ட் பத்திரத்துக்கு, அந்த சொத்தின் மதிப்புக்கு 1% ஸ்டாம்பு கட்டணம் அல்லது அதிகபட்சமாக ரூ.25,000/- மட்டுமே; (அதாவது ரூ.25 லட்சம் வரை மதிப்புக்கு உட்பட்ட சொத்துக்களுக்கு 1% கட்டணம்: அதற்கு மேல் எவ்வளவு மதிப்புள்ள சொத்தாக இருந்தாலும் ரூ.25,000 கட்டணம் மட்டுமே); ஆனால் குடும்ப உறுப்பினர் அல்லாதவர்களுக்கு கொடுக்கும் தானப் பத்திரத்துக்கு, அந்த சொத்தின் மதிப்புக்கு 8% ஸ்டாம்பு கட்டணம் செலுத்த வேண்டும்;
இந்த செட்டில்மெண்ட் பத்திரத்தை எழுதி வைப்பதற்கு முன், ஒருசில சட்ட நுணுக்கங்களை சரியாகப் புரிந்து கொண்டு எழுதவேண்டும்; பொதுவாக ஒருவர் தன் சொத்தை, செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் தன் குடும்பத்தினருக்கு கொடுத்தால், பின்னர் அந்த பத்திரத்தை ரத்து செய்யவே முடியாது; இது தெரியாமல், ஏதோ ஒரு உந்துதலில் ஒரு செட்டில்மெண்ட் பத்திரத்தை எழுதி கொடுக்கின்றனர்; பின்னர், ஏதோ ஒரு வருத்தம் ஏற்பட்டு, அதை ரத்து செய்ய முயற்சி செய்கிறார்கள்; இப்படிச் செய்ய அவர்களுக்கு அதிகாரம் இல்லை; ஆனாலும், பத்திரப் பதிவு அலுவலகங்களிலும் இவ்வாறு ரத்து செய்யும் பத்திரங்களை ஏற்றுக் கொள்வதால் இவர்களும் அதை ரத்து செய்கிறார்கள்; எனவே இப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பின் அடிப்படையில், இப்போதுதான் பத்திரப் பதிவு அலுவலகங்கள், இவ்வாறான செட்டில்மெண்ட் பத்திரங்களை ரத்து செய்ய முடியாது என அறிவுறுத்தி உள்ளது;
ஒரு சொத்தில், தனக்குள்ள உரிமையை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டால், அந்த சொத்தில் அவருக்கு இருந்துவந்த உரிமை அத்துடன் முடிவுக்கு வந்து விடுகிறது; எனவே அவர் அந்த செட்டில்மெண்ட் பத்திரத்தை பின்நாளில் ரத்து செய்ய எந்த அதிகாரமும் அவருக்கு இல்லை என்பதுதான் சட்டம்; ஆனால், சிலர் நினைத்துக் கொள்கிறார்கள், “என் சொத்தை, நான் தானமாகத்தானே கொடுத்தேன்; எனக்கு விரும்பம் இல்லை என்பதால், அதை இப்போது ரத்து செய்கிறேன்” என்று நினைக்கிறார்கள்; விற்ற சொத்தை எப்படி திரும்ப வாங்க முடியாதோ, அதேபோலத்தான், தானம் கொடுத்த சொத்தையும் திரும்ப வாங்க முடியாது;
இருந்தாலும், ஒருசிலர், இந்த செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி வைக்கும்போதே, அதை ஒரு உயில் போல எழுதி, அதாவது, தன் வாழ்நாளுக்குப்பின், தன் குடும்ப உறவினர்களுக்கு அந்த சொத்து, போய் சேர வேண்டும் என எழுதுவார்கள்; அல்லது அவர் வாழ்நாள் வரை அந்த சொத்தில் உரிமையுடன் வாழ்ந்து வருவதாகவும், அதன் பின் அவர் யாருக்கு சொத்துக் கொடுக்கிறாரோ அவர் முழு உரிமையுடன் அடைந்து கொள்ளலாம் என்று எழுதி வைப்பார்கள்; இந்த வகையில் எழுதும் பத்திரங்கள், சில நேரங்களில் சரியாக அமைவதுண்டு; பல நேரங்களில் இதில் சட்டக் குழப்பங்கள் வந்து, கோர்ட்டுக்கு சென்று விடுகின்றன; இப்படிப்பட்ட குழப்பமான செட்டில்மெண்ட் பத்திரங்களை எழுதும்போது, அதன் பிற்கால பிரச்சனைகளையும் யோசித்து தீர்க்கமான முடிவுடன், சட்ட ஆலோசனையும் பெற்றுக் கொண்டு எழுதி வைப்பது, கோர்ட்டுக்கு போகும் வேலையை மிச்சமாக்கும்;
சிலர், குடும்ப நெருக்கடியில் ஒரு செட்டில்மெண்ட் பத்திரத்தை எழுதுவார்கள்; பின்னர், அந்த நெருக்கடி தீர்ந்தவுடன், அல்லது வேறு நெருக்கடி, வேறு ரத்த உறவுகளிடமிருந்து வந்தவுடன், ஏற்கனவே எழுதிய செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்வார்கள்; இந்த வகை பத்திரங்களும் சட்ட சிக்கலை உண்டாக்கி கோர்ட்டுக்கு அலைய வைக்கும்;
தீர்மானமான முடிவுகள் எடுக்க முடியாதபோது, சொத்தைப் பொருத்து எந்த செட்டில்மெண்டும் எழுதாமல் இருப்பதே நல்லது; அல்லது ஒரு உயில் பத்திரம் மட்டும் எழுதி வைத்துக் கொள்ளலாம்; இது இல்லாமல், செட்டில்மெண்ட்தான் எழுத வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து எழுதிவிட்டால், அத்துடன் அதில் தனக்கு இனி உரிமை ஏதும் இல்லை என்று நினைத்துக் கொள்ள வேண்டும்; வாழ்நாள் வரை அதில் வசிப்பேன் என்று எழுதி இருக்கும் பத்திரங்களில்கூட, வயதான காலத்தில் அந்த உரிமையை நிலைநாட்ட கோர்ட்டுக்குத்தான் செல்ல வேண்டும்; எனவே முடிவு என்பது தீர்க்கமாக இருக்க வேண்டும்! பந்த பாசத்துக்கு அடிமையாகாமல், ரத்த உறவுகளின் மிரட்டலுக்கு பயப்படாமல், ஏமாறுவதற்கு இடம் கொடுக்காமல் முடிவுகள் தீர்க்கமாக இருக்க வேண்டும்! ஒருவர் தன் வாரிசுகளுக்கு, ரத்த உறவுகளுக்கு சொத்து வைத்து விட்டுத்தான் போகவேண்டும், ஆனால் அந்த சொத்தை தன் வாழ்நாளில் அனுபவிக்க முடியாமல், பறிகொடுத்து தவிக்கும் நிலைக்கு போக இடம் கொடுக்க கூடாது; தனக்கு தெளிவான சிந்தனை, செயல், அதிகாரம் இருக்கும் காலத்திலேயே அல்லது வயதிலேயே ஒரு தீர்க்கமாக முடிவை எடுத்து செயல் படுத்திவிட வேண்டும்; எழுந்து நடக்கவே முடியாத போது, நாம் எடுக்கும் முடிவும் நடைமுறைக்கு வராது;
**