வெளிநாடுகளில் எழுதிக் கொள்ளும் பத்திரங்கள்
சொத்துக்களைப் பொறுத்து பத்திரம் எழுதி அதன் மூலமே அதிலுள்ள உரிமையை
வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுக்க முடியும்;
பத்திரங்களை இந்தியாவிலும் எழுதிக் கொள்ளலாம், இந்தியாவுக்கு
வெளியில், அதாவது வெளிநாட்டிலும் எழுதிக் கொள்ளலாம்; அந்த பத்திரங்களை எழுதும்போது,
அதற்குறிய ஸ்டாம்ப் பேப்பரில் எழுத வேண்டும்;
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஒரு பத்திரத்தை எழுத வேண்டும்
என்றால், அவர்கள் வசிக்கும் வெளிநாட்டிலேயே எழுதி கையெழுத்தும் செய்து
கொடுக்கலாம்; அந்த வெளிநாட்டில், இந்திய ஸ்டாம்ப் பேப்பர்கள் விற்பனைக்கு
கிடைக்காது; எனவே அவ்வாறு வெளிநாட்டில் எழுத வேண்டிய பத்திரங்களை “வெறும்
வெள்ளைத்தாளில்” எழுதி அல்லது கம்யூட்டர் மூலம் பிரிண்ட் எடுத்து, அந்த பத்திரத்தை
அங்குள்ள ஒரு நோட்டரி வக்கீல் அல்லது இந்திய ஹைகமிஷன்/ கான்சல் அதிகாரியின்
முன்னிலையில், எழுதியவர் கையெழுத்துச் செய்து, அந்த அதிகாரியின் அட்டெஸ்டேஷன்
பெற்று, அந்தப் பத்திரத்தை இந்தியாவுக்கு தன் உறவினருக்கு அனுப்பி வைக்க வேண்டும்;
அதை அந்த உறவினர், கலெக்டரிடம் அல்லது பத்திரப் பதிவு அதிகாரியான சார் பதிவாளரிடம்
எடுத்துச் சென்று அதற்குறிய ஸ்டாம்ப் கட்டணத்தை செலுத்தி அந்த பத்திரத்தை
இந்தியாவில் உபயோக்கித்துக் கொள்ளும் உரிமையே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்; அப்படி
ஸ்டாம்ப் கட்டணம் செலுத்தி சட்டபூர்வமாகச் சரி செய்து கொள்வதை அட்சூடிகேஷன் (Adjudication) என்பர்; இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த
அட்சூடிகேஷன் வேலையை, அந்த பத்திரம் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குள்
(கொரியர்/தபால் மூலம்) வந்த சேர்ந்த நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் செய்து
கொள்ள வேண்டும்;
பொதுவாக, இந்தியாவில் சொத்து வாங்குவதற்காக, வெளிநாடுகளில் வசிக்கும்
இந்தியர்கள், இந்தியாவில் உள்ள தங்களின் உறவுகளுக்கு பவர் பத்திரம் எழுதி
அங்கிருந்து இவ்வாறு அனுப்பி வைப்பர்;
காமன்வெல்த் நாடுகள் என்று சொல்லும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து,
அமெரிக்கா, கனடா, நீயூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பிரான்ஸ், போன்ற நாடுகளில் “நோட்டரி
பப்ளிக்” (Notary Public
lawyer) என்ற வக்கீல் இருப்பர்; அவர்களின் முன்,
இந்த பத்திரங்களை கையெழுத்து செய்து அவர்களின் அட்டெஸ்டேஷனையும் பெற்ற
இந்தியாவுக்கு அனுப்பி வைக்கலாம்;
இந்த நாடுகள் தவிர, மன்னர்கள் ஆளும் மற்ற நாடுகள், நோட்டரி நடைமுறை
இல்லாத நாடுகளான, சௌதி ஆரேபியா, யூஏஇ, போன்ற நாடுகளில், இந்திய தூதரகங்கள்
இருக்கும்; அங்கு இந்திய தூதர் என்னும் இந்திய கான்சல் அதிகாரி இருப்பார்; அல்லது
இந்தியாவின் விவகாரங்களைப் பார்க்கும் மத்திய அரசின் அதிகாரி இருப்பார்; அவரிடம்
சென்று, இத்தகைய பத்திரங்களை கொடுத்து அவரின் அட்டெஸ்டேஷன் பெற்று அதை
இந்தியாவுக்கு அனுப்பி வைக்கலாம்;
அப்படி எழுதி, அட்டெஸ்டேஷனும் பெற்று இந்தியாவுக்கு அனுப்பிய
பத்திரங்களை, மேலே சொன்னமுறையில் “அட்சூடிகேஷன்” செய்தவுடன், அந்த பத்திரத்தை
இந்தியாவில் உபயோகித்துக் கொள்ளலாம்; அவ்வாறு பெற்ற பவர் பத்திரங்களின் துணையுடன்
இந்தியாவில் சொத்து வாங்கிக் கொள்ளலாம்; வைத்திருக்கும் சொத்தை விற்றுக்
கொள்ளலாம்; சொத்தின்பேரில் பாங்க் கடனும் வாங்கிக் கொள்ளலாம்; வெளிநாட்டில்
வசிக்கும் இந்தியரின் இந்திய பவர் ஏஜெண்ட் இந்த வேலைகளை இந்தியாவில் செய்து
கொள்ளமுடியும்;
அந்த பவர் பத்திரத்தில் எந்த வேலையை செய்வதற்காக பவர் கொடுக்கிறார்
என்பதை தெளிவாக எழுதி இருக்க வேண்டும்; இது குழப்பத்தை தவிர்க்கும்; இப்படி
வெளிநாட்டில் வசிப்பவர் கொடுக்கம் பவர் பத்திரத்தினால், அவர் இந்தியாவுக்கு பறந்து
வர வேண்டிய அவசியம் இல்லை;
**
No comments:
Post a Comment