Thursday, May 8, 2014

ஸ்மிருதியும் சட்டமும்

பழைய இந்து சட்டமானது தர்மத்தின் அடிப்படையில் ஏற்படுத்தியது.

ஸ்ருதி, ஸ்மிருதி இவைகள் பழைய இந்து சட்டத்துக்கு அடிப்படைகளாக இருந்தன.

ஸ்ருதி என்பது இறைவனிடமிருந்து ஞானிகளின் காதால் என்ன கேட்கப்பட்டதோ அவையே ஸ்ருதி.

ஸ்மிருதி என்பது ஞானிகள் அவர்களின் ஞாபகத்திலிருந்து வழிவழியாக சொல்லப்பட்டு வந்தவையே ஸ்மிருதி.

ஸ்மிருதிகளே தர்மசாஸ்திரங்கள் என பண்டைய நீதிமன்றங்கள் கருதின.

யக்ஞவால்கியர் ஸ்மிருதியை விக்னேஷ்வரா என்ற ஞானி  வியாக்கியானம் செய்தார். அதுவே மித்தாக்ஷரா என்ற இந்து சட்டம். (வங்காளம், அசாம் தவிர மொத்த இந்தியாவிலும் நடைமுறையில் இருந்தது).

இன்றுவரையில் நடைமுறையில் இருப்பது இந்த மித்தாக்ஷரா இந்து சட்டமே. இப்போதுதான் இதில் பெருத்த மாற்றங்கள் செய்யப்பட்டன.

யக்ஞவால்கியர் ஸ்மிருதியை ஜிமுக்தவாகனா என்ற ஞானி வியாக்கியானம் செய்தார். இதுவே தயாபாகா என்ற இந்து சட்டம். (வங்காளப் பகுதியில் மட்டும் இது பிரபலம்).

தொடர்ந்து வெகுகாலமாக ஒரு மக்கள்கூட்டம் ஒருவகையான பழக்கவழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தால் அதுவும் ஒருவகை சட்டமே. (the law of Custom).

மதுரை கலெக்டர் Vs முத்துராமலிங்க சேதுபதி, இராமநாதபுரம்.
இது பிரிட்டீஸ் காலத்தில் நடந்த ஒரு வழக்கு.

ராமநாதபுரத்தின் ஜமின்தார், தனக்கு வாரிசு இல்லாமல் இறந்துவிடுகிறார். வாரிசு இல்லையென்றால் அந்த ஜமீன் சொத்து பிரிட்டீஸ் அரசாங்கத்துக்கு போய்சேரும்.

கணவர் உயிருடன் இருக்கும்போது அதிகாரம் கொடுத்தால் அவரின் மனைவி சுவீகார புத்திரனை தத்து எடுத்துக் கொள்ளலாம். ஜமின்தார் அவ்வாறு செய்யவில்லை. ஆனால் ஜமின்தாரின் மனைவியான ராணி பர்வதவர்த்தினி அவர்கள் தன் கணவனின் பங்காளிகளின் சம்மதத்தைப் பெற்று ஒரு மகனை வளர்ப்பு மகனாக தத்து எடுத்துக் கொண்டார்.

இருந்தபோதிலும், பிரிட்டீஸ் அரசு, இந்த ஜமீன் சொத்து வாரிசு இல்லாத சொத்து என்றும், ஜமீன்தார் உயிருடன் இருக்கும்போதே தத்து எடுக்க எந்த அதிகாரமும் அவரின் மனைவியான ராணிக்கு கொடுக்கவில்லை என்றும் கூறி ஜமீன் சொத்தை அரசாங்க சொத்தாக அப்போதைய மதுரை கலெக்டர் உத்திரவு பிறப்பித்தார்.

ஆனாலும் ராணியின் தத்து மகன் முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் பிரிட்டீஸ் கலெக்டரின் முடிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, எங்கள் குலவழக்கப்படி கணவரின் விதவை மனைவி, கணவரின் பங்காளிகள் சம்மதித்தால் ஒரு மகனை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று நெடுங்கால பழக்க வழக்கம் உள்ளது என்றும் வாதிட்டார்.


இந்த வழக்கானது லண்டனில் உள்ள பிரைவி கவுன்சில் கோர்ட் வரை சென்றது. அங்கு இந்துமத சாஸ்திரங்களை அலசி, திராவிட ஸ்கூல் என்னும் மதராஸ் ஸ்கூல் பழக்கவழக்கப்படியும், சந்திரிகா ஸ்மிருதி, ப்ரசார மாதவிய ஸ்மிருதிப்படியும் இவ்வாறு செய்ய சாஸ்திரத்தில் இடமுண்டு என்று கண்டுகொண்டு, முத்துராமலிங்க சேதுபதிக்கு சாதகமாக தீர்ப்புக்கூறி சொத்தை அவரிடமே ஒப்படைத்தனர்.