Showing posts with label இந்து சட்டம். Show all posts
Showing posts with label இந்து சட்டம். Show all posts

Sunday, September 13, 2015

2005ன் புதிய இந்து வாரிசுரிமை திருத்தச் சட்டம்

புதிய இந்து வாரிசுரிமை திருத்த சட்டம் 2005

இந்த 2005 சட்டப்படி, இந்து பூர்வீகச் சொத்துக்களில், மகன்களைப் போலவே, மகள்களுக்கும் சம பங்கு கொடுக்க வேண்டும் என்று புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டமானது, 9.9.2005 முதல் அமலில் வருகிறது. இந்த திருத்த சட்டத்தில், இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956ன் பிரிவு 6ஐ (அதுதான் பூர்வீகச் சொத்துக்களுக்கு யார் யார் வாரிசு என்று சொல்வது) முழுவதுமாக மாற்றி எழுதப்பட்டுள்ளது.
2005ன் புதிய பிரிவு 6ன்படி, பூர்வீகச் சொத்தில், மகன்களைப் போலவே, மகள்களுக்கும் சரி சம உரிமை உண்டு என்று சொல்லி இருக்கிறது.

அப்படியென்றால், ஏற்கனவே சொத்தை பாகம் பிரித்துக் கொண்ட மகன்கள், அந்த சொத்தை மகள்களுக்கு திரும்ப கொடுக்க வேண்டுமா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. அதற்கு விளக்கமாக, அந்த சட்டம் 2005ல் வருவதற்கு முன்னர், இதை ஆரம்பித்த காலமான, 20.12.2014 தேதியை கெடு தேதியாக வைத்துக் கொண்டார்கள். அதன்படி, 20.12.2014க்கு முன்னர் பிரித்துக் கொண்ட (அதாவது மகன்களுக்குள் மட்டும் பிரித்துக் கொண்ட) சொத்துக்களின் பாகப்பிரிவினைகளை இது தொந்தரவு செய்யாது. அதற்கு பின்னர் பாகம் பிரித்திருந்தாலும், அந்த சொத்தில் மகள்களுக்கும் பாகம் கொடுக்க வேண்டும். அது இல்லாமல், ஏற்கனவே பாகம் கேட்டு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கிறதே, அதை என்ன செய்வது என்ற கேள்வியும் கூடவே வருகிறது. அதற்கும் முடிவாக, பாக வழக்குகள் போட்டிருந்தாலும், அதில் பைனல் டிகிரி கொடுத்திருந்தால் இந்த புது சட்டம் தலையிடாது. மற்றபடி அந்த வழக்கு எந்த கோர்ட்டில் இருந்தாலும், அதிலும் மகள்களுக்கு சரிசம பங்கு உண்டு என்றும், அவ்வாறு அந்த வழக்கில் கேட்காமல் இருந்தாலும், இப்போது இந்த புது சட்டப்படி பங்கு கேட்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதில் இன்னொரு குழப்பத்தை, பல வழக்குகளில், பல கோர்ட்டுகளில் வாதமாக வைத்துள்ளார்கள். அதன்படி, ஒரு இந்து கோபார்சனர்  இறந்து விட்டால் (பூர்வீகச் சொத்தின் பங்குதாரர்), அந்த சொத்தின் உரிமை அப்போதே அந்த உரிமை 1956 சட்டப்படி மகன்களை வந்து அடைந்து விடுமே என்றும் அப்படிப்பட்ட உரிமை பாகம் பிரித்துக் கொள்ளும் வரை காத்திருக்காதே என்றும், எனவே ஏற்கனவே அந்தகைய உரிமை வந்துவிட்ட பின்னர், அதை எப்படி மறுபடியும் பிரித்து, மகள்களுக்கு கொடுக்க முடியும். "வந்துவிட்ட உரிமையை திரும்ப கேட்க முடியாது" என்பதுதானே இயற்கை நியதியும் சட்டமும் கூட. அப்படி இருக்கும்போது உரிமை மாறி வந்த சொத்தில் எப்படி மகள்களுக்கு பங்கு கொடுக்க முடியும் என்ற பிரச்சனையை கிளப்பி விட்டுள்ளார்கள்.

இந்த வாதத்துக்கு எதிராக, இந்த புதிய சட்டமான 2005 திருத்த சட்டப்படி, மகள்கள் இந்த குடும்பத்தில் பிறந்த உடனேயே அவர்களுக்கு பங்கு உறுதி செய்யப்படுகிறது என்றுதானே இந்த 2005 சட்டம் சொல்கிறது. அப்படிப் பார்த்தால், 1956 சட்டம் வந்த பின்னர் பிறந்த எல்லா மகள்களுக்கும் பூர்வீகச் சொத்தில் மகன்களைப் போலவே பங்கு கொடுக்க வேண்டும் என்றுதானே 2005 சட்டம் சொல்கிறது. 20.12.2004 வரை பாகம் பிரிக்காத சொத்துக்களில் பெண்களும் பிறப்பால் ஒரு பங்குதாரார் என்று தானே சொல்கிறது. எனவே அவர்களுக்கு பிறப்பால்தானே பங்கு உண்டு. எனவே பாகம் பிரியாத சொத்துக்களில் பெண்களுக்கும் (மகள்களுக்கும்) மகன்களைப் போலவே பங்கு பெற உரிமை உண்டு என்கின்றனர்.
இப்போது இந்த பிரச்சனை, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு புஷ்பலதா வழக்கு என்று பெயர்.

அதன் தீர்ப்பைப் பொறுத்து இந்த நிலையில் என்ன மாறம் வரும் என்று பின்னர் தெரியவரும்.


Thursday, May 8, 2014

ஸ்மிருதியும் சட்டமும்

பழைய இந்து சட்டமானது தர்மத்தின் அடிப்படையில் ஏற்படுத்தியது.

ஸ்ருதி, ஸ்மிருதி இவைகள் பழைய இந்து சட்டத்துக்கு அடிப்படைகளாக இருந்தன.

ஸ்ருதி என்பது இறைவனிடமிருந்து ஞானிகளின் காதால் என்ன கேட்கப்பட்டதோ அவையே ஸ்ருதி.

ஸ்மிருதி என்பது ஞானிகள் அவர்களின் ஞாபகத்திலிருந்து வழிவழியாக சொல்லப்பட்டு வந்தவையே ஸ்மிருதி.

ஸ்மிருதிகளே தர்மசாஸ்திரங்கள் என பண்டைய நீதிமன்றங்கள் கருதின.

யக்ஞவால்கியர் ஸ்மிருதியை விக்னேஷ்வரா என்ற ஞானி  வியாக்கியானம் செய்தார். அதுவே மித்தாக்ஷரா என்ற இந்து சட்டம். (வங்காளம், அசாம் தவிர மொத்த இந்தியாவிலும் நடைமுறையில் இருந்தது).

இன்றுவரையில் நடைமுறையில் இருப்பது இந்த மித்தாக்ஷரா இந்து சட்டமே. இப்போதுதான் இதில் பெருத்த மாற்றங்கள் செய்யப்பட்டன.

யக்ஞவால்கியர் ஸ்மிருதியை ஜிமுக்தவாகனா என்ற ஞானி வியாக்கியானம் செய்தார். இதுவே தயாபாகா என்ற இந்து சட்டம். (வங்காளப் பகுதியில் மட்டும் இது பிரபலம்).

தொடர்ந்து வெகுகாலமாக ஒரு மக்கள்கூட்டம் ஒருவகையான பழக்கவழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தால் அதுவும் ஒருவகை சட்டமே. (the law of Custom).

மதுரை கலெக்டர் Vs முத்துராமலிங்க சேதுபதி, இராமநாதபுரம்.
இது பிரிட்டீஸ் காலத்தில் நடந்த ஒரு வழக்கு.

ராமநாதபுரத்தின் ஜமின்தார், தனக்கு வாரிசு இல்லாமல் இறந்துவிடுகிறார். வாரிசு இல்லையென்றால் அந்த ஜமீன் சொத்து பிரிட்டீஸ் அரசாங்கத்துக்கு போய்சேரும்.

கணவர் உயிருடன் இருக்கும்போது அதிகாரம் கொடுத்தால் அவரின் மனைவி சுவீகார புத்திரனை தத்து எடுத்துக் கொள்ளலாம். ஜமின்தார் அவ்வாறு செய்யவில்லை. ஆனால் ஜமின்தாரின் மனைவியான ராணி பர்வதவர்த்தினி அவர்கள் தன் கணவனின் பங்காளிகளின் சம்மதத்தைப் பெற்று ஒரு மகனை வளர்ப்பு மகனாக தத்து எடுத்துக் கொண்டார்.

இருந்தபோதிலும், பிரிட்டீஸ் அரசு, இந்த ஜமீன் சொத்து வாரிசு இல்லாத சொத்து என்றும், ஜமீன்தார் உயிருடன் இருக்கும்போதே தத்து எடுக்க எந்த அதிகாரமும் அவரின் மனைவியான ராணிக்கு கொடுக்கவில்லை என்றும் கூறி ஜமீன் சொத்தை அரசாங்க சொத்தாக அப்போதைய மதுரை கலெக்டர் உத்திரவு பிறப்பித்தார்.

ஆனாலும் ராணியின் தத்து மகன் முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் பிரிட்டீஸ் கலெக்டரின் முடிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, எங்கள் குலவழக்கப்படி கணவரின் விதவை மனைவி, கணவரின் பங்காளிகள் சம்மதித்தால் ஒரு மகனை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று நெடுங்கால பழக்க வழக்கம் உள்ளது என்றும் வாதிட்டார்.


இந்த வழக்கானது லண்டனில் உள்ள பிரைவி கவுன்சில் கோர்ட் வரை சென்றது. அங்கு இந்துமத சாஸ்திரங்களை அலசி, திராவிட ஸ்கூல் என்னும் மதராஸ் ஸ்கூல் பழக்கவழக்கப்படியும், சந்திரிகா ஸ்மிருதி, ப்ரசார மாதவிய ஸ்மிருதிப்படியும் இவ்வாறு செய்ய சாஸ்திரத்தில் இடமுண்டு என்று கண்டுகொண்டு, முத்துராமலிங்க சேதுபதிக்கு சாதகமாக தீர்ப்புக்கூறி சொத்தை அவரிடமே ஒப்படைத்தனர்.