Sunday, August 30, 2015

NJAC

NJAC = National Judicial Appointments Commission

சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் நீதிபதிகளை நியமிக்கும்போது, சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதிகளைக் கொண்ட கொலிஜியம் (collegium) என்ற குழுவே நிதிபதிகளை நியமித்து வந்தது. 

இதை சரியில்லையென்று, இந்த என்ஜேஏசி அமைப்பை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இதை எதிர்த்துத்தான் இப்போது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. எந்த முறையில் நீதிபதி நியமனம் இருக்க வேண்டும் என்று விசாரித்து வருகிறது. அதில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அந்த வழக்கை விசாரிக்கிறது. 

அரசின் சார்பில், அட்டார்னி ஜெனரல் முகுல் ரொகட்கி அவர்கள் வாதம் செய்கிறார். 
நீதிபதிகளே, நீதிபதிகளை நியமித்துக் கொள்ளும் கொலிஜியம் முறை சரிஇல்லை என்று அரசு வாதம். அதனால், மத்தியஅரசும், நீதிபதிகளும், நீதிசார்ந்த மூத்தவர்களும் இந்த குழுவான என்ஜேஏசி-ல் இருக்க வேண்டும் என்கிறது அரசு. ஆனால், நீதித்துறை எந்த அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் சுதந்திரமாக இயங்க வேண்டும் என சிலர் கருத்து. 

இதில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.    

Recidivism

Recidivism:
ரெசிடிவிசம் என்பது ஒரு தவறை திரும்பத் திரும்ப செய்வது. இவர்களை பொதுவாக திருத்தவே முடியாது என்று கருதலாம். இவர்களின் குற்றங்களுக்கு தண்டனை என்பது சிறைச்சாலை என்றாலும் அங்கும் இதே தவறைச் செய்வார்களாம். விடுதலை ஆனபின்னரும் இதே தவறைச் செய்வார்களாம். திருந்துவதற்குத்தானே சிறை. மீண்டு வந்தபின்னர் அதே தவறைச் செய்தால், அவர்கள் "திரும்பத் திரும்ப அதே போன்ற தவறை செய்பவர்கள்" என்று கூறுகின்றனர். இதைத்தான் ரெசிடிவிசம் என்கின்றனர். இந்த விஷத்தை சிறைதண்டனை மூலம் போக்க முடியாதாம்.

குழந்தைகளை பாலியல் குற்றம் புரிபவர்கள் இந்த மனநிலையில் இருப்பதாகவும், அவர்களுக்கு சிறை தண்டனை சரியான தீர்வாக இருக்காது என்றும், அவர்களை "மருத்துவ ஊசி மூலம் காய் அடித்து" விட்டால் Chemical Castration பிரச்சனை தீர்ந்துவிடும் என்றும் ஆஸ்திரேலிய அரசு கருதுகிறதாம். இது எவ்வளவு தூரத்துக்கு சட்டப்படி சரியாக இருக்கும் என்று அந்த நாட்டு அரசு யோசித்து வருகிறதாம். 

சிறுவர்கள் மீது பாலியல் நாட்டம் கொள்ளும் வயதானவர்களை பிடொபைல்ஸ் Pedophiles என்று அழைக்கிறார்கள். இது ஒரு மனநோய் என்றும் சொல்கிறார்கள். பெடோ என்றால் கிரேக்க மொழியில் குழந்தை என்றும், பிலியா என்றால் ஆசை என்றும் பொருளாம். 
      

Friday, August 21, 2015

உயிலின் கதை-5

உயிலின் கதை-5

முகமதியர்கள் உயில் எழுதலாமா?
இந்துக்கள், தானே தானம் கொடுக்கும் உரிமையுள்ள சொத்துக்களை மட்டும் உயில் எழுதலாம் என்று அனுமதி உண்டு. அதாவது, இந்துக்களின் பூர்வீகச் சொத்துக்களில் உயில் எழுத முடியாது. முகமதிய சமுதாயத்தில் உயில் என்பதை “வாசியத்” (wasiat) என்று கூறுகிறார்கள். அதன்படி ஒரு குறிப்பிட்ட அளவு சொத்தை மட்டும் இந்த வாசியத் மூலம் உயில் மூலம் கொடுக்கலாம் என்றும், பெரும்பகுதியை தன் வாரிசுகளுக்கு மட்டுமே விட்டுவிட்டுச் செல்ல வேண்டும் என்றும், அதை உயில் மூலம் வெளியாருக்கு கொடுக்க முடியாது என்றும் தெள்ளத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளதாம்.

இந்துக்களின் ஆரம்பகால உயில்கள்:
ஆரம்ப காலங்களில் இந்துக்களின் உயில்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படியே காகிதத்தில் எழுதியிருந்தாலும், அதில் அந்த உயிலை எழுதியவர் கையெழுத்துப் போட்டிருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லையாம். அப்படியே கையெழுத்துப் போட்டிருந்தாலும் அதை இரண்டு சாட்சிகள் முன்னிலையில் போட்டிருக்க வேண்டும் என்ற சட்ட கட்டாயமும் இல்லையாம். எழுதாத உயில்களை அல்லது வாய்மொழியாக சொல்லிவிட்டுப்போன உயில்களை “நன்குபேட்டிவ் உயில்” அதாவது வாய்மொழி உயில் என்று சொல்கிறார்கள். போரில் ஈடுபட்ட வீரர் ஒருவர் தன் இரண்டு நண்பர்களிடம் தன் ஆசை என்ன என்று சொல்லிவிட்டு அந்த போரில் இறந்திருந்தால் அது நன்குபேட்டிவ் உயில் வகையைச் சேரும். இது நாட்டில் இருக்கும் மக்களுக்கும் (போர்ப்படையில் இல்லாத மக்களுக்கும்) இந்த நன்குபேட்டிவ் உயில் செல்லும் என்று அப்போது நடைமுறையில் இருந்ததால், பலர் இதுதான் இறந்தவரின் நன்குபேட்டிவ் உயில் என்று சொல்லிக் கொண்டார்கள். குழப்பம்தான் மிஞ்சியது. எனவே இதற்கு ஒரு பொதுவான சட்டம் தேவைப்பட்டது. 

அதுதான் இந்தியன் சக்சஷன் ஆக்ட் 1865 (ஆக்ட் 10 ஆப் 1865). அந்தச் சட்டம் 1870-ல் அமலுக்கு வந்தது. அதன்படி உயில் எழுதி விட்டுப்போன சொத்துக்கள், உயில் எழுதாமல் விட்டுப்போன சொத்துக்கள் இவைகளுக்கு இந்த சட்டம் சில விதிமுறைகளையும், நடைமுறைகளையும் ஏற்படுத்தியது. உயில் எழுதாமல் ஒருவர் சொத்தை விட்டுவிட்டுப் போனால், அவ்வாறு இறந்தவரை ‘died intestate “உயில் இல்லாமல் இறந்தவர்” என்று அழைக்கின்றனர். உயில் எழுதிவைத்துவிட்டு இறந்தவரை Testator  உயிலுடன் இறந்தவர்” என்கின்றனர்.

இந்தச் சட்டமானது, ஆரம்பத்தில் இந்தியாவில் வசிக்கும் ஆங்கிலேயர்களுக்கும், ஆங்கிலோ-இந்தியர்களுக்கும், அமெரிக்கர்களுக்கும், பார்சிக்கள் ஆகியோருக்கு மட்டுமே பொருந்தும்படி ஏற்படுத்தப்பட்டது. அதாவது இந்தச் சட்டம், இந்துக்கள், புத்தமதத்தினர், ஜைனர்கள், முகமதியர்கள் ஆகியோருக்கு இந்த இந்தியன் சக்சஷன் ஆக்ட் 1865 பொருந்தாது. இது இந்துக்களுக்கு பொருந்தாது என்றதால், இந்துக்கள் எழுதும் உயிலுக்கு ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்தனர். 

அதன்பெயர் இந்து உயில்கள் சட்டம் 1870. (The Hindu Wills Act 1870). இதன்படி, 1870ம் வருடம் செப்டம்பர் 1-ந்தேதி முதல் எழுதப்படும் இந்துக்களின் உயில்கள் இந்தச் சட்டப்படியே இருக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்டது. அதுவும் எல்லா பகுதிகளுக்கும் செல்லாது. மதராஸ் நகரம், பம்பாய் நகரம், கல்கத்தா நகரம் ஆகிய மூன்று நகரங்களுக்கு மட்டுமே செல்லும். மதராஸ் நகரத்தை விட்டு வேறு ஊர்களில் இந்தச் சட்டத்துக்கு வேலையில்லை. இதன்படி, மதராஸ் நகரில் உள்ள சொத்துக்களைப் பொறுத்து உயில் எழுதி இருந்தாலும், மதராஸ் நகருக்கு வெளியே உயில் எழுதப்பட்டிருந்து, அந்த உயிலில் மதராஸ் நகரத்திலுள்ள சொத்து சொல்லப்பட்டிருந்தாலும் இந்த சட்டம் பொருந்தும்படி ஏற்படுத்தப் பட்டது. 

இந்த சட்டம் இந்து மதச் சட்டத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப் பட்டது. அதாவது, ஒரு இந்து, தான் உயிருடன் இருக்கும்போது, விற்பனை செய்யும் உரிமையுள்ள சொத்துக்களை மட்டுமே உயில் எழுத முடியும். பூர்வீகச் சொத்தை தனிமனிதனாக இவரே விற்க முடியாது சொத்தானது. இந்த மதராஸ் நகரில் உள்ள சொத்துக்களுக்கு எழுதும் உயில்களுக்கு சில சட்டக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி இருந்தது. அதன்படி, உயில் எழுதியவர் சாட்சிகள் முன்னிலையில் கையெழுத்துச் செய்திருக்க வேண்டும். சாட்சிகள் என்பது கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. இந்த இந்து-உயில் சட்டம் 1870 வருவதற்கு முன்னர் எழுதிய உயில்களுக்கு எழுத்துபூர்வமாக எழுத வேண்டிய அவசியம் இல்லை; வாய்மொழி உயிலே போதும் என்றிருந்தது; அப்படியே எழுதப்பட்டிருந்தாலும், அதற்கு சாட்சிகள் முன்னிலையில் அட்டெஸ்டேஷன் attestation என்னும் இரண்டு சாட்சிகளின் கையெழுத்தும் தேவையில்லை. 

ஆக, மதராஸ் நகருக்குள் இருக்கும் சொத்துக்கு எழுதிய உயிலுக்கு, எழுதியவர் கட்டாயம் கையெழுத்துப் போட வேண்டும், சாட்சிகளும் அவர் முன்னிலையிலேயே கட்டாயம் கையெழுத்துப் போடவேண்டும். மதராஸ் நகருக்கு வெளியே உள்ள சொத்தை உயில் எழுதியவர் அதில் சாட்சிகள் முன்னிலையில் கையெழுத்துப் போட வேண்டிய அவசியம் இல்லை என்றும், வாய்மொழியாகக்கூட உயில் ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் சட்டமாக இருந்தது. 

உயிலின் கதை-4

உயிலின் கதை-4
பின்னர் ஏற்பட்ட பிரைவி கவுன்சில் வழக்குகளில், இந்தியாவில் பெங்கால் பகுதியில் வசிக்கும் தயாபாக இந்துக்கள் தனது தனிச் சொத்துக்களை (பூர்வீகம் அல்லாத தானே சம்பாதித்த சொத்துக்களை) உயில் எழுதி அவர் விருப்பம் போல கொடுக்கலாம் என்று தீர்ப்பளித்து. அப்போது இந்த தீர்ப்பு இந்தியாவில் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது.


அப்போது தென்னிந்தியாவில், குறிப்பாக மதராஸ் பிரசிடென்சியில் உயில் எழுதுவது என்பது வழக்கத்தில் வேறு விதமாக இருந்தது. மகன்களுக்கு கிடைக்கும் பூர்வீகச் சொத்தை ஒருவர் வேறு யாருக்கும் உயில் எழுத முடியாது என்ற நிலை. தனிச் சொத்துக்கள் ஏதாவது இருந்தால் அதை அவர் தானமாக யாருக்கேனும் கொடுக்கலாம். குடும்பச் சொத்துக்களை, மகன்களைத்தவிர, வேறு யாருக்கும் உயிலாகவோ தானமாகவோ கொடுக்க முடியாத நிலை. ஆனால் ஒரு வழக்கில் பிரைவி கவுன்சில் ஒரு தீர்ப்பைத் தருகிறது. அதன்படி, ஆண்வாரிசு இல்லாத ஒருவரின் அளவில்லாச் சொத்துக்களை, அவரின் மனைவிக்கும் மகளுக்கும் போதிய வசதி செய்துவிட்டு, மீதிச் சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதலாம் என்றும் தீர்ப்புச் சொன்னது. இது பூர்வீகச் சொத்துக்களில் வாரிசுகளுக்கு வசதி செய்துவிட்டால் மீதிச் சொத்தை உயில் எழுதலாம் என்ற அடிப்படையில் தீர்ப்பு இருக்கிறது எனக் கருதினர். 

இதன்பின்னர், மதராஸ் பிரசிடென்சி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது, அதன்பெயர் 1892-ம் வருடத்தின் மெட்றாஸ் ரெகுலேஷன் சட்டம் (Madras Regulation V of 1892). இதன்படி ஒரு இந்து பூர்வீகச் சொத்துக்களைப் பொறுத்து, மகன்களுக்கு எதிராக, ஒரு உயில் எழுதிவிட முடியாது. தனிச் சொத்துக்களில் வேண்டுமானால், மகன்கள் இல்லாதபோது, மனைவி மகள்களுக்கு தேவையான பாதுகாப்பை செய்து வைத்துவிட்டு மீதிச் சொத்தை உயில்மூலம் வழங்கலாம் என்கிறது அந்த சட்டம். அதாவது, ஒருவர் தன்னால் மட்டுமே விற்பனை செய்யும் அதிகாரம் உள்ள சொத்துக்களை மட்டும் உயிலில் கொடுக்கலாம். மற்ற சொத்துக்களைப் பொறுத்து உயில் எழுதிவைத்துவிட முடியாது என்று மதராஸ், பாம்பே, கல்கத்தா பிரசிடென்சியின் அப்போதைய சட்ட நிலவரம்.

உயிலின் கதை-3

உயிலின் கதை-3
இந்தியாவின் தர்ம சாஸ்திரங்கள் இத்தகைய உயில்களைப்பற்றி அந்த சாஸ்திரங்களில் ஏதும் சொல்லவில்லையா? ஒருசில தர்ம சாஸ்திர பண்டிதர்கள் இதைப்பற்றி சொல்லி உள்ளார்களாம். கட்டாயனா என்ற பண்டிதர், “ஒரு மனிதன், தான் ஆரோக்கியத்துடன் இருக்கும்போதோ, அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போதோ, ஏதாவது தர்ம காரியத்துக்காக ஏதாவது கொடுக்கச் சொல்லி இருந்தால், அதை அவன் வாழ்நாளிலேயே மதித்து கொடுத்துவிட வேண்டும்; ஒருவேளை அவ்வாறு கொடுக்க முடியாமல் இறந்துவிட்டால், அவரின் மகன் கண்டிப்பாக அதை நிறைவேற்ற கடமைப்பட்டவன்” என்று தெளிவாகச் சொல்லி உள்ளாராம். ஹரிதா என்ற பண்டிதர், “வாய்மொழியில் சொல்லிய உறுதிமொழியை (சத்திய சொற்களை) செய்யாமல் அல்லது செயல்படுத்தாமல் இருந்தால் அது இந்த உலகத்திலும், மேல்-உலகத்திலும் பட்ட “மனச்சாட்சியின் கடனே” என்று கூறுகிறார்.

ஒருவர் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் தானமாக கொடுத்துவிடலாமா அல்லது எந்த அளவு தன் சொத்தைத் தானமாக கொடுக்கலாம் என்றும், தன்னை நம்பி உள்ளவர்களுக்கு எவ்வளவு விட்டுச் செல்லவேண்டும் என்றும் இந்துமத தர்ம சாஸ்திரத்தின் முன்னோடியான யக்ஞவால்கியர் சொல்கிறார், “தன்னை நம்பி இருப்பவர்களுக்கு பாதகம் இல்லாமல் சொத்தை வைத்துவிட்டு, மீதியை தானமாகக் கொடுப்பதில் தவறில்லை” என்கிறார். “A gift made without prejudice to the family is valid.”

ஆனால், இப்படியெல்லாம் தர்ம சாஸ்திரங்கள் சொன்னாலும், உயில் என்ற வார்த்தையை கொண்டு சொல்லப்படவில்லை. எனவே உயில் என்பது சட்டபூர்வமாக இந்து மதத்தில் வழக்கத்தில் இல்லையென்றே எடுத்துக் கொள்ளலாம்.

பரந்த இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்கிறார்கள். இந்தியாவில் மதங்களும் அதன் மக்களும் அவரவர் மதக் கோட்பாட்டுப்படி வாழ்கிறார்கள். சொத்துக்களின் உரிமைகளும் அவ்வாறே பங்கு போட்டுக் கொள்ளப்படுகின்றன. இந்துக்கள் உயில் எழுதுவது பழக்கத்தில் இல்லையாம். ஒரு சில ஜமின்தார்கள் உயில் எழுதுவார்களாம். மதராஸ் பிரசிடென்சி மாகாணத்தில் இந்த உயில் எழுதும் பழக்கம் இல்லையாம். ஆனால் பெங்கால் பிரசிடென்சி மாகாணத்தில் உயில் எழுதுவார்களாம். இந்தியாவில் பெங்கால் பிரசிடென்சி மாகாணத்தில் முதன் முதலில் ஒரு உயில் சாசனம் எழுதப்பட்டது.

பெங்காலில் நூடியா என்னும் பகுதியின் ராஜா அவர். அவருக்கு நான்கு மகன்கள். மன்னர்கள் எப்போதும் தன் இராஜாங்கத்தை மூத்த மகனுக்கே கொடுத்து முடிசூட்டுவார்கள். இந்த இந்து மன்னர், நிலங்களில் உள்ள ஜமின்தாரி உரிமைகளை, எல்லா மகன்களுக்கும் கொடுக்காமல், அனைத்தையும் அவரின் மூத்த மகனுக்கே உயில் எழுதி வைத்துவிட்டு இறந்து விட்டார். அப்போது இந்துக்கள் உயில் எழுதும் வழக்கமில்லையே; அப்படியென்றால் இந்த உயில் எப்படி செல்லும் என்ற கேள்வி எழுந்து அது வழக்காக கோர்ட்டுக்குப் போகிறது. இந்தியாவில் இந்துக்கள் உயில் எழுதலாம்.

சாஸ்திலங்களும் ஒப்புக் கொள்கின்றன. மற்ற மகன்களை விட்டுவிட்டு ஒரே மகனுக்கு சொத்தைக் கொடுக்கலாம் என்று கோர்ட் அந்த உயிலைச் சட்டபூர்வமாக்கியது. இந்த வழக்கு நடந்த காலம் 1772-ல். அன்றுமுதல் பெங்கால் பிரசிடென்சி பகுதியில் இந்துக்கள் உயில் எழுத ஆரம்பித்தார்கள். அப்போது பெங்கால் பகுதியில் இந்துமதத்தின் இரண்டு கோட்பாடுகளான “மிதாக்ஷரா மற்றும் தயாபாக” இவற்றில் இரண்டாவது கோட்பாடான தயாபாக கோட்பாடு நடைமுறையில் இருந்தது. தயாபாக கோட்பாட்டின்படி, பூர்வீகச் சொத்துக்களை மூத்த மகனுக்கே கொடுத்துவிடலாம், மற்ற மகன்களுக்கு கொடுக்க தேவையில்லை என்ற நடைமுறை இருந்தது. அதாவது, இறந்த மூதாதையர்களுக்கு மூத்த மகனே “பிண்டம்” (பித்ரு ஆகாரம்) கொடுக்க கடமைப்பட்டவன் என்றும் அவனே மூதாதையர் சொத்தையும் அடைவான் என்றும் தயாபாக கோட்பாடு.

இதற்கு நேர் எதிரான கோட்பாடு மிதாக்ஷர (மிதாச்சர) கோட்பாடு. இதன்படி, மூதாதையருக்கு “பிண்டம்” கொடுப்பது எல்லா ஆண்குழந்தைகளுமே. எனவே மூதாதையர் சொத்துக்களில் எல்லா ஆண் குழந்தைகளுக்கும் சம பங்கு உண்டு என மிதாஷர கொள்கை. இந்த மிதாஷர கொள்கையானது, பெங்கால் தவிர மற்ற இந்தியா முழுவதும் நடைமுறையில் இருந்த காலம் அது.

Monday, August 17, 2015

உயிலின் கதை-2

உயிலின் கதை-2

சிலபேர், ஒருவரின் கண்ணின் முன்னால் நல்லவர்போல நடிப்பார்கள். அவர் உயிருடன் இல்லையென்றால், இவரின் உண்மைத்தன்மையை வெளியே காண்பிப்பார். அப்படிப்பட்டவர்களை வாழ்நாளில் அடையாளம் காண்பதும் கடினம்தான். எனவே ஒருவரின் வாழ்நாளில் அவருக்கு நம்பிக்கையுடன் நடந்தவருக்கு அவரின் சொத்துக்களை பங்கீடு செய்து, (கொடுக்காமல்) சொல்லிவிட்டுப் போவது என்பது இயற்கையான குணம்தான். அவ்வாறு பங்கீட்டு செய்து கொடுக்கவில்லை என்றால், அது அவர் சார்ந்த மதங்கள் எப்படிச் சொல்கிறதோ அதன்படி அவரின் வாரிசுகளுக்குப் போய்விடும். அவரவரின் மதச்சட்டம் உள்ளே புகுந்துவிடும். இந்த சட்டம் உள்ளே வராமல், அவரின் விருப்பப்படி சொத்து பங்கீடு ஆகவேண்டும் என்றால், இந்த கடைசி ஆசை என்னும் “உயிலையே” அவர் எழுதி வைத்து விட்டுச் செல்ல வேண்டும். எனவேதான் உயிலுக்கும் உயிருக்கும் ஏதோ ஒரு தொடர்பு உண்டு. இயல்பாக ஒருவர் வாழ்ந்து, சொத்துக்களைச் சேர்த்து, அனுபவித்துவிட்டு, மீதியை விட்டுவிட்டு இறந்துவிடுகிறார். இறந்தவர் சொத்துக்கள் யார் யாருக்குப் போகவேண்டும் என்பதில் அவரின் ரத்த உறவுகளில் சண்டைகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகமிக அதிகம். ஏற்கனவே அவ்வாறு சண்டைகள் நடந்திருக்கும்போல, அதனால்தான், மதங்கள் உள்ளே புகுந்து இந்த சட்டாம்பிள்ளை வேலைகளைச் செய்து, ஒரு பொதுக்கருத்தை உருவாக்கி அதைக் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறி, அது காலப்போக்கில் சட்டங்களாக ஆகிவிட்டிருக்க வேண்டும். சண்டை வராமல் சட்டங்கள் வர வாய்ப்பில்லை. பொதுவாக ஒரு வாழும் கூட்டத்துக்குள் சண்டை வந்தால் அங்கிருக்கும் பெரியவரை பார்த்து குறைகளை கூறி வழிதேடிக் கொள்வோம். அப்படிப்பட்ட பெரியவர்கள் மதம் சார்ந்த கூட்டங்களில், சாமியார்கள், பாதிரியார்கள், இந்த வேலைகளைச் சரியாக செய்து வந்திருக்கிறார்கள். ரோமானியர்கள் இதில் முன்னோடிகளாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களின் குறைகளை பாதிரியார்களிடம் தெரிவித்திருக்கிறார்கள். இறைவனின் நேரடித்தூதர் போப் ஆண்டவர். எனவே மக்களும், மன்னர்களுமே அவரிடம் ஆலோசனை கேட்பதும், அவரின் உத்தரவை மதிப்பதும் காலம் காலமாக நடந்து கொண்டிருந்தது. இவரின் உத்தரவுகளும் ஆலோசனைகளும் காலப்போக்கில் நடைமுறை சட்டங்களாக மாறிவிட்டன. ஒரு காலத்தில் ரோமன் போப் சொன்னதே சட்டம். பின்னர், போப்பை எதிர்த்த இங்கிலாந்து மன்னர்கள் தங்களுக்கென பல விதிமுறைகளை ஏற்படுத்திக் கொண்டனர். அவைகள்தான் பின்னர் எல்லாக் காலனி நாடுகளும் பின்பற்றும் சட்டங்களாக ஆகின. பரந்த இந்தியாவும் (இப்போதைய இந்தியா, பர்மா, பாகிஸ்தான், இலங்கை) ஆங்கிலேயர்களின் சட்டத்தை கொண்டே இந்திய மக்கள் ஆளப்பட்டனர். எனவே இந்தியர்களின் சட்டங்களுக்கு முன்னோடி ஆங்கிலேயர்களின் சட்டங்களே. 

உயிலின் கதை-1

உயிலின் கதை-1:
சொத்தை வைத்திருப்பவர், தன் வாழ்நாளுக்குப்பின், தன்னைச் சார்ந்தவருக்கு அந்தச் சொத்தை விட்டுச் செல்ல வேண்டும் என எல்லா மதங்களுமே ஒட்டு மொத்தமாக ஒரே கருத்தைத்தான் கொண்டிருக்கின்றன. தன்னைச் சார்ந்தவரான தன் வாரிசுகள் அல்லாதவருக்கு சொத்தை கொடுக்க வேண்டும் என்றால் அதை தான் உயிருடன் இருக்கும்போதே, தன் கைப்பட தானமாகக் கொடுத்து விட்டு செல்ல வேண்டும். அவரின் வாழ்நாளுக்குப்பின் அதைக் கொடுப்பதாகச் சொன்னால், இவரின் வாழ்நாளுக்குப்பின், அதை யார் நிறைவேற்றுவார்கள்? ஒரு தந்தை, அவரின் மகனுக்குக் கொடுக்க வேண்டிய சொத்தை, அவரின் வாழ்நாளுக்குப்பின், அதை வேறு ஒருவருக்கு கொடுத்துவிடு என்று கட்டளை இட்டிருந்தால், அந்த மகன் அவ்வாறு நடப்பானா என்பதே சந்தேகமே! தந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண்டியது மகனின் கடமை என்று எல்லா மதங்களுமே சொல்லுகின்றன. தந்தையின் கடனை, அவரின் இறப்புக்குப்பின், அவரின் மகன்தான் தீர்க்க வேண்டும் என்பதும் மதங்கள் வலியுறுத்தி சொல்லி வந்துள்ளன. இப்போது வந்துள்ள சட்டங்கள், அப்படி கொடுக்கவேண்டும் என்ற அவசியமோ கட்டாயமோ இல்லை என்று சொல்லிவிட்டது. ஒருவர் பட்ட கடனை, அவரே செலுத்த வேண்டும், அல்லது அவரின் சொத்துக்களிலிருந்து செலுத்தப்பட வேண்டும் என்பது சட்ட விதிகளாக்கப் பட்டுள்ளது.


ஒருவரின் இறப்புக்குப்பின் அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றுவது என்பது மரபு சார்ந்த விஷயம். இறந்தவர் என்ன பார்த்துக் கொண்டா இருக்கிறார். பேப்பர்கள், எழுத்துக்கள் இல்லாத காலத்தில், வார்த்தைகளுக்கு மரியாதையும், மதிப்பும் இருந்த காலத்தில் இதை ஒரு கடமையாகவும், இதை மீறுவது என்பது இறந்தவருக்குச் செய்த துரோகமாகவும் கருதப்பட்டது. எனவே பழைய காலத்தில், இவ்வாறு ஒருவரின் கடைசி ஆசைகளை நம்பிக்கையானவர்களிடம் சொல்லிச் செல்ல வேண்டிய கட்டாயமும் இருந்தது. பேப்பர்கள் வந்தபின், எழுதுவது சுலபமான பின்னர், இவ்வாறு சொல்லிச் சென்ற கடைசி ஆசைகளுக்கு ”உயில்” எனப் பெயர் வைத்துக் கொண்டனர். இந்த உயிலுக்கும் உயிருக்கும் சம்மந்தம் இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை, ஆனாலும் உயிருக்கும் உயிலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறதாகவே நம்பப்படுகிறது. உயிர் போனவுடன் அவரின் இந்த உலகச் சொத்துக்களை யார் யார் எப்படி எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவரின் வேறு சில வேலைகளை/ கடமைகளை யார் எப்படி நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்றும் தனது கடைசி ஆசையாக சொல்லிச் செல்கிறார். 

Saturday, August 15, 2015

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-14

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-14
சட்டபூர்வம் இல்லாத குழந்தை
திருமணம் ஆகாமல் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் அது சட்டபூர்வமற்ற குழந்தை (illegitimate child) என்பர். இந்த மாதிரி குழந்தைகளுக்கு அதன் தாயே கார்டியன் ஆவார்.

**

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-13

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-13
மைனர் போடும் வழக்குகள்;
கோர்ட்டில் வழக்குகளை தாக்கல் செய்யவதற்கு அந்த வழக்கை போடுபவர் மேஜராக இருக்க வேண்டும், அதாவது அவர் 18 வயதை பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும். அதாவது அவருக்கு அப்போது 19 வயது நடந்து கொண்டிருக்க வேண்டும். அப்படி மேஜர் ஆகாமல் இருந்தால், அதாவது மைனராக இருந்தால், அவருக்காக அவரின் கார்டியன் அந்த வழக்கை போடலாம். அந்த கார்டியன் அவரின் தந்தையாகவோ, தாயாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த மைனரின் நண்பனாக இருக்கலாம். (the next friend). வேறு யாராவது, மைனருக்கு எதிராக ஒரு வழக்கை கோர்ட்டில் போட வேண்டும் என்ற நிலை இருந்தால், அவர் அந்த மைனர் மீது வழக்கை போடலாம். ஆனால், அந்த வழக்குடன் ஒரு மனுவையும் போட்டு, அதில், அந்த மைனருக்காக அந்த வழக்கை நடத்த, ஒரு கோர்ட் கார்டியனையும் நியமிக்க சொல்லி கேட்க வேண்டும். அந்த கார்டியன் அந்த மைனரின் தகப்பன், தாய், அல்லது வேறு யாராவகவும் இருக்கலாம். கோர்ட் அதை முடிவு செய்யும்.

**

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-12

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-12
மைனரைக் காட்டி எழுதிய பத்திரத்தை எப்படி ரத்து செய்யமுடியும்?
மைனரை பத்திரத்தில் பெயர் காண்பித்து அந்த மைனரின் தகப்பனார் அவருக்காக கார்டியனாக இருந்து அந்த மைனரின் சொத்தை விற்பனை செய்திருந்தால், அதை அந்த மைனர் 18 வயது முடிந்து மூன்று வருடங்களுக்குள் அதாவது அவரின் 21 வயதுக்குள் அந்த கிரயத்தை ரத்து செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த மைனர் 21 வயதுவரை எந்த வழக்கும் போடவில்லை என்றால், அதற்குமேல் அந்த கிரயம் செல்லும். அதற்குப்பின் அந்த மைனர் அவரின் சொத்தை திரும்ப கேட்க முடியாது. அந்த வழக்கை 21 வயதுக்குள் கோர்ட்டில் போடும்போது, அந்த சொத்துக்குறிய மதிப்புக்கு கணக்கிட்டு 7.5% கோர்ட் கட்டணம் கட்ட வேண்டும்.

ஆனால் அந்த மைனரின் பேர் அந்த பத்திரத்தில் குறிப்பிடாமல் அவருக்காக கையெழுத்து கார்டியன் போடாமல் இருந்தால், அந்த கிரயத்தை கோர்ட்டில் ரத்து செய்ய வழக்கு போடும்போது அந்த சொத்தின் மதிப்புக்கு கோர்ட் கட்டணம் கட்ட தேவையில்லை, ஏனென்றால், அந்த கிரயப் பத்திரத்தில் மைனரின் பெயர் இல்லை. அந்த மைனருக்காக யாரும் விற்கவில்லை. விற்காத சொத்துக்கு கோர்ட் கட்டணம் தேவையில்லை என்று அடிப்படை விதியின்படி தன் பங்குக்கு மைனர் கோர்ட் தீர்ப்பை வாங்கிவிடலாம். சென்னை உயர்நீதிமன்றத்தின் முழுபெஞ்ச் தீர்ப்பில் இந்த சட்டப்பிரச்சனை அலசப்பட்டு இந்த தீர்ப்பு வழங்கப் பட்டது.  (The Hon’ble FULL BENCH of the Madras High Court, in Sankaranarayana v. Kandasamia, AIR 1956 Mad 670).

இந்தியன் மெஜாரிட்டி சட்டம் 1875
1875லிலேயே பிரிட்டீஸ் ஆட்சி காலத்திலேயே இந்தியன் மெஜாரிட்டி சட்டம் கொண்டு வரப்பட்டு விட்டது. இந்தச் சட்டம் வருவதற்கு முன், இந்துக்கள், மைனாரிட்டி என்பது 16 வயது ஆரம்பமாகும் வரைதான் என்றார்கள். கோர்ட்டுகளும் அதை ஒப்புக்கொண்டன. இன்னும் சில கோர்ட்டுகள் 16 வயது முடிந்தவுடன்தான் மேஜர் ஆவார்கள் என்று தீர்ப்பளித்தன. முஸ்லீம் மதத்தில் மெஜாரிட்டி என்பது பருவம் அடைந்தவுடன் வந்துவிடும் என்று சொல்லி உள்ளார்கள். பருவம் என்பது அந்தக் காலத்தில், ஆணுக்கு 12 வயது முடிவடைந்தவுடன் வந்துவிடும், பெண்ணுக்கு 9 வயது முடிவடைந்தவுடன் வந்துவிடும் என்று முடிவெடுத்-திருந்தார்கள். அதை பிரைவி கவுன்சில் வழக்கிலும் உறுதி செய்துள்ளது. AIR 1928 PC 152.

இந்தியாவில், முகமதியர்கள் வழக்கப்படி திருமணம், டைவர், தலக் இவைகளில் மேஜர் வயது என்பது 15 முடிவடைந்தவுடன் ஏற்படும் என்று சொல்லி உள்ளனர். ஒரு 15 வயது முஸ்லீம், இஸ்லாமிய சட்டப்படி மேஜர் என்றும், இந்தியன் மெஜாரிட்டி சட்டப்படி மைனர் என்றும் எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு இந்தியாவில் மைனாரிட்டி வயதுபற்றி பல குழப்பங்கள் இருந்ததால் இவையெல்லாவற்றையும் ஒன்றுபடுத்தி, இந்த இந்தியன் மெஜாரிட்டி சட்டம் வந்தது. இந்த இந்தியன் மெஜாரிட்டி சட்டம் இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மட்டும் பொருந்தும். வெளிநாட்டினருக்கு பொருந்தாது.

**

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-11

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-11
இந்து மைனர் சொத்தை கோர்ட் அனுமதி இல்லாமல் விற்றால்....?
மைனர் சொத்துக்களை அவரின் இயற்கை கார்டியன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் அது மைனரின் நன்மைக்காக இருக்க வேண்டும் என்றும், இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் ஆக்ட் 1956ன் பிரிவு 8ல் சொல்லப் பட்டுள்ளது. ஆனாலும் அசையாச் சொத்துக்களை கோர்ட் அனுமதியில்லாமல் விற்க முடியாது என்றும் சொல்லி உள்ளது, அவ்வாறு கோர்ட் அனுமதி கொடுக்கும்போது, அந்த விற்பனையானது மைனரின் அவசியத்துக்காக விற்கப்பட்டால் மட்டுமே கோர்ட் அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப் பட்டுள்ளது.

கோர்ட் அனுமதியைப் பெறாமல் மைனரின் சொத்தை, தகப்பனார் கார்டியனாக இருந்து விற்று இருந்தால் அந்த கிரயத்தை அந்த மைனர் 18 வயது முடிந்து மேஜர் வயதை அடைந்தவுடன் அதிலிருந்து மூன்று வருடங்களுக்குள் அந்த கிரயத்தை செல்லாது என கோர்ட் மூலம் தீர்ப்பு வாங்கலாம். அதில் மைனரின் நன்மைக்காக இந்த சொத்து விற்கப்படவில்லை என்று கூறித்தான் தீர்ப்பை வாங்க முடியும். அவ்வாறான வழக்குகளை அந்த மைனர் 18 வயது முடிந்து மூன்று வருடங்களுக்குள் அதாவது அவரின் 21 வயதுக்குள் வழக்கு போட்டுவிட வேண்டும். இதற்குப்பின் அதாவது 21 வயது முடிந்தவுடன் அப்படி ஒரு வழக்கை போட முடியாது என லிமிடேஷன் சட்டம் பிரிவு 60-ல் சொல்லப்பட்டுள்ளது. (The Limitation Act Section 60).

பல மைனர்கள் இருந்து, அவர்கள் எல்லோரும் கார்டியனின் மைனர் சொத்தின் கிரயத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை இருந்தால், இது கூட்டாக வழக்குப்போடும் நிலை. இதில் மூத்த மைனருக்கு 21 வயதுக்கு மேல் ஆகிவிட்டிருந்தால் அவர் வழக்கு போட முடியாது. ஆனால், இளைய மைனருக்கு 21 வயதுக்கு கீழே இருந்தால் அவர் தனியே தன் பாகத்துக்கு வழக்கை போடலாம் என்றும், கூட்டுகுடும்ப சொத்துக்களில் மூத்த மைனர் கர்த்தாவாக இருக்க வேண்டி இருந்தால், அவருக்கு 21 வயது முடிந்தவுடனேயே இளைய மைனர்களுக்கு அவ்வாறு 21 வயது வரவில்லை என்றாலும் எல்லோருமே வழக்குப் போடும் உரிமையை இழந்துவிடுவர் என லிமிடேஷன் சட்டம் பிரிவு 7ல் சொல்லப் பட்டுள்ளது. ஏனென்றால் கூட்டுக்குடும்பச் சொத்தில் கர்த்தாவின் (மேனேஜரின்) உரிமை பறிபோய் விட்டால், ஜூனியர் மெம்பர்களின் உரிமையும் கூடவே பறிபோய்விடும் என்று இந்த விதி கூறுகிறது. ஏனென்றால் இது ஒரு கூட்டான உரிமையாகும்.

**

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-10

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-10
இயற்கை கார்டியனின் அதிகாரங்கள்;
இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956ன் பிரிவு 8-ன்படி, மைனர் குழந்தைக்கு நன்மை அளிக்கும் எந்த காரியத்தையும் அந்த மைனருக்காக அதன் இயற்கை கார்டியன் செய்து வரலாம். ஆனால், மைனரின் சொத்துக்களை இயற்கை கார்டியன் என்பவர் அந்த மைனரின் தந்தையே ஆனாலும் விற்கவோ, அடமானம் வைக்கவோ, ஐந்து வருடங்களுக்கு மேல் நீண்டகால குத்தகைக்கு விடவோ முடியாது.

அப்படி இந்த சட்டக் கட்டுப்பாட்டை மீறி மைனரின் சொத்தை இயற்கை கார்டியன் விற்று விட்டால் அதை மைனர் நினைத்தால் ரத்து செய்து விடலாம். It is voidable at the instance of the minor. மைனர் சொத்தை கார்டியன் விற்க முடியாது என்று இந்தச் சட்டம் சொல்வதால், மைனரின் சொத்தை உண்மையிலேயே உண்மையான காரணத்துக்கு விற்பனை செய்ய வேண்டி நிர்பந்தம் இருந்தால், அந்த சொத்து இருக்கும் மாவட்டத்திலுள்ள மாவட்ட கோர்ட்டில் கார்டியன் மனுச் செய்து காரணத்தை கூறி மைனரின் சொத்தை விற்கலாம். அப்படி மனுச் செய்யும்போது, பிரிட்டீஸ் பழைய சட்டமான கார்டியன்ஸ் & வார்டு சட்டம் 1890 சட்டத்தில் சொல்லியுள்ளபடி அதாவது அதன் பிரிவு 29-ன்படி மாவட்ட கோர்ட்டில் மனுசெ செய்ய வேண்டும். அந்த மாவட்ட கோர்ட் அனுமதி கொடுக்க மறுத்து விட்டால், உயர்நீதிமன்றத்துக்கு அப்பீல் செய்து கொள்ளலாம்.

பூர்வீகச் சொத்தில் உள்ள மைனரின் பங்கு சொத்துக்கு இந்த பிரிவு-8 எந்த தடையும் செய்யாது, அதாவது பூர்வீகச் சொத்தில் மைனரின் பங்கை கர்த்தா அல்லது மைனரின் கார்டியன் விற்கலாம், அடமானம் செய்யலாம். கோர்ட் உத்தரவு பெறவேண்டிய அவசியம் இல்லை. கூட்டுகுடும்ப உரிமை உள்ள மைனர் சொத்தில் கோர்ட் தலையிடாது. அதன் குடும்பத் தலைவரே முழு உரிமையுடன் அந்த மைனரின் நன்மைக்காக காரியங்களை செய்து கொள்ளலாம். அவர் கோர்ட்டின் முன்-அனுமதியைப் பெற தேவையில்லை. சட்டத்தில் அவசியம் இல்லை என்று சொல்லியுள்ள போதிலும், அனுமதி பெற வேண்டும் என்று கார்டியன் விரும்பினால், உயர்நீதி மன்றத்தில் மனுச் செய்து கார்டியனாக நியமித்துக் கொள்ளலாம்.

பொதுவாக, ஒரு மைனருக்கு இரண்டு கார்டியன்கள் இருப்பதில்லை. கோர்ட்டும் இரண்டு கார்டியன்களை நியமிக்க மாட்டார்கள். ஆனாலும், மைனரை பார்த்துக் கொள்ள ஒரு கார்டியனும், மைனரின் சொத்துக்களுக்கு ஒரு கார்டியனும் நியமிக்க கோர்ட்டுக்கு அதிகாரம் உண்டாம்.

**

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-9

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-9
வளர்ப்பு குழந்தைக்கு யார் கார்டியன்? (இந்து வளர்ப்பு குழந்தை)
இந்து மதத்தில் மட்டுமே வளர்ப்பு குழந்தைகளை தத்து (Adoption) எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. மற்ற மதங்களில் அந்த பழக்கம் இல்லை. (இப்போது சட்டம் மாறிவிட்டது). இந்து மதத்தில் தத்து என்னும் வளர்ப்பு குழந்தைகளை எடுத்து வளர்ப்பர். இதை அந்த குழந்தை 14 வயதுக்குள் இருக்கும்போது, அதன் தகப்பன்-தாய் சம்மதத்துடன் தத்து எடுத்து வளர்ப்பர். இப்படி தத்து எடுத்து வளர்த்த குழந்தைக்கு இயற்கை பெற்றோர் இருக்கும்போது, வளர்ப்பு பெற்றோர் இயற்கை கார்டியனாக இருக்க முடியுமா? இதற்கு பதிலாக, இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956ல் பிரிவு 7-ல் சொல்லப் பட்டுள்ளது. அதன்படி, வளர்ப்பு குழந்தைகளுக்கு அதன் வளர்ப்பு தந்தை இயற்கை கார்டியனாக இருக்கலாம், அவருக்குப்பின் (அவர் இயங்காமல் போனால்), வளர்ப்புத் தாய் இயற்கை கார்டியனாக இருக்கலாம்.

**

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-8

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-8
தாய் கார்டியன் ஆகமுடியுமா?
அப்படியென்றால், இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956ல் பிரிவு 6-ன்படி, தகப்பன் உயிருடன் இருக்கும்வரை தகப்பன்தான் அவன் மைனர் குழந்தைக்கு (மகனோ, மகளோ) இயற்கை கார்டியனாக இருக்க முடியுமா? தாய் இருக்க முடியாதா என்ற கேள்வி எழுகிறது. ஒரு முக்கியமான வழக்கு வருகிறது. அதில் உச்சநீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்குகிறது. இது ஒரு விசித்திரமான வழக்குதான். பிரிவு 6-ல் “தகப்பனும், ‘தகப்பனுக்குப்பின் தாயும்’ இயற்கை கார்டியனாக இருப்பார்கள் என்று சொல்லியுள்ளது.

அப்படியென்றால் தந்தை உயிருடன் இருக்கும்வரை அவர்தான் கார்டியனாக இருப்பாரா? தந்தை உயிருடன் இருக்கும்வரை தாய் கார்டியனாக இருக்கமுடியாதா? என்ற கேள்வி எழுந்தது. பிரிவு 6 அப்படித்தான் சொல்கிறதா? இதுவரை பல உயர்நீதிமன்றங்கள், தகப்பன் உயிருடன் இருக்கும்வரை தாய் கார்டியனாக இருக்க முடியாது என்றுதான் தீர்ப்புக்களை கூறியுள்ளது. “the father and after him, the mother” என்றுதான் பிரிவு 6-ல் சொல்லப்பட்டுள்ளது.

இந்த “after him” என்ற வார்த்தைக்கு “இறப்புக்குப்பின்” என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளக்கூடாது. தகப்பன், உயிருடன் இருக்கும்போதே, அவனால் செயல்பட முடியாமல்போனால், தாய் கார்டியனாக இருக்கலாம் என்றுதான் அதன் பொருளை யூகிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அந்த தீர்ப்பில் தெளிவு படுத்தியுள்ளது. அந்த வழக்குதான் Githa Hariharan v. Reserve Bank of India, AIR 1999 SC 1149.

இந்த வழக்கில், “தகப்பன், மைனரின் விஷயங்களில் தலையிட விருப்பம் இல்லாமல் திரிந்தாலும், அல்லது தகப்பனும் தாயும் சேர்ந்து முடிவு செய்திருந்தாலும், அல்லது தாயிடமே அந்த குழந்தை முழுப் பொறுப்பில் இருந்தாலும், தகப்பனார் இந்த நாட்டில் இல்லாமல் இருந்தாலும், குழந்தையை கவனிக்க முடியாமல் தகப்பனுக்கு ஏதாவது ஒரு குறை இருந்தாலும், அப்போதெல்லாம் தாய் அந்த குழந்தைக்கு கார்டியனாக இருக்கலாம். என்று தீர்ப்பு கூறிவிட்டது. இந்த வழக்கிலும், தகப்பன் உயிருடன் இருக்கிறார். ஆனால் தாயை விட்டு பிரிந்து இருக்கிறார். குழந்தை தகப்பனிடம் இல்லை. தாயுடன் வசிக்கிறது. குழந்தைக்கு பாங்கில் பணத்தை டெப்பாசிட் செய்கிறார் தாய். அதன் தகப்பன்தான் கார்டியனாக இருக்கமுடியும் என்றும் எனவே தகப்பனின் கையெழுத்து வேண்டும் என்றும் பேங்க் சொல்லிவிட்டது, ஆனால், தாயோ, குழந்தை என்னிடமே வளர்கிறது. தகப்பன் குழந்தையுடன் வாழவில்லை. பிரிந்து வாழ்கிறார். குழந்தைக்கு பேங்கில் கட்டும் டெப்பாசிட் பணம் தாயின் பணமே. இப்படி இருக்கும்போது, தகப்பன் கார்டியன் என்பதை ஏற்க முடியாது என்று வழக்கு சுப்ரீம்கோர்ட் வரை சென்று அந்த வழக்கில்தான் இந்த அதிரடியான தீர்ப்பு பெறப்பட்டது. இந்த தீர்ப்பு வந்த நாள் முதல், தாயும் கார்டியனாக இருக்கலாம் என்று ஒரு வரலாற்று தீர்ப்பும் கிடைத்தது.

**

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-7

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-7
இயற்கை கார்டியன்:
இயற்கை கார்டியனாக (Natural Guardian) முதலில் தந்தையும், தந்தைக்கு பின்னர் தாயும் கார்டியன் என்று சட்டம் சொல்கிறது. எப்போது தந்தை கார்டியன், எப்போது தாய் கார்டியன் என்றும் பிரித்துச் சொல்லவில்லை. ஆனாலும், பிறந்த குழந்தையிலிருந்து அதன் ஐந்து வருடங்களை வரை கண்டிப்பாக அந்தக் குழந்தை தன் தாயிடம்தான் இருக்க வேண்டும் கூறுகிறது. தாய் கார்டியன் என்று சொல்லவில்லை. தாயின் பாதுகாப்பில் இருக்கும் அந்தக் குழந்தை என்றுதான் சொல்கிறது. தந்தை மதம் மாறிவிட்டாலும், சந்நியாசியாக ஆகி விட்டாலும் அவரின் மைனர் குழந்தைக்கு கார்டியனாக இருக்க முடியாது.

1980ல் ஒரு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், “தந்தை தான்தோன்றித் தனமாக திரிந்து கொண்டு குழந்தையை பராமரிக்காமல் அவரின் கடமையை செய்யாமல் இருந்தாலும் அவர் உயிருடன் இருக்கிறார் என்றால் அவரேதான் கார்டியனாக இருக்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக மைனரின் தாய் கார்டியனாக இருக்க முடியாது என்று ஒரு தீர்ப்பை கொடுத்தது. கேரளா உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில், மைனர் குழந்தை தன் தாயிடம் தனியே பிரிந்து இருந்தாலும் அந்த தாய் அந்த குழந்தைக்கு கார்டியனாக இருக்க முடியாது. அதன் தகப்பன்தான் கார்டியனாக இருக்க முடியும். டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில், கோர்ட் உத்தரவின்படி தகப்பன் கார்டியன் நிலையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டால்தான், அந்த குழந்தையின் தாய் கார்டியனாக இருக்க முடியும் என்று சொல்லப் பட்டுள்ளது.

**

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-6

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-6
இந்து மைனர்களுக்கு கார்டியன்கள்;
18 வயதுக்கு குறைந்த வயதுடைய மைனருக்கு கார்டியன்களை, இரண்டு வகையாக சொல்கிறார்கள். ஒன்று, இயற்கை கார்டியன்; மற்றொன்று உயில்மூலம் ஏற்பட்ட கார்டியன். இயற்கை கார்டியன் என்பவர் அந்த மைனர் குழந்தையின் தந்தை மற்றும் தந்தைக்கு அடுத்த அந்த மைனரின் தாய் ஆகிய இருவரையும் இயற்கை கார்டியன் என்கிறார்கள். இயற்கை கார்டியனான தந்தை ஏதாவது ஒரு உயில் எழுதிவைத்து அதன்படி அவரின் இறப்புக்குப் பின்னர் அவரின் மைனர் குழந்தைக்கு யாரையாவது அவர் நம்பும் நபரை கார்டியனாக இருந்து மைனரையும் அவரின் சொத்துக்களையும் பாதுகாத்து அவர் மேஜர் வயதை அடைந்தவுடன் அவரிடம் ஒப்படைக்கும்படி ஒரு உயில் எழுதி வைத்திருப்பார். அப்படி உயில் மூலம் நியமிக்கப்பட்ட கார்டியனை டெஸ்டமெண்டரி கார்டியன் அல்லது உயில் கார்டியன் என்பர். டெஸ்ட்டமெண்டரி என்றால் உயிலை விட்டுச் சென்றவர் என்று பொருள்.

இந்த இரண்டு வகை கார்டியன்கள் இல்லாமல் மற்றொரு வகை கார்டியனும் உண்டு. அது கோர்ட்டால் நியமிக்கப்படும் கார்டியன். இந்த வகை கார்டியன்கள் இல்லாமல் பல காலத்தில் (1956க்கு முன்னர்) வேறு ஒருவகையான கார்டியனும் இருந்தது. அந்த கார்டியனுக்கு டி-பேக்டோ கார்டியன் de-facto என்று பெயர். அந்த டி-பேக்டோ கார்டியனை இப்போது சட்டம் அனுமதிக்கவில்லை.

ஆனால், இதற்கு முன்னர் டி-பேக்டோ கார்டியனான அந்த மைனரின் சகோதரர், பெரியப்பா, சித்தப்பா, தாத்தா, பாட்டன், மாமா, போன்றோர், அந்த மைனரின் உடலுக்கு கார்டியனாக (guardian to the person) இருந்தார்கள். அவர்கள் மைனரின் சொத்துக்கு கார்டியனாக இருக்க முடியாது. இப்போது இந்த டி-பேக்டோ கார்டியன்கள் சட்டப்படி செல்லாது. இயற்கை கார்டியனாக தந்தை, தாய் மட்டுமே கார்டியனாக இருக்க முடியும். அப்படி இல்லையென்றால், கோர்ட் மூலம் கார்டியனை நியமிக்கலாம். கோர்ட்டானது, யார் சரியான கார்டியன் என முடிவு செய்து நியமிக்கும்.

**

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-5

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-5
இதை இன்னும் விளக்கமாகச் சொன்னால், இந்துமத மைனரின் உடல் பாதுகாப்புக்கும், சொத்து பாதுகாப்புக்கும் 1956-ன் இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் ஆக்ட் 1956ம், மைனர் சொத்துக்களை விற்பனை செய்யும்போது என்ன நடைமுறையை பின்பற்றவேண்டும், நீதிமன்ற அனுமதியை எப்படி பெறவேண்டும் என்ற விதிமுறைகளுக்கு பிரிட்டீஸ் சட்டமான கார்டியன்ஸ் & வார்டு ஆக்ட் 1890ம் ஆக இரண்டு சட்டங்களுமே இந்துமத மைனர்களுக்கு செல்லபடியாகும். இரண்டு ஒன்றுக்கொன்று துணையாக இருக்கும் என்று அந்த 1956 இந்தமத சட்டத்திலேயே சொல்லியுள்ளார்கள்.

ஆனால், கிறிஸ்தவ மைனர்களுக்கு பழைமையான பிரிட்டீஸ் சட்டமான கார்டியன்ஸ் & வார்டு ஆக்ட் 1890 மட்டுமே செல்லும். முஸ்லீம்களுக்கு பொதுவான காரியங்களுக்கு இந்த கார்டியன் & வார்டு ஆக்ட் 1890ம், திருமணம் போன்றவற்றுக்கு முஸ்லீம் மதச்சட்டமும் செல்லும்.

**

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-4

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-4
அதேபோல, இந்தியாவில் பிரிட்டீஸ் அரசு காலத்திலேயே இந்த இந்து சட்டம் 1956 வருவதற்கு முன்னரே, 1890-லிருந்து ஒரே சட்டம் இருந்து வருகிறது. இன்றும் அதுதான் நடைமுறையில் இருக்கிறது. இதற்கு கார்டியன்ஸ் & வார்டு சட்டம் 1890 என்று பெயர். இது எல்லா மதத்தினருக்கும் உள்ள ஒரு பொதுவான சட்டம். அதாவது பொதுவாக ஒரு மைனரின் சொத்தை எப்படி பாதுகாக்க வேண்டும், மைனரை எப்படி பாதுகாக்க வேண்டும் என்றும், (மைனரைப் பாதுகாப்பது என்றால், அவரை படிக்க வைப்பது, சாப்பாடு கொடுப்பது, நோய்களிலிருந்து காப்பாற்றுவது போன்றவை), மைனரின் சொத்துக்களை எப்படி பாதுகாக்க வேண்டும், மைனரின் சொத்தை விற்க வேண்டிய நெருக்கடி வந்தால் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை தெளிவாக சொல்லி உள்ளது இந்த 1890 சட்டம்.

இந்த 1890 சட்டப்படிதான் எல்லா மைனர்களின் உடல் பாதுகாப்பும், சொத்த பாதுகாப்பும் இருக்க வேண்டும். அந்த மைனர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்த 1890 சட்டம்தான் அவருக்கு வழிகாட்டி. அப்படியென்றால், இந்துமத மைனர்களுக்கு தனியே ஒரு சட்டம் இருக்கிறதே. இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956 அது எதற்கு என்ற கேள்வி வரலாம். ஆம். இந்துமத மைனர்களுக்கு இந்த இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956ம் அதனுடன் சேர்ந்து பிரிட்டீஸ் காலத்து பழைய சட்டமான கார்டியன்ஸ் & வார்டு சட்டம் 1890ம் சேர்ந்தே நடைமுறையில் இருக்கும்.
**


மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-3

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-3
ஆக வெளிஉலக வேலைகளான, சொத்து வாங்குவது, ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி கையெழுத்து செய்து கொள்வது, வழக்கு நடத்துவது போன்ற விஷயங்களில் இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் ஒரே சட்டம்தான், அதாவது 18 வயது அல்லது 18 வருடத்தை பூர்த்தி செய்திருப்பவர் மட்டுமே மேஜர் வயது உடையவர் என்றும், அவ்வாறு 18 வயது நிரம்பியவர் மட்டுமே தனியாக செயல்பட முடியும் என்றும் இன்றைய சட்டம் தெளிவாக்குகிறது. 18 வயது முடிவடையாதவர் தனியாக இயங்க முடியாது. அவருக்கு ஒரு கார்டியன் என்னும் பாதுகாவலர் வேண்டும். கார்டியன் என்னும் பாதுகாவலர் என்றால் மைனரின் உடலைப் பாதுகாக்கவும், அவரின் சொத்துக்களை பாதுகாக்கவும் இருப்பவரே கார்டியன் என்னும் பாதுகாவலர். உடலுக்கும் சொத்துக்குமான இரண்டுக்கும் பாதுகாவலராக இருக்கலாம் அல்லது ஏதாவது ஒன்றுக்கு மட்டும் பாதுகாவலராகவும் இருக்கலாம். இந்த பாதுகாவலர் யார் யார் என்பதைப்பற்றித்தான் இந்த இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956 விளக்குகிறது.

அந்த பாதுகாவலரின் அதிகாரங்கள் என்ன என்றும் அவர்கள் எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்பதைப் பற்றியும் இந்த சட்டம் சொல்கிறது. இந்து மதத்தைச் சார்ந்த மைனருக்கு இரண்டு வகையில் சொத்துக்கள் கிடைக்கும். ஒன்று அவரின் பூர்வீக வழியில் மைனருக்கு கிடைக்கும் “பூர்வீகச் சொத்துக்கள்’. மற்றொன்று அந்த மைனரே, அதாவது அவரின் பணத்தைக் கொண்டே அந்த மைனரின் பெயரில் வாங்கப்பட்ட “தனிச் சொத்துக்கள்” உண்டு. இந்த சொத்துக்களில் அந்த இந்து மைனரின் பாதுகாவலரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன என்பதைத்தான் இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956 விளக்குகிறது.

**

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-2

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-2
அதன்பின்னர், சுதந்திர இந்தியாவில் 1956ல் இந்த இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956ஐ கொண்டு வந்தனர். இந்த புதிய சட்டத்தின்படி, “பழைய இந்து மதத்தில் எதைச் சொல்லி இருந்தாலும், அதையெல்லாம் தூர எரிந்துவிட்டு, இனிமேல், மைனர் என்பவர் 18 வயது பூர்த்தி அடையாதவர் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது 18 வயது அல்லது பிறந்து 18 வருடங்கள் முடிந்திருந்தால் மட்டுமே அவர் மேஜர் அல்லது சட்டபூர்வ வயதுக்கு வந்தவர் என்று கருதப்படும் என்றும், அவ்வாறு மேஜர் ஆன ஒருவரே உலகில் உள்ள எல்லா வேலைகளையும் தானாக முடிவெடுக்க, அதை நிறைவேற்ற முடியும் என்று சட்டத்தை கொண்டுவந்து விட்டது.

முடிவில், இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு (ஜெயின், சீக்கியர், புத்தம் இவைகள் உட்பட) இந்த புதிய இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் நடைமுறையில் உள்ளது. (அதாவது 18 வயது முடியும்வரை மைனர் என இந்து சட்டம்).

கிறிஸ்தவர்களுக்கு தனியே ஒரு மைனர் & கார்டியன் சட்டம் இல்லை, எனவே அவர்கள் இந்தியன் மெஜாரிட்டி சட்டம் 1875ன் படி நடந்து கொள்ள வேண்டியது. (அதாவது அந்த சட்டப்படி 18 வயது முடியாதவரை மைனர் என கருதப்படுவார்).

முஸ்லீம்களுக்கு தனியே ஒரு மைனர் & கார்டியன் சட்டம் இல்லை. எனவே அவர்கள் நிக்காஹ் என்னும் திருமணம், தலக் என்னும் டைவர்ஸ், ஹிபா என்னும் தானம் முதலிய மத விஷயங்களில் புனித குரானில் சொல்லியுள்ளபடியும், ஷரியத் சட்டத்தில் சொல்லியுள்ளபடியும் மைனர் வயதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். (14 வயது வரை மைனர் என்று கருதுகிறார்கள்). மற்ற உலக சட்ட விஷயங்களில் 18 வயது பூர்த்தி ஆகாதவர் மைனர் என்று இந்தியன் மெஜாரிட்டி சட்டத்தில் சொல்லியுள்ளபடி நடந்து கொள்ள வேண்டும்.

**

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் -1

Minority and Guardianship-1
இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956 என்ற சட்டமானது 25 ஆகஸ்டு 1956 முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டம் வருவதற்குமுன்னர், பழைய இந்து சட்டமே இருந்து வந்தது.  இந்த பழைய இந்து சட்டப்படி, “மைனர்” என்பவர் (இளவர் என்றும் சொல்கிறார்கள்) தென்னிந்தியாவில் 15 வயது பூர்த்தி அடையாதவர் மைனர் என்றும், வட இந்தியாவில் 16 வயது பூர்த்தியடையாதவரை மைனர் என்றும் சட்டம் இருந்ததாம். இந்த புதுச் சட்டமான இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956 வந்தபின்னர், மைனரின் வயதை 18 வயதாக பூர்த்தி அடையாதவரை மைனர் என்று வகுத்துக் கொண்டனர்.

இந்த 18 வயது தத்துவம் ஏற்கனவே பிரிட்டீஸார் இந்தியாவை ஆளும் காலத்திலேயே ஒரு சட்டமாக 1875லேயே கொண்டு வந்துவிட்டது. அந்தச் சட்டத்துக்குப் பெயர் “இந்தியன் மெஜாரிட்டி சட்டம் 1875.” ஏற்கனவே அந்த சட்டம் நடைமுறையில் இருந்தால், 1956ல் எதற்கு இந்து மைனாரிட்டி சட்டத்தை கொண்டு வந்தார்கள்? காரணம்: 1875 இந்தியன் மெஜாரிட்டி சட்டப்படி, இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் ஒரே சட்டமாக, 18 வயது பூர்த்தி அடைந்தவர் மேஜர் வயதை அடைந்தவர் என்று சட்டம் கருதியது உண்மைதான்.

ஆனாலும், இந்தியாவில் பல மதங்கள் இருக்கின்றன. அந்தந்த மதங்கள் ஒவ்வொரு கோட்பாடுகளை அந்தந்த மத மக்களுக்கு ஊட்டிவிட்டிருக்கின்றன. எனவே, இந்த மதங்களில் கோட்பாடுகளில் தடையிட அரசாங்கம் விரும்பவில்லை. எனவே, இந்தியன் மெஜாரிட்டி சட்டம் 1875 ல் சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டனர். அதன்படி, அந்தந்த மதங்களின் “திருமணம், விவாகரத்து, தத்து எடுத்தல்” போன்ற மதம் சார்ந்த விவகாரங்களில் இந்த இந்தியன் மெஜாரிட்டி சட்டம் 1875ஐ நுழைக்க முடியாது.

அதாவது, திருமணம் போன்ற விஷயங்களில் அந்தந்த மதங்களில் எந்த வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லி உள்ளார்களோ அந்த வயதில் (மைனராக இருந்தாலும், குழந்தையாக இருந்தாலும்) திருமணம் நடத்திக் கொள்ளலாம். அதில் இந்த இந்தியன் மெஜாரிட்டி சட்டம் 1875 தலையிடாது. மற்ற விவகாரங்களில், அதாவது சொத்து வாங்குவது, விற்பது, உடன்படிக்கைகள் ஏற்படுத்திக் கொள்வது, கோர்ட்டில் வழக்கு போடுவது, இவைகளில், இந்த இந்தியன் மெஜாரிட்டிட சட்டமே செல்லும் என்று பிரிட்டீஸ் அரசு 1875ல் சட்டம் கொண்டு வந்தது.
**

Thursday, August 6, 2015

Rummel v. Estelle

US case ~ Rummel v. Estelle 445 US 263 (1980)

டெக்சாஸ் மாநிலம். அமெரிக்காவில்தான். இங்கு ஒருவர் பெயர் 'ரம்மல்'. இவர் 1964ல் ஒரு குற்றத்தை செய்கிறார். அது, கிரெடிட் கார்டை ஏமாற்றும் எண்ணத்துடன் உபயோகித்து $80 சுருட்டிவிட்டார். அதற்கு அந்த டெக்சாஸ் மாநில சட்டப்படி 2முதல் 10 வருடம் சிறையாம். இவர் அந்த குற்றத்தை ஒப்புக் கொள்கிறார். எனவே மூன்று ஆண்டுகள் மட்டும் சிறை தண்டனை கொடுக்கப்படுகிறது.
இவர், மறுபடியும், இரண்டாவதாக ஒரு குற்றத்தை செய்கிறார். அது, 1969ல். அதன்படி, போலிச் செக்கை தயாரித்து, அதைக் கொண்டு பாங்கை ஏமாற்றி $28 கையாடல் செய்து விட்டார். அந்த குற்றத்தையும் ஒப்புக் கொண்டார். அதனால், அவருக்கு நான்கு வருடங்களை தண்டனை கொடுக்கிறார்கள்.

இதற்குப்பின், மூன்றாவது ஒரு குற்றத்தை செய்கிறார். இவரின் கை சும்மா இருக்காதுபோல! அரித்துக் கொண்டே இருக்கும்போல! மூன்றாவது குற்றம், 1973ல். ஏசி-யை ரிப்பேர் செய்து தருகிறேன் என்று சொல்லி $120 பெற்றுக் கொண்டார். அதை செய்து தரவில்லை. பணத்தைக் கொடு என்று கேட்டபோது, தர மறுக்கிறார். இதுவும் குற்றமாம். இது கடன் கிடையாது. பணத்தை வாங்கிக் கொண்டு வேலை செய்யாமல் ஏமாற்றுவதாம். இதுவும் ஒருவகை திருட்டுத்தானாம். இவர் இந்தக் குற்றத்தையும் ஒப்புக் கொள்கிறார். அதற்குறிய தண்டனையாக 2 முதல் 10 வருடம் சிறைதண்டனை கொடுக்கலாமாம்.

ஆனால், அந்த டெக்சாஸ் மாநிலத்தில் இன்னொரு சட்டமும் உள்ளதாம். அதாவது, ஒருவர் தொடர்ந்து மூன்றுமுறை குற்றம் செய்து தண்டை அடைந்தால் (அதாவது இவர் கேடி என்று முடிவானால்) Texas three strikes law டெக்சாஸ் மூன்று அடி சட்டம் வந்துவிடுமாம். அதன்படி, இவர் தொடர் குற்றச் செயலில் ஈடுபடுபவர் என்று ஆகிறதாம். அதனால் இவருக்கு "ஆயுள்தண்டனை" வழங்குகிறது. ஆனால் பரோலில் அவ்வப்போது வெளியில் வரலாம் என்று அந்த மூன்று அடிகள் சட்டத்தில் உள்ளதாம். எனவே இவருக்கு அந்த மூன்றாவது வழக்கில் இந்த ஆயுள் தண்டனையை வழங்குகிறார்கள்.
அவர் இந்த ஆயுள் தண்டனையை எதிர்த்து டெக்சாஸ் அப்பீல் கோர்ட்டுக்கு அப்பீல் போகிறார். அது மறுத்துவிடுகிறது. 

அடுத்து, பெடரல் மாவட்ட கோர்ட்டுக்கு போகிறார். அவரை ஆயுள் சிறைவைப்பது சட்டபூர்வமானதல்ல என்று கேபியஸ் கார்பஸ் மனு செய்கிறார். அதுவும் மறுக்கப்படுகிறது. மூன்று குற்ற சட்டத்தில்தானே ஆயுள் தண்டனை கொடுத்திருக்கிறார்கள் எனவே சட்டப்படிதானே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று மறுத்து விடுகிறார்கள்.  அத்துடன் அந்த மூன்று குற்றச் சட்டத்தின்படி, இந்த ஆயுள்தண்டனை என்பது 12 வருடம்; அதிலும் பரோலில் வெளியே வரவும் செய்யலாம் என்றுதான் சட்டம் டெக்சாஸ் சுப்ரீம் கோர்ட்டும் சொல்லியுள்ளதாக, அந்த மாவட்ட கோர்ட் சொல்லியுள்ளது.

ஆனாலும், வழக்கு அதற்கு மேல் உள்ள கோர்ட்டான, அமெரிக்க கோர்ட் ஆப் அப்பீல் என்னும் 5-வது சர்கியூட் கோர்ட்டுக்கு வருகிறது. (இந்த மாதிரியான சர்க்யூட் கோர்ட்டுகள், இரண்டு மூன்று மாநிலங்களுக்கு ஒரு சர்க்யூட் கோர்ட் இருக்கும்; அது அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு கீழே இருக்கக் கூடியது. ஆனால், அந்தந்த மாநில சுப்ரீம் கோர்ட்டுக்கு மேலே இருக்கும் இந்த சர்கியூட் கோர்ட் என்பது).
அந்த 5-வது சர்க்யூட் கோர்ட்டில் (யூ.எஸ். கோர்ட் ஆப் அப்பீல் 5-வது சர்க்யூட்) இந்த வழக்கு வருகிறது. அங்கு என்ன சொல்கிறார்கள் என்றால், அமெரிக்க அரசியலமைப்பு சட்டப்படி, அநியாய தண்டனை கொடுக்கக் கூடாது என்பதற்கு எதிராக உள்ளதாக அந்த குற்றவாளியின் வக்கீல் கூறுகிறார். எனவே இதில் அரசியலமைப்பு சட்டத்தின் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை விசாரிக்க வேண்டி இருப்பதால், அந்த 5-வது சர்க்யூட் கோர்ட்டில் உள்ள எல்லா நீதிபதிகளும் ஒன்றாக ஒரே கோர்ட் அறையில் உட்கார்ந்து அந்த வழக்கை விசாரித்தார்கள். இவ்வாறு ஒரு கோர்ட்டின் மொத்த நீதிபதிகளும் ஒரே அறையில் ஒரு வழக்கை விசாரிக்க உட்கார்ந்தால், அதை "en banc" "எண் பான்க்" என்பார்கள். அதில் நீதிபதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

எனவே வழக்கு, அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு போகிறது. ஏற்கனவே ஒரு வழக்கில், அதில் உள்ள குற்றவாளி மூன்று குற்றங்களில் தண்டனை பெற்றுள்ளார். எனவே அவரை இந்த மூன்று குற்ற தண்டனையின் பெரிய தண்டனையாக ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டியது சட்டமாகிறது என்று தீர்ப்பு கூறியுள்ளதை மேற்கோளாக காட்டினர்.

தீர்ப்பு: அதன்படி இந்த குற்றவாளி மூன்று குற்றங்களை செய்திருப்பதால் ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும். அது 12 வருடம்தான். அதில் பரோலில் வெளியே வந்துவிட்டு போகலாம். ஆனால் மற்ற மாநிலங்களில் இத்தகைய ஒரு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை காலத்தில் பரோலில் வெளியே வரமுடியாது என்று சட்டமே உள்ளது என்றும் அமெரிக்க உச்சநீதிமன்றம் கூறி விட்டது.

டெக்சாஸ் மாநிலத்தில் குற்றங்களுக்கான தண்டனைகள்:
குற்றங்களை அங்கு Felony and Misdemeanor என்று இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்கிறார்கள். முதலாவது பெரிய குற்றங்கள், பின்னது, சிறிய வகை குற்றங்கள்.
தண்டனைகள் அதற்கு ஏற்றாற்போல கோர்ட் வழங்கும்.
Classification of Felonies:
1) Capital felonies
2) Felonies of the First degree;
3) Felonies of the Second degree:
4) Felonies of the Thrid degree;
5) State jail felonies.

Classification of misdemeanors:
1) Class A misdemeanors; ($4000 வரை அபராதம், 1 வருட சிறை)
2) Class B misdemeanors; ( $2000 அபராதம், 180 நாள் சிறை)
3) Class C misdemeanors; ($500 வரை அபராதம் மட்டும்; மிகச் சிறிய குற்றம், இதற்கு தண்டனையே மிக மிகச் சிறியதாகவே இருக்கும். காதைப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடு என்பது மாதிரி)

Felony பெலெனி என்னும் பெரிய குற்றங்களுக்கு:
1) 18 வயதுக்குள் இருப்பவர் குற்றத்தை செய்திருந்தால், ஆயுள் சிறை, பரோலில் வரலாம்.
2) 18 வயதுக்கு மேல் இருப்பவர் குற்றத்தை செய்திருந்தால், ஆயுள் சிறை, பரோலும் கிடையாது.
3) கடுமையான குற்றத்தை செய்திருந்தால் தூக்கு தண்டனை.
4) 1-வது டிகிரி பெலெனி குற்றத்திற்கு 5வருடம் முதல் 99 வருடம் வரை சிறை, $10,000 அபராதம்.
5) 2-வது டிகிரி பெலெனி குற்றத்திற்கு 2 வருடம் முதல் 20 வருடம்வரை சிறை, $10,000 அபராதம்.
6) 3-வது டிகிரி பெலெனி குற்றத்திற்கு $10,000 மட்டும் அபராதம்.