Friday, August 21, 2015

உயிலின் கதை-5

உயிலின் கதை-5

முகமதியர்கள் உயில் எழுதலாமா?
இந்துக்கள், தானே தானம் கொடுக்கும் உரிமையுள்ள சொத்துக்களை மட்டும் உயில் எழுதலாம் என்று அனுமதி உண்டு. அதாவது, இந்துக்களின் பூர்வீகச் சொத்துக்களில் உயில் எழுத முடியாது. முகமதிய சமுதாயத்தில் உயில் என்பதை “வாசியத்” (wasiat) என்று கூறுகிறார்கள். அதன்படி ஒரு குறிப்பிட்ட அளவு சொத்தை மட்டும் இந்த வாசியத் மூலம் உயில் மூலம் கொடுக்கலாம் என்றும், பெரும்பகுதியை தன் வாரிசுகளுக்கு மட்டுமே விட்டுவிட்டுச் செல்ல வேண்டும் என்றும், அதை உயில் மூலம் வெளியாருக்கு கொடுக்க முடியாது என்றும் தெள்ளத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளதாம்.

இந்துக்களின் ஆரம்பகால உயில்கள்:
ஆரம்ப காலங்களில் இந்துக்களின் உயில்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படியே காகிதத்தில் எழுதியிருந்தாலும், அதில் அந்த உயிலை எழுதியவர் கையெழுத்துப் போட்டிருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லையாம். அப்படியே கையெழுத்துப் போட்டிருந்தாலும் அதை இரண்டு சாட்சிகள் முன்னிலையில் போட்டிருக்க வேண்டும் என்ற சட்ட கட்டாயமும் இல்லையாம். எழுதாத உயில்களை அல்லது வாய்மொழியாக சொல்லிவிட்டுப்போன உயில்களை “நன்குபேட்டிவ் உயில்” அதாவது வாய்மொழி உயில் என்று சொல்கிறார்கள். போரில் ஈடுபட்ட வீரர் ஒருவர் தன் இரண்டு நண்பர்களிடம் தன் ஆசை என்ன என்று சொல்லிவிட்டு அந்த போரில் இறந்திருந்தால் அது நன்குபேட்டிவ் உயில் வகையைச் சேரும். இது நாட்டில் இருக்கும் மக்களுக்கும் (போர்ப்படையில் இல்லாத மக்களுக்கும்) இந்த நன்குபேட்டிவ் உயில் செல்லும் என்று அப்போது நடைமுறையில் இருந்ததால், பலர் இதுதான் இறந்தவரின் நன்குபேட்டிவ் உயில் என்று சொல்லிக் கொண்டார்கள். குழப்பம்தான் மிஞ்சியது. எனவே இதற்கு ஒரு பொதுவான சட்டம் தேவைப்பட்டது. 

அதுதான் இந்தியன் சக்சஷன் ஆக்ட் 1865 (ஆக்ட் 10 ஆப் 1865). அந்தச் சட்டம் 1870-ல் அமலுக்கு வந்தது. அதன்படி உயில் எழுதி விட்டுப்போன சொத்துக்கள், உயில் எழுதாமல் விட்டுப்போன சொத்துக்கள் இவைகளுக்கு இந்த சட்டம் சில விதிமுறைகளையும், நடைமுறைகளையும் ஏற்படுத்தியது. உயில் எழுதாமல் ஒருவர் சொத்தை விட்டுவிட்டுப் போனால், அவ்வாறு இறந்தவரை ‘died intestate “உயில் இல்லாமல் இறந்தவர்” என்று அழைக்கின்றனர். உயில் எழுதிவைத்துவிட்டு இறந்தவரை Testator  உயிலுடன் இறந்தவர்” என்கின்றனர்.

இந்தச் சட்டமானது, ஆரம்பத்தில் இந்தியாவில் வசிக்கும் ஆங்கிலேயர்களுக்கும், ஆங்கிலோ-இந்தியர்களுக்கும், அமெரிக்கர்களுக்கும், பார்சிக்கள் ஆகியோருக்கு மட்டுமே பொருந்தும்படி ஏற்படுத்தப்பட்டது. அதாவது இந்தச் சட்டம், இந்துக்கள், புத்தமதத்தினர், ஜைனர்கள், முகமதியர்கள் ஆகியோருக்கு இந்த இந்தியன் சக்சஷன் ஆக்ட் 1865 பொருந்தாது. இது இந்துக்களுக்கு பொருந்தாது என்றதால், இந்துக்கள் எழுதும் உயிலுக்கு ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்தனர். 

அதன்பெயர் இந்து உயில்கள் சட்டம் 1870. (The Hindu Wills Act 1870). இதன்படி, 1870ம் வருடம் செப்டம்பர் 1-ந்தேதி முதல் எழுதப்படும் இந்துக்களின் உயில்கள் இந்தச் சட்டப்படியே இருக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்டது. அதுவும் எல்லா பகுதிகளுக்கும் செல்லாது. மதராஸ் நகரம், பம்பாய் நகரம், கல்கத்தா நகரம் ஆகிய மூன்று நகரங்களுக்கு மட்டுமே செல்லும். மதராஸ் நகரத்தை விட்டு வேறு ஊர்களில் இந்தச் சட்டத்துக்கு வேலையில்லை. இதன்படி, மதராஸ் நகரில் உள்ள சொத்துக்களைப் பொறுத்து உயில் எழுதி இருந்தாலும், மதராஸ் நகருக்கு வெளியே உயில் எழுதப்பட்டிருந்து, அந்த உயிலில் மதராஸ் நகரத்திலுள்ள சொத்து சொல்லப்பட்டிருந்தாலும் இந்த சட்டம் பொருந்தும்படி ஏற்படுத்தப் பட்டது. 

இந்த சட்டம் இந்து மதச் சட்டத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப் பட்டது. அதாவது, ஒரு இந்து, தான் உயிருடன் இருக்கும்போது, விற்பனை செய்யும் உரிமையுள்ள சொத்துக்களை மட்டுமே உயில் எழுத முடியும். பூர்வீகச் சொத்தை தனிமனிதனாக இவரே விற்க முடியாது சொத்தானது. இந்த மதராஸ் நகரில் உள்ள சொத்துக்களுக்கு எழுதும் உயில்களுக்கு சில சட்டக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி இருந்தது. அதன்படி, உயில் எழுதியவர் சாட்சிகள் முன்னிலையில் கையெழுத்துச் செய்திருக்க வேண்டும். சாட்சிகள் என்பது கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. இந்த இந்து-உயில் சட்டம் 1870 வருவதற்கு முன்னர் எழுதிய உயில்களுக்கு எழுத்துபூர்வமாக எழுத வேண்டிய அவசியம் இல்லை; வாய்மொழி உயிலே போதும் என்றிருந்தது; அப்படியே எழுதப்பட்டிருந்தாலும், அதற்கு சாட்சிகள் முன்னிலையில் அட்டெஸ்டேஷன் attestation என்னும் இரண்டு சாட்சிகளின் கையெழுத்தும் தேவையில்லை. 

ஆக, மதராஸ் நகருக்குள் இருக்கும் சொத்துக்கு எழுதிய உயிலுக்கு, எழுதியவர் கட்டாயம் கையெழுத்துப் போட வேண்டும், சாட்சிகளும் அவர் முன்னிலையிலேயே கட்டாயம் கையெழுத்துப் போடவேண்டும். மதராஸ் நகருக்கு வெளியே உள்ள சொத்தை உயில் எழுதியவர் அதில் சாட்சிகள் முன்னிலையில் கையெழுத்துப் போட வேண்டிய அவசியம் இல்லை என்றும், வாய்மொழியாகக்கூட உயில் ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் சட்டமாக இருந்தது. 

No comments:

Post a Comment