Friday, July 31, 2015

Gavel என்னும் நீதிபதியின் சுத்தி

பழைய காலக் கோர்ட்டுகளில் நீதிபதிகள் "சுத்தி" என்னும் "சுத்தியல்" வைத்திருந்தார்கள். அந்த சுத்தியல் மரக் கட்டையால் செய்யப்பட்டதாம். அதை அடிப்பதற்காக கீழே மரத்தாலான கடினமான தட்டும் வைத்திருப்பார்களாம். கோர்ட்டில் இருப்பவர்களின் கவனத்தை திசை திருப்ப இதை நீதிபதிகள் அடிப்பார்களாம். வாதம் நடக்கும்போது, ஒப்புக்கொள்ளவில்லை என்று காட்டுவதற்கு சுத்தியை அடிப்பார்களாம். மறுப்பை தெரிவிக்க இந்த சுத்தி உபயோகமாகிறது. பழம்காலத்தில் பிரிட்டீஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட பழக்கம் இது. காரணம் தெரியவில்லை.

இப்போது இந்திய கோர்ட்டுகளில் இது இல்லை. ஒருவேளை, பிரிட்டீஸ் நீதிநிர்வாகத்தில் இது இருந்ததா என்றும் தெரியவில்லை. இப்போதுள்ள நீதிபதிகள், கோர்ட்டின் உதவியாளரையோ, சுருக்கெழுத்தாளரையோ கூப்பிட வேண்டும் என்றால், நீதிபதி தன் கையில் உள்ள பென்சிலை லேசாகத் தட்டுவார். பக்கத்திலேயே இருக்கும் இவர் உடனே தயாராகிவிடுவார்கள். இந்த சுத்தியலை Gavel என்கிறார்கள். கோர்ட்டுகளில் மட்டுமல்ல, ஏலம் போடும் இடத்திலும் இந்த சுத்தி இருந்ததாம். பின்னர் இது மணி ஆகிவிட்டது.

அமெரிக்க செனட் சபையில் இன்னும் இந்த Gavel  என்னும் சுத்தி இருக்கிறதாம். ஆனால் மரத்தினால் அல்ல. தந்தத்தால் (தங்கம் அல்ல) செய்யப்பட்டதாம். அதை செய்து கொடுத்தது இந்தியாவாம். அமெரிக்க அரசு இந்திய அரசை கேட்டு கைப்பிடி இல்லாத தந்தத்தில் கேவல் செய்து வைத்துள்ளார்களாம். ஆனால், அமெரிக்க மக்கள் சபை என்னும் எம்.பி.கள் சபையில் இன்னும் மரத்தால் செய்த சுத்தியைதான் துனை ஜனாதிபதி உபயோகிக்கிறார்., சில நேரங்களில் கடுமையாக அந்த சுத்தியை அடிக்க வேண்டிவருமாம். எத்தனையோ முறை அது உடைந்தும் விட்டதாம். உடனே வேறு சுத்தியை எடுத்துக் கொள்வார்களாம்.

இப்போது எந்த நாட்டிலும் கோர்ட்டில் சுத்தி இருப்பதாக தெரியவில்லை. ஒருவேளை ஸ்காட்லாந்து, அயர்லாந்து நீதிமன்றங்களில் இதை இன்னும் உபயோகப் படுத்துகிறார்களோ என்று தெரியவில்லை.



Puisne Judges

Puisne Judges
ப்யூனி ஜட்ஜஸ் அல்லது துனை நீதிபதிகள் எனலாம். அமெரிக்க கோர்ட்டில் தலைமை நீதிபதிக்கு அடுத்து இருக்கும் நீதிபதிகளை Associate Justice என்கிறார்கள். இந்தியாவிலும் தலைமை நீதிபதிக்கு அடுத்து இருக்கும் நீதிபதிகளை Puisne judges ப்யூனி நீதிபதிகள் என்று குறிப்பிடுகின்றனர். மூத்த, இளைய என்ற அர்த்தத்தில் இவர்களை இப்படி குறிப்பிடுவதற்காக பிரிட்டீஸ் ஆட்சி காலத்திலிருந்து வழங்கப்பட்டு வரும் பழக்கம் இது.


Puisne இதை ப்யூனி என்றே உச்சரிக்க வேண்டுமாம். அதன் பொருள் என்னவென்றால் "பின்னர் பிறந்த" என்ற அர்த்தமாம்.
பிரென்ஞ் மொழியில் puis என்றால் "பின்னர்" என்றும், ne என்றால் "பிறந்த" என்றும் பொருள் என்று ஒரு பிளாக்கர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் உள்ள தலைமை நீதிபதிகளைத் தவிர அவருடன் துணையாக இருக்கும் நீதிபதிகள் அனைவரும் ப்யூனி நீதிபதிகள் ஆவார்கள்.

Stillbirth

Stillbirth
கருவில் இருக்கும் குழந்தையானது 5 மாதங்களுக்கு மேலாகி, அதற்குப் பின் தன் தாயின் வயிற்றுக்கு உள்ளேயே இறந்து பிறந்தால் அதை ஸ்டில்பெர்த் (stillbirth) என்கிறார்கள்.

தாயின் வயிற்றிலிருந்து உயிருடன் பிறந்த குழந்தையை லிவ்-பெர்த் (live birth) என்கிறார்கள். (பிறந்த பின்னர், சிறுநேரம் கழித்து இறந்திருந்தாலும் லிவ்-பெர்த் தான்.

ஆனால் தாயின் வயிற்றுக்கு உள்ளேயே இறந்து, பின்னர் பிறந்தாலும், அல்லது இறந்த குழந்தையை சிசேரியன் மூலம் எடுக்கப் பட்டாலும் அதையும் ஸ்டில்பேர்ன் Stillborn or stillbirth என்கிறார்கள். (குழந்தை, தாயின் வயிற்றில் இறந்து, பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து இயற்கை பிரசவம் மூலம் பிறக்குமாம். அதனால் தாய்க்கு ஒரு தொந்தரவும் வராதாம். அதற்கு பின்னரும் இறந்த குழந்தை பிறக்கவில்லை என்றால் தான் தாய்க்கு பிரச்சனையாம்).

கருவானது உருவாகி 5 மாதங்களுக்கு முன்னரே இறந்திருந்தால், அதை miscarriage கருச்சிதைவு என்கிறார்கள்.

ஸ்டில்பெர்த் (இறந்து பிறந்த) குழந்தைகளை சில நாடுகளில், அந்த குழந்தை "பிறந்தது" என்றே பதிவு செய்ய வேண்டும் என சட்டம் உள்ளதாம்.

லிவ்-பெர்த் என்னும் உயிருடன் பிறந்து, பின்னர் சிறு நேரத்தில் இறந்த குழந்தையையும் பதிவு செய்யப்படவேண்டும்.

இங்கிலாந்து சட்டப்படி, ஸ்டில்-பெர்த் குழந்தைகள் இறந்து பிறந்ததை பதிவு செய்ய வேண்டுமாம். ஆனால், ஸ்காட்லாந்தில் அதுபோல ஸ்டில்-பெர்த் குழந்தைகளை பதிவு செய்ய அவசியம் இல்லையாம்.

அமெரிக்காவில், கருவில் இறந்து பிறந்த குழந்தையை ஸ்டில்பெர்த் என்று சொன்னாலும், 5 மாதங்களுக்கு மேல் ஏற்படும் கருக்கலைப்பையும் ஸ்டில்பெர்த் கணக்கில்தான் வைத்துக் கொள்வார்களாம்.

Still என்பது motionless நகர்வு இல்லாமல் அல்லது உயிரில்லாத என்ற பொருளில் stillbirth என்பதை "இறந்து பிறந்த குழந்தை" என்று பொருள் கொள்ளலாம்.

இந்தியாவில் இந்த சட்டம்;
பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் 1969 என்று இந்தியாவில் சட்டம் இயற்றப் பட்டுள்ளது. அதன்படி எல்லா பிறப்புகளையும் இறப்புகளையும் அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதில் பிறந்த குழந்தையை பதிவதுடன், Stillbirth என்னும் "இறந்து-பிறந்த" குழந்தையையும் அவ்வாறே பதிவு செய்ய வேண்டும் என்று சட்டம் உள்ளது. அந்த சட்டத்தில் பிறப்பு என்றாலே "உயிருடன் பிறந்த குழந்தையையும்" "இறந்தே பிறந்த குழந்தையையும்" சேர்த்தே "பிறப்பு" என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதேபோல் live-birth உயிருடன் பிறந்து பின்னர் சிறிது நேரத்தில் இறந்த குழந்தையை, பிறந்த குழந்தையாகவும், பின்னர் இறந்த குழந்தையாகவும் இரண்டு பதிவுகளையும் செய்ய வேண்டுமாம்.

**

Thursday, July 30, 2015

US Constitution -part-5

US Constitution -part-5
அமெரிக்க அரசியல் சாசன சட்டத்தில் 5-வது திருத்தம்: "கிரிமினல் வழக்குகளில் பெரிய குற்றங்களை செய்தவர்களை கிராண்ட் ஜூரி விசாரனை வைத்து அவன் குற்றத்தை செய்திருக்கிறானா என்று கண்டுகொண்டு பின்னர்தான் வழக்கை கோர்ட்டுக்கு அனுப்பவேண்டும்." என்று கூறியுள்ளது. குற்றமே செய்யாதவன் என்று தெரிந்தால் அவனை ஏன் கோர்ட் விசாரிக்க வேண்டும்; அவ்வாறு நேரடியாக கோர்ட் விசாரித்தால் அது அவனுக்கு இரட்டை தொந்தரவாகத்தானே இருக்கும், என்று அந்த திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அந்த 5-வது திருத்தத்தை செல்லமாக "மிரண்டா  எச்சரிக்கை" "Miranda Warning" என்று கோர்ட் மொழியில் சொல்லிக் கொள்வர். இதை மிரண்டா உரிமைகள் என்று கூடச் சொல்வார்கள்.

மிரண்டா எச்சரிக்கை:
இது ஒரு வழக்கின் மூலம் கோர்ட் எடுத்த முடிவாகும்.
'போலீஸ் உன்னை விசாரிக்கும்போது, நீ அமைதியாக இருக்கலாம்; பதில் சொல்லத் தேவையில்ல; கட்டாயம் பதில் சொல்லவேண்டும் என்று போலீஸ் உன்னை கட்டாயப்படுத்த முடியாது' என்பதே மிராண்டா எச்சரிக்கை.

Miranda v. Arizona. 384 US 436 (1966)
 இந்த வழக்கில் அமெரிக்க சுப்ரீம்கோர்ட் இவ்வாறு கூறியதால், அந்த வழக்கின் நபரின் பெயரிலேயே மிராண்டா எச்சரிக்கை என்று செல்லமாக கூறப்படுகிறது.   இது ஒரு சட்ட முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகும்.

மிராண்டா வழக்கு:
மிராண்டா என்பவரை போலீஸ் கைது செய்கிறது. அவன், ஒரு 18 வயதான சிறுமியை கடத்தி கற்பழிப்பு செய்தான் என்று குற்றம். ஆனால் நேரடியாக சாட்சியம், ஆதாரம் கிடைக்கவில்லை. அவன்தான் இதை செய்திருப்பான் என்று வேறு நம்பும்படியான சாட்சியம் இருப்பதால் இவனை கைது செய்கிறார்கள். அவனை என்ன செய்தார்களோ போலீஸ், அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டு எழுதி கையெழுத்தும் போட்டுக் கொடுத்து விட்டான். 'நான் தான் இந்த குற்றத்தை செய்தேன் என்றும், நான் விருப்பப்பட்டே இந்த உறுதிமொழியை போலீஸூக்கு எழுதிக் கொடுக்கிறேன்' என்று போலீஸ் கையெழுத்து வாங்கி விட்டது. கோர்ட்டுக்கு வழக்கு போகிறது. ஜூரி விசாரனை. அவரின் வக்கீல் ஒரு சட்டப் பிரச்சனையை கிளப்புகிறார். மிரண்டாவிடம் எந்த எச்சரிக்கையும் செய்யாமல் எழுதி வாங்கப்பட்ட ஒப்புதல் செல்லாது என்கிறார். போலீஸ் கேட்டால் உண்மையை சொல்லத்தானே வேண்டும் என்று மிரண்டா கூறிவிட்டார். ஆனால் போலீஸ் அவ்வாறு கேள்விகளை கேட்கும்முன்பே, "நான் கேட்கும் கேள்விகளுக்கு நீ பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று சட்டம் உள்ளது" என்று சொல்லி இருக்க வேண்டுமாம். அவ்வாறு போலீஸ் மிரண்டாவை உஷார் படுத்தவில்லையாம். எனவே அவரிடம் வாங்கிய, குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒப்புதல் செல்லாது என்கிறார். ஆனாலும் கீழ்கோர்ட் அவனுக்கு தண்டனை கொடுத்துவிடுகிறது. அவனிடம் வாங்கிய ஒப்புதல் வாக்குமூலம் அவன் விரும்பி கொடுத்ததுதானே என்றும், போலீஸ் உஷார் படுத்தவில்லை என்றாலும் அவனை கட்டாயப் படுத்தி வாங்கவில்லையே என்று கோர்ட் முடிவுக்கு வருகிறது.

ஆனால், வழக்கு அமெரிக்க சுப்ரீம் கோட்டுக்கு வருகிறது. அப்போது தலைமை நீதிபதியாக இருப்பவர் ஏர்ல் வார்ன் அவர்கள். அவருடன் 8 துணை நீதிபதிகளும் அந்த அப்பீலை விசாரிக்கிறார்கள்.

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் இந்த அப்பீல் வழக்கில், கீழ்கண்ட விதிமுறைகளை வகுத்தது. அதுவே "மிராண்டா எச்சரிக்கை" என்று அழைக்கப்படுகிறது.

குற்றவாளியை எச்சரிக்கை செய்யாமல் பெறப்பட்ட சாட்சியத்தை கோர்ட் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதுதான் சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பு.

இவ்வாறு ஒரு எச்சரிக்கையை குற்றவாளிக்கு கொடுத்தால், எந்த குற்றவாளியும் உண்மையை ஒப்புக் கொள்ள மாட்டானே என்ற கேள்வி எழலாம். ஆனாலும், வேறு வழிகளில் அவன் குற்றம் செய்ததை கோர்ட்டுக்கு சொல்ல வேண்டுமேயன்றி, அவனை அடித்து உதைத்து, ஆசைகாட்டி, குற்றத்தை ஒப்புக்கொண்டால் தண்டனை குறையும் என்ற உறுதிமொழி கொடுத்து, இவ்வாறு பெறப்பட்டிருந்தால் அதை அந்த வழக்கில் உபயோகிக்க முடியாது என்று கோர்ட் கூறியுள்ளது.
எனவே குற்றவாளி மிரண்டா விடுதலை ஆகிவிட்டான்.



US Constitution -part-4

US Constitution -part-4

அமெரிக்க அரசியல் சாசன சட்டம்
ஆர்ட்டிகிள்-1ல் காங்கிரஸ் என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தபட வேண்டும் என்றும், அதில் செனட்டர்கள் இருக்கவேண்டும் என்றும், ஒரு மாநிலத்துக்கு இரண்டு செனட்டர்கள் வீதம், அமெரிக்காவில் உள்ள மொத்த 50 மாநிலங்களில், மாநிலத்துக்கு இரண்டு செனட்டர் வீதம் மொத்தம் 100 செனட்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் மேல்சபை உறுப்பினர்கள் என்றும், அது இல்லாமல் எம்.பி.க்கள் ஒவ்வொரு எம்பி தொகுதியிலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 435 எம்பிக்கள் உள்ளனர். இதை மக்கள்சபை அல்லது கீழ்சபை என்பர்.

இந்த இரண்டும் சேர்ந்ததுத்தான் காங்கிரஸ். இந்த காங்கிரஸுக்கும்தான் சட்டம் இயற்றும் அதிகாரம் உண்டு. அதை மாற்ற வேறு யாருக்கும் அதிகாரமில்லை. ஆனாலும், அது அமெரிக்க அரசியல் சாசன சட்டத்துக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தனது Judicial Review அதிகாரத்தை பயன்படுத்தி, அந்த சட்டம் சரியா தவறா என்று கூறும்.
எட்டாவது திருத்த சட்டப்படி, ஒவ்வொருவருக்கும் தண்டனை என்பது கொடூரமானதாகவோ இயல்புக்கு மாறாகவோ இருக்க கூடாது என்று திருத்த சட்டத்தில் உள்ளது. அப்படியென்றால் கொலைக் குற்றம் புரிந்தவன் பைத்தியம் என்று தெரிந்தும் அவனை தூக்கில் போடலாமா என்ற கேள்வி வருகிறது. இது 8வது திருத்தத்தில் சொல்லியபடி கொடூரம் என்று எடுத்துக் கொள்ளலாமா.
ஒரு வழக்கு வருகிறது;

Atkins v. Virginia 536 US 304 (2002)
அட்கின்ஸ் வழக்கில்18 வயது சிறுவன்கள் இருவர் (ஒருவர் அட்கின்ஸ், மற்றவர் அவரின் நண்பர் ஜோன்ஸ்). அவர்கள் இருவரும் சாராயம் குடித்துவிட்டு, கஞ்சா பிடித்துக் கொண்டு திரிகிறார்கள். வழியில் ஒரு ஏர்போர்ட்டில் வேலை பார்க்கும் நபரை வழிமறித்து அவரிடமிருந்து பர்ஸ் பிடுங்கி பார்க்கிறார்கள், 60 டாலர் பணம் மட்டுமே இருக்கிறது, பிடுங்கிக் கொள்கிறார்கள். அவரை பக்கத்ததிலுள்ள ஏடிஎம்-க்கு கூட்டிச் சென்று அவர் கணக்கிலிருந்து 200 டாலர் பணத்தை எடுக்கச் சொல்லி பிடுங்கிக் கொண்டார்கள். அத்துடன் விடாமல், அவரை வெகுதூரம் காரில் கூட்டிக் கொண்டுபோய், அவரை எட்டுமுறை சுட்டு கொலை செய்கிறார்கள். ஏடிஎம்-ல் இருந்த சிசிடிவி-யில் கிடைத்த உருவங்களை வைத்து இவர்கள் இருவரையும் போலீஸ் பிடித்துவிடுகிறது. விசாரனையில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்கிறார்கள், நான் சுடவில்லை அவன்தான் சுட்டான் என்று இருவருமே மற்றவரை குற்றம் சொல்கிறார்கள். துப்பாக்கியின் விசையை தட்டிவிட்டது அட்கின்ஸ்-தான் என்று முடிவானது. தீர்ப்பில் அட்கின்ஸ் கொடூரமான கொலைபாதக கொலையை  செய்திருக்கிறான் என்று ஜூரிக்கள் சொல்லி விட்டார்கள். அவனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கின்றது கோர்ட். அவனின் வக்கீல் ஒரு வாதததை வைக்கிறார். அவன் பள்ளிக்கூடத்திலிருந்து விரட்டி விட்டார்கள். அவனது I.Q. அறிவுத்திறன் மிகக் குறைவாக 59 தான் இருக்கிறது என்று டாக்டர்கள் சொல்லியுள்ளார்கள். அறிவு குறைவாக இருப்பவன், தான் என்ன செய்கிறோம் என்பதை அறிய மாட்டான். எனவே அவனை தூக்கிலிடக் கூடாது. ஏனென்றால், அரசியலமைப்பு சட்டம் 8-வது திருத்தத்தின் படி, கொடூர தண்டனை விதிக்க அரசாங்கத்துக்கு அதிகாரமில்லை. அதை வெர்ஜீனியா மாவட்ட கோர்ட் ஏற்றுக் கொள்ளவில்லை. தூக்குத்தான் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டது,
அவனுக்காக, வெர்ஜீனியா மாநில சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் செய்கிறார்கள். (அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு சுப்ரீம் கோர்ட் உள்ளது; இந்தியாவில் அது உயர்நீதிமன்றம் (ஐகோர்ட்) என்ற பெயரில் உள்ளது.)
மாவட்ட கோர்ட் சொன்ன தூக்குத்தண்டனை தீர்ப்பு சரிதான் என்றே தீர்ப்பு கூறியது.

அந்த தீர்ப்புக்குமேல், அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு போகிறது வழக்கு. இங்கு வழக்கு போகவேண்டும் என்றால், அமெரிக்க அரசியல் சாசன சட்டம் மீறப்பட்டிருக்கு வேண்டும். அட்கின்ஸ் வழக்கில் 8-வது திருத்தத்தில் சொல்லியுள்ள சட்டத்தை மீறி, கீழ்கோர்ட்டுகள் தண்டனை கொடுக்கிறது. பைத்தியக்காரனை தூக்கிலிட்டால், அது 8-வது திருத்தத்துக்கு எதிரான கொடூர தண்டனை ஆகும். அதைத்தான் 8-வது திருத்தம் தடை செய்கிறது. அவ்வாறு ஒரு கொடூர தண்டனையை கொடுக்க முடியாது. அப்படி ஒரு சட்டத்தை அமெரிக்க காங்கிரஸ் சபை சட்டமாக நிறைவேற்ற அமெரிக்க காங்கிரஸ்க்கு அதிகாரமில்லை என்று வாதிடுகிறார் அட்கின்ஸ்-ன் வக்கீல்.

அப்போது அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்தவர் வில்லியம் ரென்குவெஸ்ட். அவருடன் மற்றும் 8 துணை நீதிபதிகளும் சேர்ந்து இந்த வழக்கை விசாரிக்கிறார்கள். 6-க்கு 3-ஆக நீதிபதிகள் கருத்து மாறுபாடு ஆகிறது. 6 நீதிபதிகளின் தீர்ப்பு என்னவென்றால்: வெர்ஜீனியா மாநில சட்டப்படி பைத்தியக்காரனையும் தூக்கில் போடலாம் என்று இருந்தாலும், அது 8-வது திருத்தத்துக்கு எதிரானதே. எனவே இந்த வழக்கை திருப்பி கீழ்கோர்ட்டுக்கே அனுப்புகிறோம். வெர்ஜீனியா சுப்ரீம் கோர்ட் அமெரிக்க அரசியலமைப்பு சட்டம் திருத்தம் 8-ன்படி விசாரித்து மறுதீர்ப்பை அளிக்க வேண்டும் என்று கூறினர்;

மற்ற 3 நீதிபதிகளும் எதிர் தீர்ப்பு கொடுக்கிறார்கள்: அதன்படி, அந்த மாநிலத்தில் அப்படி சட்டம் இருப்பதால் அதை நிறைவேற்றலாம் என்று கூறுகிறார்கள்.

எனவே வழக்கை மறுபடியும் விசாரிக்கிறார்கள். அவனுக்கு உண்மையில் பைத்தியம்தானா என்றும் விசாரனை நடக்கிறது. அதில் தூக்குத் தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை வழங்கினர்.


**

US Constitution – part-3

US Constitution – part-3
அரசியலைமைப்பு சட்டம் என்பதே மக்களின் அடிப்படை உரிமைகளை கொண்டுள்ளதால், அந்த சட்டத்தை விளக்குவதற்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் உண்டு.

அமெரிக்க அரசியல் சாசன சட்டத்தை முதன்முதலில் சட்டமாக கொண்டுவரும்போது, அந்த சட்டத்தில் உள்ளவற்றை விளக்குவதற்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இருக்கிறதா, இல்லையா என்று அந்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கே தெரியாதாம். பின்னர் வந்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இதை துணிச்சலாக கொண்டு வந்து வெற்றி கண்டார். அதுமுதல் சட்டங்களை அலசி ஆராய்து சரி, தப்பு என்று சொல்லும் ரெவ்யூ உரிமை Judicial Review வந்தது. அது  வந்தபின்னர்தான், சட்டம் சரியா தப்பா என்று அடிப்படை சட்டமான அரசியலைமைப்பு சட்டத்துடன் உரசிப் பார்த்து சொல்ல வழிகிடைத்தது.

ஆனாலும், சுப்ரீம் கோர்ட் ஒரு வழக்கில் கொடுக்கும் தீர்ப்பின் வழிமுறையை அதேபோன்ற மற்றொரு வழக்கில் உபயோகிக்கலாம்.. இதை Precedent என்பர். ஏற்கனவே ஒரு சட்ட முடிவை எடுத்திருந்தால், அதையே சட்டமாக அங்கீகரித்து அதற்குபின் வரும் மற்ற வழக்குகளிலும் உபயோகிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த கொள்கையை Stare decisis என்கின்றனர். உச்ச நீதிமன்றங்கள் எடுக்கும் முடிவும் சட்டமாகும் என்பது நடைமுறை. இதை பொதுச் சட்டத்தைப் பின்பற்றும் நாடுகளில் உபயோகிப்பர். மற்ற நாடுகளில், (மதச் சட்டங்களை பின்பற்றும் நாடுகளில்) இது பின்பற்றப்படாது. நெப்போலியன் சிவில் கோடு என்று 1804 ல் நெப்போலியன் உருவாக்கியது அதில் நீதிமன்றங்கள் முன்-முடிவை (ஏற்கனவே எடுத்த முடிவை) பின்னர் வழக்குகளில் உயோகிக்க முடியாது.
** 

US Constitution-part-2

US Constitution-part-2

அமெரிக்க அரசியல் சாசன சட்டத்தின் முதல் 10 திருத்தங்களும் 1791லேயே நடந்து விட்டன. திருத்த சட்டம் என்றால் Amendment Act எனப்படும். ஒரு சட்டத்தின் பிரிவுகளை திருத்தினாலும், புதிய பிரிவுகளை உண்டாக்கினாலும் இந்த திருத்த சட்டம் மூலம் செய்ய வேண்டும். திருத்தம் என்பது திருத்தி எழுதும் சட்டப் பிரிவுகள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

இந்த முதல் 10 திருத்தங்களை Bill of Rights மனித உரிமைகளின் சட்டம் என்று செல்லமாக அழைக்கிறார்கள். இதில்தான் அமெரிக்க மக்களுக்கு அவர்களின் அடிப்படை உரிமைகள் வழங்கி இருந்தனர். அமெரிக்க சாசன சட்டத்தை முதன்முதலில் தயாரித்து கொண்டு வரும்போது, வெறும் ஏழு ஆர்ட்டிகிள் Articles தான் இருந்தன. ஆர்ட்டிகிள் என்பது பிரிவு என்று பொதுவாகச் சொன்னாலும் அது பிரிவு Section என்று எடுத்துக் கொள்ள முடியாது. எல்லா சட்டத்திலும் உள்ள பிரிவுகளை Sections என்று சொல்கிறார்கள். ஆனால், அரசியல் சாசன சட்டத்தின் பிரிவுகளை அப்படி Sections என்ற பெயரில் சொல்வதில்லை. ஏனென்றால், அரசியல் சாசன சட்டம்தான் ஒரு நாட்டின் முதுகெலும்பான அடிப்படை சட்டம். அதை வைத்துத்தான் ஒரு நாடு தன் ஆட்சியையே அமைக்கும். அந்த நாடே அந்த சட்டத்தால்தான் உருவாகும். அப்படி இருக்கும்போது, அதிலுள்ள பிரிவுகள் கை, கால்கள், முகம், தலை என்று உடல் உறுப்புகள்போல, ஒரு பிரிவாகவே இருக்கும் என்பதால் அதை ஆர்ட்டிகிள் Article என்றே அழைக்கிறார்கள். மற்ற சட்டங்களில் உள்ள பிரிவுகளை ஆர்ட்டிகிள் என்று சொல்வதில்லை, அதை வெறும் Section என்றே சொல்கிறார்கள். அவ்வாறு பழக்கி விட்டார்கள்.

அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் திருத்த சட்டங்கள்;
11வது திருத்தம் முதல் 27 வது திருத்தம் வரை உள்ள திருத்த சட்டத்தில் சிலவற்றை மட்டும் இங்கு கவனிக்கலாம்.

11-வது திருத்தம் (1795-ல்) ஒரு மாநிலத்தில் உள்ளவர் வேறு மாநிலத்தின் மீது வழக்குப் போட்டால் அதை பெடரல் கோர்ட்தான் விசாரிக்க வேண்டும். அதே மாநில கோர்ட் விசாரிக்க அதிகாரமில்லை என்று விளக்கி உள்ளது

13-வது திருத்தம் (1865-ல்) அடிமைதனத்தை ஒழித்தனர்.

14-வது திருத்தம் (1868ல்) முன்னாள் அடிமைகளுக்கு அமெரிக்க குடிமகன் என்ற உரிமையை அளித்தது.

15-வது திருத்தம் (1879ல்) எல்லோருக்கும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டது.

18-வது திருத்தம் (1919-ல்) ஆல்ஹகால்/மதுவை தடை செய்தார்கள். ஆனால் நடைமுறைபடுத்த முடியாமல் 21-வது திருத்ததில்  மதுவிற்பனைக்கு அனுமதி கொடுத்து விட்டார்கள்.

19வது திருத்தம் (1920ல்) பெண்களுக்கு ஓட்டுரிமையை எந்த மாநிலமும் மறுக்க கூடாது என்று அறிவித்தது.

23-வது திருத்தம் (1961ல்) கொலம்பியா மாநிலத்தில் அதுவரை ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடமுடியாமல் இருந்த நிலையை மாற்றி, ஓட்டுரிமை வழங்கினார்கள்.

24-வது திருத்தம் (1964ல்) ஓட்டுப்போடவதற்கு ஒரு வரி இருந்ததை ஒழித்தார்கள்.

25-வது திருத்தம் (1967ல்) ஜனாதிபதி, உதவி ஜனாதிபதி இறந்தால் எப்படி அடுத்த கட்ட முடிவு என்பதைப்பற்றிய திருத்தம்.

26வது திருத்தம் (1971ல்) 18 வயது முடிந்த அனைவரும் ஓட்டு அளிக்க எந்த மாநிலமும் மறுக்க கூடாது என்று திருத்தம்.

27வது திருத்தம் (1992ல்) இதன்படி அப்போதுள்ள காங்கிரஸ் என்னும் செனட்டர்களும், எம்பிக்களும் அப்போதுள்ள செனட்டர், எம்பிக்கள் சம்பளத்தை அவர்களே உயர்த்திக் கொள்ள முடியாது என்று சட்டம். (அடுத்துவரும், வருங்கால செனட்டர்களுக்கும் எம்பிக்களுக்கு மட்டுமே சம்பளத்தை உயர்த்த முடியும் என்று சட்ட திருத்தம்).

**

US Constitution part-1

US Constitution -part-1
அமெரிக்க அரசியல் சாசன சட்டத்தை 1789ல் கொண்டுவந்துள்ளனர். இதை முதன்முதலில் உருவாக்கும்போது மொத்தமே ஏழு பிரிவுகளை (ஆர்ட்டிகிள்களை) மட்டுமே கொண்டதாக இருந்தது. இதுதான் எல்லா நாட்டு அரசியல் சாசன சட்டங்களிலும் மிகச் சிறிய சட்டம் என்னும் பெருமையையும் கொண்டிருந்தது. பின்னர், மிக அவசியம் என்று கருதிய உரிமைகளை இதில் சேர்ப்பதற்காக, இதை 27முறை திருத்தம் செய்து, பல புதிய திருத்த பிரிவுகளையும் கொண்டு வந்துள்ளனர்.

அமெரிக்க உருவாகும்போது மொத்தமே 13 மாநிலங்கள் மட்டுமே இருந்தன. அவைகள்தான் இந்த அரசியல் சாசன சட்டத்தை வகுத்து கூட்டு சேர்ந்து யுனைடட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா என்று கூட்டாச்சி முறையை கொண்டு வந்தனர்.

ஆரம்பகால அமெரிக்க அரசிலயமைப்புச் சட்டத்தில் இருந்த ஏழு ஆர்ட்டிகிள்களில் முதல் ஆர்ட்டிக்கிள் காங்கிரஸ் என்ற ஒரு கூட்டுசபையை உருவாக்கி அதன்படி இந்த நாட்டை ஆளும் சட்டங்களை இயற்றும் அதிகாரமும், பதவிகளை உருவாக்கும் அதிகாரமும் அந்த காங்கிரஸூக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆர்ட்டிகிள்-2ல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பதவியை ஏற்படுத்தி, அவர் அந்த கூட்டாச்சி அமெரிக்கவுக்கு ஆட்சித் தலைவராக இருக்க வகை செய்துள்ளது.

ஆர்ட்டிகிள் 3-ல் கூட்டாச்சி அமெரிக்காவுக்கு ஒரு உயர்ந்த நீதிமன்றதை ஏற்படுத்தி வைத்து நீதியை நிலைநாட்டவும், மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவும், அமெரிக்காவின் மாநிலங்களுக்குள் நிகழும் பிரச்சனைகள் தீர்த்துவைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆக இந்த முதல் மூன்று ஆர்ட்டிகிள்களில், ஜனநாயகத்தின் மூன்று தூண்கள் என்று சொல்லிக்கொள்ளும், சட்டமியற்றல், ஆட்சி நிர்வாகம், நீதி நிர்வாகம் ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அமெரிக்க அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆர்ட்டிகிள் 4-ல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் உள்ள உறவு, மற்றும் அந்த மாநிலங்களுக்கும் அமெரிக்க மாநில கூட்டமைப்புக்கும் உள்ள உறவு, மற்றும் இவைகளை எப்படி பாதுகாப்பது, அதன் அதன் உரிமைகள் என்ன என்பதை சொல்கிறது. (கூட்டாச்சி முறையை சொல்கிறது).

ஆர்ட்டிகள் 5-ல் காங்கிரஸ் என்ற இந்த மாபெரும் சபை, எப்போது வேண்டுமானாலும் இந்த அரசியலைமைப்பு சட்டத்தை தங்களின் தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியது என்ற உரிமையை வழங்குகிறது.

ஆர்ட்டிகிள் 6-ல் இந்த அமெரிக்க அரசிலமைப்பு சட்டம் மட்டுமே முதன்மை சட்டம் என்றும், இதில் சொல்லப்பட்டுள்ளதை மீறி யாரும் வேறு மாதிரி சட்டங்களை இயற்ற அதிகாரமில்லை என்றும் சொல்கிறது. இதற்கு உட்பட்டே சட்டங்களை இயற்ற வேண்டும் என்று கூறுகிறது.

ஆர்ட்டிகிள் 7-ல் புதிய மாநிலங்களை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளும் அதிகாரமும் இதற்கு அளிப்பட்டுள்ளது.

இதை பின்னர் 27 முறை திருத்தம் செய்துள்ளனர்.
முதல் மூன்று திருத்தங்கள் "தனிமனித உரிமைகளை" கொடுத்துள்ளது. இதன் 1-வது திருத்தத்தின்படி (1791ல்) ஒவ்வொரு அமெரிக்கரும் அவர் விருப்பம்போல மத கொள்கைகளை அனுசரித்துக் கொள்ளவும், விருப்பம்போல பேசவும், எழுதவும், அவைகளை பிறருக்கு வெளியிடவும்ஒரு குழுவாக கூடவும், தன் உரிமைகளை கேட்டுப்பெறவும் உரிமை அளிக்கிறது.

2-வது திருத்தத்தின்படி (1791ல்) ஒவ்வொருவரும் தற்காப்பு ஆயுதங்களை வைத்துக் கொள்ள உரிமை கொடுக்கப் பட்டுள்ளது.

3-வது திருத்தத்தின்படி (1791ல்) போர் காலங்கள் தவிர, மற்ற நேரங்களில் போர் வீரர்களுக்கு இடம் அளிக்கும்படி, தனி மனதனை கட்டாய்படுத்த அரசுக்கு அனுமதியில்லை என்று தனி மனித உரிமையை கொடுக்கின்றது.

4-வது திருத்தத்தின்படி (1791ல்) யாரையும், சட்ட தேவையில்லாமல், சோதனை செய்யவும், அவர் பொருள்களை, சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அரசுக்கு அதிகாரமில்லை என்று தனிமனித உரிமையை கொடுக்கிறது.

5-வது திருத்தத்தின்டி (1791-ல்) பெரிய குற்றங்களை செய்திருப்பவரை முதலில் கிராண்ட் ஜூரி விசாரித்து அடிப்படை உண்மைகள் இருந்தால் மட்டுமே அவரை குற்றவாளி என கருதி தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும். நேரடியாக கோர்ட் சட்ட விசாரனை செய்யக் கூடாது.

6-வது திருத்தத்தின்படி (1791ல்) குற்றவாளிக்கு பல சட்ட உரிமைகளை கொடுக்கிறது. அதில் முக்கியமாக, குற்றவாளியை விசாரித்து தண்டனை வழங்குவதில் கால தாமதம் செய்யக்கூடாது என்பது முக்கியமான சலுகை.

7-வது திருத்தத்தில் (1791-ல்) சில சிவில் வழக்குகளுக்கும் ஜூரி விசாரனை வேண்டும் என்று சலுகையை கொடுத்துள்ளது.

8-வது திருத்தத்தில் (1791-ல்) எல்லாக் குற்றவாளிகளுக்கும் ஒரே மாதிரி அபராதம் விதிக்கக் கூடாது. பணக்காரன் அபராதத்தை சுலபமாக செலுத்திவிடுவான். எனவே அவன் தகுதிக்கு ஏற்ப அதிக அபராதம் விதிக்க சட்டம் வழி செய்தது.

9-வது திருத்தத்தில் (1791-ல்) தனிமனிதன் ஓட்டுப்போடும் உரிமை, நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பிரயாணம் செய்யும் உரிமை, தன் தனிமைக்கு உரிமை இவைகளை கொடுத்தது.

10-வது திருத்தத்தில் (1791-ல்) மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உள்ள தனி அதிகாரங்களை வரையறுத்து கூறியுள்ளது. குறிப்பாக, மத்திய அரசு போர்களை நடத்தவும், வரிகளை விதிக்கவும், மாநிலங்களுக்கு இடையேயான விவகாரங்களில் தலையிடவும் அதிகாரம் அளிக்கிறது.

இந்த 10 திருத்தங்களையும் பொதுவாக, மனிதனின் அடிப்படை உரிமைகளை பற்றி சொல்வதால் இதை பில் ஆர் ரைட்ஸ் Bill of Rights என்றே பொதுப் பெயரில் அழைக்கின்றனர்.

மீதிமுள்ள 11 முதல் 27 வரையிலான திருத்தங்கள் பல காரணங்களுக்காக ஏற்பட்டன. கடைசியாக செய்த 27வது திருத்தம் 1992ல் செய்யப்பட்டது. (வித்தியாசமான திருத்தம் இது: காங்கிரஸில் உள்ள உறுப்பினர்கள், அதாவது செனட்டர், எம்பிக்கள் தங்களின் சம்பளத்தை தாங்களாகவே உயர்த்தி சட்டம் இயற்றிக் கொள்ள முடியாது. இனி வரும் எம்பிக்களுக்கு வேண்டுமானால் உயர்த்தி சட்டம் இயற்றலாம்.)
**