Saturday, August 15, 2015

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-8

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-8
தாய் கார்டியன் ஆகமுடியுமா?
அப்படியென்றால், இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956ல் பிரிவு 6-ன்படி, தகப்பன் உயிருடன் இருக்கும்வரை தகப்பன்தான் அவன் மைனர் குழந்தைக்கு (மகனோ, மகளோ) இயற்கை கார்டியனாக இருக்க முடியுமா? தாய் இருக்க முடியாதா என்ற கேள்வி எழுகிறது. ஒரு முக்கியமான வழக்கு வருகிறது. அதில் உச்சநீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்குகிறது. இது ஒரு விசித்திரமான வழக்குதான். பிரிவு 6-ல் “தகப்பனும், ‘தகப்பனுக்குப்பின் தாயும்’ இயற்கை கார்டியனாக இருப்பார்கள் என்று சொல்லியுள்ளது.

அப்படியென்றால் தந்தை உயிருடன் இருக்கும்வரை அவர்தான் கார்டியனாக இருப்பாரா? தந்தை உயிருடன் இருக்கும்வரை தாய் கார்டியனாக இருக்கமுடியாதா? என்ற கேள்வி எழுந்தது. பிரிவு 6 அப்படித்தான் சொல்கிறதா? இதுவரை பல உயர்நீதிமன்றங்கள், தகப்பன் உயிருடன் இருக்கும்வரை தாய் கார்டியனாக இருக்க முடியாது என்றுதான் தீர்ப்புக்களை கூறியுள்ளது. “the father and after him, the mother” என்றுதான் பிரிவு 6-ல் சொல்லப்பட்டுள்ளது.

இந்த “after him” என்ற வார்த்தைக்கு “இறப்புக்குப்பின்” என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளக்கூடாது. தகப்பன், உயிருடன் இருக்கும்போதே, அவனால் செயல்பட முடியாமல்போனால், தாய் கார்டியனாக இருக்கலாம் என்றுதான் அதன் பொருளை யூகிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அந்த தீர்ப்பில் தெளிவு படுத்தியுள்ளது. அந்த வழக்குதான் Githa Hariharan v. Reserve Bank of India, AIR 1999 SC 1149.

இந்த வழக்கில், “தகப்பன், மைனரின் விஷயங்களில் தலையிட விருப்பம் இல்லாமல் திரிந்தாலும், அல்லது தகப்பனும் தாயும் சேர்ந்து முடிவு செய்திருந்தாலும், அல்லது தாயிடமே அந்த குழந்தை முழுப் பொறுப்பில் இருந்தாலும், தகப்பனார் இந்த நாட்டில் இல்லாமல் இருந்தாலும், குழந்தையை கவனிக்க முடியாமல் தகப்பனுக்கு ஏதாவது ஒரு குறை இருந்தாலும், அப்போதெல்லாம் தாய் அந்த குழந்தைக்கு கார்டியனாக இருக்கலாம். என்று தீர்ப்பு கூறிவிட்டது. இந்த வழக்கிலும், தகப்பன் உயிருடன் இருக்கிறார். ஆனால் தாயை விட்டு பிரிந்து இருக்கிறார். குழந்தை தகப்பனிடம் இல்லை. தாயுடன் வசிக்கிறது. குழந்தைக்கு பாங்கில் பணத்தை டெப்பாசிட் செய்கிறார் தாய். அதன் தகப்பன்தான் கார்டியனாக இருக்கமுடியும் என்றும் எனவே தகப்பனின் கையெழுத்து வேண்டும் என்றும் பேங்க் சொல்லிவிட்டது, ஆனால், தாயோ, குழந்தை என்னிடமே வளர்கிறது. தகப்பன் குழந்தையுடன் வாழவில்லை. பிரிந்து வாழ்கிறார். குழந்தைக்கு பேங்கில் கட்டும் டெப்பாசிட் பணம் தாயின் பணமே. இப்படி இருக்கும்போது, தகப்பன் கார்டியன் என்பதை ஏற்க முடியாது என்று வழக்கு சுப்ரீம்கோர்ட் வரை சென்று அந்த வழக்கில்தான் இந்த அதிரடியான தீர்ப்பு பெறப்பட்டது. இந்த தீர்ப்பு வந்த நாள் முதல், தாயும் கார்டியனாக இருக்கலாம் என்று ஒரு வரலாற்று தீர்ப்பும் கிடைத்தது.

**

No comments:

Post a Comment