Friday, August 21, 2015

உயிலின் கதை-3

உயிலின் கதை-3
இந்தியாவின் தர்ம சாஸ்திரங்கள் இத்தகைய உயில்களைப்பற்றி அந்த சாஸ்திரங்களில் ஏதும் சொல்லவில்லையா? ஒருசில தர்ம சாஸ்திர பண்டிதர்கள் இதைப்பற்றி சொல்லி உள்ளார்களாம். கட்டாயனா என்ற பண்டிதர், “ஒரு மனிதன், தான் ஆரோக்கியத்துடன் இருக்கும்போதோ, அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போதோ, ஏதாவது தர்ம காரியத்துக்காக ஏதாவது கொடுக்கச் சொல்லி இருந்தால், அதை அவன் வாழ்நாளிலேயே மதித்து கொடுத்துவிட வேண்டும்; ஒருவேளை அவ்வாறு கொடுக்க முடியாமல் இறந்துவிட்டால், அவரின் மகன் கண்டிப்பாக அதை நிறைவேற்ற கடமைப்பட்டவன்” என்று தெளிவாகச் சொல்லி உள்ளாராம். ஹரிதா என்ற பண்டிதர், “வாய்மொழியில் சொல்லிய உறுதிமொழியை (சத்திய சொற்களை) செய்யாமல் அல்லது செயல்படுத்தாமல் இருந்தால் அது இந்த உலகத்திலும், மேல்-உலகத்திலும் பட்ட “மனச்சாட்சியின் கடனே” என்று கூறுகிறார்.

ஒருவர் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் தானமாக கொடுத்துவிடலாமா அல்லது எந்த அளவு தன் சொத்தைத் தானமாக கொடுக்கலாம் என்றும், தன்னை நம்பி உள்ளவர்களுக்கு எவ்வளவு விட்டுச் செல்லவேண்டும் என்றும் இந்துமத தர்ம சாஸ்திரத்தின் முன்னோடியான யக்ஞவால்கியர் சொல்கிறார், “தன்னை நம்பி இருப்பவர்களுக்கு பாதகம் இல்லாமல் சொத்தை வைத்துவிட்டு, மீதியை தானமாகக் கொடுப்பதில் தவறில்லை” என்கிறார். “A gift made without prejudice to the family is valid.”

ஆனால், இப்படியெல்லாம் தர்ம சாஸ்திரங்கள் சொன்னாலும், உயில் என்ற வார்த்தையை கொண்டு சொல்லப்படவில்லை. எனவே உயில் என்பது சட்டபூர்வமாக இந்து மதத்தில் வழக்கத்தில் இல்லையென்றே எடுத்துக் கொள்ளலாம்.

பரந்த இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்கிறார்கள். இந்தியாவில் மதங்களும் அதன் மக்களும் அவரவர் மதக் கோட்பாட்டுப்படி வாழ்கிறார்கள். சொத்துக்களின் உரிமைகளும் அவ்வாறே பங்கு போட்டுக் கொள்ளப்படுகின்றன. இந்துக்கள் உயில் எழுதுவது பழக்கத்தில் இல்லையாம். ஒரு சில ஜமின்தார்கள் உயில் எழுதுவார்களாம். மதராஸ் பிரசிடென்சி மாகாணத்தில் இந்த உயில் எழுதும் பழக்கம் இல்லையாம். ஆனால் பெங்கால் பிரசிடென்சி மாகாணத்தில் உயில் எழுதுவார்களாம். இந்தியாவில் பெங்கால் பிரசிடென்சி மாகாணத்தில் முதன் முதலில் ஒரு உயில் சாசனம் எழுதப்பட்டது.

பெங்காலில் நூடியா என்னும் பகுதியின் ராஜா அவர். அவருக்கு நான்கு மகன்கள். மன்னர்கள் எப்போதும் தன் இராஜாங்கத்தை மூத்த மகனுக்கே கொடுத்து முடிசூட்டுவார்கள். இந்த இந்து மன்னர், நிலங்களில் உள்ள ஜமின்தாரி உரிமைகளை, எல்லா மகன்களுக்கும் கொடுக்காமல், அனைத்தையும் அவரின் மூத்த மகனுக்கே உயில் எழுதி வைத்துவிட்டு இறந்து விட்டார். அப்போது இந்துக்கள் உயில் எழுதும் வழக்கமில்லையே; அப்படியென்றால் இந்த உயில் எப்படி செல்லும் என்ற கேள்வி எழுந்து அது வழக்காக கோர்ட்டுக்குப் போகிறது. இந்தியாவில் இந்துக்கள் உயில் எழுதலாம்.

சாஸ்திலங்களும் ஒப்புக் கொள்கின்றன. மற்ற மகன்களை விட்டுவிட்டு ஒரே மகனுக்கு சொத்தைக் கொடுக்கலாம் என்று கோர்ட் அந்த உயிலைச் சட்டபூர்வமாக்கியது. இந்த வழக்கு நடந்த காலம் 1772-ல். அன்றுமுதல் பெங்கால் பிரசிடென்சி பகுதியில் இந்துக்கள் உயில் எழுத ஆரம்பித்தார்கள். அப்போது பெங்கால் பகுதியில் இந்துமதத்தின் இரண்டு கோட்பாடுகளான “மிதாக்ஷரா மற்றும் தயாபாக” இவற்றில் இரண்டாவது கோட்பாடான தயாபாக கோட்பாடு நடைமுறையில் இருந்தது. தயாபாக கோட்பாட்டின்படி, பூர்வீகச் சொத்துக்களை மூத்த மகனுக்கே கொடுத்துவிடலாம், மற்ற மகன்களுக்கு கொடுக்க தேவையில்லை என்ற நடைமுறை இருந்தது. அதாவது, இறந்த மூதாதையர்களுக்கு மூத்த மகனே “பிண்டம்” (பித்ரு ஆகாரம்) கொடுக்க கடமைப்பட்டவன் என்றும் அவனே மூதாதையர் சொத்தையும் அடைவான் என்றும் தயாபாக கோட்பாடு.

இதற்கு நேர் எதிரான கோட்பாடு மிதாக்ஷர (மிதாச்சர) கோட்பாடு. இதன்படி, மூதாதையருக்கு “பிண்டம்” கொடுப்பது எல்லா ஆண்குழந்தைகளுமே. எனவே மூதாதையர் சொத்துக்களில் எல்லா ஆண் குழந்தைகளுக்கும் சம பங்கு உண்டு என மிதாஷர கொள்கை. இந்த மிதாஷர கொள்கையானது, பெங்கால் தவிர மற்ற இந்தியா முழுவதும் நடைமுறையில் இருந்த காலம் அது.

No comments:

Post a Comment