Monday, August 17, 2015

உயிலின் கதை-2

உயிலின் கதை-2

சிலபேர், ஒருவரின் கண்ணின் முன்னால் நல்லவர்போல நடிப்பார்கள். அவர் உயிருடன் இல்லையென்றால், இவரின் உண்மைத்தன்மையை வெளியே காண்பிப்பார். அப்படிப்பட்டவர்களை வாழ்நாளில் அடையாளம் காண்பதும் கடினம்தான். எனவே ஒருவரின் வாழ்நாளில் அவருக்கு நம்பிக்கையுடன் நடந்தவருக்கு அவரின் சொத்துக்களை பங்கீடு செய்து, (கொடுக்காமல்) சொல்லிவிட்டுப் போவது என்பது இயற்கையான குணம்தான். அவ்வாறு பங்கீட்டு செய்து கொடுக்கவில்லை என்றால், அது அவர் சார்ந்த மதங்கள் எப்படிச் சொல்கிறதோ அதன்படி அவரின் வாரிசுகளுக்குப் போய்விடும். அவரவரின் மதச்சட்டம் உள்ளே புகுந்துவிடும். இந்த சட்டம் உள்ளே வராமல், அவரின் விருப்பப்படி சொத்து பங்கீடு ஆகவேண்டும் என்றால், இந்த கடைசி ஆசை என்னும் “உயிலையே” அவர் எழுதி வைத்து விட்டுச் செல்ல வேண்டும். எனவேதான் உயிலுக்கும் உயிருக்கும் ஏதோ ஒரு தொடர்பு உண்டு. இயல்பாக ஒருவர் வாழ்ந்து, சொத்துக்களைச் சேர்த்து, அனுபவித்துவிட்டு, மீதியை விட்டுவிட்டு இறந்துவிடுகிறார். இறந்தவர் சொத்துக்கள் யார் யாருக்குப் போகவேண்டும் என்பதில் அவரின் ரத்த உறவுகளில் சண்டைகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகமிக அதிகம். ஏற்கனவே அவ்வாறு சண்டைகள் நடந்திருக்கும்போல, அதனால்தான், மதங்கள் உள்ளே புகுந்து இந்த சட்டாம்பிள்ளை வேலைகளைச் செய்து, ஒரு பொதுக்கருத்தை உருவாக்கி அதைக் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறி, அது காலப்போக்கில் சட்டங்களாக ஆகிவிட்டிருக்க வேண்டும். சண்டை வராமல் சட்டங்கள் வர வாய்ப்பில்லை. பொதுவாக ஒரு வாழும் கூட்டத்துக்குள் சண்டை வந்தால் அங்கிருக்கும் பெரியவரை பார்த்து குறைகளை கூறி வழிதேடிக் கொள்வோம். அப்படிப்பட்ட பெரியவர்கள் மதம் சார்ந்த கூட்டங்களில், சாமியார்கள், பாதிரியார்கள், இந்த வேலைகளைச் சரியாக செய்து வந்திருக்கிறார்கள். ரோமானியர்கள் இதில் முன்னோடிகளாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களின் குறைகளை பாதிரியார்களிடம் தெரிவித்திருக்கிறார்கள். இறைவனின் நேரடித்தூதர் போப் ஆண்டவர். எனவே மக்களும், மன்னர்களுமே அவரிடம் ஆலோசனை கேட்பதும், அவரின் உத்தரவை மதிப்பதும் காலம் காலமாக நடந்து கொண்டிருந்தது. இவரின் உத்தரவுகளும் ஆலோசனைகளும் காலப்போக்கில் நடைமுறை சட்டங்களாக மாறிவிட்டன. ஒரு காலத்தில் ரோமன் போப் சொன்னதே சட்டம். பின்னர், போப்பை எதிர்த்த இங்கிலாந்து மன்னர்கள் தங்களுக்கென பல விதிமுறைகளை ஏற்படுத்திக் கொண்டனர். அவைகள்தான் பின்னர் எல்லாக் காலனி நாடுகளும் பின்பற்றும் சட்டங்களாக ஆகின. பரந்த இந்தியாவும் (இப்போதைய இந்தியா, பர்மா, பாகிஸ்தான், இலங்கை) ஆங்கிலேயர்களின் சட்டத்தை கொண்டே இந்திய மக்கள் ஆளப்பட்டனர். எனவே இந்தியர்களின் சட்டங்களுக்கு முன்னோடி ஆங்கிலேயர்களின் சட்டங்களே. 

No comments:

Post a Comment