Monday, August 17, 2015

உயிலின் கதை-1

உயிலின் கதை-1:
சொத்தை வைத்திருப்பவர், தன் வாழ்நாளுக்குப்பின், தன்னைச் சார்ந்தவருக்கு அந்தச் சொத்தை விட்டுச் செல்ல வேண்டும் என எல்லா மதங்களுமே ஒட்டு மொத்தமாக ஒரே கருத்தைத்தான் கொண்டிருக்கின்றன. தன்னைச் சார்ந்தவரான தன் வாரிசுகள் அல்லாதவருக்கு சொத்தை கொடுக்க வேண்டும் என்றால் அதை தான் உயிருடன் இருக்கும்போதே, தன் கைப்பட தானமாகக் கொடுத்து விட்டு செல்ல வேண்டும். அவரின் வாழ்நாளுக்குப்பின் அதைக் கொடுப்பதாகச் சொன்னால், இவரின் வாழ்நாளுக்குப்பின், அதை யார் நிறைவேற்றுவார்கள்? ஒரு தந்தை, அவரின் மகனுக்குக் கொடுக்க வேண்டிய சொத்தை, அவரின் வாழ்நாளுக்குப்பின், அதை வேறு ஒருவருக்கு கொடுத்துவிடு என்று கட்டளை இட்டிருந்தால், அந்த மகன் அவ்வாறு நடப்பானா என்பதே சந்தேகமே! தந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண்டியது மகனின் கடமை என்று எல்லா மதங்களுமே சொல்லுகின்றன. தந்தையின் கடனை, அவரின் இறப்புக்குப்பின், அவரின் மகன்தான் தீர்க்க வேண்டும் என்பதும் மதங்கள் வலியுறுத்தி சொல்லி வந்துள்ளன. இப்போது வந்துள்ள சட்டங்கள், அப்படி கொடுக்கவேண்டும் என்ற அவசியமோ கட்டாயமோ இல்லை என்று சொல்லிவிட்டது. ஒருவர் பட்ட கடனை, அவரே செலுத்த வேண்டும், அல்லது அவரின் சொத்துக்களிலிருந்து செலுத்தப்பட வேண்டும் என்பது சட்ட விதிகளாக்கப் பட்டுள்ளது.


ஒருவரின் இறப்புக்குப்பின் அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றுவது என்பது மரபு சார்ந்த விஷயம். இறந்தவர் என்ன பார்த்துக் கொண்டா இருக்கிறார். பேப்பர்கள், எழுத்துக்கள் இல்லாத காலத்தில், வார்த்தைகளுக்கு மரியாதையும், மதிப்பும் இருந்த காலத்தில் இதை ஒரு கடமையாகவும், இதை மீறுவது என்பது இறந்தவருக்குச் செய்த துரோகமாகவும் கருதப்பட்டது. எனவே பழைய காலத்தில், இவ்வாறு ஒருவரின் கடைசி ஆசைகளை நம்பிக்கையானவர்களிடம் சொல்லிச் செல்ல வேண்டிய கட்டாயமும் இருந்தது. பேப்பர்கள் வந்தபின், எழுதுவது சுலபமான பின்னர், இவ்வாறு சொல்லிச் சென்ற கடைசி ஆசைகளுக்கு ”உயில்” எனப் பெயர் வைத்துக் கொண்டனர். இந்த உயிலுக்கும் உயிருக்கும் சம்மந்தம் இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை, ஆனாலும் உயிருக்கும் உயிலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறதாகவே நம்பப்படுகிறது. உயிர் போனவுடன் அவரின் இந்த உலகச் சொத்துக்களை யார் யார் எப்படி எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவரின் வேறு சில வேலைகளை/ கடமைகளை யார் எப்படி நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்றும் தனது கடைசி ஆசையாக சொல்லிச் செல்கிறார். 

No comments:

Post a Comment