Saturday, August 15, 2015

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-12

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-12
மைனரைக் காட்டி எழுதிய பத்திரத்தை எப்படி ரத்து செய்யமுடியும்?
மைனரை பத்திரத்தில் பெயர் காண்பித்து அந்த மைனரின் தகப்பனார் அவருக்காக கார்டியனாக இருந்து அந்த மைனரின் சொத்தை விற்பனை செய்திருந்தால், அதை அந்த மைனர் 18 வயது முடிந்து மூன்று வருடங்களுக்குள் அதாவது அவரின் 21 வயதுக்குள் அந்த கிரயத்தை ரத்து செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த மைனர் 21 வயதுவரை எந்த வழக்கும் போடவில்லை என்றால், அதற்குமேல் அந்த கிரயம் செல்லும். அதற்குப்பின் அந்த மைனர் அவரின் சொத்தை திரும்ப கேட்க முடியாது. அந்த வழக்கை 21 வயதுக்குள் கோர்ட்டில் போடும்போது, அந்த சொத்துக்குறிய மதிப்புக்கு கணக்கிட்டு 7.5% கோர்ட் கட்டணம் கட்ட வேண்டும்.

ஆனால் அந்த மைனரின் பேர் அந்த பத்திரத்தில் குறிப்பிடாமல் அவருக்காக கையெழுத்து கார்டியன் போடாமல் இருந்தால், அந்த கிரயத்தை கோர்ட்டில் ரத்து செய்ய வழக்கு போடும்போது அந்த சொத்தின் மதிப்புக்கு கோர்ட் கட்டணம் கட்ட தேவையில்லை, ஏனென்றால், அந்த கிரயப் பத்திரத்தில் மைனரின் பெயர் இல்லை. அந்த மைனருக்காக யாரும் விற்கவில்லை. விற்காத சொத்துக்கு கோர்ட் கட்டணம் தேவையில்லை என்று அடிப்படை விதியின்படி தன் பங்குக்கு மைனர் கோர்ட் தீர்ப்பை வாங்கிவிடலாம். சென்னை உயர்நீதிமன்றத்தின் முழுபெஞ்ச் தீர்ப்பில் இந்த சட்டப்பிரச்சனை அலசப்பட்டு இந்த தீர்ப்பு வழங்கப் பட்டது.  (The Hon’ble FULL BENCH of the Madras High Court, in Sankaranarayana v. Kandasamia, AIR 1956 Mad 670).

இந்தியன் மெஜாரிட்டி சட்டம் 1875
1875லிலேயே பிரிட்டீஸ் ஆட்சி காலத்திலேயே இந்தியன் மெஜாரிட்டி சட்டம் கொண்டு வரப்பட்டு விட்டது. இந்தச் சட்டம் வருவதற்கு முன், இந்துக்கள், மைனாரிட்டி என்பது 16 வயது ஆரம்பமாகும் வரைதான் என்றார்கள். கோர்ட்டுகளும் அதை ஒப்புக்கொண்டன. இன்னும் சில கோர்ட்டுகள் 16 வயது முடிந்தவுடன்தான் மேஜர் ஆவார்கள் என்று தீர்ப்பளித்தன. முஸ்லீம் மதத்தில் மெஜாரிட்டி என்பது பருவம் அடைந்தவுடன் வந்துவிடும் என்று சொல்லி உள்ளார்கள். பருவம் என்பது அந்தக் காலத்தில், ஆணுக்கு 12 வயது முடிவடைந்தவுடன் வந்துவிடும், பெண்ணுக்கு 9 வயது முடிவடைந்தவுடன் வந்துவிடும் என்று முடிவெடுத்-திருந்தார்கள். அதை பிரைவி கவுன்சில் வழக்கிலும் உறுதி செய்துள்ளது. AIR 1928 PC 152.

இந்தியாவில், முகமதியர்கள் வழக்கப்படி திருமணம், டைவர், தலக் இவைகளில் மேஜர் வயது என்பது 15 முடிவடைந்தவுடன் ஏற்படும் என்று சொல்லி உள்ளனர். ஒரு 15 வயது முஸ்லீம், இஸ்லாமிய சட்டப்படி மேஜர் என்றும், இந்தியன் மெஜாரிட்டி சட்டப்படி மைனர் என்றும் எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு இந்தியாவில் மைனாரிட்டி வயதுபற்றி பல குழப்பங்கள் இருந்ததால் இவையெல்லாவற்றையும் ஒன்றுபடுத்தி, இந்த இந்தியன் மெஜாரிட்டி சட்டம் வந்தது. இந்த இந்தியன் மெஜாரிட்டி சட்டம் இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மட்டும் பொருந்தும். வெளிநாட்டினருக்கு பொருந்தாது.

**

No comments:

Post a Comment