Friday, February 5, 2016

கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள்

Compulsory Registrable Documents
கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள்
இந்திய பதிவுச் சட்டம் 1908 (The Indian Registration Act 1908) என்பது பிரிட்டீஸ் அரசு கொண்டு வந்து, இந்திய அரசு ஏற்றுக் கொண்ட ஒரு சட்டம்; இதில் “இந்திய” என்ற வார்த்தையை 1969ல் இருந்து நீக்கி விட்டார்கள்; (இந்தியாவில் இருக்கும் சட்டங்கள் எல்லாமே இந்தியச் சட்டங்கள்தானே!); இந்த பதிவுச் சட்டத்தில்தான், பத்திரங்களை பதிவு செய்யவதைப் பற்றிய சட்ட விபரங்கள் சொல்லப்பட்டுள்ளன;
இந்த பதிவுச் சட்டத்தின் பிரிவு 17(1)ன்படி சில பத்திரங்களை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது; அவ்வாறு “கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்” என்று சொல்லி உள்ள பத்திரங்களை, பதிவு செய்யாமல் விட்டுவிட்டால், அவைகள் சட்டப்படி செல்லாது; அந்த பத்திரங்களைக் கொண்டு உரிமை கோர முடியாது; கோர்ட்டில் அந்த பத்திரங்களை ஒரு சாட்சியமாக (Documentary evidence) எடுத்துக் கொள்ள முடியாது;
பொதுவாக அசையாச் சொத்துக்களை (Immovable properties) பதிவு செய்து கொள்ள வேண்டும்; ஆனால் அதிலும் குறிப்பாக சில பத்திரங்களை கட்டாயப் பதிவில் சேர்த்துள்ளார்கள்;
கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டிய பத்திரங்களின் விபரம்;
(1)     அசையாச் சொத்தின் “தானப் பத்திரம்” (Gift deed) எழுதிக் கொடுத்தால், அதை கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்;
(2)     அசையாச் சொத்தில் உள்ள சொத்துரிமையை மாற்றிக் கொடுத்தாலும், விற்பனை செய்தாலும், விட்டுக் கொடுத்தாலும், விடுதலை செய்தாலும், அந்தப் பத்திரங்களை கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்; அவ்வாறு கொடுக்கும் உரிமை அன்றே இருந்தாலும், பின்ஒருநாளில், அதாவது இனிமேல் தருகிறேன் என்று சொல்லி இருந்தாலும் அதையும் கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்;
(3)     அசையாச் சொத்தில் உள்ள உரிமையை விட்டுக்கொடுப்பதற்காக பணம் பெற்றுக் கொண்டால், அந்தப் பத்திரங்களை கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்;
(4)     வருடக் குத்தகைப் பத்திரங்கள் (Yearly Leases) கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்; வருடக் குத்தகை என்பது ஒரு வருடம் அல்லது அதற்குமேல் உள்ள காலத்துக்கு குத்தகை ஒப்பந்தம் செய்து கொள்வது; (நகரங்களில் உள்ள வீட்டு வாடகைகள், பொதுவாக மாத வாடகையாக 11 மாதங்களுக்கே செய்து கொள்ளப்படும்; எனவே வீட்டு வாடகை பத்திரங்கள் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது;)
(5)     அசையாச் சொத்துக்களைப் பொறுத்துப் பெறப்பட்ட கோர்ட் டிகிரிகள், கோர்ட் உத்தரவுகள், அவார்டுகள் இவைகளை அல்லது அந்த டிகிரியை வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுக்கும் அசைன்மெண்ட் பத்திரங்களை (Assignment of Decree, Order or Award) கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்;
(6)     அடுக்குமாடிக் கட்டிடங்களை தனி ப்ளாட்டுகளாக கட்டிக் கொடுக்கச் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களை (Agreement relating to construction of multiunit house building on land) கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்:

மேற்சொன்னவை அல்லாமல் மற்ற பத்திரங்களை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் ஏதும் இல்லை;
 அதைப்பற்றிய விபரம் கீழே;
(1)     சில ஏற்பாடுகளைச் செய்து கொள்ளும் பத்திரங்கள்;
(2)     கம்பெனிகளின் ஷேர்களின் பத்திரங்கள் (Shares relating to Joint Stock Company);
(3)     கம்பெனிகள் கொடுக்கும் டிபன்சர் பத்திரங்கள் (Debenture issued by company);
(4)     கம்பெனி டிபசன்பர் பத்திரங்களை மாற்றிக் கொடுக்கும் பத்திரங்கள்;
(5)     அசையாச் சொத்தின் எந்த உரிமையையும் மாற்றிக் கொடுக்காத பத்திரங்கள்:
(6)     கோர்ட் டிகிரிகள், கோர்ட் உத்தரவுகள்; any Decree or Order of a Court; இவைகளை பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை; (ஆனால், அந்த வழக்கில் சம்மந்தப்படாத அசையாச் சொத்தைப் பொறுத்த அந்த கோர்ட் ஒரு டிகிரி கொடுத்திருந்தால், அதை கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்; அதாவது, வழக்கில் அந்த அசையாச் சொத்து சம்மந்தப்பட்டிருந்தால், அந்த டிகிரியை பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை; வழக்குக்கு சம்மந்தமில்லாத வேறு ஒரு அசையாச் சொத்தைப் பொறுத்து, பார்ட்டிகளுக்குள் சமாதான டிகிரியை கோர்ட் மூலம் பெற்றிருந்தால், அந்த கோர்ட் டிகிரியை கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்);
(7)     அரசாங்கம் எழுதிக் கொடுக்கும் அசையாச் சொத்துக்களின் கிராண்ட் பத்திரங்களை (Government Grant) பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை; (அரசாங்கம் விற்கும் அல்லது இலவசமாக கொடுக்கும் அசையாச் சொத்தின் பத்திரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை;
(8)      நில மேம்பாட்டுச் சட்டம் 1871ன்படி கொடுக்கும் கொலேட்டிரல் செக்யூரிட்டி கடன் பத்திரங்களை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை;
(9)     விவசாய கடன் சட்டம் 1884ன்படி கொடுக்கும் கடன் பத்திரங்களை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை;
(10)  அறக்கட்டளை சட்டம் 1890ன்படி அதில் உள்ள ஒரு டிரஸ்டி, அந்த டிரஸ்ட்டின் சொத்தை வேறு ஒரு டிரஸ்டிக்கு பொறுப்பு ஒப்படைக்கும் பத்திரத்தை பதிவு செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை;
(11)  ஒரு அடமானப் பத்திரத்தில் பெற்ற அடமானக் கடனை, திருப்பி கொடுக்கும் ரசீது பத்திரத்தை, பதிவு செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை; (ஆனாலும் அதை பதிவு செய்து கொண்டால், சொத்தின் வில்லங்க சான்றிதழிலேயே தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்);
(12)  கோர்ட் ஏலம் மூலம் விற்பனை செய்து, ஏலம் எடுத்தவருக்கு வழக்கும் கிரய சர்டிபிகேட் (Sale Certificate) என்னும் பத்திரத்தை பதிவு செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை; (ஆனாலும், வழக்கில் உள்ள பார்ட்டிகள் அந்த சொத்தை ஏலத்தில் விடுவதற்கு மனுச் செய்து அதன் மூலம் கோர்ட் ஏலம் கொண்டுவந்து விற்பனை செய்தால், அந்த விற்பனை பத்திரத்தை கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்: ஏனென்றால், அது கோர்ட்டே விற்பனை செய்த பத்திரம் அல்ல);
**


No comments:

Post a Comment