ஜஸ்டிஸ் ஆன்டனின் ஸ்கேலியா (Justice Antonin Scalia)
அமெரிக்கா சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக இருந்த நீதிபதி
ஸ்கேலியா நேற்று (13.2.2016) இயற்கை மரணம் அடைந்தார்; தூக்கத்திலேயே இவரின் உயிர்
பிரிந்ததாம்; இவர் சுமார் 30 வருடங்கள் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக
பணியாற்றினார்;
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டை சுருக்கமாக “ஸ்காட்டஸ்” SCOTUS என்பர்: அதாவது The
Supreme Court of The United States என்பதன் சுருக்கம்; அமெரிக்க சுப்ரீம்
கோர்ட்டில் மொத்தம் 9 நீதிபதிகள் இருப்பர்; அதில் ஒருவர்தான் இறந்த நீதிபதி
ஆன்டனின் ஸ்கேலியா; இவருக்கு 79 வயதாகிறது;
இவரின் பெற்றோர்கள் இத்தாலி நாட்டைப்
பிறப்பிடமாகக் கொண்டவர்கள்; அமெரிக்காவில் குடியேறியவர்கள்; எனவே இவர்
இத்தாலிய-அமெரிக்கர் ஆவார்; இவருடைய தகப்பனார் இவர் பிறக்கும்போது கிளார்க்காக
வேலை பார்த்தார்: பின்னர் கல்லூரி பேராசிரியர் ஆகிவிட்டார்; இவரின் தாயார் ஒரு பள்ளிக்கூட
ஆசிரியை; நன்றாகப் படிக்கும் மாணவர் இவர்; பட்டப்படிப்பில் முதல் மாணவராகவும்
வந்தார்; ஸ்காலர்ஷிப் பெற்று படித்தவர்; ஹாவர்டு பல்கலையில் சட்டம் படித்தவர்;
வக்கீலாக இருந்தார்; சட்டக் கல்லூரியில் ஆசிரியராகவும் இருந்தார்;
அமெரிக்க
ஜனாதிபதி ரொனால்டு ரீகன் பதவி காலத்தில் இவர் சொலிசிட்டர் ஜெனரலாக வர ஆசைப்பட்டு,
அது முடியாமல் போகவே, கொலம்பியா மாவட்ட சர்க்யூட் கோர்ட்டின் நீதிபதியாக
நியமிக்கப்பட்டு, பின்னர் சுப்ரீம் கோர்ட்டுக்கு 1986ல் நியமிக்கப்பட்டு, 30
ஆண்டுகள் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்து பல வழக்குகளில் நீதி வழங்கி,
நேற்றுடன் அமெரிக்க மண்ணிலிருந்து மறைந்தார்; அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம்
வல்ல கர்த்தர் அருள் புரியட்டும்;
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதிகளை, அமெரிக்க
ஜனாதிபதி பரிந்துரை செய்வார்; அதை அமெரிக்க செனட் சபை அங்கீகாரம் அளிக்கும்;
அப்படி நியமிக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதி தன் ஆயுள் உள்ளவரை நீதிபதியாக
இருக்கலாம்; அவராக விலகிக் கொள்ள நினைத்தால் விலகிக் கொள்ளலாம்; வயது உச்சவரம்பு
ஏதும் கிடையாது; (இந்தியாவில் வயது உச்சவரம்பு உள்ளது);
No comments:
Post a Comment