Mooka Kone alias Vannia
Kone and others v. Pitchai alias Devendra Kone and others, (1928) 54 MLJ 174.
Judgment by Justice
Kumaraswami Sastri.
யாதவர்கள் இந்துக்களா
என்ற கேள்வியும் இந்த வழக்கில் எழுந்துள்ளதால் இந்த வழக்கு ஒரு முக்கியத்துவம்
வாய்ந்த வழக்காக அந்த காலத்தில் கருதப்பட்டது.
வழக்கின்
விபரம்:
ராமக் கோனார் என்பவர்
மதுரைப் பகுதியில் வசித்து வந்தார்.
அவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள். அவரின்
மூத்த மனைவிக்கு 2 மகன்கள். (தேவேந்திர கோனார், வன்னிய கோனார்);
இந்த தேவேந்திர
கோனார் இறந்துவிட்டார். இவருக்கு 3 மகன்கள், மூக்க
கோனார், கிருஷ்ண கோனார், தனகோட்டி
கோனார்.
வன்னியக்
கோனாரின் சொத்துக்களின் மீதுதான் இந்த வழக்கு;
ராமக்கோனாரின்
இரண்டாவது மகனான வன்னிய கோனாருக்கு மொத்தம் மூன்று மனைவிகள். 1) செல்லாயி, 2) அம்மாக்குட்டி, 3) அம்மாள்.
இவரின் மூத்த
மனைவிக்கு ஒரே ஒரு மகள் வன்னிச்சி. மூத்த மனைவி முன்னரே இறந்து விட்டார்.
2-வது 3-வது
மனைவிகளுக்கு குழந்தை இல்லை. அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில், வன்னியக் கோனார் 1916ல் இறந்து விடுகிறார்.
இவர் உயிருடன்
இருக்கும் காலத்திலேயே, இவரின் அண்ணன் தேவேந்திர
கோனார், இவரின் சித்தி மகன் (அதாவது இவரின் அப்பாவின் 3-வது
மனைவியின் மகன்) பிச்சைக் கோனார் இவர்களுக்குள் பாகம் பிரித்துக் கொண்டார்களாம்.
எனவே, இறந்த வன்னியக் கோனார், தனியாகச்
சொத்துக்களை விட்டுவிட்டு 1916ல் இறந்து விட்டார்.
இவரின் சொத்துக்களை
இவரின் இரண்டு மனைவிகள் உரிமை கோருகிறார்கள்.
அதற்கு எதிராக, இறந்த வன்னிக் கோனாரின் சகோதரர் இறந்த தேவேந்திரக் கோனாரின் மூன்று
மகன்களான, மூக்க கோனார், கிருஷ்ணகோனார்,
தனக்கோட்டிகோனார், இவர்களுக்குச் சொந்தம் என
இவர்களும் பங்கு கோருகிறார்கள்.
இது இல்லாமல், இறந்த வன்னியக் கோனாரின், அப்பாவின் 3-வது மனைவியின்
மகன் பிச்சைக் கோனாரும் பங்கு கேட்கிறார்.
(நம் தகப்பனாருக்கும்
தாயாருக்கும் பிறந்த பிள்ளைகள் முழுச் சகோதர சகோதரிகள் Full
brother, Full sister என்பர்; நம் தகப்பனாரின் இரண்டு மனைவிகளுக்கு பிறந்த
பிள்ளைகளை, பாதி-சகோதரர் பாதி-சகோதரி Half brother, Half sister என்பர்.)
இங்கு பிச்சைக்கோனார், இறந்த வன்னியக் கோனாருக்கு பாதி-சகோதரர் ஆவார். வன்னியக் கோனாரின் சொத்து
அவரின் பாதி-சகோதரரான பிச்சைக் கோனார் ஆகிய எனக்குத்தான் சொந்தம் என்று சிவில்
வழக்கு போடுகிறார்.
வன்னியக் கோனாரின்
உடன்பிறந்த அதாவது முழு-சகோதரரான, இறந்த தேவேந்திர
கோனாரின் மகன்கள், இந்த சொத்து எங்களுக்குத்தான் சேர
வேண்டும் என்று கேட்கிறார்கள்.
இது இல்லாமல், இறந்த வன்னியக் கோனாரின் 2 மற்றும் 3 மனைவிகள் (குழந்தை இல்லாதவர்கள்) ஒரு
சிவில் வழக்குப் போட்டு அதில், இறந்த கணவனின் சொத்தில்,
மனைவிகளுக்குத் தான் பங்கு உண்டு என்று "இந்து மத சட்டம்"
சொல்கிறது. எனவே எங்கள் கணவரின் சொத்துக்கள் எங்களுக்குத்தான் என்கிறார்கள்.
கீழ்கோர்ட்
தீர்ப்பில், இந்த சொத்து, இறந்த
வன்னியக் கோனாரின் இரண்டு மனைவிகளுக்குத் தான் போய்ச் சேர வேண்டும் என்று தீர்ப்பு
கூறிவிட்டது.
ஆனால், பங்காளிகள் கூற்றின்படி, இந்த யாதவர் ஜாதியில் இறந்தவரின்
சொத்து அவரின் மனைவிகளுக்குப் போகாது. இறந்தவரின் தாயாதிகளான பங்காளிகளுக்கு
மட்டுமே போய்ச் சேரும். இந்த பழக்கம்தான் காலம் காலமாக யாதவர் ஜாதியில் இருந்து
வருகிறது என்று கூறினார்கள். அதைத்தான், கீழ் கோர்ட் ஏற்க
மறுத்து விட்டது. இந்துமத சட்டப்படி மனைவிகளுக்குத்தான் சொத்து போய் சேரும் என்று
தீர்ப்பு கூறிவிட்டது.
இந்த கீழ்கோர்ட்
தீர்ப்பை எதிர்த்து, பங்காளிகள் அப்பீல்
கோர்ட்டுக்கு போகிறார்கள். அங்கு, "யாதவர்கள் என்றால்
அவர்கள் யார் என்றும், அவர்களின் ஜாதி பழக்க வழக்கம் என்ன
என்றும்" ஒரு பதில் மனு தாக்கல் செய்கிறார்கள். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
"யாதவர்கள் யார்?"
"இந்த வழக்கில்
உள்ள யாதவர்கள் "ஆயிரம் யாதவர்கள்" கூட்டத்தை சேர்ந்தவர்களாம் (Thousand
Yadavas). இவர்கள் இங்குள்ள இந்துமத கோட்பாடுகளை முழுமையாகப்
பின்பற்ற மாட்டார்களாம். அதிலும் குறிப்பாக, இவர்களின்
திருமணம், தத்துகுழந்தை எடுப்பது, பாகப்
பிரிவினை, சொத்துவாரிசுஉரிமை (marriages, adoption,
partition, inheritance etc.) இவைகளில் இந்த "இந்துமத"
கோட்பாடுகளை ஏற்க மாட்டார்களாம். இவர்களுக்கென்றே ஒரு தனி பழக்க வழக்கம் உண்டாம்.
திருமணப் பழக்கம்:
திருமணத்தில் ஒரு
புதிய வித்தியாசமான பழக்க வழக்கம் உண்டாம். அது, ஒரு
பெண்ணை, அவளின் தாய்வழி மாமனின் மகனுக்கு கண்டிப்பாக
திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டுமாம். அவன் சின்ன பையனாக இருந்தாலும், வயதில் பெரிய ஆளாக இருந்தாலும், அந்தப் பெண்,
அவனைக் கட்டாயமாகத் திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டுமாம். அப்படி
திருமணம் செய்து கொள்ள மறுத்து வேறு யாரையாவது திருமணம் செய்தால், அந்த திருமணத்துக்கு வருபவர்களில் ஆண் என்றால் அவர் ரூ.12-8-0 (12 ரூபாய்
எட்டாணாவும்), பெண் என்றால் அவர் ரூ.6-4-0ம் அபராதமாகக்
கட்டிவிட்டு செல்ல வேண்டுமாம். அந்த மொத்த அபராதப் பணமும் இந்த ஜாதி சொத்தாக
எடுத்துக் கொள்ளப்படுமாம்.
தத்து
பிள்ளை பழக்கம்: Adoption:
இந்த யாதவ ஜாதியில்
தத்து எடுக்கும் பழக்கமே இல்லையாம்.
பாகப்பிரிவினைப்
பழக்கம்: (Partition Custom);
இதில் ஒரு
வித்தியாசமான பழக்கம் இந்த ஜாதியில் உள்ளதாம். சொத்தை பாகம் செய்யும் போது
"பத்தினி பாகம்" (Patni-bhagam) என்ற முறையில் ஒரு பழக்கம் உள்ளதாம். பொதுவாக, மற்ற
ஜாதிகளில், பிறந்த ஆண் பிள்ளைகளை வைத்து பங்கு
பிரிப்பார்களாம். அதை "புத்திரபாகம்" (Putra-bhagam) என்று சொல்வார்களாம். அதன்படி எத்தனை பிள்ளைகளை இருக்கிறார்களோ அத்தனை
பேரும் தலைக்கு ஒரு பங்கு எடுத்துக் கொள்வார்கள்.
ஆனால், இந்த யாதவ ஜாதி பழக்கத்தில், "பத்தினி
பாகம்" என்ற முறைப்படி சொத்துக்கள் பங்கு பிரிக்கப்படுமாம். அதன்படி, ஒருவருக்கு எத்தனை மனைவிகள் இருக்கிறார்களோ, அந்த
மனைவிகளின் எண்ணிக்கைப்படி தலைக்கு ஒரு பங்கு எடுத்துக் கொள்வார்களாம். அந்த
மனைவிக்கு எத்தனை மகன்கள் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் இந்த சொத்தை பங்கு
பிரித்துக் கொள்வார்களாம். இதுதான் அவர்களின் பழக்க வழக்கமாம்.
மகனைப்
பெறாத தாய்:
மகனை பெற்றுக்
கொள்ளாத தாய் இருந்தால், அந்த தாய்க்கு 99 ஆடுகள் மட்டும்
கொடுப்பார்களாம். ஆடு கொடுக்க முடியவில்லை என்றால் ஒரு ஆட்டுக்கு ஒரு ரூபாய் வீதம்
பணமாகக் கொடுத்துவிட வேண்டுமாம். அந்த ஆடுகளையோ, பணத்தையோ
அந்த தாய் தன் வாழ்நாள் ஜீவனமாக வைத்துக் கொள்ள வேண்டுமாம். சொத்தில் பங்கு
கிடைக்காதாம்.
தாயாதிகள்
(பங்காளிகள்) Agnates:
முழு ரத்த உறவுகளில், ஆண்வழி உறவுகள் பங்காளிகளாக கருதப்படுவர். பெண்வழி உறவுகள் பங்காளிகள்
அல்ல. முழுரத்த ஆண்வழி உறவுகளில், முழு-ரத்த உறவு, பாதி-ரத்த உறவுக்கு முன்னரே முன்னுறிமை பெறுமாம்.
இந்த வழக்கில் உள்ள
யாதவர்கள், "நாட்டு இடையர் என்னும் ராமாயண சாவடி
இடையர்" என்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்களாம். இந்த நாட்டு இடைய ஜாதியில்,
விதவைகள் அவர்களின் கணவரின் சொத்தில் பங்கு கேட்க முடியாதாம். கணவர்
இறந்தவுடன், அந்த விதவை மனைவியானவள், கணவரின்
வீட்டை விட்டுப் போய்விட வேண்டுமாம். அதற்கு கூலியாக, "அறுப்புக்கூலி"
என்று ஒரு தொகையை வாங்கிக் கொள்ள வேண்டுமாம். அது 100 ஆடுகள் அல்லது ரூ.100
பணம்.இதைப் பெற்றுக் கொண்டால், கணவனின் சொத்தில் பங்கு கேட்க
உரிமையில்லையாம். இறந்தவரின் சொத்தை அவரின் மகன்கள் எடுத்துக் கொள்வார்களாம். மகன்
இல்லாவிட்டால், பங்காளிகள் என்னும் தாயாதிகள் (இறந்தவர்
கூடப்பிறந்தவர்கள் அவர்களின் வாரிசுகள்) அந்தச் சொத்தை எடுத்துக் கொள்வார்களாம்.
இப்படியாக, இந்த வழக்கில், சொத்தைவிட்டு இறந்த வன்னியக்
கோனாரின் தாயாதிகள், இந்த சொத்து எங்களுக்குத்தான் உரிமை
என்று கேட்கிறார்கள். இறந்தவரின் மனைவிகளுக்கு இந்த ஜாதி வழக்கப்படி போய்ச் சேராது
என்று சொல்கிறார்கள். இறந்தவரின் இரண்டு மனைவிகளும், நாங்கள்
இந்துக்கள், எனவே இந்துமத வழக்கப்படி எங்களுக்குத்தான் சேர
வேண்டும் என்று சொல்கிறார்கள். எங்கள் மதுரா இடையர் ஜாதியில் இப்படி ஒரு வழக்கம்
இல்லை என்று சொல்கிறார்கள்.
சாதாரணமாக, இந்து மதச் சட்டப்படி, விதவையையும், திருமணம் ஆகாத மகள்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை, அந்த
இறந்தவரின் சொத்தை எடுத்துக் கொள்பவரிடம் இருக்கிறது. இந்த பெண்கள் தங்களின்
ஜீவனாம்ச உரிமை கோர உரிமை உள்ளவர்கள் என்றும், இறந்தவரின்
சொத்தில் குடியிருக்கும் உரிமையும் உள்ளவர் எனவும் இந்து சட்டம் சொல்கிறது.
இந்த வழக்கில் உள்ள
யாதவர்கள், மதுரைப் பக்கத்தை சேர்ந்தவர்கள்.
யாதவர்கள் என்றால் ஆடுமேய்க்கும் இடையர். Yadhava or Shepherd community. இவர்களுக்குள் பல உட்பிரிவுகள் உள்ளனவாம்.
அந்த உட்பிரிவுகளில், மதுரா ராமாயண சாவடி 1000 யாதவர்கள் என்றும் இந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள்
மதுரை நகரிலும் அதை ஒட்டியுள்ள 56 கிராமங்களிலும் வசிப்பவர்கள். 1000
யாதவக்கூட்டம் என்றால், இவர்கள் ஒரு காலத்தில் 1000
குடும்பங்களாக வசித்தவர்களாம். இப்போது இது சுருங்கி 700 குடும்பங்களாக ஆகி
விட்டதாம்.
இந்த ஜாதியில் மேலும்
மூன்று உட்பிரிவுகளும் உள்ளதாம். அவைகள், புதுநாட்டு
இடையர்கள், சிவிகார இடையர்கள், அ.இடையர்கள்.
இவர்கள் எல்லோருமே, அந்தப் பெரும் பிரிவான "மதுரா
ராமாயண சாவடி 1000 யாதவர்கள்" என்ற கூட்டத்தை சேர்ந்தவர்கள்தானாம். இந்த
உட்பிரிவுகளில் அவரவர் கூட்டத்துக்கு ஒரு பஞ்சாயத்து உண்டாம். அந்த பஞ்சாயத்து
தலைவரை நாட்டாமக்கார் என்று கூறுவார்களாம். அவருக்கு கீழ் உள்ள குழுவை, 24 பட்டிகர்கள் என்று கூறுவார்களாம்.
பொதுவாக, பழங்காலங்களில், ஆடு, மாடு
மேய்த்து திரியும் கூட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த யாதவர்கள். பழம்பெரும் இதிகாசங்களில்
ஒன்றான மகாபாரதத்திலும் இவ்வாறே இவர்களை குறிப்பிட்டுள்ளார்கள். அதில், ஸ்ரீகிருஷ்ணன் இந்த கூட்டத்தைச் சேர்ந்தவன் என்றும்
குறிப்பிட்டுள்ளார்கள். ஆனாலும், இந்த கூட்டம் இந்தியாவின்
வடபகுதியில் உள்ள மதுராவில் ஆடு மாடு மேய்க்கும் கூட்டத்தை சேர்ந்தவர்களை
குறிக்கும். அப்படி இருக்கும்போது, இங்கு தென் இந்தியாவில்
மதுராவில் (மதுரையில்) ஆடு மாடு மேய்க்கும் கூட்டத்தை, அதே
வழியில் வந்த யாதவர்கள் என்று குறிப்பிட முடியுமா என்பது சந்தேகமே! ஒரே தொழிலைச்
செய்திருக்கிறார்கள் என்பது மட்டுமே பொருத்தமாக இருக்கிறது. பொதுவாக அந்தக்
காலத்தில் ஆரியர்களும் ஆடு மாடு மேய்திருக்கிறார்கள். திராவிடர்களும் ஆடு மாடு
மேய்த்திருக்கிறார்கள். ஒருவேளை, இந்த மதுரை யாதவர்கள்,
திராவிடர்களாக இருந்து, ஆரியர்களில் மதமான
இந்து மதத்தை பின்பற்ற தொடங்கி இருக்கலாம். காலப்போக்கில் இந்துமதக் கடவுள்களை
ஏற்றுக் கொண்டிருக்கலாம். சென்சஸ் என்னும் கணக்கெடுப்பில், இவர்களை
'யாதவர்கள் அல்லது இடையர்கள்' என்றும் இவர்கள்
சூத்திரர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆரியர்களின் வர்ணாசிரம கொள்கைப்படி இந்த
சூத்திரஜாதி, நான்காவது பிரிவைச் சேர்ந்த ஜாதி. எனவே,
இந்த யாதவர்கள், ஆரியரின் கொள்கைப்படி,
இந்த "இந்து சூத்திர ஜாதியைச்" சேர்ந்தவர்களா என்ற
சந்தேகமும் உள்ளது.
ஆரியர் அல்லாத
கூட்டத்துக்கும், திராவிட கூட்டத்துக்கும் அந்த
ஆரியர்களின் ஸ்மிருதியை எப்படி பொருத்திப் பார்ப்பது என்பது ஒரு பிரச்சனையே.
இதற்கு முன்னர் இருந்த நீதிபதிகளும், சட்ட வல்லுனர்களும்,
இந்து மதக் கொள்கைகளை முழுவதுமாக தென்இந்தியாவிலுள்ள திராவிட
கூட்டத்துக்கு அப்படியே பொருந்தும் என்று ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், மற்றும் சிலர், காலப்போக்கில் இந்த "இந்துமதக்
கருத்துக்கள்" தென்இந்தியாவிலுள்ள திராவிடக் கூட்டத்தால் ஏற்கப் பட்டும்,
ஒன்றுடன் ஒன்று கலந்து விட்டதாகச் சொல்கிறார்கள். சில பகுதிகளில்,
இந்துமத கோட்பாடு அப்படியே பின்பற்றப் பட்டுள்ளது. சில இடங்களில்
இந்துமதக் கோட்பாடானது அந்தப் பகுதியில் வாழும் மக்களின் கலாச்சாரத்தை ஒட்டி
மாறுபட்டும் ஏற்கப் பட்டுள்ளது.
நீதிபதியின்
கருத்து;
இந்த வழக்கில்
சொல்லியுள்ள சாட்சிகளின் கூற்றுப்படி பார்த்தால், இந்த
வழக்கில் உள்ளவர்களை "வைஷ்ணவர்கள்" என்று கருதலாம். இவர்களின் ஜாதி
'யாதவா". இவர்கள் இந்துமதத்தை பின்பற்றுகின்றனரா என்ற கேள்வி
கேட்கப்படவில்லை. அய்யக்கோன் என்பவர் ஒரு சாட்சியாக விசாரிக்கப் பட்டுள்ளார். அவர்
இந்த 1000 யாதவர்கள் கூட்டத்தை சேர்ந்தவர் என்று சொல்கிறார். அவர், வருட திதி கொடுப்பாராம். அவரின் தந்தை, பாட்டன்,
முப்பாட்டன் இவர்களின் பெயரைச் சொல்லி அவர்களுக்கு ஷ்ரதா (Sradh) என்னும் இறந்தவர்களுக்கு செய்யும் காரியத்தை செய்வாராம்.
இறந்தவர்களுக்கு இப்படி காரியம் செய்வது இந்துமத கோட்பாடு. அதை ஒட்டியே
சொத்துரிமையும். யாதவர்கள் இங்கு தென்இந்தியாவில் ஒரு பெருங்கூட்டம்
இருக்கிறார்கள். அதில் மதுரை பகுதியிலும், இராமநாதபுரம்
பகுதியிலும், திருநெல்வேலி பகுதியிலும் பெருவாரியாக
இருக்கிறார்கள். இவர்கள் இந்த மதுரைப்பகுதி "1000 யாதவ இராமாயண சாவடி"
கூட்டத்தை சேர்ந்தவர்களாகவும் இருப்பர்.
இங்கு கீழ்கோர்ட்
விசாரனைப்படி என்ன தெரியவருகிறது என்றால், இந்த யாதவ
கூட்டம், விதவை பெண்களுக்கு சொத்துரிமை இல்லை என்று
ஒதுக்கிவிட்டதா என்பதில் இருவகை கருத்துக்கள் இருக்கின்றன. விதவைகளுக்கு சொத்தில்
பங்கு இல்லை என்று கூறிவிட முடியாது என்றே கீழ்கோர்ட் தீர்ப்ப உள்ளது. ஐகோர்ட்டும்
அதையே உறுதி செய்துள்ளது.
இந்த யாதவ
கூட்டத்தில், இப்படி ஒரு பழக்க வழக்கம் வெகுகாலமாக
இருக்கிறது என்றோ, அப்படித்தான் அந்த கூட்டம் நடந்து கொள்கிறது
என்றோ தெளிவாகத் தெரியவில்லை.
இதற்கு முன்னர் நடந்த
வழக்கான,
Ramalakshmi Ammal v. Sivanantha Perumal Sethurayar (1872) 14 MIA 570 என்ற பிரைவி கவுன்சில் (லண்டன்)
வழக்கில், "ஒரு கூட்டத்தில் (ஜாதியில்) உள்ள பழக்க
வழக்கம் என்பது, அந்த மாவட்டத்தில் உள்ள பழக்கம் அல்லது அந்த
குடும்பத்துக்கு மட்டும் உள்ள பழக்கம் என்று இருக்கலாம். எப்படி இருந்தாலும்,
அது காலங்காலமாக இருந்து பழகி வந்திருக்க வேண்டும், அந்த பழக்கத்தை தொடரந்து மாற்றாமல் பழகி வந்திருக்க வேண்டும். அப்பொதுதான்
அதை ஒரு சட்ட பழக்க-வழக்கமாக எடுத்துக் கொள்ள முடியும்.' என்று
தீர்ப்பு கூறி உள்ளனர்.
இந்துமத சட்டடப்படி கூட்டுகுடும்ப
சொத்துக்களில் பெண்களுக்கு பங்கு ஏதும் கொடுப்பதில்லை. ஆனால் கூட்டு குடும்பத்திலிருந்து
பிரிந்த ஒருவரின் சொத்தில் அவரின் விதவை மனைவிக்கு பங்கு உண்டு.
இங்கு "அறுப்புக்கூலி"
என்பதைப் பற்றி விவாதம் செய்தார்கள். அது எல்லா விதவைப் பெண்களுக்கும் கொடுப்பதுதான்.
அது கூட்டுக் குடும்பமாக இருந்தாலும், தனிக் குடும்பமாக
இருந்தாலும், இறந்த கணவனின் விதவை மனைவிக்கு இந்த அறுப்புக்கூலி
கொடுப்பது வழக்கம்தான். அந்த பணம், சொத்துக்காக கொடுப்பது இல்லை.
சொத்தை வைத்துவிட்டு இறந்தவரின் மனைவிக்கு இது கொடுக்கப்படும், சொத்தில்லாமல் இறந்தவரின் மனைவிக்கு இது கொடுக்கப்படும். இந்த பணம் ரூ.30 லிருந்து
ரூ.100 வரை அந்தந்த குடும்பத்துக்கு ஏற்ப கொடுக்கப்பட்டிருப்பதாக சாட்சிகள் சொல்லி
உள்ளார்கள்.
மதுரா (மதுரை) மாவட்ட
கெஜட்டர் என்பதில் டாக்டர் த்ரிஸ்டன் அவர்கள் எழுதிய "ஜாதியும் பழங்குடிகளும்
தென்இந்தியாவில்" என்ற புத்தகத்தைப் பற்றி குறிப்பு காணப்படுகிறது. அதில், விதவைகளுக்கு சொத்து கொடுக்காத ஜாதிகளைப் பற்றிய குறிப்பும் உள்ளது. அதில்,
புதுநாட்டார் என்னும் கூட்டத்தில் புதுவகையாக வாரிசுரிமை இருந்து வருகிறதாம்.
ஆண் பிள்ளையை பெற்றுக் கொள்ளாத தாய், அவளின் கணவனின் இறப்புக்குப்பின்,
கணவனின் சொத்தை அவனின் சகோதரனுக்கு கொடுத்துவிட வேண்டுமாம். அல்லது இறந்த
கணவனின் தந்தைக்கு அல்லது சித்தப்பன், பெரியப்பனுக்கு கொடுத்துவிட
வேண்டுமாம். ஆனால் அந்த விதவைக்கு உரிய ஜீவனாம்ச தொகையை, அந்த
கூட்டத்தின் பஞ்சாயத்தில் முடிவு செய்வார்களாம்.
இந்து மத சட்டத்தின்படி, இறந்தவருக்கு யார்யார் "காரியம்" offering funeral oblations அவர்கள் மட்டுமே சொத்தை அடைவார்கள் என்று ஸ்மிருதி சாஸ்திரம் சொல்வதாக மேல்நாட்டு
(ஆங்கிலேய) பண்டிதர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். இங்குள்ள பல பழக்க வழக்கம் அவர்களை
ஆச்சரியப்படுத்தியும் உள்ளது. ஒரு பெண் அவள் கணவனைச் சார்ந்திருக்க வேண்டும். கணவன்
இறந்தவுடன், தன் சகோதரனை சார்ந்திருக்க வேண்டும். அவள் மகள்களை
(திருமணம் ஆகாமல்) விட்டுச் சென்றிருந்தாள் (இறந்துவிட்டால்) அந்த பெண்கள் அவளின் தாயின்
சகோதரனைச் சார்ந்திருக்க வேண்டும். (அவனே தாய்மாமன்). இன்னும், சகோதரிகளுக்கு சொத்தில் பங்கு கொடுப்பதில்லை என்ற நிலையே உள்ளது.
யாதவக் கூட்டம் என்பது
ஒரு நாடோடிக் கூட்டமே. (nomads). அவர்கள்
ஆடு மாடு மேய்க்க வேண்டி இருப்பதால், அவர்களால் ஒரு இடத்தில்
நிரந்தரமாக வசிக்க முடியாது. பெண்கள் ஒரு இடத்தில் வசிக்க முடியாததால், அவர்களுக்கு தனியே சொத்துரிமை கொடுக்காமல் இருந்திருக்கலாம். இவர்களில் பலர்,
ஒரே இடத்தில் தங்கி வசிக்க ஆரம்பித்த பின்னர், சொத்துக்கள் வாங்கி இருக்கலாம். நிரந்தரமாக தங்கி இருக்க ஆரம்பித்த பின்னர்,
இந்துமத கோட்பாடுகளை பின்பற்றி, பெண்களுக்கு உரிமைகள்
கொடுக்க ஆரம்பித்திருக்கலாம். பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுக்காமல் இருந்தது உண்மைதான்
என்ற போதிலும், அதை ஒரு சட்டமாகவே இவர்கள் பின்பற்றி இருந்தார்கள்
என்றோ, அதுவே காலம்காலமாக பின்பற்றிய பழக்க வழக்கம் என்றோ எடுத்துக்
கொள்ள முடியாது.
மற்றொரு
நீதிபதியான ஜஸ்டிஸ் தேவதாஸ் அவர்களின் தீர்ப்பு:
இந்து மத சட்டம் என்று
தனியே ஒரு சட்டத்தை எந்த அரசனும் ஏற்படுத்தவில்லை. சமஸ்கிருத புத்தகங்களில் ஸ்மிருதிகளையும்
அதன் வியாக்கியானங்களையும் சொல்லிச் சென்றுள்ளனர். அவைகளை இந்து மத சட்டமாக பழகி வருகிறோம்.
இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இது ஒரே மாதிரியும் இருந்ததில்லை. ஒரு பகுதியில்
ஒரு பழக்கமும் மற்ற பகுதியில் வேறு வகையான பழக்கமும் இருக்கிறது. தென் இந்தியாவில்
இருப்பவர்களை பொதுவாக திராவிடர்கள் என்பர். இந்த திராவிடர்களின் பராம்பரியம் பழமையானதே.
இவர்கள் நாகரீக மக்கள், கலாச்சாரம் மிகுந்த மக்கள். இவர்களின்
மொழிவளமும் சிறந்ததே. ஆரியர்கள் இங்கு வருவதற்கு முன்னரே, தமிழ்
மொழி இங்கு ஆட்சி செய்தது. ஆரியர் வருகைக்குப் பின்னர் இந்த தமிழ் மொழியில் சமஸ்கிருதமும்
நுழைந்து விட்டது. இந்து மத கொள்கைகளையும் மத வழிபாட்டையும் ஆரியர்கள் அறிமுகப்படுத்தி
இருக்கலாம். ஆரியர்கள் வந்தபின்னர், அந்த கலாச்சாரமும் ஊடுறுவி
இருக்கலாம்.
Mayne மைன் என்னும்
சட்ட வல்லுனர் கூறுகிறார், "ஆரியர்கள் வந்தபின்னர் திராவிடர்களின்
கலாச்சாரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். அது ஒரு சிறு அளவே. ஆனால் ஆங்கிலேயர்கள்
இந்தியாவை கைப்பற்றிய பின்னர், அவர்கள் பிராமணர்களை தங்களின்
ஆலோசர்கர்களாக நியமித்துக் கொண்ட பின்னர், இது அதிகரித்திருக்ககூடும்
என்றே நினைக்க தோன்றுகிறது.'
Mayne's
Hindu Law and Usage (8th Edition)-ல் மனிதன் தன் கூட்டத்தைச் சேர்ந்தவர்களின்
பழக்க வழக்கத்தையை வைத்துக் கொள்கிறான். அவனின் கூட்டம் எந்த கடவுளை வழிபடுகிறதோ அந்த
கடவுளையே வணங்கி வருகிறான். ஆரியர் வழிபட்ட கடவுளை திராவிடன் வழிபடவில்லை. இவருக்கும்
தனித்தனி கடவுள்கள் உள்ளனர். பின்னர் வந்த
ஆரியர்களின் மதகுருக்கள், தாங்கள் கடவுளின் பிரதிநிதிகள்,
வாரிசுகள் என்று கூறிக்கொண்டனர். இவர்களைப் பார்த்து, திராவிடர்களும் அவர்களின் கடவுளை வழிபட்டுக் கொண்டே, ஆரியர்களின் கடவுளையும் வழிபட ஆரம்பித்தனர். முகமதிய மன்னர்கள் ஆண்ட காலத்தில்,
இங்குள்ள கலாச்சாரத்தில் மாற்றத்தை கொண்டு வந்தனர். அதற்குபின் வந்த
பிரிட்டீஸ் ஆட்சியாளர்கள் காலத்தில், கிழக்கு இந்திய கம்பெனியின்
நீதிபதிகள் இங்குள்ள பழக்க வழக்கத்தை அறியாமல், இங்குள்ளவர்கள்
சொன்னதை மட்டும் கேட்டுக் கொண்டார்கள். சமஸ்கிருத பண்டிதர்கள், இதுதான் சட்டப் பழக்கம் என்று சொல்லி அவர்களை நம்ப வைத்தார்கள். பொதுவாக,
இந்த பண்டிட்டுகளின் வாயாகவே (mouthpiece) நீதிபதிகள்
இருந்தார்கள்.
இந்து (Hindu) என்பதற்கு விளக்கமாக, 'முகமதியர்கள், கிறிஸ்தவர்கள் அல்லாத, இந்தியாவில் வசிக்கும் எல்லோரும்
இந்துக்களே "என விளக்கம் அளிக்கப்பட்டது. இப்படி ஒரு விளக்கத்தை கண்டுபிடித்து,
அதற்குப் பின்னர், ஸ்மிருதியில் உள்ள வியாக்கியானங்கள்
இவர்களுக்குப் பொருந்தும் என்று சொல்லி விட்டார்கள். பின்னர் வந்த நீதிபதிகள் இதை விளங்கிக்
கொண்டு, ஒருவர் இந்து மதத்தை சேர்ந்தவரா, அந்த் மதப்படிதான் அவரின் மூதாதையரின் பழக்க வழக்கம் இருந்ததா என்று பிரித்து
பார்த்தனர். பழக்கம் என்பது இந்து மதத்தின் விதிகளின் விதிவிலக்கல்ல. ஏற்கனவே இந்த
மண்ணின் மக்களின் தொடர் பழக்க வழக்கம்தான். எனவே திராவிடர்களின் பழக்க வழக்கம் இந்து
மதம் சார்ந்து இருந்திருக்க முடியாது.
இந்த வழக்கில் உள்ள நபர்கள், இடையர்கள் அல்லது ஷெப்பர்டுகள் (ஆடு மாடு மேய்ப்பவர்கள்). அவர்கள் தங்களை
'யாதவர்கள்' என்று அழைத்துக் கொள்கிறார்கள். அவர்களில்
பெரும்பாலோர் வைஷ்ணவ சம்பிரதாயத்தை கொண்டவர்கள். வைஷ்ணவர்களின் அடையாளத்தை இட்டுக்
கொள்வார்கள். மதுரை இடையர்கள் ஆரியர்கள் அல்லர். அவதார புருஷரான விஷ்ணு, கிருஷ்ணா இவர்கள் பிறந்த குலத்தில், இந்த இடையர்களும்
சேர்ந்தவர்கள் என்று தானாகவே கூறிக் கொள்கிறார்கள். அப்படி கூறிக் கொள்வதால்,
அந்த ஆரியர்களின் பழக்க வழக்கத்தை கைக் கொண்டனர். மூதாதையருக்கு ஷிரதா
என்னும் காரியத்தை செய்கின்றனர். ஒரு கூட்டம் இந்து மதத்தை ஆதரித்தது என்பதால்,
அவர்களின் பூர்வீக பழக்க வழக்கத்தை இழந்து விடுவர் என்று நினைக்க முடியாது.
திரு. நெல்சன் அவர்கள்
எழுதிய நூலில், "ஐரோப்பிய நாடுகள் எல்லாம் கிறிஸ்தவத்தை
பின்பற்றிவருகிறது. ஆனால் அங்குள்ள ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு சட்டத்தையும் பழக்க வழக்கத்தையும்
பின்பற்றுகிறது என்பதே உண்மை" என்று கூறியுள்ளார். எனவே இந்து மதத்தை பின்பற்றினால், எல்லோரும் ஒரே மாதிரியான பழக்க வழக்கத்தையும் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம்
இல்லைதான்.
எனவே பழக்க வழக்கம் என்பதில்
(Custom
and Usage) என்பதில் ஒரு திட்டவட்டமான கட்டுப்பாட்டை கொண்டுவர முடியாது.
பழக்க வழக்கம் என்பது இஷ்டத்துக்கு வைத்துக் கொள்வதோ அல்லது அங்கும் இங்குமாக வைத்துக்
கொள்வதோ கிடையாது. ஒரு கூட்டத்தின் வெகுகாலம் பழகி வந்த பழக்க வழக்கமாக இருக்க வேண்டும்.
இந்த கூட்டமானது, பெரிதாகவோ, சிறிய கூட்டமாகவோ,
ஒரு குடும்பமாகவோ இருக்கலாம். அவ்வாறு பழகி வந்ததற்குறிய ஆதாரம் வேண்டும்.
பழக்கம் என்பது பழகி வந்த பழக்கம். எனவே இதில் நல்ல பழக்கம், கெட்ட பழக்கம் என்ற வித்தியாசம் இல்லை. கணவன் இறந்த பின், கணவனின் சொத்தில் மனைவிக்கு பங்கு கொடுப்பதில்லை. இது காலம் காலமாக இருந்து
வந்திருக்கிறது. ஆண்கள் ஆட்சி காலம் அது. ஆணாதிக்கம் அதிகம் இருந்த காலம். எனவே,
அவர்கள், பெண்களை ஒரு "பொருளாக மட்டுமே"
(Chattel) கருதினார்கள். எனவேதான், பெண்கள்
சொத்து வைத்துக் கொள்வதை ஆண்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மனு சாஸ்திர ஆசிரியரும்,
பெண்களுக்கு சில சமயங்களில் சொத்தில் உரிமை உண்டு என்று கூறி இருந்தாலும்,
பெண்களை கடைசிவரை குழந்தையாகவே வைத்துவிட்டார். ஒரு பெண், அவளின் சிறுவயதில்
தந்தையின் பாதுகாப்பிலும், வாலிபத்தில் கணவனின் பாதுகாப்பிலும்,
கணவன் இறப்பிற்குப்பின் அவள் மகன்களின் பாதுகாப்பிலும், மகன்கள் இல்லாமல் போனால், அவளின் கணவனின் உறவுகளின் பாதுகாப்பிலும்,
அவர்களும் இல்லையென்றால், அவளின் தகப்பனின் பாதுகாப்பிலும்,
தந்தையும் இல்லாமல் போனல், அரசனின் பாதுகாப்பிலும்
இருந்து வரும்படி ஏற்படுத்தி விட்டனர். ஒருகாலத்திலும், அவள்
வாழ்நாளில், சுயமாக இயங்க முடியாது.
பைபிளில், ஷெலோபெகட்டுக்கு 5 மகள்கள். அவர்கள் மோசஸிடம், அவர்களின்
தந்தையின் நிலத்தின் பங்கை பெறுவதற்கு உதவும்படி கேட்கிறார்கள். ஷெலோபெகட்டுக்கு ஆண்
பிள்ளை இல்லை. மொத்தம் ஐந்து பெண்கள்தான். மோசஸ் இதை ஏற்றுக் கொள்கிறார். அதுமுதல்,
யாராவது மகன் இல்லாமல் இறந்துவிட்டால், அவரின்
மகள்கள் அந்த தந்தையின் சொத்தை அடையலாம், அவரின் பேரை நிலைநிறுத்தலாம்
என்று உத்தரவு பிறப்பிக்கிறார் மோசஸ். அன்றுமுதல் இஸ்ரேலில் இது சட்டமாகியது.
முகமதிய சட்டப்படி, தாயாருக்கும், மனைவிக்கும் கட்டாயப் பங்கு definite
share கொடுக்கப் பட்டுள்ளது. மகளுக்கு மட்டும் மிச்சப் பங்கு residuary
share கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் திருமணம்
ஆன பெண்,
தனியே சொத்து வைத்துக் கொள்ள முடியாத நிலை இருந்தது. ஆனால், 1884ல் பெண்கள் சொத்துரிமை சட்டம் வந்தபின்னர் இது மாறியது.
இந்தியாவில், இந்து-மித்தாசரா கூட்டத்தின் சட்டப்படி, சகோதரிக்கு எப்போதும்
பங்கு இல்லை. ஆனால், பம்பாய் பகுதியில் இருக்கும் மயூகா சட்டப்படி
சகோதரியும் ஒரு பங்குதாரர் ஆவார்.
எனவே இறந்த கணவன் சொத்தில்
மனைவிக்கு பங்கு கிடையாது என்று தென் இந்தியாவில் இருந்த பழக்கம் ஒன்றும் தவறான பழக்கம்
இல்லை. இப்போதுள்ள சட்டங்களை படிக்கையில் அது தவறாகத் தெரியலாம். இது காலந்தோரும் இருந்த
பழக்கமாக இருந்தால் கோர்ட்டுகளும் இதை மதிக்கத்தான் வேண்டும்.
இந்த வழக்கில், பழக்க வழக்கம் என்பதை தெளிவாக நிரூபிக்கவில்லை. பழக்கவழக்கம் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை
என்றால் சட்டம்தான் முடிவு. எனவே இங்கு மகனைப் பெற்றுக் கொள்ளாத மனைவிக்கு கணவனின்
சொத்தில் பங்கு இல்லை என்ற பழக்க வழக்கம் நிரூபிக்கப்படவில்லை. எனவே இந்த அப்பீல் தள்ளுபடி
செய்யப்படுகிறது.
**