Tuesday, September 29, 2015

இந்து திருமணச் சட்டம் 1955

இந்து திருமணச் சட்டம் 1955
இந்துக்களின் திருமணச் சட்டம் 1955 என்பது 18.5.1955 முதல் அமலுக்கு வந்தது. இந்த தேதிக்கு முன்னர், இந்துக்கள் எத்தனை மனைவிகளை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள முடியும். ஆனால் இந்த தேதிக்கு பின், அதாவது இந்த சட்டம் வந்தபின் (18.5.1955க்கு பின்னர்), ஒரு இந்து ஆண், ஒரு பெண்ணை மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும். இரண்டாவது மனைவியைத் திருமணம் செய்ய முடியாது. அப்படி இரண்டாவது மனைவியை திருமணம் செய்து கொண்டாலும் அந்த திருமணம் செல்லாது. இரண்டாவது திருமணம் செய்த மனைவி “சட்டபூர்வ மனைவியே இல்லை” என்கிறது சட்டம். இரண்டாவது மனைவி சட்டபூர்வ இல்லாத மனைவி என்றபோதிலும், அவளுக்குப் பிறக்கும் குழந்தைகள் சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும்.
இந்த இந்துமத திருமணச் சட்டம் வருவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னரே, இந்தியாவில் உள்ள யார் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ளும் வகையில் ஸ்பெஷல் திருமணச் சட்டம் 1954 கொண்டுவரப் பட்டது. இதை சிவில் திருமணம் (Civil Marriage) என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.
இந்து திருமணச் சட்டம் 1955ன் பிரிவு 5ன்படி திருமணம் செய்து கொள்வதற்கு தகுதி என்று சில விபரங்களைச் சொல்லி உள்ளனர். அவைகள்;
1)       திருமணம் செய்து கொள்ளும் ஆணோ பெண்ணோ ஏற்கனவே ஒரு துணையுடன் வாழ்ந்து கொண்டிருக்க கூடாது.
2)       இருவரும் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும், அதாவது பைத்தியமாகவோ, மன நிலை பிறழ்ந்தவராகவோ இருக்க கூடாது.
3)       ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் முடிந்து இருக்க வேண்டும்.
4)       இருவரும், தடுக்கப்பட்ட உறவுகளுக்குள் உள்ள உறவாக இருக்க கூடாது. (prohibited relationship)
5)       இருவரும் சபிண்ட உறவிலும் இருக்க கூடாது. (Spaindas).
இதில் 1, 4, 5 இவைகளை மீறித் திருமணம் செய்து கொண்டால் அந்த திருமணம் சட்டப்படி செல்லாது (Void) என்று இந்த சட்டத்தின் பிரிவு 11 சொல்கிறது. எனவே இந்த 1, 4, 5 தகுதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
1955 க்குப் பின் நடந்த திருமணத்தில், இருவரும் உடல்உறவு கொள்ளாமல் இருந்தால், அதில் ஆணோ, பெண்ணோ உறவு கொள்ளும் தகுதி இல்லாமல் இருந்தால் (குறைபாட்டுடன் இருந்தால்-impotence) மற்றவர் இதை ஒரு காரணமாகச் சொல்லி அவர்களுக்குள் நடந்த திருமணத்தை ரத்து செய்து கொள்ளலாம் என்று பிரிவு 12 சொல்கிறது. இதை Voidable marriage என்கிறார்கள். விருப்பம் இருந்தால் இந்த குறையை ஏற்றுக் கொண்டு வாழலாம். அந்த திருமணம் செல்லும். அவ்வாறு வாழ விரும்பம் இல்லை என்றால் வேண்டாம் என்றும் சொல்லி திருமணத்தை ரத்து செய்து விடலாம்.
பிரிவு 5ல் உள்ள 2-வது நிபந்தனையின்படி இருவரும் நல்ல மனநிலை உள்ளவராக இருக்க வேண்டும் என்று சொல்கிறது. இதில், ஆணோ, பெண்ணோ மனநிலை சரியில்லாமல் இருந்தாலும், மற்றவர் அவருடன் வாழ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; அதை காரணமாச் சொல்லி திருமணத்தை ரத்து செய்து கொள்ளலாம் என்று பிரிவு 12 சொல்கிறது. இதுவும் Voidable marriage தான். விரும்பினால் திருமணத்தை ரத்து செய்து கொள்ளலாம்.


No comments:

Post a Comment