செட்டில்மெண்ட்--3
இரண்டாம்வகை செட்டில்மெண்ட் (குழப்பமான செட்டில்மெண்ட் பத்திரம்)
இந்த இரண்டாம் வகை செட்டில்மெண்ட் பத்திரத்தின் மூலம் சொத்தை தன்
வாரிசுகளுக்கு கொடுப்பவர், பொதுவாக பாதி மனதுடன் கொடுப்பார் என்றே நினைக்கத்
தோன்றுகிறது. ஒருவருக்கு, வயது அதிகமாகும்போது, நம்பிக்கை குறையும். தனக்கு ஒரு
பாதுகாப்பு இல்லையே என்று ஏங்க ஆரம்பிப்பர். அந்த நிலையில், அவர் பெயரில் உள்ள
சொத்தை, மனைவி கேட்டாலும், மகன் கேட்டாலும், மகள் கேட்டாலும், வேண்டா வெறுப்பாகவே
எழுதிக் கொடுப்பர். தனக்கு அதில் ஒரு சிறு உரிமையையாவது நிறுத்தி வைத்துக் கொள்ள
வேண்டும் என்று நினைப்பர். அதனால், தன் ஆயுளுக்குப்பின் அந்த சொத்தை
கொடுப்பதாகவும், அல்லது அதில் குடியிருக்கும் உரிமையையாவது தனக்கு நிறுத்தி வைத்துக்
கொள்வேன் என்றும் அந்த செட்டில்மெண்டில் ஒரு பிடிப்பை ஏற்படுத்தி எழுதிக்
கொள்வார். இந்த வகை செட்டில்மெண்ட் “அன்றே முழு உரிமையுடன் கொடுத்த
செட்டில்மெண்ட்” என்னும் முதல் வகையைச் சேராது. பின் ஒருநாளில் கிடைக்கும் சொத்து
என்ற இரண்டாம் வகையைச் சேரும்.
இப்படி அரை மனதாக எழுதி வைத்த செட்டில்மெண்ட் பத்திரம் ஏதோ ஒரு
நெருக்கடியில் எழுதப் பட்டிருந்தால், அந்த நெருக்கடி தீர்ந்தவுடன், அதை எழுதி
வைத்தவர் அதை ரத்து (Revocation
or Cancellation) செய்ய
நினைப்பாராம். அல்லது அவ்வாறு அதை ரத்து செய்யும்படி அவரின் மற்ற வாரிசுகள் அவருக்கு
அந்த நெருக்கடியைக் கொடுப்பார்களாம். அவ்வாறு ரத்து செய்துவிட்டால், அந்த
செட்டில்மெண்ட் பத்திரம் சட்ட குழப்பத்துக்குள் போய்விடும்.
செட்டில்மெண்ட் பத்திரத்தில் அன்று சொத்தைக் கொடுக்காமல், பின்
ஒருநாளில் கிடைப்பதாக எழுதி இருப்பதை, “உயில்போல” எழுதிய செட்டில்மெண்ட் என்பர். ஒரு
உயில் பத்திரத்தை, எழுதியவரின் வாழ்நாளில், எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்து
விடலாம். ஆனால் ஒரு செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் ஒரு சொத்தை எழுதிக் கொடுத்திருந்தால்
அதை அவ்வாறு (உயிலைப்போல) ரத்து செய்துவிட முடியாது. ஆனாலும், அந்த செட்டில்மெண்ட்
பத்திரம் மூலம் சொத்தின் உரிமையை கொடுப்பதை தள்ளிப்போட்டிருந்தால், அத்தகைய
செட்டில்மெண்டை ரத்து செய்யலாம் என்று சட்டம் சொல்கிறது. ஏனென்றால், அந்த
பத்திரத்துக்கு “செட்டில்மெண்ட் பத்திரம்” என்று பெயர் வைத்திருந்தாலும் அது “ஒரு
உயிலைப்போன்ற பத்திரம்” என்று சட்டம் கருதுகிறது. உயிலை எப்போது வேண்டுமானாலும்
ரத்து செய்து விடலாம். எனவே ஒரு உயிலைப்போல எழுதி அதற்கு செட்டில்மெண்ட் என்று
பெயர் வைத்திருந்தாலும், அதற்குறிய ஸ்டாம்பு கட்டணம் கட்டப்பட்டிருந்தாலும், அது
ஒரு உயில்தானே தவிர அது ஒரு செட்டில்மெண்ட் பத்திரம் அல்ல என்று பல்வேறு
தீர்ப்புகளில் பல உயர்நீதி மன்றங்களும், உச்சநீதிமன்றமும் சொல்லி உள்ளது.
ஆக, ஒரு பத்திரத்தில், “உரிமை” மாற்றப்பட்டிருந்தால் அதை ரத்து செய்ய
முடியாது. அவ்வாறு உரிமை மாற்றம் செய்யப்படாமல் இருந்தால், அதை எப்போது
வேண்டுமானாலும் ரத்து செய்துவிடலாம். இதுவே சட்டம். இதை எப்படி முடிவு
செய்யமுடியும். ஒவ்வொரு பத்திரத்தை படித்துப் பார்த்தால், அதில் உள்ள வாசகங்களைக்
கொண்டு, அந்த சொத்தின் உரிமையை அன்றே மாற்றி கொடுத்திருக்கிறார்களா இல்லையா என்பது
தெரிந்துவிடும். ஒரு செட்டில்மெண்ட் பத்திரத்தை படித்துப் பார்க்காமல், அது ரத்து
செய்ய தகுதியுள்ள பத்திரமா இல்லையா என்பதை முடிவு செய்ய முடியாது.
செட்டில்மெண்ட் பத்திரத்தை பதிவு செய்வது;
ஒரு செட்டில்மெண்ட் பத்திரத்தை, அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு
(ரத்த உறவுகளுக்கு) எழுதிக் கொடுத்து அதன் மூலம் அவரின் சொத்தை ஒப்படைக்கலாம்.
ரத்த உறவுகள் என்றால் யார் யார் என்று இந்திய ஸ்டாம்பு சட்டம் ஒரு விளக்கம்
கொடுத்துள்ளது. அதன்படி, தாத்தா, பாட்டி (தந்தைவழி, தாய்வழி உட்பட), தந்தை, தாய்
(வளர்ப்புதந்தை, வளர்ப்புதாய் உட்பட), கணவன், மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி
(மகன்வழி, மகள்வழி உட்பட), இவர்கள் ரத்த வழி உறவினர்கள் என்று விளக்கி உள்ளது.
பின்னர், சகோதரன், சகோதரி இவர்களும் ரத்த உறவில் சேர்த்துக் கொள்ளலாம் என மத்திய
அரசு அந்த சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. அதன்படி, இவர்களைத் தவிர வேறு யாரும்
ரத்த உறவு ஆக முடியாது. நம் சகோதரனின் மகன், மகள் இதில் சேர மாட்டார்கள். ரத்த
உறவுகளுக்கு சொத்தை எழுதிக் கொடுத்தால், அது செட்டில்மெண்ட் பத்திரம்; இந்த
உறவுகளைத் தாண்டி வேறு உறவுகளுக்கோ, வேறு நபர்களுக்கோ சொத்தை எழுதிக் கொடுத்தால்
அது கிப்ட் என்னும் தானப் பத்திரம் ஆகும். உறவுகளுக்கு எழுதிக் கொடுத்த பத்திரத்திற்கு
ஸ்டாம்ப் கட்டணம், சொத்தின் மதிப்புக்கு ஒரு சதவீதம் என்றும் அதிக பட்சமாக
ரூ.25,000/- என்றும் தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. உறவுகள் அல்லாதவருக்கு
கொடுக்கும் கிப்ட் என்னும் தானப் பத்திரத்துக்கு சொத்தின் மதிப்புக்கு 8 சதவீதம்
ஸ்டாம்பு கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
*
No comments:
Post a Comment