Saturday, November 7, 2015

In Forma Pauperis

சிவில் கோர்ட்டில் வழக்குகளைப் போட வேண்டுமென்றால், அதற்குறிய கோர்ட் கட்டணத்தை செலுத்த வேண்டும். அந்த கோர்ட் கட்டணத்தை “கோர்ட் ஸ்டாம்ப் பேப்பராகவோ, கோர்ட் முத்திரை ஸ்டாம்புகளாகவோ செலுத்த வேண்டும். ஒவ்வொருவிதமான வழக்குக்கும் ஒவ்வொருவிதமான கோர்ட் கட்டணம் உண்டு. இதை அந்தந்த மாநிலங்கள் நிர்ணயித்து சட்டமாக கொடுத்திருக்கின்றன. இந்த வருமானம் அந்தந்த மாநில அரசுகளுக்கே போய்சேரும். நீதிபதிகளுக்குச் சம்பளமும், நீதிமன்ற ஊழியர்களுக்குச் சம்பளமும் அந்தந்த மாநில அரசுகளே கொடுத்து வருகின்றன. இவ்வாறு கோர்ட் ஸ்டாம்பு கட்டணத்தை நிர்ணயித்துள்ள சட்டத்திற்குப் பெயர் “தமிழ்நாடு கோர்ட் கட்டண ஸ்டாம்பு சட்டம்” என்று பெயர். (The Tamil Nadu Court Fees and Suit Valuation Act).
பணத்தை வசூல்செய்வதற்காக போடும் வழக்குகளுக்கு ரூ.100/-க்கு 7.5% கோர்ட் பீஸ் ஸ்டாம்பு கட்டவேண்டும். சொத்தின் உரிமையை நிலைநாட்டவும், சொத்தின் பொஷஷனை கேட்டும் போடும் வழக்குகளுக்கு அந்த சொத்தின் மதிப்புக்கு 7.5% கோர்ட் பீஸ் ஸ்டாம்பு கட்டணம் செலுத்த வேண்டும். மற்றசில வழக்குகளுக்கு மிக குறைந்த கட்டணம் செலுத்தினால் போதும். கோர்ட் பீஸ் கட்டணம் 7.5% என்பது மிக அதிகம் என்றே பலரும் கருதுகிறார்கள். அதை எதிர்த்து போடப்பட்ட வழக்கும் இன்னும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இன்னும் இந்தப் பிரச்சனை முடிவாகவில்லை. மாநில அரசு நினைத்தால் இந்த கோர்ட் பீஸ் கட்டண விவகாரத்தில் ஒரு சீர்திருத்தமான சட்டத்தை கொண்டுவந்து, மக்களுக்கு நன்மை செய்வதுடன், மாநில அரசுக்கும் நஷ்டமில்லாத வருமானமும் கிடைக்கும்.
இந்த கோர்ட் பீஸ் கட்டணத்தை கட்டமுடியாமல் இருப்பவர்களும் உள்ளனர். அவர்கள் பறிகொடுத்த சொத்தை திரும்ப வாங்குவதற்கு வழக்குப் போடவேண்டும் என்றால், அந்த பறிகொடுத்த சொத்தின் மதிப்புக்கு 7.5% கோர்ட்பீஸ் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும். ஆனால் அவர்களால் அவ்வளவு தொகையை செலுத்தமுடியாத ஏழையாகவும் இருப்பர். இப்படிப்பட்டவர்களுக்கு, சிவில் சட்டத்தில் ஒரு சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. அது சிவில் நடைமுறை சட்டத்தின் ஆர்டர் 33ல் சொல்லப் பட்டுள்ளது. இப்படிப்பட்டவர்களை பழைய வழக்குமொழியில் “பாப்பர்” (Pauper) என்பர். இதை இந்த சிவில் நடைமுறைச் சட்டமானது “இன்டிஜண்ட் நபர்” (Indigent person) என்கிறது. தன்னிடம் போதிய வசதி இல்லாதவர், கோர்ட்பீஸ் கட்டணத்தை செலுத்தாமல் ஒரு வழக்கை போடமுடியும். இப்படிப்பட்ட வழக்குகளுக்கு தனிப் பெயரும் உண்டு. அத்தகைய வழக்கை “இன்பார்மா பாப்ரிஸ்” (In forma pauperis) என்று சொல்வர். அவரிடம் இருந்த வேறு சொத்தை வேண்டுமென்றே விற்றுவிட்டு, என்னிடம் இப்போது சொத்து ஒன்றுமே இல்லை என்றும் எனவே நான் பாப்பர் என்று சொல்லிவிட முடியாது. பாப்பர் என்று சொல்லிக் கொள்வதற்கு இரண்டு மாதத்துக்கு முன்பு வரை எந்த சொத்தையும் விற்பனை செய்திருக்க கூடாது என்ற ஒரு விதிமுறையும் உள்ளது. ஆயிரம் ரூபாய்க்கு மேல் எந்த பணமோ சொத்தோ இல்லாதவர் இப்படி பாப்பர் என்று சொல்லி கோர்ட் பீஸ் கட்டாமல் அவரின் வழக்கைப் போடமுடியும்.
ஒருவர் தன்னிடம் வைத்திருக்கும் புரோ நோட் மூலம் கடன் கொடுத்திருந்த தொகையை வசூல் செய்வதற்காக வழக்குப் போடுகிறார். அந்த அசலுக்கும் வட்டிக்கும் சேர்த்து 7.5% கோர்ட் பீஸ் கட்டவேண்டும். அவரோ தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சொல்லி பாப்பர் வழக்காக கோர்ட் பீஸ் கட்டாமல் போட்டார்; வழக்கு விசாரனைக்கு வரும்போது, கோர்ட்டுக்கு அவரின் மோட்டார் பைக்கில் வந்தார்; அவரை குறுக்கு விசாரனை செய்யும்போது, கோர்ட்டுக்கு எப்படி வந்தீர்கள் என்று சாதாரணமாக கேட்டதற்கு, பைக்கில்தான் வந்தேன் என்றும் அது உங்களின் சொந்த பைக்கா என்றபோது ஆம் என்னுடையதுதான் என்று பெருமையாகவும் சொல்லிவிட்டார்; அந்த ஒரு காரணத்துக்காகவே அவர் பாப்பர் இல்லை என்றும், அவர் போட்ட வழக்குக்கு கோர்ட் பீஸ் கட்டணத்தை செலுத்தும்படியும் நீதிபதி உத்தரவிட்டார்; தன்வாயாலேயே கெடுத்துக் கொண்டார்; உண்மையில் பணம் கட்டமுடியாத ஏழ்மை நிலையில் வழக்குப் போடும்படி நேர்ந்தால், இந்த சட்டத்தின் உதவியை நாடி பணம் இல்லாமால் அவரின் வழக்கைப் போடலாம்.
**


No comments:

Post a Comment