உயில் புரபேட்-3 (Will Probate)
இந்து மதத்தில் உயில் எழுதுவதை சட்டம் அனுமதிக்கிறது; கிறிஸ்தவ
மதத்திலும் உயில் எழுதுவதை சட்டம் அனுமதிக்கிறது; ஆனால் முகமதிய சட்டத்தில் உயில் எழுத
முடியாது; ஏனென்றால், முகமதியர்களின் புனித
நூலான குரானின் வாக்குப்படி, ஒருவரின் வாரிசுகளுக்கு சொத்தில் பங்கு இல்லாமல்
செய்யும்படி உயில் எழுத முடியாது என்று சொல்லப் பட்டுள்ளது; ஆனாலும், சொத்தை வைத்திருப்பவர்,
அந்தச் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு சொத்துக்கு உயில் எழுதி வைக்கலாம் என்று சலுகை
கொடுக்கப் பட்டுள்ளது; அந்த உயிலை எழுத வேண்டுமானால், அவரின் வாரிசுகள் சம்மதம் கொடுத்திருக்க
வேண்டும் என்று கன்டிஷனும் போடப் பட்டுள்ளது; எனவேதான், முகமதியர் உயில் எழுத முடியாது
என்று பொதுவாகச் சொல்லி விடுவர்;
இந்து, கிறிஸ்தவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடு இல்லை; உயிலை
எழுதி அவரின் சொத்தை யாருக்கு வேண்டுமானாலும், கொடுத்து விடலாம்; உயில் எப்போதும்,
அதை எழுதி வைத்தவரின் ஆயுட்காலத்துக்கு பின்னர்தான் அமலுக்கு வரும்; உயிலை எழுதியவர்
உயிருடன் இருந்தால் அந்த உயில் நடைமுறைக்கு வரவே வராது; அவர் இறந்த பின்னர்தான் நடைமுறைக்கு
வரும்;
ஒருவர் ஒரு உயிலைத்தான் எழுதி வைக்க முடியும்; அடுத்தடுத்து
உயில் எழுதி வைத்தாலும், கடைசி உயில்தான் செல்லும்; மற்ற உயில்கள் செல்லாமல் போய்விடும்;
ஆனாலும், சிலர், தன்னிடம் உள்ள பல சொத்துக்களை, வேறு வேறு உயில்கள் மூலம் எழுதி, தன்
வேறு வேறு பிள்ளைகளுக்கு தனித்தனியே கொடுத்து விடும் வழக்கம் உள்ளது: இது தவறு என்று
சொல்வதற்கு ஆட்கள் இல்லை;
உயில் என்றாலே, “அவரின் கடைசி ஆசை” என்றுதான் அதற்குப் பொருள்;
உயில் என்பதற்கு ஆங்கிலத்தில் Will என்றே சொல்கின்றனர்; அப்படிப் பார்த்தாலும், அவரின்
விருப்பம் என்றுதான் பொருள் வருகிறது; எனவே ஒரு மனிதனுக்கு ஆசை என்பது கடைசி ஆசை மட்டுமே தன் கடைசி விருப்பமாக
இருக்க முடியும்; எனவே ஒருவர் ஒரு உயில் மட்டும்தான் எழுதி நடைமுறைப் படுத்த முடியும்;
ஏற்கனவே எழுதிய உயிலை மாற்றி எழுத வேண்டும் என்றால், அந்த உயிலை ரத்து செய்து விட்டு,
வேறு ஒரு புதிய உயிலை எழுத வேண்டும்; அல்லது பழைய உயிலை திருத்தம் செய்து மட்டும் வைத்துக்
கொள்ளலாம்; இப்படிப் பார்த்தால், ஒரு உயிருக்கு ஒரு உயில்தான் இருக்க முடியும் என்பதே
உண்மை;
No comments:
Post a Comment