Saturday, January 12, 2019

Eminent Domain

Eminent Domain

எமினென்ட் டொமைன் (Eminent Domain).

ஒரு அரசாங்கமானது, மக்களின் சொத்துக்களை தன்னிச்சையாக பறித்துக் கொள்ளும் அதிகாரம் இது. ஒரு அரசின் பொது உபயோகத்துக்கு, அந்த சொத்து தேவைப்பட்டால், மக்களிடம் உள்ள அந்த சொத்தை எடுத்துக் கொள்ளும் அதிகாரம். இதை மக்கள் கேள்வி கேட்க முடியாது. இத்தகைய உரிமையை அரசு வைத்திருப்பதால் அதற்கு எமினென்ட் டொமைன் Eminent Domain என்று பெயர்.

இந்த வார்த்தையானது டச்சு மொழியில் “The Law of War and Peace” என்ற புத்தகத்தை எழுதியவர் 1625-ல் குறிப்பிட்டுள்ள வார்த்தையாம். The term “dominium eminens” என்பதை லத்தீன் மொழியில் “supreme lordship” என்கிறார்களாம்.

மக்களின் சொத்தை மட்டும் எடுக்கும் அதிகாரம் மட்டும் இல்லை. மக்களிடமிருந்து எதை வேண்டுமானாலும், வியாபாரம், வியாபார யுக்தி (trade secret), காப்பி-ரைட் உரிமை, போன்ற எதை வேண்டுமானாலும் அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் உரிமை உண்டாம்.

எமினென்ட் டொமைன் என்பது ஒரு பொதுவான வார்த்தை தானாம். ஒவ்வொரு நாட்டிலும் அதற்கு வேறு வேறு பெயர் கொடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறார்களாம்.

அமெரிக்காவிலும் பிலிப்பைன் நாட்டிலும் இதை Eminent Domain என்கிறார்களாம்.

இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் இதை Land Acquisition என்கிறார்களாம்.

இங்கிலாந்து, நீயூசிலாந்து, அயர்லாந்து நாடுகளில் இதை Compulsory Purchase என்கிறா்களாம்.

ஹாங்காங், உகண்டா நாடுகளில் இதை Resumption என்கிறார்களாம்.

ஆஸ்திரேலிய நாட்டில் இதை Resumption or Compulsory Acquisition என்கிறார்களாம்.

பிரான்ஸ், இத்தாலி, மெக்சிகோ, தென்ஆப்பிரிக்கா, கனடா, பிரேசில், போர்ச்சுக்கல், ஸ்பெயின், சிலி, டென்மார்க், சுவீடன், பின்லாந்து, ஜெர்மனி, பனாமா போன்ற நாடுகளில் இதை Expropriation என்கிறார்களாம்.

இந்தியாவில் “எமினெனட் டொமைன்”:

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் முதலில் இப்படிப்பட்ட உரிமை இல்லையாம். மக்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டு இருந்தது. அது ஒரு அடிப்படை உரிமையாக இருந்தது. மக்கள், சொத்தை வாங்கவும், விற்கவும், அனுபவிக்கவும், முழு உரிமை இருந்தது. அரசு நினைத்தால், மக்களின் சொத்தை எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால், அது மக்களின் அடிப்படை உரிமையாக இருந்தது. அதை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஆர்ட்டிகிள் 19 & 31 இவைகளில் உறுதி செய்திருந்தது. பொது உபயோகத் தேவைக்கு மட்டும் (பெரிய ரோடுகள், அணைகள், ரயில் பாதை, ஏர்போர்ட்) எடுத்துக் கொள்ளும் சிறிய அதிகாரத்தை மட்டும் 1894-ல் கொண்டு வந்த, The Land Acquisition Act, 1894 சட்டத்தில் வைத்திருந்தது. அப்படி எடுத்துக் கொள்ளும் போது, நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று மட்டும் இருக்கிறது. போதுமான நஷ்ட ஈடு கிடைப்பதில்லை.

ஆனால், இப்போது, அந்த நிலை மாறி விட்டது. அரசு நினைத்தால், மக்களின் எந்த நிலத்தையும், சொத்தையும் கையகப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், அதற்குறிய நஷ்ட ஈட்டைக் கொடுத்து விடும். அவ்வளவே. சொத்தை கொடுக்கு மாட்டேன் என்று சொல்ல முடியாது. இப்படி, நிலத்தை கையகப்படுத்தும் சட்டத்தை, மத்திய அரசும் கொண்டு வரலாம், மாநில அரசுகளும் கொண்டு வரலாம் என்று திருத்தி விட்டது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் 7-வது அட்டவனையிலும் சேர்த்து விட்டது. (7-வது அட்டவனை என்பது, சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட விஷயங்களை மத்திய அரசும் மாநில அரசுகளும் செய்யும் அதிகாரம் கொண்டவை; அதில் சில, மத்திய அரசுக்கு மட்டுமே சட்டம் இயற்றும் உரிமை உள்ள பகுதிகள்; சில மாநில அரசுகள் மட்டுமே சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட பகுதிகள்; மற்றும் சில, இரண்டுமே சட்டம் இயற்றிக் கொள்ளும் அதிகாரம் கொண்ட பகுதிகள்).

1978-ல் 44-வது திருத்தல் சட்டம்:

இந்த, மக்களின் சொத்துரிமை என்னும் சொத்தை அனுபவிக்கும் உரிமையை 1978-ல் இந்திய அரசு, அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தி மாற்றிக் கொண்டு விட்டது. இதன்படி, ஏற்கனவே, சொத்துரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமையாக இருந்து வந்ததை, இனி அப்படி இல்லை என்றும், அது ஒரு அடிப்படை உரிமை இல்லை என்றும் சொல்லி விட்டது. அரசு நினைத்தால், நிலத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று மாற்றிக் கொண்டது (நஷ்ட ஈடு கொடுக்கும்; ஆனால், நாம், நிலத்தை அரசுக்கு கொடுக்க முடியாது என்று சொல்ல முடியாது. அந்த உரிமை பறிபோய் விட்டது). எனவே இந்த 44-வது திருத்தல் சட்டத்தின் மூலம், புதிய ஆர்ட்டிக்கிள் ஒன்றைக் கொண்டு வந்தது. அது ஆர்ட்டிகிள் 300-ஏ. அதன்படி, மக்களுக்கு சொத்துரிமை இருக்கும், ஆனால் அது அடிப்படை உரிமையாக இருக்காது, அரசு நினைத்தால் அந்த சொத்தை எடுத்துக் கொள்ள முடியும், அதற்கு சட்டம் இயற்றி, நஷ்ட ஈடு கொடுத்து எடுத்துக் கொள்ளலம். மக்கள், தன் அடிப்படை உரிமையை அரசு பறிக்கிறது என்று அதை கேள்வி கேட்க முடியாது.

இந்தியாவில் Land Acquisition Act, 1894 இருந்தது. இதை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி பொது ரோடு போன்றவைகளுக்கு மக்களின் நிலத்தை கையகப்படுத்த சட்டம் இருந்தது. ஆனால், பின்னர், மாநில அரசுகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. அதே காலத்தில், பெரிய தொழிற்சாலைகள் அமைக்க தனியாருக்கும் நிலம் தேவைப்பட்டதால், அரசே ஏஜெண்டாக இருந்து, மக்களின் நிலத்தை கையகப்படுத்தி அவர்களுக்கு கொடுத்து வந்தது. இதில் போதுமான நஷ்ட ஈடு கிடைக்க வழி இல்லை. நிலத்தை பறி கொடுத்தவர்களின் நிலை பரிதாபகரமாகவே இருந்தது.

அதை மாற்றி, இப்போது மத்திய அரசு ஒரு புதிய சட்டத்தை 2013-ல் கொண்டு வந்தது. அது The Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 என்று பெயர். இதை சுருக்கமாக LARR சட்டம் என்றும் சொல்வர். இது 2014 ஜனவரி 1-முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த புதிய சட்டம் ஏன் வந்தது என்றால், அரசு நிலத்தை பழைய சட்டப்படி எடுக்கும் போது, விவசாயிகள், குடியிருக்கும் மக்கள் திரண்டு போராட ஆரம்பித்தார்கள். எனவே அவர்களுக்கு போதுமான நஷ்ட ஈடும், பாதுகாப்பும், வேறு நிலங்களை ஒதுக்கிக் கொடுக்கவும் வகை செய்யும் படி, இந்த புதிய சட்டத்தை கொண்டு வந்தார்கள். இதில் போதுமான நஷ்ட ஈடு கிடைக்கும்.

பழைய சட்டமான 1894-ல் நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்றால், அது ரோட்டுக்காகவோ, பாலங்கள் கட்டவோ, ரயில் பாதை ஏற்படுத்தவோ, ஏர்போர்ட், அணைக்கட்டு கட்டவோ மட்டுமே எடுக்க முடியும் என்று இருக்கிறது.

அமெரிக்காவில், பொது உபயோகத்துக்கு மக்களின் நிலங்களை கையகப் படுத்தினால், போதுமான நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது.

நிலத்தை அரசு கையகப்படுத்துவது சரியா?

இப்படி பல வழக்குகள் வந்துள்ளன. தனி மனிதன் ஒருவன், சொத்து வைத்திருப்பதை, பறிப்பதைப் போல ஆகும் என்றும் அவனின் அடிப்படை உரிமையை பறிப்பதாகும் என்றும் பல வாதங்கள் இருந்த போதிலும், பொது நன்மையை கருதும் போது, தனி மனித உரிமை சிறியதாக ஆகி விடும் என்று கோர்ட்டுகள் விளக்கம் கொடுத்து விட்டன. அதுபோக, தனியார் தொழிற்சாலைகளுக்கு, மக்களின் நிலங்களை கையகப் படுத்தவது ஏன் என்ற கேள்வி வரும்போது, நாட்டின் தொழில் வளம் அதிகப்படுத்தவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தனி மனித சொத்து உரிமையில் தலையிடலாம் என்றும் விளக்கம் கொடுத்து விட்டன.

ஆக, இந்தியாவில், தனி மனிதனின் சொத்துரிமை என்பது, அரசின் கொள்கைப்படியே இருக்குமே தவிர, அது அவனின் அடிப்படை உரிமையாக இருக்காது.

**

No comments:

Post a Comment