Illegitimate sons' rights in father's property:
VS Subramania Iyer vs. Minor Sangili Veerappa (1960) 2 MLJ 102
Judgment by: Justice Ramachandra Iyer of Madras High Court.
சிவகிரி எஸ்டேட் என்பது ஒரு Impartible Estate. அதாவது மன்னர்களின் அரச சொத்துக்கள் பாகம் பிரிக்க முடியாத சொத்துக்கள் ஆகும். வாரிசுகள் பாகம் பிரித்துக் கொள்ள முடியாது. மூத்த மகன் பட்டத்துக்கு வருவான், அவ்வளவே. இப்படிபட்ட சொத்துக்களை Impartible estate என்று சட்டம் சொல்கிறது. இந்தியாவில் உள்ள ஜமின்தார்களின் சொத்துக்களும் இப்படிப்பட்ட Impartible Estate வகையைச் சார்ந்ததே. அதேபோல, இந்தச் சிவகிரி எஸ்டேட்டும் ஒரு Impartible Estate ஆகும்.
இந்திய அரசு 1957-ல் ஒரு திடீர் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, இப்படியான ஜமின்தார் சொத்துக்களை அவர்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டு, அவர்களுக்கு நஷ்ட ஈடாக ஒரு தொகையைக் கொடுத்து விட்டது. அந்தச் சொத்துக்களை யார் யார் உண்மையில் அனுபவித்து வருகிறார்களோ அவர்களுக்கு ரயத்வாரி பட்டா கொடுத்து விட்டது.
ஜமின்தார் காலத்தில், இப்படிப்பட்ட நிலங்களை, பிரிட்டீஸ் அரசு, ஜமின்தார்களிடம் ஒப்படைத்திருந்தது. அவர்கள் அந்த நிலத்துக்கு வருட வருமானம் கட்டி வர வேண்டும். அந்த நிலங்களை அந்த ஜமின்தார் யாருக்கு வேண்டுமானாலும் குத்தகை போன்ற வகையில் விவசாயம் செய்யக் கொடுத்து விடுவார். விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு போன்று ஒரு அளவு விளைச்சலை ஜமின்தார் வசூலித்துக் கொள்வார். இப்படியான நிலையே ஜமின்தார்கள் காலத்தில் இருந்து வந்தது.
இந்திய அரசு இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், நிலத்தை உண்மையில் உழைத்து அனுபவிப்பவனுக்கு (ரயத்) அந்த நிலத்தை முழு உரிமையுடன் கொடுத்து விட வேண்டும் என்றும், ஜமின்தார் முறையை ஒழித்து விட வேண்டும் என்றும், ஜமின்தாருக்கு ஒரு தொகையை நஷ்ட ஈடாகக் கொடுத்தால் போதும் என்றும் கருதிய அரசு ஒரு சட்டத்தை இயற்றியது. அதுவே Act XXVI of 1948. அதன் பெயர் The Madras Estates (Abolition and Conversion into Ryotwari) Act, 1948.
இந்தச் சட்டத்தை உபயோகித்து, சிவகிரி ஜமின்தாரின் சிவகிரி எஸ்டேட் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்து, அதை உண்மையில் அனுபவித்து வருபவருக்கு ரயத்வாரி பட்டா கொடுத்து விட்டது. சிவகிரி ஜமின்தாருக்கு நஷ்ட ஈட்டுத் தொகையாக ரூ.7,899/- யும் வைப்பீடு செய்து விட்டது. சிவகிரி எஸ்டேட்டை 3.1.1951 தேதியில் எடுத்துக் கொண்டது. நஷ்ட ஈட்டுப் பணத்தை 16.3.1957-ல் வைப்பீடு செய்து விட்டது.
அப்போது சிவகிரி எஸ்டேட்டுக்கு ஜமின்தாராக இருந்தவர் வரகுணபாண்டியன். இந்த புதிய சட்டத்தின்படி, கிடைக்கும் நஷ்ட ஈட்டுப் பணத்தில், முதலில், ஜமின்தார், வெளியாரிடம் வாங்கிய கடன்களை, அரசே கொடுத்து விடும். பின்னர் உள்ள மீதித் தொகையில் 1/5-ல் பங்கு தொகையை ஜமின்தாரின் ஜீவனாம்ச உரிமை உடைய உறவினர்களுக்கு கொடுத்து விடும். மீதி உள்ள தொகையை அவருக்கும் அவரின் வாரிசுகளுக்கும் பிரித்துக் கொடுத்து விடும். வாரிசுகள் என்பது இந்து கூட்டுக் குடும்ப முறைப்படி, அவரும், அவரின் மகன்களும், அவரின் பேரன்களும், அவரின் கொள்ளுப் பேரன்களும் ஆவார்கள். அதாவது, அவருடன் சேர்த்து நான்கு தலைமுறை ஆண் வாரிசுகள் என்று பொருள்.
சிவகிரி ஜமின்தார் வரகுணபாண்டியன் அப்போது உயிருடன் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அதில் இரண்டு மகன்கள் மூத்த மனைவிக்கும், ஒரு மகன் இளைய மனைவிக்கும் பிறந்தவர்கள். இந்த சட்டம் வந்தபின்னர், அவரது இரண்டாவது மனைவி மூலம் மேலும் ஒரு ஆண் பிறந்தான். இது இல்லாமல், ஜமின்தாருக்கு வைப்பாட்டி ஒன்றும் உள்ளது. அந்த அம்மாள் பெயர் செல்லபாப்பம்மாள். அந்த அம்மாளுக்கு இவர் மூலம் இரண்டு மகன்கள் உண்டு.
இதில், சட்டபூர்வ மனைவிகளுக்குப் பிறந்த மகன்களே சட்டபூர்வ மகன்கள் (legitimate sons) என்று சட்டம் சொல்கிறது. வைப்பாட்டிக்கு பிறந்த மகன்களை (illegitimate sons) சட்டபூர்வமற்ற மகன்கள் என்று சட்டம் சொல்கிறது. இதில் இந்து கூட்டுக் குடும்பச் சொத்தில், சட்டபூர்வ மகன்களுக்கே பங்கு உண்டு. கூட்டுக் குடும்பச் சொத்தில் சட்டபூர்வமற்ற மகன்களுக்கு (வைப்பாட்டி மகன்களுக்கு) எந்தப் பங்கும் கிடைக்காது. ஆனாலும், தந்தைக்கு கிடைக்கும் தனிப்பட்ட உரிமையுள்ள சொத்துக்களில் (அதாவது கூட்டுக் குடும்ப உரிமை இல்லாத சொத்துக்களில்) வைப்பாட்டி மகன்களான சட்டபூர்வமற்ற மகன்களுக்கும் பங்கு உண்டு என்று இந்து சாஸ்திர சட்டம் சொல்கிறது.
எனவே, சிவகிரி ஜமின்தாருக்கு கிடைத்த மீதிப் பணத்தில், அவரும், அவரின் மூன்று மகன்களும், ஆக மொத்தம் நால்வரும் இந்து கூட்டுக் குடும்ப பாகஸ்தர்கள். அதாவது Coparceners of the Hindu Undivided Family or Hindu Joint Family ஆக இருந்தவர்கள். (இந்த சட்டம் வந்தபோது மூத்த மனைவிக்கு இரண்டு மகன்கள், இளைய மனைவிக்கு ஒரு மகன், ஆக மூன்று மகன்கள்; இதில் இந்தச் சட்டம் வந்த பின்னர் இளைய மனைவிக்குப் பிறந்த மற்றொரு மகனுக்குப் பங்கு இல்லை).
இந்த மீதிப் பணத்தில், தந்தைக்கும் மூன்று மகன்களுக்கும் தலா ¼ ஒரு பங்கு கிடைத்தது. அதில் சிவகிரி ஜமின்தார் வரகுணபாண்டியனுக்கு 1/4 பங்கு கிடைத்தது. அந்த 1/4 பங்கை விட்டுவிட்டு, ஜமின்தார் வரகுணபாண்டியன் 16.8.1955-ல் இறந்து விட்டார்.
அவர் இறந்ததும் சட்டப்பிரச்சனை உயிர் கொண்டு எழுந்தது. இறந்த ஜமின்தார் வரகுணபாண்டியனுக்கு தனிப்பட்டுக் கிடைத்த 1/4 பங்கு பணம் (சொத்து) அவரின் தனிச்சொத்தா? அல்லது இந்து கூட்டுக் குடும்பச் சொத்தா? என்ற கேள்வியும் கூடவே எழுந்தது. அவரின் தனிச் சொத்து என்றால், எல்லா மகன்களும் (அதாவது சட்டபூர்வ மகன்கள், வைப்பாட்டி மகன்கள் எல்லோருக்கும் சரிசமமாக பங்கு கிடைக்கும்); அல்லது அவரின் கூட்டுக் குடும்பச் சொத்து என்றால், அவரின் சட்டபூர்வ மகன்களுக்கு மட்டுமே பங்கு உண்டு, அவரின் வைப்பாட்டி மகன்களுக்கு பங்கு இல்லை என்று ஆகிவிடும்).
இதற்கிடையில், ஜமின்தாரின் மூத்த மனைவியின் இரண்டு மகன்கள் மட்டும், அவர்களுக்குக் கிடைத்த நஷ்ட ஈட்டுப் பணத்தை வசூல் செய்யும் உரிமையை, வெளி ஆட்களான, வி.எஸ்.சுப்பிரமணிய ஐயர் மற்றும் வி.முத்துசாமி ஐயர் என்ற இருவருக்கும் உரிமை மாற்றிக் கொடுத்து, அதற்கு பணம் பெற்றுக் கொண்டு விட்டனர்.
பின்னர், ஜமின்தாரின் இரண்டாவது மனைவியும், அவரின் மற்றொரு மகனான குட்டி ராஜா என்பவரும் (இவர் தான், இந்தச் சட்டம் வந்த பின்னர் ஜமின்தாருக்குப் பிறந்தவர்), 1957-ல் ஒரு வழக்கைப் போடுகிறார்கள். அவர்களின் கூற்று என்னவென்றால், 1/4 பங்கு ஜமின்தாருக்கு கிடைத்த பணம் அவரின் தனிப்பட்ட பணம். அது அவரின் தனிச் சொத்து ஆகும். எனவே அதில் ஜமின்தாரின் இரண்டு மனைவிகளுக்கும், 4-வது மகனுக்கும் மட்டுமே பங்கு உண்டு என்பது அவர்களின் வாதம். அதேபோல ஜமின்தாரின் மூத்த மனைவியும் அதில் பங்கு கேட்டு தனி வழக்குப் போடுகிறார். இந்த இரண்டு வழக்குகளிலுமே, ஜமின்தாரின் வைப்பாட்டியையோ அவரின் இரண்டு மகன்களையோ பார்ட்டிகளாக சேர்க்கவில்லை.
கீழ்கோர்ட் தீர்ப்பு என்னவென்றால், இறந்த ஜமின்தாருக்கு தனியே கிடைத்த பணம் என்பது அவரின் தனிச் சொத்து ஆகும், அதில் ஜமின்தாருக்கு பாதி பங்கும், அவரின் இரண்டாவது மனைவியின் மகனுக்கு பாதி பங்கும் உண்டு என்றும், ஜமின்தாரின் பாதிப் பங்கானது அவரின் இரண்டு மனைவிகளுக்கு சரி சமமாகச் சேரும் என்று தீர்ப்புக் கூறிவிட்டது.
இதற்கிடையில், ஜமின்தாரின் வைப்பாட்டி மகன்கள் இருவரும் ஒரு புதிய வழக்கைப் போடுகிறார்கள். அவர்கள் இருவரின் பெயர்கள் செல்லதுரை, மற்றும் சாமித்துரை. அவர்களின் கோரிக்கை என்னவென்றால் – அவர்களுக்கு ஜமின்தாரின் தனிச் சொத்தான பணத்தில், மூன்றில் ஒரு பங்கு உரிமை உண்டு என்று கேட்கிறார்கள்.
ஆனால் கோர்ட் தீர்ப்பு என்னவென்றால் – ஜமின்தாரின் மூன்று மகன்களும் (மூத்த மனைவிக்கு ஒரு மகன்; இளைய மனைவிக்கு இரண்டு மகன்கள்) அரசு நஷ்ட ஈட்டு அறிவிப்பு வெளியிட்ட உடனேயே "பிரிந்து விட்ட மகன்கள்" கணக்கில் வந்து விட்டார்கள். கூட்டுக் குடும்பத்தை விட்டு பிரிந்து (அதாவது பாகம் பிரித்துக் கொண்டு சென்ற) மகன்களுக்கு, தந்தையின் சொத்தில் கூட்டு உரிமை கிடையாது. எனவே ஜமின்தாரும், அவருக்கு, அரசு அறிவிப்பு வெளியிட்ட பின்னர் பிறந்த மகனும் மட்டுமே கூட்டு உரிமையாளர்கள் என்றும், ஒரு பங்கு சட்டபூர்வ மகனுக்கும் (அதாவது அரசு அறிவிப்பு வெளியிட்ட பின்னர் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த மகனுக்கும்) மற்றொரு பங்கு வைப்பாட்டி மகன்களுக்கும், மற்றொரு பங்கு மனைவிகளும் (சட்டபூர்வ மனைவிகள்) உரிமையானது என்று தீர்ப்புச் சொல்லி விட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, ஜமின்தாரின் இரண்டாவது மனைவியும், அவரின் மகன்களும் அப்பீல் வழக்கு போடுகிறார்கள். இரண்டாவது மனைவியின் வாதம் என்னவென்றால், வைப்பாட்டி மகன்களுக்கு ஜமின்தார் சொத்தில் பங்கு இல்லை. இது கூட்டுக் குடும்பச் சொத்து வகையைச் சேர்ந்தது. ஜமின்தாரின் தனிச் சொத்து இல்லை என்பது வாதம்.
ஆனால் மூத்த மனைவியின் இரண்டு மகன்களிடம் எழுதி வாங்கிக் கொண்ட இரண்டு ஐயர்களின் வாதம் என்னவென்றால், அரசு நஷ்ட ஈட்டு அறிவிப்பு வெளியிட்டதால், கூட்டுக் குடும்ப அமைப்பு கலைந்து விட்டது என்றோ, ஜமின்தாருக்கு அவரின் பங்கு அவரின் தனிச் சொத்து ஆகி விட்டது என்றோ கருதிவிட முடியாது. அரசு அறிவிப்புக்கும் கூட்டுக் குடும்பத்துக்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது என்பது வாதம். எனவே மொத்த பணமுமே கூட்டுக் குடும்பச் சொத்துத்தான். அதில் ஜமின்தாரின் மூத்த மனைவியின் மகன்கள், இளைய மனைவியின் மகன் இவர்களுக்கு கூட்டு உரிமை உள்ளது என்றும் வாதம் செய்கின்றனர்.
Madras Impartible Estate Act, 1904 என்று ஒரு சட்டம் உள்ளது. அது பிரிவினை ஆக முடியாத எஸ்டேட் சொத்துக்களாகவே ஜமின்தார் சொத்துக்களை கருதுகிறது.
ஆனால் எஸ்டேட் ஒழிப்புச் சட்டமோ, வைப்பாட்டி மகன்களை கூட்டுகுடும்ப சொத்தில் பங்குதாரர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனாலும், அரசு நஷ்ட ஈட்டு அறிவிப்பு வெளியிட்ட பின்னர், ஜமின்தாரும், அவரின் சட்டபூர்வ மகன்களும் ஆளுக்கு ஒரு பங்கு பிரித்துக் கொண்டு விட்டனர். அப்படி பிரித்துக் கொண்ட பணம் ஜமின்தாருக்கு கிடைத்துள்ளது. அது அவரின் தனிச் சொத்து ஆகும். எனவே அதை கூட்டுக் குடும்பச் சொத்து என்று கருத முடியாது.
எனவே ஜமின்தாருக்கும் அவரின் சட்டபூர்வ மகன்களுக்கும் பிரித்துக் கொண்ட பங்கில், ஜமின்தாருக்கு கிடைத்த பணம், அவரின் தனிச் சொத்தே ஆகும். அவர் அதை விட்டு விட்டு இறந்து விட்டார். எனவே அதில் சட்டபூர்வமற்ற மகன்களுக்கும் பங்கு உண்டு. ஜமின்தாரும், அவரின் இரண்டாவது மனைவிக்கு பின்னர் பிறந்த குட்டி ராஜா என்ற மகனும் கூட்டு குடும்ப உறுப்பினர்கள் என்றாலும் கூட, அந்தச் சொத்தில் வைப்பாட்டி மகன்களுக்கு பங்கு இல்லை என்று கூறி விட முடியாது.
ஏற்கனவே லண்டன் பிரைவி கவுன்சில் ஒரு வழக்கில் (Raja Jogendra v. NItyanand (1890) LR 17 IA 128) கீழ்கண்டவாறு தீர்ப்பு கூறியுள்ளது. ஒரு ஜமின்தார். அவருக்கு ஒரு சட்டபூர்வ மகன். மற்றும் ஒரு வைப்பாட்டி மகன். ஆக இரண்டு மகன்கள். அந்த ஜமின்தார் சொத்து என்பது பாகம் பிரிக்க முடியாத “இம்பார்ட்டிபில் எஸ்டேட்” வகையைச் சேர்ந்தது. ஜமின்தார் இறந்து விட்டார். அவரின் சட்டபூர்வ மகன் வாரிசு ஆகி, அந்த சொத்து முழுவதையும் அடைந்து கொண்டார். வைப்பாட்டி மகனுக்கு அதில் பங்கு இல்லை. ஆனால் சட்டபூர்வ மகன் இறந்து விட்டார். அவனுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. எனவே ஜமின்தாரின் வைப்பாட்டி மகன் வாரிசு உரிமை கோரினான். கோர்ட்டும், இது கூட்டுக் குடும்ப சொத்தாக இருந்தாலும், அடுத்த வாரிசு இல்லை என்பதால், வைப்பாட்டி மகன் வாரிசாக வருவான் என்று தீர்ப்புக் கூறி உள்ளது.
மற்றொரு வழக்கான (Vellaiyappa Chetty v. Natarajan (1931) 61 MLJ 522) என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. அதில், வைப்பாட்டி மகன், கூட்டுக் குடும்பச் சொத்தில், தந்தைக்குக் கிடைத்த தனிச் சொத்துக்களில், வாரிசாக பங்கு கேட்கலாம் என்று தீர்ப்புச் சொல்லி உள்ளது.
எனவே இந்த வழக்கில், ஜமின்தாரின் தனிச் சொத்தில், வைப்பாட்டி மகன்களுக்கும், மனைவிகளுக்கும், இரண்டாவது மனைவிக்கு அரசு அறிவிப்பு வந்த பின்னர் பிறந்த மகனுக்கும் மட்டுமே பங்கு உண்டு என்று தீர்ப்புச் சொல்லியுள்ளது.
**
No comments:
Post a Comment