Sunday, October 18, 2020

தத்து எடுப்பது Adoption

 தத்து எடுப்பது Adoption


இந்து சாஸ்திர சட்டப்படி தத்து எடுப்பது (Adoption) என்பது இந்து மதத்தில் மட்டுமே முடியும், மற்ற மதங்களில் இந்த பழக்கம் இல்லை. மற்ற மதச் சட்டங்களும் இதை அங்கீகரிக்கவில்லை. 


இந்து மதத்தில் ஏன் ஆண் குழந்தையைத் தத்து எடுக்கிறார்கள்?


சாஸ்திர சட்டப்படி இந்து மதத்தில் ஆண் குழந்தையை மட்டுமே தத்து எடுக்க முடியும், பெண் குழந்தையைத் தத்து எடுக்க முடியாது. (ஆனால் இப்போது, எந்தக் குழந்தையையும் தத்து எடுக்கலாம் என்று இந்து தத்துச் சட்டம் 1956 மாற்றி உள்ளது).


இந்து மத தத்துவத்தின்படி, ஒரு இந்து ஆண், அவன் இறப்புக்குப் பின்னர் மோட்சம் அல்லது சொர்க்கம் செல்ல வேண்டுமென்றால், அவனுக்கும் அவன் மூதாதையருக்கும் பிண்டம் கொடுக்க வேண்டும். அப்படி பிண்டம் கொடுப்பதற்கு ஒரு மகன் அல்லது அவனின் வழிவந்த பேரன், கொள்ளுப்பேரன் போன்றவர் இருக்க வேண்டும். ஒருவன் இறந்தவருக்குப் பிண்டம் கொடுத்தால், அது அவனின் தந்தை முதல், அதற்கு மேல் உள்ள மூதாதையர் ஏழு தலைமுறைக்குச் சென்று சேரும் என்று இந்து சாஸ்திரம் சொல்கிறது. இப்படிப்பட்ட ஆண் வழி மூதாதையர்கள் சபிண்டர்கள் என்று சொல்கிறது. சபிண்டர்கள் என்றால், சக-பிண்டம் அல்லது ஒரு பிண்டத்திலிருந்து  (உடலில் இருந்து) வந்தவர்கள் என்று இந்து சாஸ்திரம் சொல்கிறது. 


ஆண் குழந்தை இல்லை என்றால்?

ஒரு இந்துவுக்கு, ஆண் குழந்தை இல்லையென்றால், அவனுக்கு பிண்டம் கொடுக்க மகன் இல்லை என்பதால், அவன் சொர்க்கம் போக மாட்டானா என்ற கேள்வி எழும். ஆண் குழந்தை இருந்தால், அவன் இறந்த மூதாதையருக்கு பிண்டம் கொடுக்க சாஸ்திரப்படி தகுதியானவன் ஆவான். எல்லா சாஸ்திரத்துக்கும் ஒரு விதிவிலக்கு உண்டுதானே? அதன்படி, அந்த இந்து ஆண் உயிருடன் இருக்கும்போதே, ஒரு மகனை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று சாஸ்திரம் சலுகை கொடுத்துள்ளது. பெண் குழந்தையைத் தத்து எடுக்க முடியாது. ஏனென்றால், அவள், இறந்த தந்தைக்கு பிண்டம் கொடுக்கும் உரிமை உள்ளவள் இல்லை. அவள் வேறு கோத்திரத்தில் உள்ள வீட்டுக்குத் திருமணமாகி, மனைவியாகப் போனவள். (ஒரே கோத்திரத்தில் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க மாட்டார்கள். ஏனென்றால், ஒரே கோத்திரம் என்றால், அவளும் கணவனும் சபிண்டர்கள் ஆவார்கள் என்பதால். சபிண்டர்கள் என்றால், ஒரே மூதாதையரின் பிண்டத்தில் இருந்து வந்தவர்களுக்குள் திருமண உறவு இருக்கக் கூடாது என்று இந்து சாஸ்திரத்தில் தடை உள்ளது. அவர்கள் சகோதர-சகோதரி போன்றவர்கள்).


எனவே ஆண் குழந்தை இல்லாதவர்கள், ஏதாவது ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த தத்துக் குழந்தை ஒரே கோத்திரமாகவும் இருக்கலாம், அல்லது வேறு கோத்திரமாகவும் இருக்கலாம். அந்த குழந்தையைத் தத்து எடுத்துக் கொண்ட பின்னர், அந்த குழந்தையும், வளர்ப்புத் தகப்பனின் கோத்திரமாகவே மாறி விடுவான். 


தத்து எடுப்பது

தத்து எடுப்பது எப்படி என்றால், அந்தக் குழந்தையின் இயற்கைப் பெற்றோர் இருவரும் (அல்லது உயிருடன் இருக்கும் ஒருவர்), வளர்ப்புப் பெற்றோருக்கு, அந்தக் குழந்தையைத் தானமாகக் கொடுக்க வேண்டும். இதை தன் சுற்றத்தாரைக் கூட்டி (சாட்சிக்காக) அவர்கள் முன்னிலையில் தத்த ஹோமம் நடத்தி அங்கு அந்தக் குழந்தையை ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு செய்து விட்டால், அந்தக் குழந்தை அன்று முதல், வளர்ப்புப் பெற்றோரின் பிள்ளை ஆகி விடுவான். வளர்ப்பு வீட்டில், இயற்கை மகனுக்கு உரிய எல்லா உரிமையும் (சொத்துரிமை உட்பட) கிடைத்து விடும். ஆனால், பிறந்த வீட்டில் உள்ள எந்த உரிமையும் கிடைக்காது (சொத்துரிமை உட்பட எதுவும் கிடைக்காது).


யாரைத் தத்து எடுக்கலாம்?

யாரை வேண்டுமானாலும் தத்து எடுக்கலாம். ஆனால், அவன் ஒரு ஆணாக இருக்க வேண்டும். 14 வயதுக்குள் இருக்க வேண்டும். தத்து எடுக்கும் தாய்க்கும் அவனுக்கும் குறைந்தது 14 வயதாவது வித்தியாசம் இருக்க வேண்டும். (இல்லையென்றால், 18 வயதுப் பெண், 14 வயது ஆணைத் தத்து எடுப்பதுபோல ஆகி விடும்). இயற்கைப் பெற்றோரின் சம்மதம் வேண்டும். அவர்கள் இல்லையென்றால், அவனுக்கு கார்டியனாக இருப்பவர் தத்துக் கொடுக்க வேண்டும். 


இதில் விதிவிலக்கும் உண்டு:

14 வயதுக்கு குறைந்த ஆண் குழந்தையைத் தான் தத்து எடுக்க முடியும் என்று சாஸ்திரச் சட்டம் சொன்னாலும், சில சமுதாயங்களில் (சாதிகளில்) இந்த வயது வித்தியாசம் பார்க்கப் படுவதில்லை. சொத்துக்களைக் காப்பாற்றுவதற்காக, மேஜர் வயதை அடைந்தவன், திருமணம் ஆனவன் இவர்களையும் தத்துக் குழந்தையாக எடுப்பது வழக்கமாக உள்ளது. உதாரணமாக – செட்டிநாட்டு செட்டியார்கள் சமுதாயத்தில், திருமணம் ஆன பெரியவனையும் தத்து எடுக்கும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. ஒரு பழக்க-வழக்கமானது ஒரு சமுதாயத்தில் தொடர்ந்து காலம் காலமாக பின்பற்றி வந்தால், அதை ஒரு சமுதாயக் கூட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வந்தால், அதை தொடர் பழக்க-வழக்கம் Custom and Usage என்று சாஸ்திர சட்டம் சொல்கிறது. எனவே அதை சாஸ்திர விதிகளை மீறி ஏற்றுக் கொள்ளலாம் என்றும் அதே சாஸ்திரம் ஒப்புக் கொள்கிறது. 


சொர்க்கமா? சொத்தா?

ஒரு இந்து ஆண், அவன் சொர்க்கம் சேர வேண்டும் என்பதற்காக ஒரு ஆண் மகன் வேண்டும் என்று சாஸ்திரம் சொன்னாலும், சொத்து இருப்பவர்கள் மட்டுமே தத்து எடுக்கும் வழக்கம் இருக்கிறது. ஏனென்றால், அந்தச் சொத்தைக் காப்பாற்ற ஒரு மகன் வேண்டும். அந்த மகன் வளர்ப்பு மகனாகவும் இருக்கலாம். அப்படி இல்லையென்றால், அந்தச் சொத்து, அவனின் மனைவி காலத்துக்குப் பின்னர், அவனின் பங்காளிகளுக்கு, (அவனின் அண்ணன்-தம்பி வகையாராக்கள் அல்லது அவனின் சித்தப்பன்-பெரியப்பன் வகையறாக்கள்) அந்த சொத்து சென்று சேர்ந்து விடும். அவனுக்கு பெண் மக்கள் இருந்தாலும், அவர்களுக்கு அந்தச் சொத்து போகாது என்று இந்து மித்தாக்சரா சட்டம் சொல்கிறது. அதாவது இந்து மித்தாட்சரா சட்டப்படி, ஆண் மூதாதையர் வழி தோன்றல்கள் மட்டுமே சொத்துரிமை அடையும் தகுதி உடையவர்கள். இவர்களைக் கோபார்சனர்கள் (Coparceners) என்று அந்தச் சட்டம் சொல்கிறது. அதாவது ஒரு இந்து ஆணுக்கு, அவனுக்கு மேலே மூன்று தலைமுறையும் (அவனின் தந்தை, பாட்டன், பூட்டன்) மற்றும் அவனுக்கு கீழே மூன்று தலைமுறையும் (அவனின் மகன், பேரன், கொள்ளுப் பேரன்) ஆக அவனுடன் சேர்த்தால், அவனும், அவனுக்கு மேலே மூன்று தலைமுறையும், அவனுக்கு கீழே மூன்று தலைமுறையும், ஆக மொத்தம் ஏழு தலைமுறை ஆண்களை கோபார்சனர்கள் (Coparceners) அல்லது தாயாதிகள், பங்காளிகள், சபிண்டர்கள் (சக பிண்டம் அல்லது ஒரே பிண்டத்தில் வந்தவர்கள்) என்று இந்து மித்தாக்சரா சாஸ்திர சட்டம் சொல்கிறது. 


ஒரே கோத்திரத்தில் தத்து எடுப்பது:

இந்து சாஸ்திர சட்டத்தில் ஒரே கோத்திரத்தில் தத்து எடுப்பதையே வலியுறுத்துகிறது. ஏனென்றால், பழைய சாஸ்திர முறைப்படி தத்து எடுக்கு வேண்டும் என்றால், பங்காளிகளின் சம்மதம் தேவை. ஒரே கோத்திரத்தில் தத்து எடுத்தால் அந்த சம்மதம் சுலபமாகக் கிடைத்துவிடும். வேறு கோத்திரத்தில் எடுத்தால் எதிர்ப்புகள் இருக்கும். ஏனென்றால், குழந்தை இல்லாததால் பங்காளிகளுக்கு கிடைக்க வேண்டிய அவரின் சொத்துத்தான், வளர்ப்பு மகனுக்குப் போகிறது என்பதால் இந்த ஏற்பாடாக இருக்கலாம்.


மகளின் மகனையே தத்து எடுப்பது:

ஆண் குழந்தை இல்லாதவர், தன் மகளின் மகனையே (மகள் வழிப் பேரனையே) தத்து எடுப்பது என்ற வழக்கம் தென் இந்தியாவில் பல சமுதாயங்களில் அதிகமாக உள்ளது. சில சமுதாயங்களில், சகோதரியின் மகனை (மருமகனை) தத்து எடுப்பதும் வழக்கத்தில் உள்ளது. இதை எல்லாம் இந்து சாஸ்திரம், பழக்க-வழக்கத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொண்டுள்ளது. 


இந்து சாஸ்திரத்தின் அடிப்படையே ஸ்மிருதி என்னும் சாஸ்திரம்:

இந்து சாஸ்திரத்தின் அடிப்படையே ஸ்மிருதி என்னும் சாஸ்திரம் தான். அதை வியாக்கியானம் (விளக்கம்) செய்த பண்டிதர்கள் ஏராளம். அதைக் கொண்டுதான்  இந்து மித்தாக்சரா கொள்கை, மற்றும் இந்து தயாபாக கொள்கை என்ற இரண்டு முறைகள் இந்தியாவில் பிரபலமாக இருந்தன. மித்தாக்சரா பழைய இந்தியா முழுவதும் பிரபலம் ஆனது. தயாபாக முறை பெங்கால் என்னும் வங்காளப் பகுதியில் மட்டுமே புழக்கத்தில் இருந்து வந்தது. மித்தாட்சார முறையை யஞ்ஞவால்கியர் என்று இந்து பண்டிதர் வியாக்கியானம் (விளக்கம்) அளித்து இந்துகளின் அப்போதைய இந்து சாஸ்திர சட்டமாக ஆக்கி உள்ளார். இந்த மித்தாட்சரா சட்டத்தில் நான்கு உட்பிரிவுகள் உள்ளன. பெனாரஸ் முறை, மிதிலா முறை, மயூகா முறை (மகாராஷ்டிரா முறை), மதராஸ் முறை (திராவிடா முறை) ஆகும். மற்றொரு கொள்கையான தயாபாக முறையை ஜிமுக்தவாகனா என்று இந்து பண்டிதர் வியாக்கியானம் செய்துள்ளார். மித்தாச்சராவுக்கும் – தயாபாகவுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. மித்தாட்சரா முறையில், தந்தை உயிருடன் இருக்கும்போதே, பூர்வீகச் சொத்தில் அவரின் மகன், பேரன், கொள்ளுப் பேரன் பங்கு கேட்க முடியும். சொத்தை பாகப் பிரிவினை செய்ய முடியும். தயாபாக முறையில், தந்தை இறந்த பின்னரே, மகனோ, பேரனோ, கொள்ளுப் பேரனோ பங்கு உரிமை கேட்க முடியும். இதை ஆங்கிலேய சட்ட அறிஞர் Mr. Coolbrooke என்பவர் வேடிக்கையாக “மித்தாட்சரா முறையில் தந்தை உயிருடன் இருக்கும்போதே மகன் பங்கு  பெற உரிமை உள்ளவன் என்றும், தயாபாக முறையில் தந்தை இறந்தால்தான், மகன் பங்கு பெற உரிமை உண்டு” என்று எளிதான வேடிக்கை வார்த்தையில் சொல்லி உள்ளார். 


தத்த-ஹோமம்: (ஹோமம் வளர்த்து தத்து கொடுப்பது):

இந்து சாஸ்திர சட்டத்தில், ஹோமம் வளர்த்து, அக்னி சாட்சியாக தத்துப் பிள்ளையை, இயற்கைப் பெற்றோர், வளர்ப்புப் பெற்றோருக்குத் தத்து வார்க்க வேண்டும் என்று சொல்லி உள்ளது. ஆனாலும், பிராணர்கள் போன்ற மேல்தட்டு சாதியினருக்கு இந்த தத்த-ஹோமம் அவசியமில்லை என்றும் சில சாத்திரங்கள் சொல்கின்றன. இந்து பிராமணர், தன் மகளின் மகனை தத்து எடுக்கும்போதும், தன் சகோதரியின் மகனைத் தத்து எடுக்கும்போதும், தத்த-ஹோமம் அவசியம் இல்லை என்று இந்து பண்டிதர் யமா (Yama) சாஸ்திரங்களில் கூறி உள்ளார். 


ஆனால், தத்து எடுப்பதைப் பற்றிய இந்து சாஸ்திரமான, தத்த-சந்திரிகா மற்றும் தத்த-மீமாம்சா போன்ற சாஸ்திர சட்டங்களில், தத்த-ஹோமம் அவசியம் என்று சொல்லப் பட்டுள்ளது.  ஆனாலும், இது “இருபிறவி சாதியினருக்கு” (Twice born class) மட்டுமே பொருந்தாது என்று சொல்லப் பட்டுள்ளது. “இருபிறவி சாதியினருக்கு” (Twice born class) என்றால், வர்ணாசிரம தர்மப்படி (சாதி தர்மப்படி) நான்கு வர்ணங்களாக (சாதிகளாக ) உள்ளவர்களில் முதல் மூன்று மேல்தட்டு சாதிகளான, பிராமணர், சத்திரியர், வைசியர் இவர்கள் மட்டுமே இருபிறவி ஆட்கள். அதாவது இவர்கள் பிறந்தபோது, ஒரு பிறவியும், சாஸ்திரம் கற்றபோது மற்றொரு பிறவியும் எடுத்தவர்கள் என்று பொருள் (Twice born). மற்றவர்கள் அந்த சாஸ்திரத்தை கற்க கூடாது என்ற சாஸ்திர கட்டுப்பாடு இருந்ததால் “ஒருபிறவி ஆட்கள்” என்று விலக்கி வைத்துள்ளது.  


வாக்-தானா அல்லது வாக்கு தானம் அல்லது வாக்குத் தத்து:

இரட்டைப் பிறவி உள்ள மேல்தட்டு சாதியினர்களில், தத்து எடுக்கும்போது, தத்த-ஹோமம் அவசியம் இல்லை என்று சாஸ்திரம் சொன்னதால், அவர்களுக்கு ஹோமம் வளர்த்து தத்து எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய கோர்ட்டுகள் பல தீர்ப்புகளில் சொல்லி உள்ளன. அவர்கள் வாக்கு மூலம் (வார்த்தைகளால்) தத்து கொடுக்க முடியும்.

(தொடரும்)……





No comments:

Post a Comment