Wednesday, September 15, 2021

முடிவுற்ற பத்திரங்கள் மற்றும் முடிவுறாத பத்திரங்கள்

முடிவுற்ற பத்திரங்கள் மற்றும் முடிவுறாத பத்திரங்கள்

Executed Contract & Executory Contract

சொத்தின் கிரயப் பத்திரங்களைப் பதிவுக்கு கொடுக்கும்போது, சொத்தை வாங்கியவர், அந்த கிரயப் பத்திரத்தை பதிவாளரிடம் பதிவுக்கு கொடுப்பதே சிறந்த முறை. ஆனாலும் விற்றவரும் அந்த கிரயப் பத்திரத்தை பதிவுக்கு கொடுக்கலாம். அது தவறு இல்லை. 

பத்திரங்கள் எழுதி, அதில் கையெழுத்துச் செய்து, சாட்சிகள் கையெழுத்தும் முடிந்தவுடன், அந்த பத்திரம் “ஒரு முடிவுற்ற பத்திரம்” ஆகி விடும். அதாவது அப்படியான பத்திரங்களை Executed Contract என்று பதிவுச் சட்டம் சொல்கிறது. இனி, அதில் இருபார்ட்டிகளும் ஒருவருக்கு ஒருவர் செய்து கொள்ள வேண்டிய வேலை ஏதும் இருக்காது. அப்படியான பத்திரங்களை முடிவுற்ற பத்திரம் என்பர்.

ஆனால், ஒரு கிரய அக்ரிமெண்ட் பத்திரத்தை அதேபோல் இருபார்ட்டிகளும் கையெழுத்துப் போட்டு, சாட்சிகளின் கையெழுத்தும் பெற்றுக் கொண்டாலும், அது “இன்னும் முடிவுறாத பத்திரம்” என்ற வகையிலேயே இருக்கும். அதில் இருபார்ட்டிகளும், அல்லது அதில் உள்ள ஒரு பார்ட்டியாவது, இன்னும் ஏதாவது ஒரு வேலையை செய்ய வேண்டிய நிலை இருக்கும். இதை “முடிவுறாத பத்திரம்” அல்லது Executory Contract என்பர். 

சாட்சிகள் எதற்கு அவசியம் அல்லது எதற்கு அவசியம் இல்லை;
 
முடிவுற்ற பத்திரங்களுக்கு (Executed Contract) குறைந்த பட்சம் இரண்டு சாட்சிகளின் கையெழுத்து அவசியம் என்று சட்டம் சொல்கிறது. இதில் கிரயப் பத்திரம், அடமானப் பத்திரம், செட்டில்மெண்ட்/தானப் பத்திரம் போன்றவை வரும்.

ஆனால், முடிவுறாத பத்திரங்களுக்கு (Executory Contract) சாட்சிகள் அவசியம் இல்லை எனச் சட்டம் சொல்கிறது. ஆனாலும் நடைமுறையில் நாம் அந்த வகைப் பத்திரங்களுக்கும் சாட்சிகளின் கையெழுத்தைப் பெற்றுக் கொள்கிறோம். ஆனாலும், அது சட்டப்படி அவசியம் இல்லை. அப்படி சாட்சிகள் இல்லாமல் அந்த பத்திரங்களை எழுதி இருந்தாலும், அவைகளும் சட்டப்படி செல்லும்.
அதற்கு உதாரணமாக - கிரய அக்ரிமெண்டுகள், வாடகை அக்ரிமெண்டுகள், ஹையர் பர்சேஸ் அக்ரிமெண்டுகள் (வண்டி வாகனங்களை மாதத் தவணைகளுக்கு வாங்கும் அக்ரிமெண்டுகள்), இவைகளுக்கு சாட்சிகள் தேவையில்லை அல்லது அவசியமில்லை.

அதாவது - 
(1)கிரயப் பத்திரத்துக்கு சா்ட்சிகள் அவசியம். ஏனென்றால் அது முடிவுற்ற பத்திரம். (Executed Contract). அதற்கு பின்னர் அதில் செய்ய வேண்டிய வேலை ஏதும் இல்லை. பணம் கொடுத்து முடிந்தது. அல்லது பின்னர் கொடுப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. சொத்தின் உரிமையை, சுவாதீனத்தை ஒப்படைக்கப்பட்டு விட்டது. அல்லது பின்னர் ஒப்படைப்பதாக சொல்லியதை ஏற்றுக் கொண்டு விட்டது. இனி இதில் வேறு வேலை இல்லை. 

(2) சொத்தை வாங்குவதற்கு முன்னர் ஏற்படுத்திக் கொள்ளும் கிரய அக்ரிமெண்டுகளுக்கு சாட்சிகள் அவசியம் இல்லை. ஏனென்றால், அது ஒரு முடிவுறதாத பத்திரம் அல்லது இன்னும் அதில் செய்ய வேண்டிய வேலை இரண்டு பார்ட்டிகளுக்கும் இருக்கிறது என்று பொருள். இன்னும் ஒரு பார்ட்டி பணம் கொடுக்க வேண்டும். மற்றொரு பார்ட்டி சொத்தின் உரிமையை, சுவாதீனத்தை மாற்றிக் கொடுக்க வேண்டும். அடிப்படை வேலையே பாக்கி இருக்கிறது. 

ஏன் சாட்சிகள் அவசியம்?

ஏன் முடிவுற்ற பத்திரங்களுக்கு சாட்சிகள் அவசியம் என்றும், முடிவுறாத பத்திரங்களுக்கு சாட்சிகள் அவசியம் இல்லை என்றும் சொல்கிறார்கள். முடிவுற்ற பத்திரங்களை நிரூபிக்க சாட்சிகள் தேவை. 

முடிவுறாத பத்திரங்களை நிரூபிக்க அவசியம் ஏற்படாது. அதில் செய்ய வேண்டிய வேலைகளை மட்டுமே ஒருவர் மற்றவருக்கு செய்து கொடுக்க வேண்டும். இரண்டு பேருக்கு (பார்ட்டிகளுக்குமே) ஒருவருக்கு ஒருவர் செய்து கொள்ளும் வேலையை நிறுத்தி வைத்துள்ளார்கள். 

புரோ நோட்டுக்கு சாட்சிகள் அவசியமா?

புரோநோட் எழுதிக் கொடுக்கும் போது, அதற்கு சாட்சி அவசியம் இல்லை என்றே சட்டம் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் நாம் அதற்கும் சாட்சிகளின் கையெழுத்தை வாங்கிக் கொள்கிறோம். ஒரு புரோ நோட் என்பது “ஒரு முடிவுறாத பத்திரம்”. எனவே அதற்கு சாட்சி அவசியம் இல்லை. 

உயிலுக்கு சாட்சிகள் அவசியமா?

உயில் பத்திரங்களுக்கு கண்டிப்பாக குறைந்த பட்சம் இரண்டு சாட்சிகள் அவசியம் என்று இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925-ன் பிரிவு 63-ல் சொல்லியுள்ளது. அப்படி இரண்டு சாட்சிகள் இல்லாத உயில் செல்லாது. அதிலும், அந்த இரண்டு சாட்சிகளில் யாராவது ஒரு சாட்சியாவது, உயிலை எழுதி வைத்தவர் போட்ட கையெழுத்தை நேரில் பார்த்து இருக்க வேண்டும். மற்றொரு சாட்சி அப்படி நேரில் பார்த்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. என்றாலும், இரண்டு சாட்சிகளுமே, உயில் எழுதியவர் அந்த உயிலில் கையெழுத்துச் செய்யும் போது, அதை நேரில் பார்த்து இருந்தால் நல்லது. ஏனென்றால், உயிலை எழுதி வைத்தவர் இறந்த பின்னரே அந்த உயிலுக்கு “உயிர்” வரும். அப்போது, அந்த உயிலை அவர்தான் எழுதி வைத்தார் என்றும், அதை தான் நேரில் பார்த்ததாகவும், அப்போது, அவர் நல்ல மனநிலையில், யார் தூண்டுதலும் இல்லாமல், தன்னிச்சையாகவே அதை எழுதினார் என்றும் சொல்ல வேண்டும். எனவே உயிலுக்கு அல்லது அந்த உயில் உண்மையான உயில் என்பதற்கு அந்த இரண்டு சாட்சிகள் தான் உயிர்நாடி. 

அந்த உயிலின் இரண்டு சாட்சிகளில், யாராவது ஒரு சாட்சி, தான் அந்த உயில் எழுதும்போது, அல்லது உயிலை எழுதியவர் கையெழுத்துச் செய்யும் போது, நேரில் இருந்ததாகச் சொன்னால் போதும்.

ஒருவேளை, அந்த இரண்டு சாட்சிகளுமே, உயிலை எழுதி வைத்தவர் இறப்பதற்கு முன்னரே இறந்து விட்டால், அல்லது உயிலை எழுதி வைத்தவர் இறந்த பின்னர், இரண்டு சாட்சிகளும் இறந்து விட்டால், அந்த உயிலை எப்படி நிரூபிப்பது என்ற குழப்பம் வந்துவிடும். அல்லது இந்த சாட்சிகள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியாமல் போனாலும் சிக்கல்தான். 

அப்படி சாட்சிகள் கிடைக்காமல் போனால், அந்த சாட்சிகளின் கையெழுத்தைத் தெரிந்தவர் யாராவது இருந்தால், அவரைக் கொண்டு, இது அந்த சாட்சியின் கையெழுத்துத்தான் என்றும், உயிலை எழுதியவரின் கையெழுத்தையும் அதேபோல, வேறு நபரைக் கொண்டு, அது அந்த உயில் எழுதியவரின் கையெழுத்துத்தான் என்றும் நிரூபித்தால் போதும் என்று இந்திய சாட்சியச் சட்டம் 1872-ன் பிரிவு 69 சொல்கிறது.

**





No comments:

Post a Comment