Sunday, May 31, 2015

பாகப்பிரிவினை-3

பாகப்பிரிவினை-3
பொதுவாக, கோர்ட்டுக்கு போகாமல், குடும்பச் சொத்துக்களை பங்கு பிரித்துக் கொள்வது என்பதே புத்திசாலிதனம். பங்காளிகளான நம்மைக் காட்டிலும் கோர்ட் ஒன்றும் பெரிதல்ல. நம் குடும்பத்துக்கு யோசனை சொல்லும் அளவுக்கு கோர்ட் ஒன்றும் நம் தந்தையோ, பாசமான தாயோ அல்ல. சட்டத்துக்கு ஈவு இரக்கம் இருக்காது. அந்த ஈவு இரக்கத்தை காட்ட வேண்டும் என்று எந்தச் சட்டமும் சொல்லவில்லை. ஆனாலும், பாகப் பிரிவினை வழக்குகளின் முடிவில் பங்கை தனித்தனியாக பிரிக்கும்போது EQUITY ஈக்விட்டி என்னும் தர்ம ஞாயத்தை சிறிது கடைப்பிடிக்கும்படி கோர்ட்டுக்கு சலுகையுண்டு. அதன்படி பங்குதாரர்கள் அவர்களுக்குள் கிடைக்கும் பங்கு சொத்தை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ளலாம். ஒருவர் செலவில் ஏற்கனவே இருந்த பொது அடமானக் கடனை ஒருவர் மட்டும் பணம் கொடுத்து மீட்டி இருந்தால் அந்த பணத்தை அவர் பெறும் உரிமை உண்டு. ஒருவர் மட்டும் தன் பணத்தை செலவு செய்து வீட்டை கட்டி இருந்தாலோ, அல்லது ஒரு மாடியைக் கட்டி இருந்தாலோ, அதை மற்ற பாகஸ்தர்கள் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருந்தால், அதற்குறிய அதிக பங்கை அவர் பெற இந்த ஈக்விட்டி சட்டம் (தர்ம-நியாயச் சட்டம்) வழி கொடுக்கும். அதைக் கொண்டு நீதிபதி அந்த சலுகை தீர்ப்பை வழங்க வழியுண்டு. ஆனால், மற்ற பாகஸ்தர்களின் சம்மதத்தை பெறாமல் வீட்டையோ, ஒரு மாடியையோ தன் செலவில் கட்டி இருந்தால், அந்த பணத்தை, அல்லது செலவை இந்த ஈக்விட்டி சட்டம் பெற்றுத்தராது. அவ்வாறு வீட்டைக் கட்டியவர், அவர் இஷ்டத்துக்கு, மற்றவரின் சம்மதம் இல்லாமல், செலவு செய்தவர் என்று கைகழுவி விட்டுவிடும். இந்த மாதிரி நேரங்களில், உண்மையில் ஒருவர் பொதுச் செலவு செய்திருந்தாலும், பொதுவாக மற்ற பாகஸ்தர்கள் வேண்டுமென்றே ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அவ்வாறு ஒப்புக்கொள்ளும் மனநிலையில் இருந்தால், அந்த வழக்கு கோர்ட்டுக்கு வந்தே இருக்காது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனநிலை இப்போதைய காலங்களில் இல்லவேயில்லை!
ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்தான். ஆணும் பெண்ணும் சிறுவர்களாக இருக்கும்போது அண்ணன் தம்பி அக்காள் தங்கை என்ற உறவுகளில் லயித்து, ஒரே தட்டில் உணவு உண்டு, எச்சில் தின்பண்டங்களையும் பகிர்ந்து கொண்டு, ஒரே பாயில் படுத்த உறவுகள்தான் இவர்கள். யாரோ ஒரு வெளியாள் நம் அண்ணன் தம்பி அக்காள் தங்கையை திட்டினாலோ, அடிக்க வந்தாலோ அந்த வெளிநபர் தொலைந்தார். எல்லோருமாகச் சேர்ந்து அவரை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டுத்தான் வீடு வந்து சேருவோம்! கடவுள், தன் படைப்புகளிலேயே, இந்த உறவுகளைப் பார்த்துத்தான் பெருமையை பட்டுக் கொள்வாராம்! எத்தனையோ தங்கைகள் திருமணம் முடித்து கணவன் வீட்டுக்கு செல்லும்போது, அவளின் தாய் தந்தை அண்ணன் தம்பிகள் கண்கலங்கி நிற்பதை பார்த்திருக்கிறோம். அவ்வளவும் நிஜமே!!!
அந்த நிஜங்கள் எங்கே சென்று ஒளிந்து கொண்டன. குடும்ப சொத்துக்களை பிரிக்கும்போது அவைகள் காணாமல் போய்விட்டனவே!!! எதிரியைக்கூட மன்னிப்பேன், என் அண்ணனை, தம்பியை, சகோதரியை மன்னிக்கவே மாட்டேன் என்று ஆவேசம்!! ஏன்? ஏன்? தெரியவில்லை. “ஐந்து வயதில் அண்ணன்-தம்பி; பத்து வயதில் பங்காளி” என்று ஒரு பழமொழியை நம் முன்னோர்கள் முன்னரே சொல்லி வைத்துவிட்டுத்தான் போயிருக்கிறார்கள். அப்படியென்றால், பாசம் என்பது பொய்யா? சொத்து வரும்போது பாசம் அடிபட்டுப் போய்விடுமா? பாசத்தைவிட சொத்து பெரியதுதானா?

மகாபாரதம் என்பது கலியுகம் தொடங்கிய காலத்தில் ஏற்பட்ட நிகழ்வு என்கின்றனர் சரித்திர வல்லுனர்கள். அதாவது சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வு. அங்கும் சொத்தில் பங்கு கேட்கின்றனர். கொடுக்கவில்லை. வேண்டாம் என்று போயிருக்கலாம். இந்த சொத்து வந்துதான் (நாடு வந்துதான்) அவர்கள் ஆள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஐவருமே பெரும் வீரர்கள். யுதிர்ஷ்டன் அசுவமேத யாகம் செய்தால் போதும் மகாசக்கரவர்த்தி ஆக முடியும், அர்ச்சுனன் ஒருவனால் மட்டுமே எல்லா மன்னர்களையும் தோற்கடித்து நாட்டை கைப்பற்றமுடியும். ஆனாலும், பங்காளி துரோகத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை. நான் விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறேன், ஆனால் என்னை ஏமாற்றி பெற்றதாக அவன் நினைக்கக் கூடாது. என் வாழ்வு சிதைந்தாலும் பரவாயில்லை, அவனை சிதைப்பேன். இங்கு இரண்டு கூட்டமுமே அழிகிறது. வெற்றியின் பலன் யாருக்கும் இல்லை. வென்றவரும் தோற்றவரும் அழிவை நோக்கியே பயணித்தனர்........... 

No comments:

Post a Comment