பூர்வீகச் சொத்து அல்லது மூதாதையர் சொத்து;
(என்.ஆர்.ராகவாச்சாரியாரின் ஹிந்து சட்ட கொள்கைகளும் முன்-தீர்ப்புகளும் என்ற புத்தகத்திலிருந்து):
ஒரு குடும்பத்தில் மகன் எப்போது பிறந்தான் என்பது முக்கியமில்லை; பாகத்தில் சொத்து தகப்பனுக்கு வந்ததற்குப்பின், அவருக்கு ஒரு மகன் பிறந்திருந்தாலும், அந்த சொத்து பாகம் வருவதற்கு முன்னரே அந்த மகன் பிறந்திருந்தாலும், (பாகத்துக்கு முன்னரோ பின்னரோ எப்போது பிறந்திருந்த மகனாக இருந்தாலும்) அந்த சொத்தில், அவரின் மகனுக்கும், பேரனுக்கும், கொள்ளுப்பேரனுக்கும் (அவரைத் தவிர்த்து மூன்று தலைமுறைக்கு) சொத்தில் சமமான பாக உரிமையுண்டு. இந்த மூன்று தலைமுறையில் யாரும் இல்லையென்றால் (முன்னரே இறந்துவிட்டிருந்தால்) அந்த சொத்தை அடைந்தவர் தனது "தனிச் சொத்தாகவே" முழு உரிமையுடன் அடைந்து கொள்வார். கொள்ளுப்பேரனின் மகன் இருந்தால் அவனுக்கு அந்த சொத்தில் உரிமை கிடையாது. அதாவது அவரைத் தவிர்த்து மூன்று தலைமுறைகளைத் தாண்டி உள்ளவர்களுக்கு "இது பூர்வீகச் சொத்து" என்று கேட்கும் உரிமையில்லை.. ஒருவர் மற்றும் அந்த ஒருவரின் மகன், பேரன், கொள்ளுப்பேரன் ஆகிய நான்கு தலைமுறைகள் அவரின் சொத்தை "பூர்வீகச் சொத்து" என்ற கணக்கில் சரி சம உரிமையுடன் அடைவார்கள். அதாவது அவர்கள் பிறப்பால் உரிமையை அடைவார்கள் என்பதே இதன் தத்துவம்.
ஒரு சொத்தை இவர்களுக்குள் பாகப் பிரிவினை மூலம் பங்கு பிரித்து பகிர்ந்து கொண்டாலும், அதை வைத்திருப்பவர், அவருடன் அவரின் மகன், பேரன், கொள்ளுப்பேரன் இவர்களுடன் அந்தச் சொத்தை "பூர்வீகச் சொத்து" என்றே கருதிக் கொள்ள வேண்டும். அதாவது அவர்கள் அனைவருக்கும் சரிசம பாகம் பிறப்பால் உண்டு. பாகம் பிரிந்து விட்டதால் மட்டும் அவர் தனி உரிமையை எடுத்துக் கொள்ள முடியாது. அது அவரின் தனிச் சொத்து ஆகாது. அப்போது அவருக்கு இருக்கும் மகன் பேரன் கொள்ளுப்பேரன் உட்பட இனி பிறக்கும் மகன், பேரன், கொள்ளுப்பேரன்களும் சரி சம உரிமை அடைவதே இந்த "பூர்வீகச் சொத்தின்" சிறப்பாகும்.
ஆனால், இவை எல்லாம் தலைகீழாக மாற்றி, 2005ல் புதிய இந்து வாரிசுரிமை சட்டம் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில் மகன், பேரன் கதையெல்லாம் நீக்கிவிட்டு, மகள், பேத்தி இவர்களும் மகன், பேரன் போலவே சரி சமமாக பங்கு பெறுவார்கள் என்று சமநிலைப்படுத்திவிட்டது. ஆணும் பெண்ணும் சமம் என்ற கோட்பாடு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்திய அரசியல் சாசனத்தில் ஆண் பெண் என்ற வேறுபாடு காண்பிக்க கூடாது என்று உள்ள விதிப்படி இந்த சட்ட திருத்தம் ஏற்பட்டது.
No comments:
Post a Comment