Friday, June 26, 2015

கருப்பன் செட்டியார் வழக்கு

கருப்பன் செட்டியார் வழக்கு; 
Commissioner of Income Tax Vs P.L. Karuppan Chettiar, 1993 Supp (1) SCC 580. மூன்று நீதிபதிகள் கொண்ட பென்ச் வழங்கிய உச்சநீதிமன்ற வழக்கு இது.
இது மிகப்பிரபலமான வழக்காகும்.

பழனியப்ப செட்டியாருக்கு ஒரு மனைவி, கருப்பன் செட்டியார் என்ற ஒரு மகன், ஒரு மருமகள் இவர்களைக் கொண்ட கூட்டு இந்து குடும்பம். பழனியப்ப செட்டியார் தன் சொத்துக்களை பாகப்பிரிவினை மூலம் 1954ல் பாகம் பிரித்துக் கொண்டார். அதில் சில சொத்துக்களை பழனியப்ப செட்டியார் தனக்கு என்று தனியே ஒதுக்கிக் கொண்டார். அதேபால் தன் மகன் கருப்பன் செட்டியாருக்கும் பங்கு கொடுத்துவிட்டார்.  கருப்பன் செட்டியார் இப்போது தன் மகன்களுடன் கூட்டு குடும்பம் நடத்தி வருகிறார். பாகம் பிரிந்து தனி சொத்துக்கள் ஆகிவிட்டதை இருவருமே வருமானவரித்துறைக்கு சொல்லிவிட்டார்கள். பின்னர், தகப்பனார் பழனியப்ப செட்டியார் இறந்துவிடுகிறார். அவரின் சொத்து அவரின் மகன் கருப்பன் செட்டியாருக்கு வருகிறது.

இப்போது சட்டப்பிரச்சனையும் ஆரம்பமாகிறது. "தகப்பனாரின் சொத்து மகன் கருப்பன் செட்டியாருக்கு கிடைத்துள்ளது. இந்த சொத்து கருப்பன் செட்டியாரின் தனிச் சொத்தா? அல்லது கருப்பன் செட்டியாரின் கூட்டுகுடும்பச் சொத்தா?
இறந்த பழனியப்ப செட்டியாரின் சொத்தில் அவரின் மகன் கருப்பன் செட்டியாருக்கு மட்டுமே பங்கு உள்ளதா? அல்லது கருப்பன் செட்டியாரின் மகனுக்கும் (அதாவது பழனியப்ப செட்டியாரின் பேரன்களுக்கும்) பங்கு வருமா? இந்த சட்டப் பிரச்சனைதான் சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. 

ஆனால், வருமானவரித்துறை என்ன சொல்கிறது என்றால், தகப்பனார் பழனியப்ப செட்டியார் இறந்துவிட்டதால், மகன் கருப்பன் செட்டியாரின் தனிச் சொத்து ஆகுமா? அல்லது கருப்பன் சொட்டியாருக்கும் அவரின் மகன்களுக்கும், கூட்டு சொத்து ஆகுமா? இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால், பழனியப்ப செட்டியாரின் தனிச் சொத்தில் பங்கு அவரின் மகன் கருப்பன் செட்டியாருக்கு மட்டுமா? அல்லது அவரின் பேரன்களுக்கும் (கருப்பன் செட்டியாரின் மகன்கள்) பங்கு  உண்டா? (இறந்தவரின் சொத்தில் மகனுக்கு மட்டும் பங்கு உண்டா? பேரன்களுக்கும் பங்கு உண்டா?. என்பதே கேள்வி). 

பழனியப்ப செட்டியார் 1956க்கு பின்னரே இறக்கிறார். அதுவரை பழைய இந்து நடைமுறை சட்டமே அமலில் இருக்கிறது. இந்த பழைய இந்து சட்டப்படி ஒருவரின் சொத்தில் அவரின் மகன், பேரன், கொள்ளுப்பேரன் ஆகியோர் பிறந்தவுடனேயே பிறப்பால் உரிமை பெறுவார்கள். அவரவர் பிறந்தவுடன் தானாகவே பங்குதாரர் ஆகிவிடுவார். (இது பழைய சட்டம்);

1956ல்: பின்னர் புதிய இந்து  வாரிசுரிமை சட்டம் 19560ல் கொண்டுவரப் படுகிறது. அதன்படி இறந்தவரின் சொத்தில் அவரின் மகன் மட்டுமே உரிமையாளர் ஆவார். பேரன், கொள்ளுப்பேரனுக்கு பங்கு கிடையாது என்று சட்டம் திருத்தப்படுகிறது. 

இந்த கருப்பன் செட்டியார் வழக்கில் இந்த பிரச்சனையைத்தான் கிளப்புகிறார்கள்.
புதிய இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956, பிரிவு 8 என்பது ஒரு முக்கியமான பிரிவு ஆகும். இதில்தான், ஒரு இந்து ஆண் இறந்துவிட்டால் அவரின் சொத்தில் யார் யாருக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அதாவது,

இந்த சட்டம் வந்த 1956க்கு பின்னர் ஒரு இந்து ஆண் இறந்து விட்டால் (உயில் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால்), அவரின் சொத்து அவரின் வாரிசுகளான கீழ்கண்டவர்களுக்கு போய் சேரும். 
1) இறந்த ஆணின் தாயார், மனைவி, மகன்கள், மகள்கள் இவர்கள் தலைக்கு ஒரு பங்கு வீதம் சமமாக எடுத்துக் கொள்வார்கள்.
2) அவரின் மகன்களில் எந்த மகனாவது இறந்து போய் இருந்தால் அந்த இறந்த மகனின் மகன், மகள், இறந்தவரின் பங்கை பெறுவார். 
3) இறந்தவருக்கு பல மனைவிகள் இருந்தால் எல்லா மனைவிகளும் சேர்த்து ஒரு பங்கு பெறுவர்.(அந்தக் காலத்தில் பல மனைவிகள் சலுகை இந்து மதத்தில் உண்டு; 1955-ல் இந்து திருமணச் சட்டம் புதிதாக வந்தபின்னரே "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற கொள்கை சட்டமாக்கப்பட்டது. 

இப்போது, கருப்பன் செட்டியார் வழக்கில், அவரின் தகப்பனார் பழனியப்ப செட்டியார் விட்டுவிட்டு இறந்துபோன சொத்தில், அவரின் மகன் கருப்பன் செட்டியாருக்கு மட்டுமே மகன் என்ற முறையில் பங்கு கிடைக்கும் என்பது இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956ன் பிரிவு 8-ம்படி கிடைக்கும். அதில் இறந்தவரின் பேரன் என்று எங்கும் தனியே குறிப்பிடவில்லை. ஒருவேளை இறந்தவரின் மகன், ஏற்கனவே இறந்து போயிருந்தால், அவரின் வாரிசாக அவர் மகன் பங்கு பெறுவார் என்று மட்டுமே அதில் சொல்லியுள்ளது. அதை நேரடியாக பேரன் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது என்று மிகத் தெளிவாக உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியும் விட்டது.

இந்த வழக்கு, அப்போது மிகப் பிரபலமான வழக்காக இருந்தது. இதைத்தான் எல்லா வக்கீல்களும், இந்தியாவில் உள்ள எல்லா கோர்ட்டுகளும் பின்பற்றியும் வருகின்றன; இதையே இன்றுவரை சரியான சட்டமாகவும் அங்கீகரித்தும் வருகின்றன.

அந்தளவுக்கு இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகும். அதனால் இதற்கு பெயரே "கருப்பன் செட்டியார் வழக்கு" என்று குறிப்பிட்டு வந்தனர். 


No comments:

Post a Comment