Tuesday, July 7, 2015

பல மனைவிகள்

Reynolds vs. United States 98 US 145 (1878);
ரெனால்ட்ஸ் வழக்கு 1878ல் அமெரிக்காவில் நடந்த விசித்திர வழக்கு. பலதாரம் (பல மனைவிகள்) தடை சட்டத்தை மீறி வேண்டுமென்றே இரண்டாவது மனைவியை திருமணம் செய்து அதனால் ஜெயில் தண்டனை அனுபவித்தவர். இது சுமார் 145 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மிகப் பழைய வழக்கு.

இவரின் முதல் மனைவி இவருடன் சேர்ந்தே இருக்கும்போதே, மற்றொரு மனைவியை திருமணம் செய்து கொள்கிறார். அப்போது அந்த மாநிலத்தில் உள்ள சட்டப்படி (Morrill Anti-Bigamy Act) ஒரு மனைவியுடன் வாழும்போது, இன்னொரு மனைவியை திருமணம் செய்ய சட்டத்தில் இடம் இல்லை. அப்படி மீறி திருமணம் செய்தால் அந்த சட்டப்படி தண்டனைக்குறிய குற்றமாகும். தண்டனை என்னவென்றால், ஐந்து வருடங்களுக்கு அதிகமாகாமல் சிறை தண்டனையும், மேலும் $500 டாலர் அபராதமும் உண்டு.

ரெனால்ட்ஸ் என்ன சொல்கிறார் என்றால், "நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவன்; ஒரு சர்ச்சில் உறுப்பினராகவும் இருக்கிறேன்; என் மதக் கொள்கைப்படி நான் வாழ யாரைக் கேட்க வேண்டும்; என்னை கட்டுப்படுத்த இந்த மாநில சட்டத்தால் முடியாது. என் விருப்பம்போல வாழ எனக்கு அமெரிக்க நாட்டின் அரசிலமைப்பு சட்டத்தின் முதல் சட்டத்திருத்தத்தில் வழி செய்யப்பட்டுள்ளது; எனவே ஒரு மாநில அரசு, இருதார-மணம் தடுப்பு சட்டம் கொண்டுவர முடியாது" என்று வாதிட்டார்.

ஆனாலும், அவரின் வாதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை; மாவட்ட கோர்ட் இவரை குற்றவாளி என்றும், $500 டாலர் அபராதமும், இரண்டுவருட கடும் சிறையும் அனுபவிக்கவும் (சிறையில் கஷ்டமான வேலைபார்க்கவும்) தீர்ப்பு வழங்கி விட்டது. அதை எதிர்த்து மாநில சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்கிறார். அங்கும் இவருக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை.

அதை எதிர்த்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்கிறார். அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் உள்ள எட்டு நீதிபதிகள் அந்த வழக்கின் வாதத்தை விசாரிக்கிறார்கள். அதில் ஒரு நீதிபதியான ஜஸ்டிஸ் மோரிசன் வெயிட் அவர்கள் தீர்ப்பை எழுதுகிறார். மற்ற ஏழு நீதிபதிகளும் ஒத்துப் போகிறார்கள். ஆனாலும், அதில் ஒரு நீதிபதியான ஜஸ்டிஸ் பீல்டு அவர்கள் மட்டும் பெரும்பாலும் ஒத்துப் போனாலும் ஒருசிறு விஷயத்தில் மாறுபாடான தீர்ப்பை வழங்கினார்.
அங்கும், ரெனால்ட்ஸ் இதே வாதத்தைதான் வைக்கிறார்.

"நான் விரும்பும் மதத்தின் கொள்கையை கடைப்பிடிக்க எனக்கு எல்லா உரிமையும் உள்ளது; அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் முதல் திருத்த சட்டத்தில் அந்த உரிமை எனக்கும், எல்லா அமெரிக்க குடிமகன்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நான் எத்தனை மனைவிகளை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்வேன். அதை தடுத்து நிறுத்த, மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அந்த மாநில அரசு "பலதாரதடை சட்டத்தை (Anti Bigamy Act)" கொண்டு வந்து என்னை தண்டித்தது மிகப் பெரிய தவறு."

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் ---
"முதல் திருத்த சட்டப்படி நீங்கள் விரும்பும் மதக் கொள்கைகளை பின்பற்றிக் கொள்ளலாம்; அதை அரசு தடை செய்ய முடியாது. அதேபோல, நீங்கள் விரும்பும் மதக் கொள்கைக்கு  எதிரான ஒரு சட்டத்தை, அமெரிக்க காங்கிரஸ் (மக்கள்சபை) சட்டமாகக் கொண்டுவர முடியாது. ஆனாலும், ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து வாழமுடியும் என்பது பல காலமாக இருந்துவரும் ஒரு நடைமுறை. இது இங்கிலாந்தின் ஒன்றாம் ஜேம்ஸ் மன்னர் காலத்திலிருந்தே இருந்துவரும் கலாச்சாரம். அந்த பழக்கவழக்கமுள்ள இங்கிலாந்திலிருந்துதான், இந்த அமெரிக்காவின் சட்ட திட்டங்கள் உருவானது. (இங்கிலாந்திடமிருந்துதான், அமெரிக்கா சுதந்திரமும் பெற்றது).

மத நம்பிக்கை என்பது வேறு; அந்த நம்பிக்கையிலிருந்து வரும் நடவடிக்கை என்பது வேறு; இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது; முதலில் சொன்ன மத நம்பிக்கை என்பது "மனிதன், கடவுள் ஆகிய இருவருக்கு மட்டுமே உள்ள தனித்தொடர்பு" ஆகும். ஆனால் ஒரு அரசாங்கமானது, மக்களை நல்வழிப்படுத்த சில சட்டதிட்டங்களை கொண்டுவரும். அது மத நம்பிக்கைகளை தடுக்காது; ஆனால் மக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற முடியும். "மத நம்பிக்கை வேறு, சமுதாய வாழ்க்கை வேறு; மதநம்பிக்கை மதத்துக்கு--மதம், ஆளுக்கு--ஆள் வேறுபடும்; ஆனால் சமுதாய வாழ்க்கை என்பது ஒட்டுமொத்த சமுதாயம் சார்ந்தது.  அதை நெறிப்படுத்த, ஆளும் அரசுக்கு அதிகாரம் உண்டு. அது தனிமனித மதகொள்கை என்னும் சுதந்திரத்தில் தடையிடுவதாக ஆகாது.

பல மனைவி முறையை அனுமதித்து விடலாம், ஆனால், நாளைக்கு வேறு ஒருவர் இதேபோல வந்து, என் மதத்தில், கடவுளுக்கு மனிதனை பலியிட சொல்லப்பட்டுள்ளது; எனவே நான் மனிதனை பலியிடுகிறேன்; என் மதக் கொள்கையை அரசு கட்டுப்படுத்த முடியாது என்று கேட்பார். அப்போது எப்படி சகித்துக் கொள்வது? இப்படியெல்லாம் அனுமதித்துக் கொண்டே போனால், மக்களை சட்டம் ஆள்வதை விட்டுவிட்டு, மதமும் மதத்தின் கொள்கைகளும் ஆட்சி செய்ய ஆரம்பிக்கும். (இவ்வாறு அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் கருத்து சொன்னது).

உடனே, ரெனால்ட்ஸின் வக்கீல் வேறு வாதத்துக்கு போகிறார்.
"ரெனால்ட்ஸ் சிறைக்கு அனுப்பிய கிராண்ட் ஜூரி தீர்ப்பு சட்டப்படி சரியானது இல்லை; ஏனென்றால், கிராண்ட் ஜூரி என்றால் மொத்தம் 16 ஜூரிக்கள் இருந்து விசாரனை செய்திருக்க வேண்டும்; ஆனால் ரெனால்ட்ஸை விசாரித்த வழக்கில் மொத்தமே 15 ஜூரிகள் தான் இருந்தனர். இது சட்டப்படி தவறு என்கிறார். அதையும் சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த மாநில சட்டப்படி கிராண்ட் ஜூரி விசாரனைக்கு 15 ஜூரிக்களே போதும் என்று அங்குள்ள சட்டம் உள்ளது என்று கூறிவிடுகிறது.

இந்த ரெனால்ட்ஸ் போன்றவர்கள் ஏன் பல திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று ஒருவர் இப்படிப்பட்ட ஒரு சமாதானத்தைக் கூறுகிறார்
"நாங்கள், ஒரு பெண்ணை கெடுப்பதைக் காட்டிலும், அவரை திருமணம் செய்து கொள்கிறோம்; ஒரு பெண்ணை சீரழிப்பதைக் காட்டிலும், அவளுடன் வாழ்ந்து அவளுக்கு பிள்ளைகளைக் கொடுக்கிறோம்; ஒரு பெண்ணை திருமணம் செய்வதால்இந்த நாட்டில் விபச்சாரத்தை ஒழிக்கிறோம். இப்படிப்பட்ட நல்ல காரியங்களை செய்வதற்காக, எங்களின் மத கொள்கைப்படி எவ்வளவு பெண்களை திருமணம் செய்து கொள்ள முடியுமோ அவ்வளவு பெண்களை ஒருவரே திருமணம் செய்து கொள்வோம். அதை ஒழிக்க அரசு நினைத்தால், இந்த சுதந்திர நாட்டில் மதத்தை (மதக் கொள்கையை) தண்டிக்க அரசு துணிந்துவிட்டது என்று சூரியன் உதித்து நிற்கும் இந்த மண்ணுக்கு சொல்லிக் கொள்வதுடன், நீதியும் நொண்டியாகி, குருடாகி குற்றம் புரிகிறது என்று சொல்வோம்."

எதைச் சொல்லித்திரிந்தாலும், அதையெல்லாம் காது கொடுத்துக் கேட்டும், கேட்காதுபோல, மக்களின் சமுதாயக் கண்ணோட்டத்துடன் பலமனைவிகளை திருமணம் செய்வது குற்றமே என்று தீர்ப்பை ஆணித்தரமாக அமெரிக்க சுப்ரீம் கோர்ட் வழங்கியது.

இது நடந்தது 1878ல். அதாவது சுமார் 145 வருடங்களுக்கு முன்னர். ஆனால், இன்று .. . .. .

அதே அமெரிக்க சுப்ரீம் கோர்ட், தனி மனித சுதந்திரம் என்று சொல்லி, ஆணும்--ஆணும் சேர்த்து வாழலாம், திருமணம் செய்து கொள்ளலாம், பெண்ணும்--பெண்ணும் சேர்ந்து வாழலாம். திருமணமும் செய்து கொள்ளலாம் என்று பட்டவர்த்தனமாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்வதே "திருமணம்" என்று இருந்த அமெரிக்க  சட்டத்தை உடைத்து நொறுக்கிவிட்டு, திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் நடப்பது மட்டும் திருமணம் என்று முடிவு செய்யமுடியாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நேசித்து அன்பு செலுத்துவதும் திருமணம்தான் என்று தலைகீழ் தீர்ப்பை எழுதியுள்ளது. அந்த வழக்குதான் இந்த நூற்றாண்டின் மிக முக்கிய திருப்பம் கொண்ட வழக்கு. அது Obergefell vs. Hodges.

இப்பொழுது மற்றொரு கேள்வியை எழுப்புகிறார்கள். "ரெனால்ட்ஸ் வழக்கின் தீர்ப்பை (பல மனைவிகளை திருமணம் செய்ய தடை) மாற்றவில்லை, அது இன்னும் நடைமுறையில்தான் இருக்கிறது. ஆனால், இப்போது நடந்த "ஓபர்கெபெல்" வழக்கில் ஒரு ஆணும் ஒரு ஆணும், ஒரு பெண்ணும், ஒரு பெண்ணும் திருமணம் செய்ய தடையில்லை என்று வந்துவிட்டது. அப்படியென்றால், இரண்டு ஆண்களும் இரண்டு ஆண்களும், சேர்ந்து வாழ அனுமதி கேட்பார்களா என்ற கேள்வி எழுமாம்! நாகரீகமும், மனித பண்பாடும் எங்குபோய் முடியும் என்று தெரியவில்லை.

கடவுள்(?) அல்லது இயற்கை(?) படைப்பில் ஆண் பெண் என்ற இரண்டு வர்க்கமாகவே எல்லா உயிரினங்களையும் படைத்திருக்கும்போது, இப்போது ஏன் இப்படிப்பட்ட தலைகீழ் சிந்தனை என்றே விளங்கவில்லை!?!?!?





No comments:

Post a Comment