இது லண்டன் பிரைவி கவுன்சிலில்
முடிவான வழக்கு;
சீத்தாலஷ்மி vs.
வெங்கடசுப்ரமணியன்
(Madras 1930 UKPC 23 dated 25.2.1930)
சீத்தாராமன் என்பவர் பழனியைச் சேர்ந்தவர்; இவரின் முதல் மனைவி இறந்துவிடுகிறார். இரண்டாம்
முறை திருமணம் செய்கிறார். அந்த இரண்டாம் மனைவியும் இறக்கிறார்; சீத்தாராமனுக்கு இந்த மனைவி மூலம் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது; அதுவும் குழந்தையாய் இருக்கும்போதே இறந்துவிடுகிறது. மறுபடியும் மூன்றாம் முறை திருமணம் செய்கிறார். மூன்றாம் மனைவியின் பெயர் சீத்தாலஷ்மி
அம்மாள்; சீத்தாராமனுக்கு 43 வயதாகிறது;
குழந்தை இல்லை என்பது வருத்தம்போலும்; எனவே இவர், 12 வயது பெண்ணான சீத்தாலஷ்மியை திருமணம் செய்கிறார்; அந்தப்
பெண்ணுக்கு பருவ வயது வந்தவுடன் கணவருடன் கலக்கிறார்; மூன்று
நாட்கள் கணவருடன் உறவில் இருக்கிறார்; பின்னர் தன் தாய் வீட்டுக்கு
வந்துவிடுகிறார்; இது நடந்தது 1921ல்; கணவர்
வீடு பழனியில் இருக்கிறது; அங்கிருந்து 100 மைல் கடந்து தன் தாய்
வீட்டுக்கு இந்தப் பெண் வந்துவிடுகிறார்; திருமணம் செய்து கொடுத்த
பெண், கணவர் வீட்டை விட்டு, பெற்றோரைப்
பார்ப்பதற்காக பிறந்த வீட்டுக்கு வருவது அப்போது பொதுவான வழக்கம்தான்! இந்த காலக்கட்டத்தில்,
கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. தொண்டையில் ஏதோ பிரச்சனையான
நோய்; ஒருமுறை வாந்தி எடுக்கும்போது ரத்தமும் வந்தது;
உடனே மெட்றாஸ்க்கு வந்து டாக்டரை பார்க்கிறார்; டாக்டர் என்ன சொன்னார் என்று தெரியவில்லை; அதிலிருந்தே
அவர் இயல்பாக இல்லை; திடீரென்று ஒருநாள் ஜனவரி, 3, 1922ல் இறந்துவிடுகிறார்; இறப்பதற்கு
முன், அதிகமாக ரத்த வாந்தியும் எடுத்துள்ளார்; இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன், ஒரு மகனை தத்து
எடுத்துக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறார்; (அந்தக் காலத்தில்,
ஒருவருக்கு மகன் இருந்தால்தான், தகப்பன் இறக்கும்போது,
அந்த மகன் கர்ம காரியங்களை செய்யமுடியும் என்றும், அப்போதுதான், இறந்தவரின் ஆன்மா சாந்தியாகி, சொர்க்கதை அடையும் என்பது இந்துமத கோட்பாடு);
சீத்தாராமனின் சித்தியின்
மகளை,
கோபாலகிருஷ்ணன் என்பவர் திருமணம் செய்திருந்தார்; அவரும் இந்த சீத்தாராமன் வீட்டிலேயே சுமார் ஐந்து வருடங்களாக இருந்து வருகிறார்;
அவருடைய மகன்களில் கடைசி மகன் ஒரு சிறுவன்; அவனை
தத்து எடுத்துக் கொள்ளலாம் என பேசி முடிவாகிறது: அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை,
சீத்தாராமன் தன் சொந்த பந்தங்களை அழைக்கிறார்; காலை 9.30--12.40 மணிக்கு ஒரு மகனை தத்து எடுக்கும் நிகழ்ச்சியை நடத்துகிறார்;
ஒருசிலரை வீட்டில் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறார்; அவர்களிடம், தான் ஒரு உயில் எழுதி வைக்கப்போவதாகச் சொல்கிறார்; ஒரு எழுத்துக்காரரை கூப்பிட்டு அவரைக்
கொண்டு சீத்தாராமன் ஒரு உயில் எழுதுகிறார்; சீத்தாராமன் இந்த
உயிலில் கையெழுத்து போடுகிறார்; சாட்சிகளும் கையெழுத்து போடுகிறார்கள்;
பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து இதை பார்க்கும்வரை, மற்றொரு சாட்சியை கையெழுத்துப் போடாமல் காத்திருக்கும்படி சொல்கிறார்;
ஆனால் பக்கத்திலிருந்து யாரும் வரவில்லை; எனவே
அந்த சாட்சி மறுநாள் அந்த உயிலில் கையெழுத்து போடுகிறார்; திங்கட்கிழமை
ரிஜிஸ்டர் ஆபீஸ் சென்று பதிவு செய்யவேண்டும் என்று சொல்கிறார்: ஆனால், திங்கட்கிழமை உடல்நிலை மோசமாகி, நினைவு இழக்கிறார்;
அதேநிலையிலேயே செவ்வாய்கிழமை உயிர் பிரிகிறது. இந்த தத்து எடுத்த சிறுவனைக்
கொண்டு கர்ம காரியங்களை செய்து கொள்ளிபோட்டு அடக்கம் செய்கிறார்கள்;
சீத்தாராமனுக்கு, ஒரு மனைவி இருக்கிறார்; (ஊருக்கு போயிக்கும் மனைவி சீத்தாலஷ்மி);
சீத்தாராமனின் தாயும் உயிருடன்தான் இருக்கிறார்: சீத்தாராமன் இறக்கும்போது
46 வயதுதான் ஆகிறது; தத்து எடுத்த அந்த சிறுவனின் பெயர் வெங்கட
சுப்பிரமணியன்;
இப்போது, சீத்தாராமன் சொத்தில் பிரச்சனை ஏற்படுகிறது; வளர்ப்பு
மகன் வெங்கட சுப்பிரமணியன் (மைனராக இருக்கும்போதே, தன் இயற்கை
தகப்பன் மூலம்) ஒரு வழக்கை போடுகிறான்; உயில்படி சொத்து எனக்குத்தான்
சேர வேண்டும்; அவரின் மனைவிக்கு சொத்து சேராது என்று வழக்கை போடுகிறான். திண்டுக்கல் சப்-கோர்ட்டில்; மொத்தம் 10 சாட்சிகளை
விசாரிக்கின்றனர்; அதில் 9 பேர், அந்த ஞாயிற்றுக்கிழமை
தத்து எடுத்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர்களாம்; அதில் 5 பேர்,
அந்த உயிலில் சாட்சிக் கையெழுத்து போட்டவர்கள்; ஒருவர் அந்த உயிலை எழுதியவர். ஆனால் அவர் சாட்சியாக கையெழுத்து போடவில்லை;
சீத்தாராமனின மனைவி இதை
மறுக்கிறார்: அவரும் 4 சாட்சிகளை கூப்பிட்டு வந்து விசாரிக்கிறார்; வளர்ப்பு மகன் என்று சொல்லப்படும் சிறுவனின் தகப்பனாரான கோபாலகிருஷ்ணன் இந்த
வீட்டில் வசிக்கவே இல்லை என்றும்; இன்னும் சொல்லப்போனால்,
இறந்த சீத்தாராமனுக்கு அந்த கோபாலகிருஷ்ணனுக்கும் பேச்சு வார்த்தையே
இல்லை என்றும் ஒருவருக்கு ஒருவர் பிடிக்காது என்றும் சொல்கிறார்கள்; ராமகிருஷ்ண அய்யர் என்பவர் இறந்த சீத்தாராமனுக்கு பங்காளி உறவு; இவர் சீத்தாராமன் வீட்டில்,
அவர் இறக்கும் முன் நான்கு மாதங்கள் தங்கி இருந்ததாகவும், அப்போது எந்த தத்து எடுக்கும் நிகழ்ச்சியும் நடக்கவேயில்லையே என்றும் சாட்சி
சொல்கிறார்; சொல்லப்போனால், இறந்த சீத்தாராமனுக்கு
இவர்தான் கொள்ளி போட்டாராம்; அந்த சின்ன பையன் கொள்ளிபோடவில்லையாம்;
இவர் சொல்வதையும் மற்ற இரண்டு சாட்சிகள் ஆமாம் என்று சொல்கிறார்கள்;
சீத்தாராமன் நினைவு திரும்பாமல் இறந்தார் என்பதெல்லாம் பொய் என்றும்,
செவ்வாய்கிழமை வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தவர் திடீரென்று இறந்தார்
என்றும் சொல்கிறார்கள்;
இதில் யார் சொல்வதை நம்புவது; ஏதோ ஒன்று உண்மை; மற்றொன்று சுத்தபொய்; ஒருவர் உண்மை சொல்கிறார் என்றால், மற்றவர் பொய் சாட்சி
சொல்கிறார் (committing perjury);
வழக்கை விசாரித்த சப்-கோர்ட்
நீதிபதி 10 நாட்களை கழித்து தீர்ப்பை எழுதுகிறார்; "தத்து எடுத்ததாகச் சொல்வது பொய்; உயிலும் உண்மையில்லை;
எனவே அந்த சிறுவனின் வழக்கை தள்ளுபடி செய்கிறேன்." என்று தீர்ப்பு;
எப்படி அந்த முடிவுக்கு வந்தார் என்றால், அந்த
சிறுவனுக்காக வந்து சொன்ன சாட்சிகள் எல்லாம் முன்னுக்குப்பின் முரணாக அந்த நிகழ்ச்சியை
விளக்கி உள்ளார்களாம்; உயிலில் உள்ள கையெழுத்து சீத்தாராமனின்
கையெழுத்து இல்லையாம்; அதை அவரின் வேறு கையெழுத்துடன் நீதிபதி
ஒப்பிட்டுப் பார்த்து இந்த முடிவுக்கு வந்துள்ளாராம்;
இந்த தீர்ப்பை எதிர்த்து, வளர்ப்பு மகன் மதராஸ் ஹைகோர்ட்டில் அப்பீல் வழக்கை தொடுக்கிறான்;
மதராஸ் ஹைகோர்ட் நீதிபதிகள், கீழ்கோர்ட்டின் நீதிபதி தவறு செய்ததாகச் சொல்கிறார்கள்; வெறும் சாட்சிகளின் வார்த்தைகளையும், அவர்களின் நடவடிக்கைகளையும்
வைத்துக் கொண்டு ஒரு வழக்கை முடிவுக்கு கொண்டுவர முடியாது; ஒரு
பக்க சாட்சிகளை நம்பினால், மறுபக்க சாட்சிகள் பொய்யாகச் சொல்வது
போலவே தெரியும்; எனவே எழுத்துபூர்வ ஆதாரங்களை நாங்கள் நம்புகிறோம்
என்று அந்த வளர்ப்பு மகனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்த ஹைகோர்ட் தீர்ப்பை
எதிர்த்து, லண்டனில் உள்ள பிரைவி கவுன்சிலுக்கு அப்பீல்
செய்கிறார் இறந்தவரின் மனைவி சீத்தாலஷ்மி.
லண்டன் பிரைவி கவுன்சிலில்
மொத்தம் 5 நீதிபதிகள் இருக்கிறாரகள்.
அவர்கள்; 1) லார்டு அட்கின்; 2) லார்டு டாம்லின்; 3) சர் லாண்சலாட் சாண்டர்சன்; 4) சர் ஜார்ஜ் லாண்டெஸ்;
5) சர் பினாடு மிட்டர்;
இதன் தீர்ப்பை லார்டு
அட்கின் நீதிபதி எழுகிறார்.
தீர்ப்பு 25 பிப்ரவரி
1930 வழங்கப்படுகிறது.
"கீழ்கோர்ட்டான சப்-கோர்ட்
கொடுத்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது; அந்த நீதிபதி
சாட்சிகளின் குணாதிசயங்களையும், நடவடிக்கைகளையும், கையெழுத்துக்களையும், அந்த நிகழ்வுகளையும் நேரில் விசாரித்து
தெளிவாக அறிந்துள்ளார்: ஒவ்வொரு சாட்சிகளின் முகபாவங்களையும் அறிந்திருக்கிறார்;
அவரின் தீர்ப்பில் மிகுந்த நியாயமும், தீர்க்கமும்
உள்ளது; அதை ஹைகோர்ட் நீதிபதிகள்தான் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்;
எனவே கீழ்கோர்ட் தீர்ப்பு
உறுதி செய்யப்படுகிறது, என பிரைவி கவுன்சில் தீர்ப்பை
வழங்கி உள்ளது. கோர்ட்டின் செலவுத் தொகையை, இந்த சிறுவன்தான்,
இந்த இறந்தவரின் மனைவிக்கு கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவாகிறது.
சொத்தின் மீதான மோகம்
அப்போதும் இருந்திருக்கிறது; இப்போதும் அதேபோலவே இருக்கிறது;
அதனால்தான் இந்த தில்லு முல்லுகளும், வழக்குகளும்.
அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படுவது எந்தவிதத்திலும் நியாயமும் இல்லை, தர்மமும் இல்லை என்பதை உணர மாட்டார்கள். இது கலியுகமாம்!
No comments:
Post a Comment