Wednesday, July 8, 2015

மகனும், வளர்ப்பு மகனும்

Ma Mya and another vs. Ma Me Kyin and another.
(1929 UKPC 42 -- dated 23 April 1929)
 U Tun- யு டன் என்பவர் பர்மாக்காரர். இவர் பர்மா நாட்டில் இறந்து விடுகிறார்; அவருக்கு ஒரு மனைவியும் (டா-ஹ்மோ என்று பெயர்), ஒரு மகனும் (லூ-பீ என்று பெயர்) உள்ளனர்.
இறந்தவர் புத்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரின் சொத்துக்கள் புத்த மத சட்டப்படி அவரின் வாரிசுகளுக்கு போய் சேரும். இறந்தவருக்கு ஒரு வீடும், சில நெல் விளையும் நிலங்களும், பொன் நகைகளும், கொஞ்சம் அதிகமான பணமும் இருக்கிறது. புத்த மத சட்டப்படி, இறந்தவரின் மொத்த சொத்தையும் அவரின் மனைவி உயிருள்ள வரை அனுவித்து வரவேண்டும். அதற்குப் பின்னர்தான், இறந்தவரின் மகன் பங்கு அடைய முடியும். (தாய் இருக்கும் வரை, மகன் பங்கு கேட்க முடியாது).
இறந்தவரின் அண்ணனும் அண்ணியும் அவர்களின் ஒரு ஆண் குழந்தையை விட்டுவிட்டு இறந்து வெகுகாலமாகிறது. எனவே ஆதரவு இல்லாத அந்த ஆண் குழந்தையான ஹமத், இந்த இறந்த யு டன்னும் அவர் மனைவி டா ஹ்மோவும் ஆசையுடன் மகனைப் போலவே வளர்த்து வருகிறார்கள். அவனும் குடும்பத்தில் ஒருத்தனாகவே இருந்து வருகிறான். இது எல்லோருக்கும் தெரியும்.
மகன் = லூ பி; வளர்ப்பு மகன் = ஹமத்
மகன் பெரியவன்; வளர்ப்பு மகன் சிறியவன்;
அப்பா இறந்தவுடன் பெரியவன் (மகன்) அப்பாவின் வட்டிகடை வியாபாரத்தை பார்த்து வருகிறான்; அந்த வருமானத்தைக் கொண்டு விவசாய நிலங்களையும் வாங்கி உள்ளான்; இது எல்லாம் அம்மாவின் சொத்தில் கிடைத்தவைகள் தான். இவனின் தனி சம்பாத்தியம் இல்லை; உழைப்பு இவனுடையது. சின்னவனும் இப்போது வயதுக்கு வந்துவிட்டான்; அவனும் வியாபாரத்தில் பங்கு கொள்கிறான்: அவனும் அதேபோல நிலங்களையும் மாடுகளையும் வாங்குகிறான்; இவை எல்லாம் பெரியவன், சின்னவன் இருவர் பெயரிலும் சேர்த்தே வாங்கப்படுகிறது; இருவருக்கும் திருமணம் ஆகிறது; துரதிஷ்டமாக சின்னவன் மனைவி இறக்கிறாள்; அவளுக்கு ஒரு மகன் இருக்கிறான்; இரண்டாவது மனைவியை திருமணம் செய்கிறான் சின்னவன்; துரதிஷ்டமாக, சின்னவன் இறக்கிறான்; அவன் 2-வது மனைவி பெயர் மீ-கியின்.
மூத்தவனுக்கு மா-மியா என்ற மனைவி உண்டு; அவளுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு. மூத்தவனும் இறந்துவிடுகிறான்;
மூத்தவன் உயிருடன் இருந்தவரை குடும்பம் ஒற்றுமையாக இருக்கிறது; அவன் இறப்புக்குப்பின், குடும்ப சண்டை வருகிறது;
மூத்தவனின் மனைவிக்கு, அவனின் மாமியார் சொத்துக்களை எழுதிக் கொடுக்கிறார்; சின்னவனின் மனைவி, "சின்னவன் வளர்ப்பு மகன் என்றும், அவனுக்கும் பங்கு உள்ளது என்றும் எனவே மாமியார் எழுதிக் கொடுத்தது தவறு என்றும் சண்டை;
மாமியார், "சின்னவன் எனது வளர்ப்பு மகன் இல்லை என்றும், எனவே என் மகன், மூத்தவன் இறந்தவுடன், இந்த சொத்துக்கள் எல்லாம் எனக்கே முழு உரிமை வரும் என்றும், அதனால், அவைகளை நான் எனது மருமகளுக்கு (மூத்தவனின் மனைவிக்கு) செட்டில்மெண்டாக கொடுத்துவிட்டேன் என்றும் அது செல்லும் என்றும் கோர்ட்டில் கூறுகிறாள்; வளர்ப்புமகனை தத்து எடுத்துக் கொண்டதாக எந்த ஆதாரமும் இல்லை என்பதால், கீழ்கோர்ட்டும் அதை ஏற்றுக் கொண்டது;
மேல் கோர்ட்டில், சின்னவனின் மனைவி அப்பீல் செய்கிறாள்; "என் கணவரும், மூத்தவரும் சேர்ந்துதானே வியாபாரம் செய்து இந்த சொத்துக்களை வாங்கினார்கள்; அப்படி இருக்கும்போது எப்படி என் மாமியார் அவரின் தனிச் சொத்து என் சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்புகிறாள்;
அப்பீல் கோர்ட், "மொத்தம் ஆறு சொத்துக்கள் மட்டும், அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து அவர்கள் பெயரில் கூட்டாக வாங்கி இருப்பதால், அதில் சின்னவனுக்கு பாதி பங்கு உண்டு: எனவே அந்த பாதி பங்கை சின்னவனின் மனைவி பெற்றுக் கொள்ளட்டும் என்று தீர்ப்பு வழங்கியது. மற்ற சொத்துக்களில் பங்கு இல்லையாம்;
இதை எதிர்த்து பர்மா ஹைகோர்ட்டில் அப்பீல்; அதிலும் அவ்வாறே, சின்னவன் மனைவிக்கு பாதிபங்கு என்று கூறிவிட்டார்கள்.
மூத்தவன் மனைவி லண்டனில் உள்ள பிரைவி கவுன்சிலுக்கு அப்பீல் செய்கிறாள்;
(மனைவிகள் சும்மா இருந்தாலும், வக்கீல்கள் சும்மா இருக்க மாட்டார்கள் போலும்! அப்பீல் மேல் அப்பீல்!! ஆனால் துரதிஷ்டமாக சின்னவன் மனைவி லண்டன் அப்பீலில் வக்கீல் வைக்கவும் இல்லை; நேரில் போய் வழக்கை நடத்தவும் இல்லை; கடவுள் மீது, பாரத்தை போட்டுவிட்டாள் போலும்! போதுமடா சாமி என்று விட்டுவிட்டாள்);
ஆனால் மூத்தவன் மனைவி விடுவதாய் இல்லை; மொத்த சொத்தையும் ஜெயித்து விடுவது என்று நினைக்கிறாள் போலும்!
மூத்தவன் மனைவிக்கு ஆஜரான ஜூனியர் வக்கீல், "இந்த மொத்த சொத்துமே தகப்பனாரின் சொத்து, அவர் இறந்தவுடன் அவரின் மனைவிக்கு வருகிறது; இதில் மகனுக்கு பங்கு இல்லை; அப்படி இருக்கும்போது, வளர்ப்பு மகன் எப்படி பங்கு கேட்பான்; இவர்கள் மேனேஜர்களாக வேலைதான் பார்க்கிறார்கள்; சொத்து அம்மாவுக்குத்தான் சொந்தம்" என்று வாதிடுகிறார்;
ஆனாலும், இது இவர் பெயரில் வாங்கிய சொத்துக்கள் தான் என்றும்; வட்டி வியாபாரத்தில் கடன் கொடுத்திருப்பதை எல்லாம் கணக்கிட்டு வசூல் செய்து மூன்று பங்குகளாக்கி மூன்று பேர்களும் (மாமியார், இரண்டு மருமகள்கள்) எடுத்துக் கொள்ளவும் என்று தீர்ப்பு சொல்லிவிட்டது.
(இதுதான் சரியென்று எல்லோருமே ஒப்புக் கொள்வார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது).



No comments:

Post a Comment