Tuesday, October 6, 2015

செட்டில்மெண்ட்-1

Settlement
செட்டில்மெண்ட்--1
சொத்துக்களை செட்டில்மெண்ட் செய்து வைப்பதில் நிறைய குளறுபடிகளை சந்திக்க நேரிடுகிறது. முன் காலங்களில் கூட்டுக் குடும்பமாக இருந்தனர். தகப்பனின் நிர்வாகத்தில் அந்த கூட்டுகுடும்பம் இருந்தது. அதை நிர்வாகம் செய்பவர் தகப்பனாகவும் இருக்கலாம் அல்லது தகப்பன் இறந்து விட்டால் மூத்த மகனாகவும் அல்லது அதற்கு அடுத்த மூத்தவராகவும் இருக்கலாம். அவ்வாறு நிர்வாகம் செய்து வரும் தகப்பன் அல்லது மூத்த மகனை “கர்த்தா” Kartha எனச் சொல்வர். “கர்த்தா” என்பது “காப்பவர்” என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கலாம். அந்த கூட்டுக் குடும்பத்தின் சொத்துக்கள் அனைத்தும் கூட்டாகவே இருக்கும். தனி உரிமை யாருக்கும் கிடையாது. “கூட்டான உழைப்பு, கூட்டான வருமானம்” என்பதுதான் இதற்கு அடிப்படை தத்துவம். எனவேதான், கூட்டுக் குடும்பமாக இருந்து, தனித்தனி அடுப்பு வைத்து சமைத்துச் சாப்பிட்டாலும், தனித்தனி வீடுகளில் வசித்து வந்தாலும், அதுவும் ஒரு கூட்டுக் குடும்பமே என்று சுப்ரீம் கோர்ட் விளக்கம் கொடுத்துள்ளது. அந்த விளக்கத்தின்படி, தனித்தனியே தனித்தனி வீடுகளில் மகன்கள் வாழ்ந்தாலும், சொத்துக்களை தனித்தனியே பிரித்துக் கொள்ளாதவரை அது ஒரு கூட்டுக் குடும்பமே என்று புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த கூட்டுக் குடும்ப முறைகள் இப்போது அரிதாகி விட்டன. இந்த கூட்டுக் குடும்ப முறை இருந்த காலங்களில், இந்த கூட்டுக் குடும்ப சொத்துக்களை, அதன் கர்த்தா என்பவர் (பொதுவாக தகப்பனார் என்று வைத்துக் கொள்ளலாம்) தன் பிள்ளைகளுக்கு பிரித்துக் கொடுப்பார். அதுமுதல் அவர்கள் தனித்தனி ஆட்களாக ஆகிவிடுவார்கள். கூட்டுக் குடும்பம் பிரிந்து விட்டது என்று அர்த்தம். ஆனாலும், அவ்வாறு தனியே பிரிந்த ஒரு மகன், அவரின் மகன்களுடன் புதிதாக ஒரு கூட்டுக் குடும்பத்தை ஆரம்பிக்கலாம். இந்த கூட்டுக் குடும்ப முறையானது இந்து மதத்தினர் மட்டும் அனுசரித்துவரும் ஒரு குடும்ப முறை. இந்த கூட்டு குடும்ப முறை மற்ற மதங்களில் கிடையாது. அவர்க்ள சேர்ந்து வாழ்வார்கள், உழைப்பார்கள், வியாபாரம் செய்வார்கள், பங்கு பிரித்துக் கொள்வார்கள், அவ்வளவே. பிற மதங்களில், இந்துமத முறை போன்று கர்த்தா என்பவர் இல்லை. இந்த இந்துகூட்டுக் குடும்ப கர்த்தா என்பவர் மேனேஜர் போன்றவர். இந்த மேனேஜருக்கு சில அதிகாரங்கள் உண்டு. அவர் சொத்துக்களை விற்கலாம். கூட்டுக் குடும்பத்துக்காக கடன் வாங்கலாம். அந்த கடன் அந்த கூட்டு குடும்பத்தின் மற்ற நபர்களையும் கட்டுப்படுத்தும்.
இந்த இந்து கூட்டுக் குடும்ப முறையில், கர்த்தா அல்லது சொத்துக்களை நிர்வாகம் செய்து வருபவர், அந்த குடும்பச் சொத்துக்களை தன் மனைவிக்கு, மகன்களுக்கு, மகள்களுக்கு, பேரப்பிள்ளைகளுக்கு பிரித்துக் கொடுக்கும்போது, ஒரு “பத்திரம் மூலம்” பிரித்துக் கொடுப்பார். அந்த பத்திரத்தை “குடும்ப ஏற்பாட்டுப் பத்திரம்” என்பர். இந்த குடும்ப ஏற்பாட்டுப் பத்திரம்தான், பின்னர் வழக்கு மொழியில் “செட்டில்மெண்ட்” (Settlement) என்று அழைப்பட்டது. இந்த குடும்ப ஏற்பாட்டுப் பத்திரம் என்னும் செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் ஒருவருக்கு கிடைத்த சொத்துக்கள் அவரின் “தனி சொத்துக்கள்” ஆகிவிடும். அதுமுதல் அந்த சொத்தைப் பெற்றவர் முழுஉரிமையுடன் அதை அனுபவித்துக் கொள்வார்.
பொதுவாக, ஒருவர் ஒரு பொருளைத் “தானமாக” கொடுத்தால் அதற்குப் பெயர் “தானம்.” ஆங்கிலத்தில் அதற்குப் பெயர் “கிப்ட்” (Gift). யாரோ வெளிநபர் ஒருவருக்குத் தானமாக எதைக் கொடுத்தாலும் அது “தானம் என்னும் கிப்ட்” வகையைச் சேரும். நமது பாட்டன், பாட்டி, தகப்பன், தாய் இவர்களில் யாராவது, அவர்களின் தனிப்பட்ட சொத்தை, நமக்கு ஒரு தானமாக கொடுத்தால் அதை தானம்-கிப்ட் என்று சொல்வதைவிட, ரத்த உரிமையுடன் பெறப்பட்டதால், அதை “தானம் என்னும் செட்டில்மெண்ட்” என்கிறோம். ஏனென்றால், அது பழைய பழக்கத்தின்படி, ஒரு கூட்டுக் குடும்பத்திலிருந்து கிடைத்த சொத்துப்போலவே கருதுகிறோம். எனவே, இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. வெளி ஆட்களிடமிருந்து சொத்தை தானமாகப் பெற்றால் அது “தானம்-என்னும் கிப்ட்” ஆகும். நம் குடும்ப-ரத்த உறவுகளிடமிருந்து ஒரு சொத்தை தானமாகப் பெற்றால் அது “தானம்-என்னும் செட்டில்மெண்ட்” ஆகும். அதாவது இரண்டுமே தானம் என்றே எடுத்துக் கொள்ளப்பட்டாலும், வெளி நபரிடமிருந்து பெறுவதை தானம் என்றும், குடும்ப உறவுகளிடமிருந்து பெறுவதை செட்டில்மெண்ட் என்றும் வித்தியாசப்படுத்தி வைத்துக் கொண்டுள்ளோம்.
இந்த தானப் பத்திரம், செட்டில்மெண்ட் பத்திரம் இவைகளை பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்திய பத்திரச் சட்டங்களும் (அதாவது முத்திரைச் சட்டம் மற்றும் பதிவுச் சட்டம்- The Indian Stamp Act & The Indian Registration Act) இவைகளும் இந்த இரண்டு வகையான (அதாவது தானப்பத்திரம் என்னும் கிப்ட் பத்திரம்-Gift Deed, மற்றும் செட்டில்மெண்ட் பத்திரம்-Settlement Deed) என்று இரண்டு பிரிவாகவே இதை வித்தியாசப்படுத்தி தனித்தனி முறைகளை வைத்துள்ளது. ஆனாலும் இவை இரண்டுக்கும் அடிப்படை விஷயம் ஒன்றுதான்; அது இரண்டுமே “தானம் என்னும் கிப்ட்” தான்; அதாவது இவை இரண்டுமே “ஓசியாக கொடுக்கும் சொத்து” என்றுதான் கருதப்படும்.

வெளி ஆட்களுக்கு (அதாவது குடும்ப உறவுகள் அல்லாதவருக்கு) கொடுக்கும் தானம் என்னும் கிப்ட் பத்திரத்துக்கு அதிக ஸ்டாம்பு கட்டணம் உண்டு. ஆனால் குடும்ப உறவுகளுக்குள் கொடுக்கும் செட்டில்மெண்ட் என்னும் பத்திரத்துக்கு மிகக் குறைவான ஸ்டாம்பு கட்டணம் செலுத்தினால் போதும். இந்த சலுகை மட்டும்தான் இந்த இரண்டுக்கும் அரசாங்கத்திடம் உள்ள வித்தியாசமான பார்வை. 

No comments:

Post a Comment