Sunday, October 4, 2015

வளர்ப்பு குழந்தை

 இந்து மதத்தில் மட்டுமே இருந்து வந்த பழக்கம் இந்த குழந்தை தத்து எடுத்து வளர்க்கும் பழக்கம். இந்து மத தத்துவப்படி, ஒருவர் (ஆண்) இறப்புக்குப்பின் அவருக்கு பிண்டம் கொடுக்க ஒரு ஆண் குழந்தை வேண்டும். அப்போதுதான் அந்த இறந்த ஆணின் ஆன்மா சொர்க்கத்துக்கு போகும் என்று நினைத்தனர். தனக்கு பிண்டம் கொடுக்கும் (இறந்த தேதியில் திதி செய்யும்) தன் ஆண் வாரிசுகளை கொண்டே முக்தி அடைவார்கள்  என்று நினைத்தனர். இல்லையென்றால் அவர்களுக்கு அது கிடைக்காதாம். எனவே ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு மகன் வேண்டும் என்பது கட்டாயம்.
இப்படிப்பட்ட காலத்தில், இந்து மதத்தில், ஒரு ஆணுக்கு ஆண் பிள்ளை இல்லை என்றால், அவர் யாரையாவது வேறு ஒரு இந்து ஆண் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. இவர் உயிருடன் இருக்கும்போதே ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்துக் கொள்வார். அல்லது இறக்கும் தருவாயில், ஒரு உயில் மூலம், தன் மனைவிக்கு அந்த தத்து எடுக்கும் உரிமையைக் கொடுப்பார். பல ஜாதிகளில் சிறு வயதாக அந்த குழந்தை இருக்கும்போதே தத்து எடுத்துக்கொள்வர். சில ஜாதிகளில் அந்த குழந்தைக்கே(?) திருமணம் கூட ஆகி இருக்கும் அப்போதுதான் தத்து எடுத்துக் கொள்வர். எந்த வயதாக இருந்தால் என்ன? பிண்டம் கொடுக்க ஒரு பிள்ளை - அதுதானே வேண்டும். தத்து எடுத்ததை உறுதி செய்வது, தத்தஹோமம் என்னும் நிகழ்ச்சி. ஒரு ஹோமம் வளர்த்து அதன் முன்னர் நின்று, குழந்தையை பெற்ற இயற்கை தந்தையும் தாயும், தத்து எடுத்துக் கொள்ளப்போகும் தந்தை தாயிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி. இது உறவினர்கள் முன்னிலையில் நடக்க வேண்டும். ஊரறிய தத்து நடந்தது என சாட்சியம்.
இப்படி இருந்த நிலை மாறி, 1956ல் (சுதந்திர இந்தியாவில்) புதிய இந்து தத்து சட்டம் வந்தது. The Hindu Adoptions and Maintenance Act 1956. இதன்படி 14 வயதுக்கு உட்பட்ட குழந்தையை மட்டும் தத்து எடுத்துக் கொள்ளலாம். இயற்கை பெற்றோர், தத்து எடுக்கும் பெற்றோருக்கு தத்து கொடுக்க வேண்டும் அவ்வளவே. மேலும், பழைய இந்து வழக்கப்படி, ஒரு ஆண் குழந்தையை மட்டுமே தத்து எடுக்க முடியும். இதையும் மாற்றி, ஒரு ஆண் குழந்தையையோ அல்லது ஒரு பெண் குழந்தையையோ எடுக்கலாம். ஆணும், பெண்ணும் இரண்டு குழந்தையையும் தத்து எடுக்கலாம். ஆனால் இரண்டு ஆண் குழந்தைகளையோ, இரண்டு பெண் குழந்தைகளையோ தத்து எடுக்க முடியாது. அவ்வாறு தத்து எடுத்துவிட்டால், அதுமுதல், அந்த குழந்தை, தத்து எடுத்தவரின் குழந்தை என்றும், அவர் சொத்தில் பங்கு பெறும் உரிமை உண்டு என்றும், இயற்கை பெற்றோரின் சொத்தில் பங்கு ஏதும் கிடைக்காது என்றும் இந்த சட்டம் சொல்கிறது.
இந்து மதத்தில் மட்டும்தான் தத்து எடுக்க முடியும். கிறிஸ்தவ மதத்தினர், முஸ்லீம் மதத்தினர் அவ்வாறு தத்து எடுக்க முடியாது. அப்படி ஒரு பழக்கமோ சட்டமோ அந்த இரு மதத்திலும் இல்லை. கிறிஸ்தவர்கள் தத்து எடுக்க வேண்டும் என்றால், பெயரளவுக்கு ஒரு குழந்தையை எடுத்து வளர்க்கலாம். அந்த குழந்தை பெயரில் ஏதாவது சொத்து எழுதி வைத்து விடலாம். வளர்ப்பு பெற்றோரின் சொத்தில் வாரிசாக பங்கு கேட்க முடியாது. அது ஒன்று மட்டும்தான் சட்ட சிக்கல். மற்றபடி, தத்து எடுத்து வளர்ப்பதில் எந்த சட்டமும் தடை செய்யவில்லை.
புத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர் இவர்களும் இந்துக்கள்தான் என்பதால் அவர்களும் தத்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், பார்சிகள், வேறு மதத்தினர் யாருக்கும் தத்து எடுக்கும் உரிமை சட்டபூர்மாக இல்லை. விருப்பத்தின் பேரில் ஒரு குழந்தையை ஆசையாக எடுத்து வளர்த்துக் கொள்ளலாம்.
2000த்தில் ஒரு சட்டம் வந்தது. The Juvenile Justice (Care and Protection of Children) Act 2000. இந்த சட்டப்படி யார் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு குழந்தையை (அதுவும் எந்த மதத்தை சேர்ந்தாக இருந்தாலும் பரவாயில்லை) தத்து எடுத்து வளர்க்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் ஒரு வழக்கில் கூறி உள்ளது. (தத்து எடுப்பவர் மதம் அனுமதிக்காவிட்டாலும் தத்து எடுக்கலாம் என்று சொல்கிறது சுப்ரீம் கோர்ட்).
எந்த மதத்தை சேர்ந்த (வேறு வேறு மதங்களை சேர்ந்த) இருவர் திருமணம் செய்து கொள்ள சிறப்பு திருமண சட்டம் 1954 உள்ளது. (The Special Marriage Act 1954). இது மதம் சார்ந்து இல்லாத பொது சட்டம். அதைப் போலவே, இந்த ஜூவனைல் சட்டம் 2000ம் ஒரு மதம் சாராத பொதுசட்டம் என்று விளக்கி உள்ளது சுப்ரீம் கோர்ட்.
இப்பொது இருக்கும் நிலைப்படி, இந்து மதம் அல்லாத பிற மதத்து பெற்றோர்கள் அவர்கள் எடுத்து வளர்க்கும் குழந்தைக்கு "பாதுகாவலர்" என்று உரிமை மட்டுமே உள்ளது. அதுவும் அந்த குழந்தை 18 வயது அடையும் வரை மட்டுமே. இந்த இடைப்பட்ட காலத்தில், அந்த குழந்தையின் இயற்கை பெற்றோர் நினைத்தால், அந்த குழந்தையை திரும்ப வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலையே உள்ளது.
2005ல் ஒரு வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு வருகிறது. அதில் அந்த பெண்மணி ஒரு பெண் குழந்தையை 2 வயதில் இருந்தே எடுத்து வளர்க்கிறார் என்றும், இப்போது அதற்கு 17 வயதாகிறது என்றும், ஆனால் அது என் குழந்தை என்று சொல்லும் உரிமையை (இவரை தாயாக சட்டம் ஏற்பது) இந்த அரசும், அதன் சட்டமும் எனக்கு கொடுக்க மறுக்கிறதே என்று கேட்கிறார். அப்போதுதான் சுப்ரீம் கோர்ட் சொல்கிறது, "குழந்தையை தத்து எடுத்து வளர்க்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. ஆனாலும், பல மதங்கள் பலவாறு சொல்லி வருவதால், இப்போதைக்கு இதற்கு கோர்ட்டால் முடிவு சொல்ல முடியவில்லை என்று கூறுகிறது. இந்த வழக்கில் முஸ்லீம் சட்ட குழு தனது ஆட்சேபனையையும் எழுப்பி உள்ளது. (தத்து எடுப்பது முஸ்லீம் மதக் கொள்கைக்கு வேறானது என்று ஆட்சேபம் செய்தது).
வெளிநாட்டினர், இந்தியாவில் உள்ள குழந்தைகளை தத்து எடுத்துச் செல்கின்றனர். அதிலும் குறிப்பாக, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இருந்து இந்தியக் குழந்தைகளை தத்து எடுப்பது அதிகரித்துள்ளது. இந்திய சட்டப்படி, வெளிநாட்டில் வாழும் இந்தியர், வெளிநாட்டினர் (ஹேக் தத்து தீர்மானத்தில் கையெழுத்து செய்துள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள்) இந்தியக் குழந்தையை தத்து எடுக்கலாம். இந்திய அரசு இதற்காக Guidelines Governing Adoption of Children 2015 என்ற சட்டத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் கொண்டு வந்துள்ளது.

**

No comments:

Post a Comment