Wednesday, October 21, 2015

வீடு நிலம் விற்பனை--1

வீடு நிலம் விற்பனை--1
சொத்துக்கள் இரண்டு வகை. ஒன்று அசையும் சொத்து-Movable property; மற்றது அசையாச் சொத்து-Immovable property; அசையும் சொத்துக்கள் என்பன, நகைகள், வண்டி வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், ஆடு,மாடுகள், பணம், பணம் பெரும் உரிமையுள்ள பேப்பர்கள் இவைகள் அசையும் சொத்துக்கள் என புரிந்து கொள்ளலாம். அசையும் சொத்தை விற்பதற்கு சட்ட சிரமம் ஒன்றும் இல்லை. அந்த அசையும் பொருளை எடுத்துக் கொடுத்துவிட்டால் போதும். விற்றவர் பணம் வாங்கிக் கொண்டால் போதும். விற்பனை முடிந்து விட்டது. சில நேரங்களில், பணம் கொடுத்ததற்கும், அசையும் பொருளை விற்றதாகவும், அதை பெற்றுக் கொண்டதாகவும், ஒரு ரசீது எழுதிக் கொண்டால் போதும். அதுகூட, பத்திரப்பேப்பரில் எழுதிக் கொள்ள வேண்டிய அவசியம்கூட இல்லை. இது சட்டம். (ஆனால், நாட்டில் ‘நல்லவர்கள்(!)’ நடமாட்டம் அதிகமாக உள்ளதால் அதை ஒரு பேப்பரில் எழுதிக் கொள்வது நல்லது).
ஆனால் அசையாச் சொத்துக்களான, வீடு, மனை, நிலம், ப்ளாட் என்னும் அடுக்குமாடிக் கட்டிடம் போன்ற சொத்துக்களை விற்பனை செய்வதற்கு மட்டும் பல சட்டங்கள் உள்ளன. இவ்வளவு சட்டங்களையும் தெரிந்துதான், சொத்தை விற்க வேண்டும், அல்லது வாங்க வேண்டும்.
அசையாச் சொத்து என்ன என்பதை, The Transfer of Property Act 1882 சொத்து விற்பனைச்சட்டம் 1882லும், The Indian Stamp Act 1899- இந்திய முத்திரைச் சட்டத்திலும் (இந்தியன் ஸ்டாம்பு சட்டத்திலும்), The Indian Registration Act 1908 இந்தியன் (பத்திரப்) பதிவுச் சட்டத்திலும், The General Clauses Act 1897 பொதுவிளக்கச் சட்டத்திலும்(?) (மொழிபெயர்ப்பு சரியில்லையோ?) ஆகிய சட்டங்களில் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. இந்த சட்டங்களின்படி, “நிலங்கள், அதாவது மண்தரை, அந்த நிலங்களின்மீது மண்ணில் பதித்து கட்டியுள்ள கட்டிடங்கள் இவைகளை அசையாச் சொத்து என்று சொல்கிறது அந்தச் சட்டங்கள்; மேலும், நிலங்களில், நிரந்தர பலன் தருவதற்காக பதிக்கப்பட்டுள்ள மோட்டார்கள், மிஷின்கள், இவைகளும் அசையாச் சொத்தே” என்று விளக்கப்பட்டுள்ளது. அதாவது பூமியில், ஆழத்தில் பதித்து (ஒரு அடி அல்லது இரண்டு அடி ஆழத்துக்கு பதித்திருந்தாலே போதும்) அது நிரந்தரமாக வேலை செய்யும்படி அமைக்கப்பட்ட மிஷின்கள், தண்ணீர் மோட்டர்கள், மில்கள், ஆலைகள், ஜெனரேட்டர்கள், கிணறு, கிணற்றின் உள்கட்டுமானம், அதில் இனைத்துள்ள மோட்டார், பம்புகள், மின்இனைப்புகள், இவைகள், “பிரித்து எடுத்துக் கொண்டு செல்லும் பல பாகங்களைக் கொண்டதாக இருந்தாலும்” அவைகளும் நிலம், வீடு போன்றே அசையாச் சொத்துக்கள் என்று அந்தச் சட்டங்கள் சொல்கிறது. அப்படியானால், வீட்டில் உள்ள ஏசி மிஷின் அசையாச் சொத்தா? ஆம், இந்த சட்டங்களின்படி அசையாச் சொத்துதான். எனவே சொத்தை விற்பவர், அதை கழற்றிக் கொண்டு செல்வேன் என்று முன்னரே தெரிவித்து விட வேண்டும். இல்லை என்றால் வில்லங்கம்தான்!
அசையாச் சொத்தை விளக்கிச் சொல்லும் சட்டத்தில், இன்னொரு குழப்பமும் உள்ளது.

**

No comments:

Post a Comment