வீடு நிலம் விற்பனை--2
அசையாச் சொத்தை விளக்கிச் சொல்லும் சட்டத்தில், இன்னொரு குழப்பமும்
உள்ளது. நிலத்தில் உள்ள மரங்கள், அசையும் சொத்தா அல்லது அசையாச் சொத்தா? மேற்கண்ட
விளக்கப்படி, “நிலத்தில் பதிந்துள்ள” எந்தப் பொருளும் அசையாச் சொத்தே என்று
எடுத்துக் கொண்டாலும், பிரிட்டீஸார் நம்மை ஆண்ட காலத்தில் அவர்கள் கொடுத்துச்
சென்ற சட்ட விளக்கத்தைத்தான் இன்னும் நாம் விளக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையும்
மறந்துவிட முடியாது. அந்த விளக்கம் என்னவென்றால்:- பெரினியல் மரங்கள் என்று
சொல்லும் பல ஆண்டுகள் மண்ணில் நீரை உறிஞ்சி குடித்து வானளாவி வளரும் மரங்கள்
அசையாச் சொத்துத்தான். ஆனால் ஒரு வருடம், இரண்டு வருடம் மட்டும் வளர்ந்து உடனே
பலன்கள் தரும் (அல்லது பழங்கள் தரும்) சிறு மரங்கள், செடிகள், பயிர்கள்
(நெல்பயிர்கள் முதலியன) இவைகள் அசையாச் சொத்து இல்லையாம். அவைகள் அசையும்
சொத்துக்கள்தானாம். எனவேதான் பயிர் வைத்த (நெற்பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு இருக்கும்)
நிலத்தை விற்பனை செய்தால், நிலம் மட்டுமே அதை வாங்கியவரைச் சேரும். அதன்
பயிர்களும், நெற்கதிர்களும் விற்றவரையே சேரும் என்று ஒரு அடிப்படை சட்டமும் உள்ளது
என்பதை புரிந்து கொள்ள முடியும். இது இல்லாமல், தேக்கு மரம், வேப்பமரம், வளர்ந்து
விட்டது. கருவேல மரம் வளர்ந்து விட்டது, இனி அவைகள் வளர வேண்டிய அவசியம் இல்லை.
(மேலும் வளரவும் செய்யாது). இனி அதை வெட்டி எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். (இவைகள்
விறக்குக்கு அல்லது மரவேலை செய்ய பயன்படும் மரங்கள்). இத்தகைய மரங்களை “விறகு
மரங்கள்” அல்லது “வீட்டுவேலை மரங்கள்” என்ற உபயோகத்தை வைத்து பெயர் இடுகிறார்கள்.
இந்த மரங்கள் “வளர்ந்து முடிந்து” விட்டதால், இனி அது நிற்கும் மண்ணில் உள்ள நீரை
உறிஞ்சாது. எனவே அவைகள் “மரங்கள் அல்ல” என்கிறது சட்டம். எனவே இதை Standing Timber “சும்மா நிற்கும்
மரங்கள்” எனலாம். (பலன் கொடுக்காமல் சும்மா நிற்கும் மரங்கள்). இந்த “நிற்கும்
டிம்பர்கள்” நிலத்துடன் சேர்ந்த அசையாச் சொத்து இல்லை. அவைகள் அசையும்
சொத்துக்களே. எனவே நிலத்தை விற்றவரே அந்த மரங்களை வெட்டி எடுத்துக் கொள்ளலாம். நிலத்தை
விற்ற பின்னரும், அவர் வெட்டி எடுத்துக் கொள்ளும்வரை விற்றவருக்கே அவைகள் சொந்தம்.
எனவே நிலத்தை வாங்கியவர் அதைக் கேட்டு மல்லுக்கு நிற்கக் கூடாது.
தென்னிந்தியாவில், பனைமரங்கள் அதிகம் உள்ளன. தென்னை மரங்களும் அதிகம்
உள்ளன. அதன் கதை என்ன? பனை மரங்களில் ஆண் பனை, பெண் பனை என மனிதர்களைப் போலவே
இரண்டு பாலினம் உண்டு. ஆண் பனையானது மகரந்த குச்சி மட்டுமே விடும். பெண் பனைதான்
நுங்கு, பனங்காய், விளைவிக்கும். பதனி என்னும் சுவைநீரும் இந்த பெண் பனையில் தான்
இறக்குவர். பெண் பனைகள் மிக அதிகம். ஆண் பனை ஒன்று அல்லது இரண்டு என்ற அளவிலேயே
இருக்கும். பனை மரங்களும் காலகாலம் வாழும் பெரினியல் மரங்களே! எனவே அவை அசையாச்
சொத்துதானே என்றாலும், காய்க்கும் மரங்களே அசையாச் சொத்து என்று ஒரு சட்ட
விளக்கமும் உள்ளது. அதன்படி பார்த்தால், பெண் பனைமரங்கள் அசையாச் சொத்துக்கள்;
ஆனால் ஆண் பனை மரங்கள் அசையும் சொத்து; ஏனென்றால் அவை “நிற்கும் டிம்பர்” என்ற
விளக்கத்துக்குள் வந்துவிடுகிறது. மாமரத்தில் அப்படி ஆண், பெண் வித்தியாசம் இல்லை
என்பதையும் கவனித்துக் கொள்ளவேண்டும். ஆண், பெண் வேறுபாடு உள்ள மரங்களில், ஆண்
மரங்கள் அசையும் சொத்தாகும். பெண்மரங்கள் மட்டுமே அசையாச் சொத்துக்களாகும். அதாவது
பலன் கொடுக்கும் மரங்கள் மட்டுமே அசையாச் சொத்துக்கள் என்றும் புரிந்து கொள்ளலாம்.
**
No comments:
Post a Comment