Wednesday, October 7, 2015

கருவில் இருக்கும் குழந்தை, பிறந்த குழந்தையா?

ஒருவரின் வயதை கணக்கிடுவதற்கு அவரின் பிறந்த தேதியை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். அதுவும் அவர் பிறந்த நாளின் முன் நள்ளிரவு 12 மணியிலிருந்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது மாலை 6 மணிக்கு பிறந்திருந்தாலும், இரவு 11 மணிக்கு பிறந்திருந்தாலும், பிறந்த நாள் கணக்கை எடுத்துக் கொள்ள, அவன் பிறந்த நாளின் முன்னிரவு 12 மணியை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அந்தக் கணக்கின்படி பார்த்தால், ஒருவர் அவரின் பிறந்தநாள் கொண்டாடும் போது, அந்த வயது முடிந்து, “ஒரு நாள்” அதிகமாக ஆகிவிட்ட பின்னரே பிறந்தநாள் கொண்டாடுவதாக கோர்ட்டுகள் பல தீர்ப்புகளில் சொல்லி உள்ளன.

மேலும், ஒருவரின் வயதைக் கணக்கிட, அவர் பிறந்த தேதியை கணக்கில் கொள்ள வேண்டுமே அன்றி, அவர், அவரின் தாயின் வயிற்றில் (கருவில்) வாழ்ந்த காலத்தை கணக்கில் கொள்ளக் கூடாதாம்.

ஆனாலும், இந்து மதக் கோட்பாட்டின்படி, ஒரு இந்து குழந்தையானது, அவரின் தாயாரின் வயிற்றில் கருவாக வளரும்போதே “இந்த உலகுக்கு” வந்துவிட்டதாக கூறுகிறது. அதாவது அவர் உயிருடன் இந்த உலகில் வாழ்வதைப் போன்றே கணக்கில் கொள்ள வேண்டுமாம். பழைய இந்து சட்டத்தின்படி, சொத்துக்கள் அனைந்தும் பூர்வீகச் சொத்துக்களாகவே இருந்து வந்தன. அதன்படி, ஒருவருக்கு மகன் ஒருவன் பிறந்தால் அவனும் அந்த தகப்பன் சொத்தில் ஒரு பங்கை பெறுவான். (தகப்பனும், அவர் மகனும் பார்டனர்கள் ஆகிவிடுவர்). அதேபோல, அந்த மகனுக்கு ஒரு மகன் பிறந்தால், (அதாவது சொத்தை வைத்திருப்பருக்கு பேரன் பிறந்தால்) அந்த பேரனும் ஒரு பார்டனர் போல உரிமையாளர் ஆகிவிடுவான். இதை கோபார்சனி சொத்து முறை என்று கூறிக் கொண்டனர். இவைகளில் பெருத்த மாற்றங்களை இப்போது செய்து விட்டார்கள். 2005ல் கொண்டுவரப்பட்ட இந்து வாரிசுரிமை திருத்தச் சட்டமே இப்போது நடைமுறையில் உள்ளது.

பழைய இந்து முறைப்படி, இவ்வாறான கோபார்சனரி சொத்துக்களில் (அதாவது பூர்வீகச் சொத்துக்களில்) ஒரு மகனோ, பேரனோ பிறந்தால் மட்டும் பங்கு என்று இல்லை, அவன் அவனின் தாயின் வயிற்றில் கருவாக வளர்ந்து வந்தாலும் அவனும் உயிருடன் இருப்பதாகவே இந்து சட்டம் கருதியது. ஒருவேளை, தகப்பனும், மகனும் பூர்வீகச் சொத்தை ஒரு பாகப் பிரிவினைப் பத்திரம் மூலம் பங்கு பிரித்துக் கொண்டால், அப்போது அந்த மகனின் மனைவி கர்ப்பமாக இருந்தால், அந்த கருவில் இருக்கும் குழந்தை பிறந்தவுடன் அந்த பாகப் பிரிவினை செல்லாது என்றும், அப்போது அவன், தாயில் வயிற்றில் கருவில் வளர்ந்ததால் அவனுக்கும் ஒரு பங்கு உண்டு என்றும் வழக்கு போடமுடியும். (இப்போது இந்த முறை சட்டத்தின்படி தொடர்ந்தாலும், அப்படிப்பட்ட பூர்வீகச் சொத்துக்கள் அரிதாக இருப்பதால், அதற்கு இடமில்லாமல் போய்விட்டது).

இப்போது சிலர், செட்டில்மெண்ட் பத்திரம், உயில் பத்திரங்கள் எழுதும்போது, “என் மகனுக்கு அல்லது மகளுக்கு பிறக்கும் குழந்தைகள் சொத்தை அடைய வேண்டும்” என்று எழுதி இருப்பர். அதை எழுதியபோது அந்த மகனுக்கு ஒரு குழந்தை மட்டும் இருந்து, அதற்குப் பின் வேறு குழந்தை பிறந்தால், அந்த புதிதாக பிறந்த குழந்தைக்கும் சொத்தில் பங்கு வந்துவிடும்.


No comments:

Post a Comment