விவசாய
வயலில் உள்ள ஆயில் என்ஜின் அசையாச் சொத்தா?
நிலம்,
மண், அதிலுள்ள கட்டிடம் இவைகள் எல்லாம் அசையாச் சொத்துக்கள்; மற்ற பொருள்கள்
எல்லாம் அசையும் சொத்துக்களே; ஆனாலும், ஒரு பொருளை, உதாரணமாக, ஒரு இயந்திரத்தை
நிலத்தில் புதைய நிறுவி இருந்தால், அதுவும் அசையாச் சொத்தான நிலத்துடன்
சேர்ந்துவிடுமா என்பது சட்டக் கேள்வியாகவே இருந்து வருகிறது; மண்ணில் புதைய
கட்டியுள்ள கட்டிடம் அசையாச் சொத்து; கட்டிடமானது நிரந்தரமாக மண்ணில் புதைய
இருப்பதால், கட்டிடம் அசையாச் சொத்து என சட்டம் கருதுகிறது; கட்டிடம் என்பது
அதிலுள்ள செங்கல் சுவர்கள், கம்பிகள், கூரை, கதவு, ஜன்னல்கள், இவைகளும்
சேர்ந்துதான்; ஆனால், சுவரில் பதித்து வைத்துள்ள பீரோ, சுவரோடு பிரிக்கமுடியாமல்
பதித்து இருந்தால் அதுவும் அசையாச் சொத்தே; நகர்த்தும்படி வைத்திருக்கும் பீரோ
மட்டும் அசையும் சொத்துதான்; அது அசையாச் சொத்தான வீட்டுடன் சேராது; ஒரு பொருளை
அல்லது இயந்திரத்தை நிரந்தரமாக மண்ணுடன், அல்லது மண்ணில் உள்ள கட்டிடத்துடன் புதைய
நிறுவி இருந்தால், அதுவும் அசையாச் சொத்து என்றே சட்டம் கருதுகிறது; அப்படிப்
பார்த்தால், விவசாய வயலில் உள்ள ஆயில் என்ஜினை நிரந்தரமாக மண்ணில் புதைய பதித்து
இருக்கிறார்களா என்று பார்ப்பதுடன், அது அந்த நிலத்திலிருந்து வருமானம் வருவதற்காக
அந்த இயந்திரத்தை நிறுவி இருந்தால் அதுவும் அசையாச் சொத்தே என்று சட்டம்
கருதுகிறது; இந்த விளக்கங்கள் எல்லாம் சொத்துரிமைச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன;
இந்தியச் சொத்துரிமை சட்டமானது, ஆதியில் இங்கிலாந்து சொத்துரிமை சட்டத்திலிருந்து
வந்தவையே!
சென்னை
ஐகோர்ட்டில் ஒரு வழக்கு: மூன்று நீதிபதிகள் அடங்கிய புல் பெஞ்ச் (Full Bench) தீர்ப்பு அது; AIR
1955 Mad 620. போர்டு ஆப் ரெவின்யூ vs. கே.வெங்டசாமி என்ற
வழக்கு; இதில் தீர்ப்பு வழங்கிய மூன்று நீதிபதிகளில் அடங்கிய புல் பெஞ்ச்சில் (Full Bench) இருந்த தலைமை நீதிபதியான ஜஸ்டிஸ் ராஜமன்னார் அவர்கள் வழங்கிய முக்கிய தீர்ப்பு
இது; அதில் --- ஒரு டூரிங் தியேட்டர்; அதில் சினிமா காண்பிக்கும் இயந்திரங்களான
புரஜெக்டர்கள் உள்ளன; அந்த தியேட்டரை லீஸ் என்னும் குத்தகைக்கு (Lease) விட்டு லீஸ் பத்திரம் எழுதிக்
கொள்கிறார்கள்; அந்த பத்திரத்தை பதிவுக்கு கொடுக்கும்போது, தியேட்டர் நிலத்தையும்,
அதிலுள்ள கட்டிடத்தையும் மட்டும் லீஸ் கொடுப்பதாக எழுதி உள்ளது; தியேட்டர் என்றால்
புரஜெக்டர்கள் மற்ற இயந்திரங்கள் இருக்கும்; அதை ஏன் பத்திரத்தில் குறிப்படவில்லை
என்றும், அதற்கும் மதிப்பிட்டு ஸ்டாம்ப் கட்டணம் கட்டவேண்டும் என கேட்கிறார்
பதிவாளர்; ஏனென்றால், கட்டிடத்தில் பதிய வைத்துள்ள இயந்திரங்களும் அசையாச் சொத்தே என்று
சட்டம் சொல்லி உள்ளதே என்கிறார்; அந்த பத்திரத்தில் உள்ள பார்ட்டிகள், இந்த
இயந்திரங்கள் அசையும் பொருள்களே என்று வாதம் செய்கின்றனர்; வழக்கு கோர்ட்டுக்கு
போகிறது; கடைசியாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு வந்தது; அதில் கூறப்பட்டுள்ள
தீர்ப்பு: “டூரிங் தியேட்டரில் உள்ள புரஜெக்டர்கள் எல்லாம் தரையில் அல்லது ஒரு
மேடையில் போல்ட்-நட் மூலம் இணைக்கப் பட்டிருந்தாலும், அதை எளிதில் பிரித்து
எடுத்துக் கொள்ளும் நிலையில்தான் உள்ளது; நிரந்தரமாக அந்த இயந்திரங்களை தரையில்
பதிய வைத்திருக்கவில்லை; எப்போது வேண்டுமானாலும் பிரித்து எடுத்துக் கொண்டு போய் விடலாம்;
அப்படிப்பட்ட புரஜெக்டர்கள் அசையும் பொருளே என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
கூறிவிட்டது; பொதுவாக, இப்படிப்பட்ட இயந்திரங்கள் அசையும் பொருளா, அல்லது
நிலத்தில் பதிய வைத்ததால் அது அசையும் சொத்தா என்பதை அந்தந்த தனிப்பட்ட
விஷயங்களைக் கொண்டே முடிவு செய்ய முடியும் என தீர்ப்புகள் பல வந்துள்ளன; அதற்குறிய
அடிப்படை இதுதான்; மண்ணில் நிரந்தரமாக பதிய வைத்து, அந்த நிலத்துக்கு ஆதார
வருமானத்துக்கு உதவி வந்து, அது நிரந்தரமாக இதில் இருப்பதற்காக எண்ணத்துடன் அதை
நிறுவி இருந்தால் அது அசையாச் சொத்தே!
**