Monday, June 27, 2016

கூட்டு பங்குரிமை Joint Tenancy

கூட்டு பங்குரிமை Joint Tenancy:
1956ல் இந்து வாரிசுரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது; இந்தச் சட்டம் வருவதற்கு முன்னர், இந்து சட்டம் வேறு மாதிரி இருந்தது; ஒரு சொத்தில், ஒரே குடும்பத்து இந்துக்களுக்கு கூட்டு பங்குரிமை இருந்தது; இது கிட்டத்தட்ட இங்கிலாந்தில் உள்ள கூட்டு பங்குரிமையை போன்றே இருந்தது; இங்கிலாந்து நாட்டில் கூட்டு பங்குரிமையை Joint Tenancy என்பர்;
டெனன்சி என்பது சொத்தை அனுபவிக்கும் உரிமை; (வாடகை உரிமை என குழம்ப வேண்டியதில்லை); உதாரணமாக, இங்கிலாந்தில் இருவர் ஒரே சொத்தை கூட்டாக வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்; அந்த சொத்தில் இருவருக்கும் சரி சமமாக உரிமை இருக்கும்;
ஆனால், ஒருவர் இறந்துவிட்டால், உயிரோடு இருக்கும் மற்றவர் அந்தச் சொத்தை முழுமையாக அடைந்து கொள்வார்; இறந்தவரின் வாரிசுகளுக்கு அவரின் பங்கு போய்ச் சேராது; இப்படிப்பட்ட வித்தியாசமான உரிமையைத்தான் ஜாயிண்ட் டெனன்சி Joint Tenancy என்று அங்கு சொல்லிக் கொள்கிறார்கள்.
அதே போன்றே, இந்தியாவில் இந்துக்களின் கூட்டு குடும்பத்தில் உள்ளது; ஆனால் இது சற்று வித்தியாசமாக இருக்கும்; இங்கிலாந்து ஜாயிண்ட் டெனன்சி உரிமையைப் போலவே இருந்தாலும், சில விஷயங்கள் மட்டும் வித்தியாசமாக மாறு பட்டிருக்கும்; இந்து குடும்பங்களில் (பழைய இந்து சட்ட வழக்கப்படி) ஆண்களுக்கு மட்டுமே சொத்தில் உரிமை உண்டு; பெண்களுக்கு உரிமை கிடையாது; உரிமை கிடையாதே தவிர, அவர்களை காப்பாற்றுவதும், திருமணம் செய்து கொடுப்பதும், வாழ்நாள் வரை அவர்களுக்கு உதவி செய்வதும் இந்து குடும்பங்களில் உள்ள ஆண்களுக்கே பொறுப்பு;
ஆண்கள் மட்டுமே சொத்தை கூட்டாக அனுபவிப்பர்; பொதுவாக, ஒரு இந்து குடும்பத்தில் ஒருவர் இருந்தால், அவரும், அவரின் மகனும், அந்த மகனின் மகனான பேரனும், அந்த பேரனின் மகனான கொள்ளுப் பேரனும், ஆக அந்த ஒருவருடன் மூன்று வாரிசுகள் சேர்ந்து (மகன், பேரன், கொள்ளுப்பேரன்) ஆக மொத்தம் அந்த நான்கு ஆண்களும் சேர்ந்து அவர்களின் சொத்தை அனுபவிப்பர்; இந்த நான்கு பேரும் அந்த சொத்தை, இங்கிலாந்து முறைப்படி, கூட்டாக Joint Tenancy என்ற முறைப்படி அனுபவிப்பர்; யாருக்கும் அந்தச் சொத்தில் தனி உரிமை கிடையாது; தனியாக விற்கவும் முடியாது;
ஆனால் சண்டை போட்டுக் கொண்டு கூட்டுக் குடும்பத்தை விட்டு விலகினால், அவருக்குறிய பங்கை பிரித்துக் கொடுத்து விலக்கி விடலாம்; இப்படிப்பட்ட கூட்டுக் குடும்பத்தில் உள்ள ஒரு ஆண் இறந்து விட்டால், அவரின் பங்கு மற்ற ஆண்களுக்குப் போய் சேர்ந்து விடும்; அவரின் மனைவி, மகன்களுக்கு தனியே போகாது; இது கிட்டத்தட்ட இங்கிலாந்து கூட்டுப் பங்குரிமை என்னும் Joint Tenancy போன்றதே!
இந்து குடும்பத்தில் ஆண்வாரிசுகளில் மேற்சொன்ன நான்கு தலைமுறைகள் மட்டும் இந்த கூட்டுரிமை பங்கில் பங்குதாரர்கள் ஆவார்கள்; இவர்களை இங்கிலாந்து முறைப்படி ஜாயிண்ட் டெனன்சி Joint Tenancy என்று சொல்ல மாட்டார்கள்; இவர்களை கோபார்சனர்கள் Coparceners என்ற பெயரில் அழைப்பர்; சட்டமும் இவர்களை இந்து கூட்டு பங்குரிமையாளர்கள் என்றும் Hindu Coparceners என்று அழைக்கிறது;
பழைய இந்து குடும்ப வழக்கப்படி, தனி தொழில்கள் கிடையாது; அவரவர் அவர்களின் குடும்பத் தொழில்களான, விவசாயம், வியாபாரம், கைத்தொழில் இதில் ஏதாவது ஒன்றை அந்தக் குடும்பம் செய்துவரும்; அதில் தந்தையுடன் மகனும், மகனுடன், அவர் மகனும், அந்தப் பேரனுடன் அவர் மகனும் கூட்டுக் குடும்பமாகவே இருந்து தொழில் செய்வர்; வருமானம் பொதுவானதே!
வருமானம் பொதுவானது என்றால் குடும்ப சண்டைக்கு வேலையில்லை! அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்கள், அந்த குடும்ப “உறுப்பினர்கள்” அவ்வளவே! பெண்கள் ஒருபோதும் கோபார்சனர்கள் ஆக முடியாது;  அவர்களுக்கு உணவு, உடை, பாதுகாப்பு, கிடைக்கும்; திருமண வயதில் திருமணம் செய்து கொடுப்பர்; கணவர் இறந்துவிட்டால், தந்தை வீட்டுக்கு வந்து வசிக்கலாம்; வாழ்நாள் வரை வசிக்கும் உரிமை மட்டுமே; சொத்தில் எந்த உரிமையும் கிடையாது;
எனவே இந்து கூட்டுக் குடும்பம் என்பது கிட்டத்தட்ட ஆங்கிலேயர்களின் ஜாயிண்ட் டெனன்சி முறையிலானது; இங்கு இதை வேறு பெயர் சொல்லி அழைக்கிறார்கள்; அது கோபார்சனரி உரிமை என்றும் இந்து கூட்டுப் பங்குரிமை என்றும் சொல்கிறார்கள்; இதற்கு பொருள் என்னவென்றால், சொத்து இருக்கும்போது சம உரிமையுடன் அனுபவிக்கலாம்; இறந்தால் அவரின் வாரிசுகளுக்குப் பங்கு கிடையாது;

**

No comments:

Post a Comment