Friday, July 29, 2016

அடமானக் கடன்கள் சட்டம்-(1)

அடமானக் கடன்கள் சட்டம்-(1)
சொத்துக்களை அடமானமாகக் கொடுத்து கடன் பெறுவது அடமானக் கடன்; பணம் கொடுப்பவரிடமே சொத்தை ஒப்படைத்து விடுவது; பணம் கொடுத்தவர் சொத்தை அனுபவித்து வருவார்; கடன் வாங்கியவர் எப்போது பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறாரோ அன்று அவர் சொத்தை திரும்ப பெற முடியும்; அதுவரை கடன் கொடுத்தவரே சொத்தின் சொந்தக்காரர் போல சொத்தை அனுபவிப்பார்; ஒருவேளை, கடன் வாங்கியவர், கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போய்விட்டால், அவ்வளவுதான்! கடன் கொடுத்தவருக்கே சொத்து சொந்தமாகிவிடும்! கடன் வாங்கியவர் சொத்தை இழந்துவிட வேண்டியதுதான்! இப்படித்தான் பழங்காலத்தில் கடன் வாங்கி, சொத்தை அடமானம் வைத்திருக்கிறார்கள்; அந்த வகை அடமானத்தை "மார்ட்கேஜ்" Mortgage என்பர்; mort மார்ட் என்றால் இறந்த என்று பொருள்;  gage கேஜ் என்றால் பிணை என்று பொருள்
மார்ட்கேஜ் என்பது பிரென்ச் வார்த்தை; இதைத்தான் இங்கிலாந்து சட்டம் Morguam vadium (or Dead Pledge)  என்று சொல்கிறது; அப்படி அடமானம் வைக்காமல், சொத்தை ஒப்படைத்து அதில் வரும் வருமானங்களை மட்டும், கடன் கொடுத்தவர் அனுபவித்துக் கொண்டு வந்து, ஒரு காலக்கட்டத்தில் சொத்தை திரும்ப ஒப்படைப்பது என்பது ஒரு வகை அடமானம்; இதில் சொத்து பறிபோகாது; இதை இங்கிலாந்து சட்டம் Vivium Vadiam (or Living Pledge) என்கிறது;
இப்படித்தான் பழங்காலங்களில் அடமானங்கள் இருந்திருக்கின்றன; அடமானக் கடன் வாங்குவது என்பது கிட்டத்தட்ட சொத்தை விற்பதற்குச் சமம்! கடனை திரும்பிக் கொடுத்தால் மட்டுமே சொத்து திரும்பக் கிடைக்கும்! இல்லையென்றால், கடன் கொடுத்தவரின் சொத்தாகிவிடும்!
இந்தியாவில் இப்படிப்பட்ட அடமான முறைதான் வழக்கத்தில் இருந்திருக்கிறது; கடன் கொடுத்தவருக்கு சொத்தை கிரயமாகக் கொடுத்து விடுவது; கடன் வாங்கியவர், பணத்தை திரும்பிக் கொடுக்கும்போது, கடன் கொடுத்தவர், சொத்தை மறு-கிரயம் எழுதிக் கொடுப்பார்; இதை சென்னை மாகாணத்தில், "அவதி விக்கிரயம்" என்ற பெயரில் நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர்; இது ரோமன் சட்டத்தில் உள்ள பிடுசியா Fiducia அடமான முறை ஆகும்; (Fiducia = கடன் வாங்குபவர் அவரின் சொத்தை, முழு உரிமையுடன் கிரயமாக, கடன் கொடுத்தவருக்கு எழுதிக் கொடுத்துவிடுவது);
மற்றொரு அடமான கடன் முறைப்படி -- சொத்தின் உரிமையாளர், கடன் வாங்கும்போது, அவரின் சொத்தை, கடன் கொடுத்தவருக்கே கொடுத்து விடுவார்; ஆனால் கடன் கொடுத்தவர், அந்த சொத்தை வட்டிக்காக, அல்லது அசலுக்காக, அந்தச் சொத்தில் வரும் வருமானங்களை அனுபவித்துக் கொள்வார்; ஒரு குறிப்பிட்ட கால முடிவில், அந்த சொத்தை, கடன் வாங்கியவருக்கே (அந்த சொத்தின் உரிமையாளருக்கே) திரும்ப ஒப்படைத்து விடுவார்; இதில் அந்த அடமானச் சொத்து திரும்ப கிடைத்து விடும்சொத்து பறிபோகாது; இந்த முறைக்கு ரோமன் சட்டத்தில் பிக்னஸ் அடமானம் Pignus என்று பெயர்; இங்கிலாந்தில் இதை யூசுபிரக்சுரி அடமானம் Usufructuary mortgage  என்று பெயர்; Use the Fruits. பலனை அனுபவித்துக் கொள் என்பதாகப் பொருள்
இந்த வகை அடமானமுறை தென் இந்தியாவிலும் இருந்திருக்கிறது; இதையே "போக்கிய அடமானம்" அல்லது "சுவாதீன அடமானம்" என்று சொல்வர்; மலபார் பகுதியில் இதையே "கனம்" அல்லது "ஒத்தி" என்று சொல்வர்;
முகமதிய சட்டத்திலும், அவதி விக்கிரயம் என்ற வகை அடமானம் போன்றே அடமான முறை இருந்திருக்கிறது; அதற்குப் பெயர் "பை-பில்-வாபா" "Bye-bil-wafa" என்று பெயர்; இதில் வட்டிப் பிரச்சனை இல்லை; குரான் கட்டளைப்படி முகதியர் எவரும் வட்டி வசூல் செய்யக் கூடாது; எனவே கடன் வாங்கியவர் சொத்தை, கடன் கொடுத்தவருக்கு கிரயமாகவே கொடுத்துவிட வேண்டும்; அந்த தொகையுடன் மேலும் ஒரு தொகை சேர்த்து திரும்பக் கொடுக்கும் காலத்தில், மறு கிரயம் எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும்;

**

No comments:

Post a Comment