Wednesday, July 27, 2016

42-வது திருத்தச் சட்டம்

42-வது அரசியல் சாசன திருத்தச் சட்டம்
இந்த 42-வது திருத்தச் சட்டமானது 1976 டிச. 18-ம் தேதி கொண்டு வரப்பட்டது; இந்த திருத்தச் சட்டம்தான், எமெர்ஜன்சி சட்டம் அமலில் இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்டது; அப்போது பிரதமராக இந்திராகாந்தி இருந்தார்; இந்த திருத்தச் சட்டம்தான் அதிக விமர்சனத்துக்கும் உட்பட்டது என்று சொல்லலாம்;
இந்திய அரசியல் சாசன சட்டத்தின்படி, இந்திய குடிமகனுக்கு சில அடிப்படை உரிமைகளை வழங்கி உள்ளது; இதை யாரும் மாற்றிவிட முடியாது; பார்லிமெண்ட் நினைத்தால் எந்தச் சட்டமும் கொண்டு வரலாம்; ஆனால், அந்த பார்லிமெண்டும் இந்த “அடிப்படை உரிமைகளை” மட்டுமே மாற்றி விட முடியாது; இப்படி ஏதாவது மாற்றிவிட நினைத்து, சட்டம் கொண்டு வந்தால், அதை சுப்ரீம் கோர்ட் விசாரித்து, அடிப்படை உரிமைக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பாதுகாக்கும் உரிமையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு உண்டு:
இப்படி இருந்த நிலையை, இந்த 42-வது திருத்தச் சட்டம் மாற்றி விட்டது; அதன்படி, பார்லிமெண்டுக்கே முழு உரிமை உண்டு என்றும், பார்லிமெண்ட் நினைத்தால், குடிமகனின் அடிப்படை உரிமைகளைக்கூட கட்டுப்படுத்தி சட்டம் இயற்றிவிட முடியும் என்றும், அதை எதிர்த்து கேள்வி கேட்டு கோர்ட்டுக்கு போக முடியாது என்றும், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் இவைகளுக்கு, பார்லிமெண்ட் சட்டம் இயற்றிய அதிகாரத்தை கேள்வி கேட்க அதிகாரம் இல்லை என்றும், இந்த திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது;
இந்த 42-வது திருத்தத்தை எல்லாம், 1977ல் வந்த ஜனதா கட்சி ஆட்சியில் ரத்து செய்து விட்டது; அப்படி ரத்து செய்த சட்டங்கள்தான், 43, 44-வது திருத்தச் சட்டங்கள்;
மினர்வா மில்ஸ் -எதிர்- இந்திய யூனியன் என்ற வழக்கில் 1980ல் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது; (AIR 1980 SC 1789) அதில் இந்த 42-வது திருத்தத்தில் சொல்லி இருந்த, “திருத்தம் செய்யும் பார்லிமெண்ட் அதிகாரத்தை கேள்வி கேட்கும் உரிமை சுப்ரீம் கோர்ட்டுக்கு இல்லை” என்று இருந்ததை தவறு என்று தீர்ப்பு கூறி உள்ளது; இந்த வரலாற்று தீர்ப்பை அப்போதைய இந்திய தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட், மற்றும் நீதிபதிகள் ஏ.சி.குப்தா, என்.எல்.உண்ட்வாலியா, பி.எஸ்.கைலாசம், பி.என்.பகவதி ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் பெஞ்ச் தீர்ப்பை வழங்கியது; இதில் முதல் நான்கு நீதிபதிகளும் பார்லிமெண்ட்டுக்கு அத்தகைய அதிகாரம் இல்லை என்றும், நீதிபதி பி.என்.பகவதி மட்டும் அப்படிப்பட்ட அதிகாரம் பார்லிமெண்டுக்கு உண்டு என்றும் தீர்ப்பை வழங்கினர்;
இந்த தீர்ப்பில் – “அரசியல் சாசன சட்டத்துக்கு என்று சில அடிப்படைத் தன்மைகள் உண்டு என்றும், அதை எந்த பார்லிமெண்டும் மாற்றிவிட முடியாது என்றும்; அரசியல் சாசனத்தில் பார்லிமெண்ட்டுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம், வானளாவிய அதிகாரம் இல்லை; அந்த அரசியல் சாசன சட்டத்துக்கு கட்டுப்பட்ட அதிகாரமே என்றும்; எந்த ஒரு சட்டத்தையும் திருத்தம் செய்யும் அதிகாரம் பார்லிமெண்டுக்கு உண்டு என்றாலும், அதில் கொடுக்கப்பட்டுள்ள “அடிப்படை உரிமை” என்னும் சட்டத்தை பார்லிமெண்டுக்கு அதிகாரம் கிடையாது;” என்றும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது;




No comments:

Post a Comment