Tuesday, August 2, 2016

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்-4

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்-4
(The Constitution of India, 1950)
அடிப்படை உரிமைகளைப் பற்றி சொல்லும்போது, பிரிவு 21 மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது;
பிரிவு: 21: ஒரு தனி மனிதனின் உயிருக்கும், அவன் சுதந்திரத்துக்கும் பங்கம் ஏற்படக் கூடாது; (சட்டத்தால் மட்டுமே சுதந்திரத்தை கட்டுப்படுத்த முடியும்);
Article: 21: “No person shall be deprived of his life or personal liberty except according to procedure established by law.
பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் இந்த பிரிவில்தான் சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்திருந்தன; அதில் முக்கியமான வழக்காக மேனகாகாந்தி வழக்கு உள்ளது; Maneka Gandhi v. Union of India, AIR 1978 SC 597.

மேனகாகாந்தி வழக்கு:
இது 1978-ல் சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கு; இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மொத்தம் ஏழு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்; அவர்கள் முறையே நீதிபதிகளான எம்.எச். பெக் (அப்போதைய இந்திய தலைமை நீதிபதி), ஒய்.வி. சந்திரசூட், பி.என்.பகவதி, வி.ஆர்.கிருஷ்ணய்யர், என்.எல்.பசல்அலி, பி.எஸ்.கைலாசம்.

வழக்கின் சாரம்:
மேனகா காந்திக்கு 1976-ல் பாஸ்போர்ட் வழங்கப் பட்டது; (மேனகாகாந்தி, சஞ்ஞய் காந்தியின் மனைவி; இந்திராகாந்தியின் மருமகள்). ஆனால் 1977-ல் டெல்லி பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து அவருக்கு ஒரு கடிதம் வருகிறது; அதில், அவரின் பாஸ்போர்ட் முடக்கப்படுகிறது என்று தகவல் உள்ளது; எனவே அவரின் பாஸ்போர்ட்டை, அரசிடம் 7 நாட்களுக்குள் ஒப்படைக்கும்படி கேட்கின்றனர்; (அப்போது இந்திராகாந்திக்கும் இவருக்கும் மனஸ்தாபம் இருக்கிறது என்று சொல்லப் படுகிறது); ஏன், என் பாஸ்போர்ட்டை முடக்கினீர்கள் என்று காரணம் கேட்கிறார்; அதற்கு, பப்ளிக் இன்ட்ரஸ்ட் அதாவது பொது நலன் கருதி முடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்ற பதிலை அரசு கொடுக்கிறது;

மேனகா காந்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடுகிறார்; அதில், இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 21-ன்படி, எனக்கு தனிமனித உரிமை உள்ளது; நான் எங்கு வேண்டுமானாலும் செல்ல உரிமை உண்டு; வெளிநாட்டுக்கும் போக உரிமை உண்டு; அதை தடுக்க அரசுக்கு அதிகாரம் இல்லை; அப்படித்தான் அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 21-ல் சொல்லப் பட்டுள்ளது என்று கோர்ட்டில் வாதம் செய்கிறார் அவரின் வக்கீல்;

வெளிநாடு செல்வது என்பது ஒருவரின் தனிமனித சுதந்திரமா என்ற கேள்வியை சுப்ரீம் கோர்ட் முன்வைக்கிறது;

பிரிவு 21ல் கூறியுள்ள பெர்சனல் லிபர்ட்டி என்னும் தனிமனித உரிமை என்பது வெளிநாடு செல்வதற்குறிய உரிமையையும் குறிக்கும் என்றும், வேறு ஏதாவது சட்டம் இருந்து தடுத்தால் ஒழிய, தனி மனிதனை, அரசு, வெளிநாட்டுக்கோ, உள்நாட்டிலேயே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கோ இடம் பெயர்ந்து செல்வதை தடுக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் அந்த தீர்ப்பில் கூறியுள்ளது;

இந்த வழக்கின் தீர்ப்பு அப்போது மிகப் பிரபல்யமாகப் பேசப்பட்டது; இன்றும் இந்த தீர்ப்பு, பல வழக்குகளில் முன் வைத்து பேசப்படுகிறது; அந்த அளவுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக அமைந்து விட்டது;

**

No comments:

Post a Comment