உயில் புரபேட்-1 (Will Probate)
ஒருவர், தன் வாழ்நாளுக்குப் பின்னர், அவரின் சொத்துக்களை, உயில்
மூலம், அவர் விரும்பும் நபருக்கு கொடுக்கலாம்! அப்படி எந்த உயிலும் எழுதி வைக்காமல்
அவரின் சொத்தை விட்டுவிட்டு இறந்து விட்டால், அவரின் சட்ட பூர்வ வாரிசுகளுக்குச் சென்று
விடும்; உயில் எழுதி வைத்தால், அவர் விரும்பியவருக்கு கொடுத்து விடலாம்; உயில் எழுதாமல்
இறந்தால், சட்டபூர்வ வாரிசுகளை அடையும்;
இந்து மதத்தைச் சார்ந்த ஒரு ஆண், அவரின் சொத்தை உயில் எழுதி
வைக்காமல் இறந்து விட்டால், அவரின் வாரிசுகளான, அவரின் தாயார் (அப்போது உயிருடன் இருந்தால்),
மனைவி, மகன்கள், மகள்கள் இவர்களுக்கு மட்டும் போய்ச் சேரும்; இவர்கள் அனைவருமே முதல்கட்ட
வாரிசுகள் ஆவார்கள்; இறந்தவரின் தந்தைக்குப் போகாது; அவர் இரண்டாம் கட்ட வாரிசாக வருகிறார்;
முதல் கட்ட வாரிசுகள் யாரும் இல்லை என்றால் மட்டுமே, இரண்டாம் கட்ட வாரிசாக, தந்தை,
அவரின் இறந்த மகனின் சொத்து முழுவதையும் அடைவார்; முதல் கட்ட வாரிசுகள் யார் யார் அப்போது
உயிருடன் இருக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் தலைக்கு ஒரு பங்குவீதம் சொத்தை அடைவார்கள்;
இந்து மதத்தைச் சார்ந்த
பெண் ஒருவர், தன் சொத்தை விட்டுவிட்டு, உயில் எழுதி வைக்காமல் இறந்து விட்டால், அந்தச்
சொத்து, அவரின் கணவர், மகன்கள், மகள்கள் அடைவார்கள்; இந்துமதப் பெண்ணுக்கு குழந்தைகள்
இல்லை என்றால், அந்தப் பெண்ணின் சொத்து வேறு மாதிரி வாரிசுகளை அடையும்; அதாவது, (1)அந்த
பெண்ணுக்கு குழந்தை இல்லாமல் இறந்து விட்டால், இறந்த பெண்ணின் சொத்து சுய சம்பாத்திய
சொத்தாக இருந்தால், அவளின் கணவருக்குப் போய்ச் சேரும்; கணவரும் இல்லையென்றால், கணவரின்
வாரிசுகளுக்குப் போய் சேர்ந்துவிடும்; (2)இறந்த பெண்ணுக்கு, குழந்தையும் இல்லாமல்,
இருந்தால், அவளின் சொத்து, தன் பெற்றோரிடமிருந்து கிடைத்த சொத்தாக இருந்தால், அந்த
சொத்து, திரும்பவும் அவளின் தந்தைக்கே போய்ச் சேர்ந்துவிடும்; (3) இறந்த பெண்ணின் சொத்து,
கணவரின் தகப்பனாரான மாமனாரிடமிருந்து கிடைத்து இருந்தால், அது அவளின் மாமனாருக்கே போய்ச்
சேர்ந்து விடும்; இப்படியாக, குழந்தை இல்லாமல் இறந்த இந்து பெண்ணின் சொத்து மூன்று
வகைகளில் அந்தந்த வாரிசுகளை அடையும்;
No comments:
Post a Comment