Thursday, May 4, 2017

சிதம்பரம் கோயில் வழக்கு 1890-ல்

சிதம்பரம் கோயில் வழக்கு 1890-ல்
Natesan (Chidambaram) case
Natesa and others Vs Ganapati and others
Citation: (1891) LIR 14 Mad 103
Madras High Court Judgment delivered by Justice Muthusami Ayyar and Justice Shephard in the year 1890.

கணபதி வகையறா இந்த வழக்கைப் போடுகிறார்கள். அதில், நடேசன் வகையறாக்கள் தர்மகர்த்தாக்களாக இருப்பதை நீக்க வேண்டும் என்று போட்ட வழக்கு. நடேசன் வகையறாக்கள், தென்னார்காடு மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் உள்ள சபா நாயகர் கோயிலில் இவர்கள் தர்மகர்த்தாக்களாக இருக்கிறார்கள். வாதிகளும், பிரதிவாதிகளும் தீட்சிதர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். தீட்சிதர் என்றால் ஸ்மார்த்தா பிராமணர்கள் ஆவர். இவர்களே காலங்காலமாக தீட்சிதர்களாக இருந்து வருகிறார்கள். இந்த தீட்சிதர்கள் சுமார் 250 குடும்பங்களாக சிதம்பரத்தில் வசித்து வருகிறார்கள். அந்தக் கோயிலில் வரும் வருமானங்களைக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இது பல்லாண்டு காலமாக இருந்துவரும் நடைமுறை. ஒரு தீட்சிதருக்கு திருமணம் ஆகிவிட்டால், அவர் இந்த கோயில் நிர்வாகத்தில் பொறுப்பில் வருவார். அப்படி வரும்போது, அங்குள்ள சிறு தெய்வங்களுக்கு பூஜை செய்யும் உரிமை கிடைக்கும். ஆனாலும் அவருக்கு மூலவருக்கு பூஜை செய்யும் உரிமை கிடைக்காது. அப்படி மூலவருக்கு பூஜை செய்ய வேண்டுமானால், அவருக்கு 25 வயது தாண்டி இருக்க வேண்டும். மேலும் தீட்சை பெற்றிருக்க வேண்டும்.

சிதம்பரத்தில் மொத்தம் ஐந்து தெய்வங்கள் உள்ளன; (1) சித் சபை, (2) கனக சபை, (3) தேவ சபை, (4) அம்மன் கோயில், (5) மூலஸ்தானம். இதில் முதலில் சொன்ன சித் சபையே பிரதானமானது. அங்கு கோயில் கொண்டிருக்கும் கடவுளுக்குப் பெயர் சபா நாயகர் என்னும் நடேசர்; அங்கு ஆகம விதிப்படி முதலில் பூஜை செய்து விட்டுத்தான் மற்ற தெய்வங்களுக்கு பூஜை செய்ய வேண்டும் என்பது நியதி;

இந்த கோயில்கள் மராமத்து செய்ய வேண்டிய நிலையில் இருந்தன; எனவே பெரும் பணக்காரர்கள் அதைச் செய்ய முன் வந்தார்கள். அதில் நாட்டுக் கோட்டை செட்டியார்கள் சமுகத்தைச் சேர்ந்த பெரும் தனவந்தர்கள் இதை ஒரு தர்ம காரியமாகக் கருதி செய்ய முன்வந்தார்கள். நாட்டுக்கோட்டை செட்டியார்கள் மதுரை மாவட்டத்தில் வசிப்பவர்கள். இதற்காக, 1877 முதல் 1881 வரையிலான காலங்களில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் சேர்ந்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் அளவுக்கு தர்ம நன்கொடைகள் பெற்றுக் கொண்டார்கள்; அவர்களில் முக்கியஸ்தர்கள் சிலர் சிதம்பரம் கோயிலை பார்வையிட்டார்கள்; தீட்சிதர்களுடன் ஒரு உடன்படிக்கையை 1881-ல் ஏற்படுத்திக் கொண்டார்கள். அந்த உடன்படிக்கைக்குப் பெயர் சமக்கியா. அதன்படி, செட்டியார்கள் இந்த மரமத்து வேலைகளைச் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது. செட்டியார்களில் ஒருவரான சிதம்பர செட்டியார் அந்த வேலைகளை கண்காணித்தார். 1882 வரை தீட்சிதர்களுக்கும் செட்டியார்களுக்கும் இது விஷயமாக நல்ல உறவு இருந்தது. அங்கு ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது. அதை இடித்து மாற்றி அமைக்க வேண்டி இருந்தது. அப்படிச் செய்வதென்றால், அதற்கு ஒருசில சடங்குகள் செய்ய வேண்டுமாம். அதற்குப் பெயர் வாலா ஸ்பந்தனம். அதற்கு ஒரு நாளும் குறித்தனர். அப்படி ஒரு நாளைக் குறிக்கும்போது, தீட்சிதர்களில் மூத்தவரான சபாநடேசனும் அவருடன் சேர்ந்த ஒரு பத்து தீட்சிதர்களும் அந்த நாளுக்கு ஆட்சேபனை தெரிவித்தனர். மற்ற பல தீட்சிதர்கள் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இங்கு பிரச்சனை ஏற்படுகிறது. அதிகமான தீட்சிதர்கள் எடுத்த முடிவு சரியா? அல்லது மூத்த தீட்சிதரும் அவரின் ஆட்களும் சொல்வது சரியா என்ற பிரச்சனையும் கூடவே எழுந்தது. இவர்களுக்குள் தகராறு வந்துவிட்டது. போலீஸ் கூட இதில் தலையிட வேண்டியதாகி விட்டது. அதிலிருந்து தீட்சிதர்களுக்குள் இரண்டு கோஷ்டி ஆகிவிட்டது. மைனாரிட்டி தீட்சிதர்கள் காலப்போக்கில் கூட்டம் சேர்த்துக் கொண்டனர். செட்டியார்கள், மைனாரிட்டி தீட்சிதர்கள் பேச்சை கேட்கவில்லை. இது பெரிய பிரச்சனை ஆகிவிட்டது.

1881-க்கு சுமார் 30 வருடங்களுக்கு முன்னர், தீட்சிதர்களுக்குள் ஒரு உடன்பாடு உள்ளது. அதன்படி, கோயில் பக்தர்கள் தரும் காணிக்கைகளை பெற்று அவைகளை பிரித்துக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறையை மாற்றி, 20 நாட்களுக்கு ஒருமுறை அந்த உரிமை ஏலம் போடப்படும் என்று மாற்றி அமைத்துக் கொண்டார்கள். அந்த ஏலத்தை கனகசபை கோயில் விளக்குத்தூணுக்கு அருகில் நடத்துவர். அதை ஒரு பண்டாரம் அல்லது பொதுவான ஆள் முன்னிலையில் நடத்துவர். அதன்படி ஏலம் எடுத்தவர், கோயில் வரும்படியைக் கொண்டு, கோயில் நிர்வாகச் செலவைச் செய்தும், வேலையாட்களுக்கு சம்பளம் கொடுத்தும், மராமத்து வேலைகள் செய்தது போக, மீதி உள்ள தொகையை தீட்சிதர் குடும்பங்களுக்கு பிரித்துக் கொடுப்பர்.

ஆனால், இப்போது, தீட்சிதர்களுக்குள் இரண்டு கோஷ்டி உருவானதால், யார் வசுல் செய்வது என்ற முறைக்காரர் வேலையில் பிரச்சனை ஏற்படுகிறது. யார் சுவாமிக்கு பூஜை செய்கிறாரோ, அவரே தட்சனைகளை எல்லாம் எடுத்துக் கொள்கிறார், பொதுவான வருமானமாகக் கொடுக்கவில்லை. திருவிழாச் செலவுக்கு பணம் கிடைப்பதில்லை. எனவே மறுபடியும் பேச்சு வார்த்தை நடக்கிறது. ஏலத்தை 11 நாட்களுக்கு ஒரு முறை என மாற்றிக் கொள்கின்றனர். முதல் 11 நாட்கள் முடிந்தவுடன், தீட்சிதர்களில் மெஜாரிட்டி கோஷ்டி, மறுபடியும் பழைய முறைக்கே மாறிக் கொள்வோம் என்று கூறுகிறது. மைனர் கோஷ்டி ஆட்சேபிக்கிறது. வழக்கப்படி, பொதுமனிதர் ஒருவர் கனகசபை கோயிலிருந்து விளக்கை கொண்டுவர வேண்டும். அப்போது பிரச்சனை ஏற்பட்டு அடிதடி நடக்கிறது. பலருக்கு காயம். மைனர் கோஷ்டிகள், செட்டியார்கள் செய்யும் மராமத்து வேலையைச் செய்யவிடாமல் தடை செய்கிறது. மாரமத்து ஆகம விதிகளை மீறியது என்று ஆட்சேபம் செய்கிறது. அவர்கள், “இந்த கோயில் இறைவனால் படைக்கப்பட்டது; அதை மீறி அதை ரிப்பேர் செய்யக் கூடாது; அதனால் அதன் அசல் தன்மை பாதித்து விடும்” என்று காரணம் சொல்கிறது.

இப்படியாகப் பிரச்சனை ஏற்பட்டு, வழக்கு மாவட்டக் கோர்ட்டுக்கு செல்கிறது. பல பிரச்சனைகளை கோர்ட்டில் எழுப்புகிறார்கள். சித்த சபை கோயிலின் சாவியை முறைவைத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்கிறார்கள். இதுவரை அப்படி பழக்கமில்லை. சுவாமிக்கு அணியும் நகைகளும் பண்ட பாத்திரங்களும் குறைகிறது என்றும், அதை மைனாரிட்டி கோஷ்டிகளின் காலத்தில்தான் குறைந்தது என்றும் குற்றச்சாட்டு; அதனால் மைனாரிட்டி கோஷ்டியில் உள்ளவர்களை தர்மகர்த்தா நிலையில் இருந்து நீக்க வேண்டும் என்றும், மராமத்து வேலைகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் வழக்கு. அவர்கள் கோயில் நிர்வாகத்தின்போது, ரூ.11,800 அளவுக்கு காணமல் போன பொருள்களின் மதிப்பை ஈடுசெய்ய வேண்டும் என்றும் கேட்கிறார்கள்.

மாவட்ட கோர்ட், கோயில் நிர்வாகிகளில் சிலர் தவறு செய்துள்ளார்கள் என்று தீர்ப்பு வழங்குகிறது.

அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்கிறார்கள். மாவட்ட கோர்ட் தீர்ப்பை ஐகோர்ட்டும் உறுதி செய்கிறது.

**

No comments:

Post a Comment