Veeran Ambalam case
வீரன் அம்பலம் வழக்கு
Veeran Ambalam vs Vellaiammal and others
Citation: in the year 1959
வீரன் அம்பலம் Vs. வெள்ளையம்மாள் மற்றும் பலர்.
பிரதிவாதிகளுக்குச்
சொந்தமான நிலங்களை 1951-ல் வாதிக்கு ஒத்தி பத்திரம் எழுதிக் கொடுத்த கடன்
வாங்குகின்றனர். அதுமுதல் வாதிகள் நிலத்தை அனுபவிக்கிறார். ஆனாலும், பிரதிவாதிகள்
பயிர் செய்து மகசூல் கொடுக்க வேண்டும் என்று ஏற்பாடு. பிரதிவாதிகள் ஒழுங்காக
மகசூல் கொடுக்கவில்லை. எனவே வாதி, மேலூரில் உள்ள முன்சீப் கோர்ட்டில் 1953-ல்
சிவில் வழக்குப் போட்டு, மகசூல் பணத்துக்கு டிகிரி வாங்கி விடுகிறார். பணம்
கொடுக்க முடியாத பிரதிவாதிகள், தங்களின் ரூ.2075/- பெறுமானமுள்ள நிலத்தை வாதியே
விலைக்கு எடுத்துக் கொள்ளும்படியும், ஒத்திக் கடன், மகசூல் டிகிரி கடன் போக,
பாக்கிப் பணத்தைக் தங்களுக்குக் கொடுக்கும்படி வாதியைக் கேட்டுக் கொள்கிறார்கள்.
வாதி அவர்களுக்கு ரொக்கமாக ரூ.300 கொடுக்கிறார். கிரயப் பத்திரம் எழுதி வாங்கிக்
கொள்கிறார். அந்தக் கிரயப் பத்திரத்தில் சாட்சிகளும் வாங்கிக் கொள்கிறார். ஐந்து
நாட்கள் கழித்து, வாதி அந்த கிரயப் பத்திரத்தை தாமரைப்பட்டி சப்-ரிஜிஸ்டிரார்
ஆபீஸில் பதிவு செய்வதற்கு கொடுக்கிறார். அந்த பத்திரத்தில் நிறைய அடித்தல்,
திருத்தல்கள் இருப்பதாகவும், வேறு புதிய ஸ்டாம்ப் பேப்பரில் புதிய பத்திரத்தை
எழுதிக் கொண்டு வரும்படி, ரிஜிஸ்டிரார் அவர்களைத் திரும்ப அனுப்பி விடுகிறார். மாவட்ட
பதிவாளரிடம் அதே பத்திரத்தை கொடுத்து பதிவு செய்யலாம் என்று நினைத்துப்
போகும்போது, பிரதிவாதிகளின் ஆட்கள், அப்படிச் செய்ய வேண்டாம் எனத் தடுத்து
விடுகின்றனர். எனவே பிரதிவாதிகள் திரும்ப வந்துவிடுகின்றனர். அந்தப் பத்திரத்தை
பதிவு செய்ய வேண்டும் என்று வாதி கேட்டபோது, பிரதிவாதிகள் சாக்குப் போக்கு சொல்லி,
பதிவுக்கு காலதாமதம் செய்கிறார்கள். எனவே வாதி, அந்தக் கிரயப் பத்திரத்தை பதிவு
செய்ய முடியாமல் போகிறது.
இதற்கிடையில்,
பிரதிவாதிகள், வாதியை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்து, பழைய தேதி (1954ம் வருட
முன்தேதியிட்ட) பத்திரப் பேப்பர்களை வாங்கி, அதை ஒரு கிரயப் பத்திரமாக எழுதி,
அவரின் உறவினருக்கு (உறவினர் 3-ம் பிரதிவாதி ஆவார்) விற்பனை செய்ததுபோல, எழுதிக்
கொள்கின்றனர். எனென்றால், வாதி, இந்தச் சொத்தைக் கிரயம் எழுதி வாங்குவதற்கு
முன்பே, பிரதிவாதிகள்-1,2 பேரும், 3-ம் பிரதிவாதிக்கு ஏற்கனவே கிரயப் பத்திரம்
எழுதிக் கொடுத்ததுபோல இருக்கட்டும் என்று நினைத்து அவர்களின் ஆட்கள் சொன்ன
யோசனையின்படி இந்தச் செயலைச் செய்து கொள்கிறார்கள்.
இங்கு, 3-ம் பிரதிவாதி
உண்மையில் இந்த சொத்தை வாங்கியவர் இல்லை. பேருக்காக ஒரு கிரயப் பத்திரம் எழுதி
வாங்கியதுபோல செய்து கொண்டார். இது வாதியை ஏமாற்றுவதற்காகச் செய்தது.
எனவே, பிரதிவாதிகள் 1-2
நபர்கள் இருவரும் வந்து வாதிக்கு கிரயப்பத்திரம் பதிவு செய்து கொடுக்க வேண்டும்
என்று கோர்ட்டில் வழக்குப் போடுகிறார்.
கோர்ட்டில் பிரதிவாதிகளின் வாதம் என்னவென்றால், வாதி கோர்ட்டில் இந்த வழக்குப்
போட முடியாது. ஏற்கனவே எழுதிக் கையெழுத்து செய்த கொடுத்த பத்திரமாக இருப்பதால், பத்திரப்
பதிவாளரிடம் கட்டாயப் பதிவுக்குத்தான் முறையிட வேண்டும். அதைவிடுத்து, பிரதிவாதிகள்
வந்து பதிவு செய்து தர வேண்டும் என்று கோர்ட்டில் வழக்குப்போட முடியாது (Specific
performance suit) என்று வாதம் செய்கிறார்கள்.
இரண்டு கீழ்கோர்ட்டுகளும் பிரதிவாதிகளின் இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு வாதியின்
வழக்கைத் தள்ளுபடி செய்கின்றன. வழக்கு ஐகோர்ட்டுக்கு வருகிறது.
ஒரு பத்திரத்தை எழுதிக் கையெழுத்து போட்டுக் கொடுத்து விட்டு, பின்னர் பதிவு
அலுவலகத்துக்கு வராமல் தப்பித்துக் கொண்டு வருகிறார். அப்படி வராமல் போனால்,
அவருக்கு பதிவாளர் நோட்டீஸ் கொடுத்து, அவரை பதிவு அலுவலகத்துக்கு வந்து, அவர்
எழுதிக் கொடுத்த பத்திரத்தை ஒப்புக்கொண்டு பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்று
பதிவுச்சட்ட விதிகள் உள்ளன. ஆனால், இங்கு வாதி, அந்த முறையைப் பின்பற்றாமல், நேராக
கோர்ட்டுக்கு வந்து, பிரதிவாதிகளை பதிவு அலுவலகத்துக்கு வந்து பதிவு செய்து
தரும்படி டிகிரி கேட்கிறார். இதில் எந்த முறை சரி என்பதே இங்குள்ள பிரச்சனை.
இந்த வழக்கில், வாதிக்கு, பிரதிவாதிகள் கிரயப் பத்திரம் எழுதிக் கொடுத்து
அதில் கையெழுத்தும் செய்துள்ளார்கள். பத்திர அலுவலகத்துக்கு சென்று பதிவு செய்து
கொடுக்க மறுக்கிறார்கள். ஆனால், பிரதிவாதிகள் 1,2 நபர்கள், வாதியின் கிரயப்
பத்திரத்துக்கு முன் தேதியிட்ட ஸ்டாம்ப் பேப்பர்களை வாங்கி, ஏற்கனவே கிரயம் செய்து
கொடுத்ததுபோல, ஒரு பத்திரத்தை எழுதி, அதை பதிவு செய்து 3-ம் பிரதிவாதிக்குக்
கொடுத்துள்ளார்கள். உண்மையில் 3-ம் பிரதிவாதி, பணம் கொடுத்துத்தான், நேர்மையாக
இந்த கிரயத்தை வாங்கினாரா என்பதும் தெரியாது.
ஒருவேளை, வாதியின் கிரயப் பத்திரத்தை, பதிவு அதிகாரி, பிரதிவாதிகள் 1,2
நபர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து, அவர்கள் வராமல் போய், அதன் அடிப்படையில் அந்த
பத்திரத்தை வாதிக்கு பதிவு செய்து கொடுத்திருந்தாலும், அதற்கு முன்னரே அந்த சொத்தை
பிரதிவாதிகள் 1,2 நபர்கள், 3-ம் பிரதிவாதிக்கு விற்பனை செய்துள்ளதாக பத்திரம்
உள்ளது. எனவே எது செல்லுபடியாகும் என்ற பிரச்சனையும் வருகிறது.
பதிவுச் சட்டப்படி, ஒரு பத்திரம் எழுதிய நான்கு மாதங்களுக்குள் அந்த பத்திரம் பதிவு
செய்யப்படவேண்டும். அதற்குமேல் பதிவு செய்ய முடியாது. எனவே இரண்டு பதிவு
செய்யப்பட்ட பத்திரங்களில் எது முந்திச் செய்யப்பட்ட கிரயம் என்று பார்க்க
வேண்டும். எந்தக் கிரயப் பத்திரமாக இருந்தாலும், கிரயப் பத்திரத்தில் உள்ள கிரய
தேதிதான் கணக்கு; அந்தப் பத்திரம் எந்தத் தேதியில் பதிவு செய்யப்பட்டது என்பதை
கணக்கில் எடுத்துக் கொள்ள சட்டம் அனுமதிக்கவில்லை. உதாரணமாக 1-ம் தேதி எழுதிக்
கையெழுத்துச் செய்யபட்ட பத்திரம் மூன்று மாதம் கழித்து பதிவு
செய்யப்பட்டிருந்தாலும், 5-ம் தேதி எழுதி அன்றே பதிவு செய்யப்பட்ட பத்திரம்
செல்லாது என்பதே பதிவுச் சட்டத்தின் விதி. (ஆனால், தற்போதுகூட, சில பத்திர எழுத்தர்கள்,
கிரயப் பத்திரத்தில் முதல் வரியில் உள்ள கிரய தேதியை கிரய தேதியாக கணக்கிட
மறுக்கிறார்கள். அந்தப் பத்திரம் பதிவான தேதியே பத்திரத்தின் தேதி என்று தவறாக
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; நாம் எடுத்துச் சொன்னாலும், அவர்களால் அதைப்
புரிந்து கொள்ள இயலவில்லை).
ஆக இந்த வழக்கில், வாதி, அவரின் பதிவாகாத பத்திரத்தை பதிவாளர் முன்
சமர்பித்து, எழுதிக் கொடுத்தவர் இல்லாமல் கட்டாயப் பதிவை செய்ய நேரிட்டாலும், அது
செல்லாத தன்மையை அடையும். எனவே அவர் கோர்ட்டை அணுகி, 3-ம் பிரதிவாதிக்கு எழுதிக்
கொடுத்த (முன்தேதியிட்ட பத்திரம் வாங்கி எழுதிக் கொடுத்த) கிரயப் பத்திரம்
செல்லாது என்று கோர்ட் அறிவிக்கும்படியும், அது செல்லாது போனால், வாதியான தனக்கு அவரின்
கிரயப் பத்திரத்தை பதிவு செய்து கொடுக்கும்படியும் டிகிரி கேட்பது சரியானதே;
மற்றொரு வாதத்தையும் ஏற்கலாம் என்றது ஐகோர்ட். ஒரு பத்திரம் எழுதிக்
கையெழுத்துப் போட்டுக் கொடுத்து, பதிவுக்கு போகமால் இருக்கிறது. இதற்கிடையில்,
அந்தப் பத்திரம் காணாமல் போகிறது, அல்லது நெருப்பில் விழுந்து விடுகிறது. அல்லது
உபயோகிக்க முடியாமல் கசங்கிப் போகிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில், கிரயம்
வாங்கியவர், கிரயம் கொடுத்தவரை வேறு ஒரு பத்திரம் எழுதிக் கொடுக்கும்படி கேட்க
முடியும். அதற்காக, அவர் அந்த கிழந்த பத்திரத்தையே பதிவுக்கு கொடுக்க முடியாது.
இந்த வழக்கில் மற்றொரு வாதமானது – ஏற்கனவே பிரதிவாதிகள் 1,2 நபர்கள் வாதிக்கு
எழுதிக் கொடுத்த பத்திரம் பதிவு செய்யாத பத்திரம் என்பதால், அதை கோர்ட்டில் ஒரு
சாட்சியமாக ஏற்க முடியாது என்பது. ஆனாலும், அந்த வாதம் உண்மை என்றாலும், பதிவாகாத
பத்திரத்தை Specific performance என்னும் அந்த உறுதிமொழியை நிறைவேற்றித்தரும்படி கேட்டு
வழக்குப் போடவும், அதில் அந்த பதிவாகாத கிரயப் பத்திரத்தை ஒரு சாட்சியமாக
கோர்ட்டில் கொடுக்கலாம் என்றும் சட்டம் அனுமதிக்கிறது என்று ஐகோர்ட் முடிவு
செய்கிறது.
(இப்போதுள்ள நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக, தமிழ்நாட்டில், இந்த சட்ட
நிலையில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது எல்லாக் கிரய அக்ரிமெண்டுகளும்
கட்டாயமாக பதிவு செய்யப்படவேண்டும் என்றும், அப்படிப் பதிவு செய்யாவிட்டால், அதை
கோர்ட்டில் ஒரு சாட்சியமாக தாக்கல் செய்ய முடியாது என்றும் சட்டத்திருத்தம்
செய்யப்பட்டுள்ளது. அந்த நிலை, Specific performance வழக்குக்கு பொருந்தும் என்றும் சொல்லப்பட்டுள்ளது).
ஆக இந்த வழக்கில், வாதி, கேட்கும் பரிகாரத்தை பெற தகுதி உடையவரே என்று மதராஸ்
ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
**
No comments:
Post a Comment