Thursday, December 27, 2018

சிறப்புத் திருமணச் சட்டம் 1954


சிறப்புத் திருமணச் சட்டம் 1954
The Special Marriage Act, 1954
இது ஏற்கனவே இதே போல இருந்த சட்டமான சிறப்புத் திருமணச் சட்டம் 1872-ஐ ரத்து செய்து, புதிதாக 1954-ல் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.
1954-ன் சிறப்பு திருமணச் சட்டத்தில் மொத்தம் 51 பிரிவுகள் உள்ளன.
பொதுவாக, மதம் சார்ந்த திருமணங்கள்தான் நடக்கும். அதாவது ஒரு இந்து ஆணும் இந்து பெண்ணும் திருமணம் செய்து கொள்வர். அது இந்து முறைப் படியான திருமணம் ஆகும். அதற்கு இந்து முறைப்படியான சட்டமான “இந்து திருமணச் சட்டம் 1955”-ல் உள்ளபடி செய்து கொள்ள வேண்டும்.
அதேபோல ஒரு கிறிஸ்தவ ஆணும், ஒரு கிறிஸ்தவ பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், அது கிறிஸ்தவ முறைப்படியான திருமணம்.  அதற்குறிய சட்டப்படி அதைச் செய்து கொள்ள வேண்டும். இது The Indian Christian Marriage Act, 1872. இது கொச்சின், மணிப்பூர், ஜம்மு-காஷ்மீர் தவிர மற்ற இந்தியாவின் பகுதிகளுக்குச் செல்லுபடியாகும்.
அதேபோல, ஒரு முஸ்லீம் ஆணும், ஒரு முஸ்லீம் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், அது முஸ்லீம் மதச் சட்டப்படியே நடக்கும். அது ஷரியத் சட்டம் 1937-ன்படி செல்லுபடியாகும். The Muslim Personal Law (Shariat) Application Act, 1937.
ஆனால் – இங்கு ஒரு மதத்தைச் சேர்ந்த ஆணும், வேறு ஒரு மதத்தைச் சேர்ந்த பெண்ணும் திருமணம் செய்து கொள்ள நினைத்தால், அவர்களுக்கு என்று வேறு ஒரு சட்டத்தில் திருமணம் செய்ய வேண்டுமே தவிர, அவரவர் மதச் சட்டப்படி திருமணம் செய்ய முடியாது. இதை கலப்பு மதத் திருமணம் எனலாம். இந்தச் சட்டத்துக்குப் பெயர் The Special Marriage Act, 1954.
இந்த சிறப்புத் திருமணச் சட்டம் 1954-ன்படி கலப்புத் திருமணம் செய்து கொள்ள நினைத்தால் கீழ்காணும் நிபந்தனைகள் இருக்க வேண்டும்.
1)     இருவருக்கும் ஏற்கனவே கணவனோ, மனைவியோ இருக்க கூடாது.
2)     இருவரும் சம்மதம் கொடுக்கும் நிலையில் இருக்க வேண்டும்; மனநிலை பிறழ் நோய் இருக்க கூடாது.
3)     ஆணாக இருந்தால் 21 வயது முடிந்திருக்க வேண்டும்; பெண்ணாக இருந்தால் 18 வயது முடிந்திருக்க வேண்டும்.
4)     இருவரும் தடை செய்யப்பட்ட உறவுக்குள் இருக்க கூடாது. (தடை செய்யப்பட்ட உறவு என்பது இருவரின் தாய்-தகப்பன் அவர்களின் மூதாதையர் ஒரே வழியில் இருக்க கூடாது; அதாவது தாய் மாமன் மகள் தடை செய்யப்பட்ட உறவு. அத்தை மகன் தடை செய்யப்பட்ட உறவு; ஆனாலும் ஒரு பகுதியில் இப்படியான உறவுகளை திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இருந்தால், அவர்களுக்கு இந்தச் சட்டத்திலிருந்து விதிவிலக்கு; குறிப்பாக தமிழ்நாட்டில், அத்தைமகன், மாமன் மகள் இவர்களைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கும் உள்ளது; இது இந்தச் சட்டப்படி தடை செய்யப்பட்ட உறவுதான்; ஆனாலும், இது காலம் காலமாக நடைமுறையில் இருப்பதால், இந்தச் சட்டத்திலிருந்து இதற்கு விதிவிலக்காக எடுத்துக் கொள்ளலாம். எனவே இப்படிப்பட்ட திருமணமும் சட்டப்படி செல்லும்).
ஏதாவது ஒரு இடத்தில் இவர்கள் இந்தச் சட்டப்படி திருமண நிகழ்ச்சியை நடத்தி இருந்தாலும், இந்தச் சட்டப்படி, அதை பதிவு செய்யும் அதிகாரி முன்பு (பொதுவான பத்திரம் பதிவு செய்யும் அதிகாரியே இதற்கும் அதிகாரி), மனுக் கொடுத்து, 30 நாட்கள் காத்திருந்து, ஆட்சேபனை ஏதும் உள்ளதா என்று கண்டறிந்து, 30 நாள் முடிவில், இவர்கள் இருவரும் பதிவாளர் முன் ஆஜராகி, ஒருவரை ஒருவர் கணவர்-மனைவியாக ஏற்றுக் கொள்ளுகிறோம் என்று மூன்று சாட்சிகள் முன்னிலையில் உறுதி மொழி எடுத்து, அதன் பின்னர் அந்தத் திருமணத்தை பதிவு செய்து கொண்டால் மட்டுமே, இந்த திருமணம் செல்லும்.
இந்த திருமணத்தின் படி பதிவு செய்து கொண்டவர்களின் குழந்தைகளுக்கு, அவரவர் மதம் சார்ந்த சட்டம் வராது. குழந்தைகளை வளர்ப்பது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவர்களின் காலத்துக்குப் பின்னர், அவர்களின் சொத்துக்கள், அவரவரின் மதம் சார்ந்த சட்டத்தின்படி போகாது. இப்படித் திருமணம் செய்து கொண்டவர்களின் சொத்துக்களில், அவர்களின் வாரிசுகள், இந்தியன் சக்சஷன் சட்டம் 1925 The Indian Succession Act, 1925 சட்டத்தின் படியே வாரிசுகளுக்கு சொத்து போய் சேரும். இந்தியன் சக்சஷன் சட்டம் 1925 என்பது குறிப்பாக கிறிஸ்தவர்களுக்காக ஏற்பட்ட சட்டம். அதன்படியே தான் சொத்தின் வாரிசு உரிமை அமையும். அவரவர் சார்ந்த மத சட்டப்படி அமையாது.
இந்து கூட்டுக் குடும்பத்தில் ஒரு கோபார்சனராகவோ, அல்லது குடும்ப உறுப்பினராகவோ இருந்தவர், இந்த சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி வேறு ஒரு மதத்தின் பெண்ணைத் திருமணம் செய்திருந்தால், அன்றுடன், அந்த நபர், இந்து கூட்டுக் குடும்பத்தின் உறுப்பினர் என்ற உறவை இழப்பார். இந்து கூட்டுக் குடும்பத்தில் உள்ள உரிமைகள் கிடைக்காது. ஆனாலும், அவருக்கு இந்த குடும்பத்தில் இருந்து கிடைக்கும் சொத்துரிமை கிடைக்கும். அது தடை ஆகாது. (The right of succession to any property as a person to whom the Caste Disabilities Removal Act, 1850 applies).
மேலும் ஒரு சிறப்பு திட்டமாக – ஒரு இந்து ஆணும், ஒரு இந்து பெண்ணும், இந்து திருமணச் சட்டம் 1955-ன்படி திருமணம் செய்யாமல் – இந்த சிறப்புத் திருமணச் சட்டத்தின் படி திருமணம் செய்து கொண்டால், (அதாவது ஒரு இந்து ஆணும் ஒரு இந்து பெண்ணும் சிறப்பு திருமண சட்டத்தில் திருமணம் செய்து கொண்டால்) அவர்களுக்கு சலுகையாக அவர்கள் இருவரின் இந்து வாரிசு உரிமை சட்டமே செல்லும் என்று சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இந்தச் சட்டத்தில் சொல்லி உள்ள “இந்தியன் சக்சஷன் சட்டம் 1925” ன்படி வாரிசுகளுக்கு சொத்து பிரிக்க தேவையில்லை. இந்து சட்டப்படியே சொத்துக்களை பிரித்துக் கொள்ளலாம்.
இந்த சிறப்புத் திருமணச் சட்டப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதியர், ஒருவருடன் ஒருவர் வாழாமல் விலகினால், சேர்ந்து வாழும்படி கோர்ட்டில் மனு கொடுத்து சேர்ந்து வாழலாம். நிரந்தரமாக பிரிந்து வாழ நினைத்தால் (டைவர்ஸ் வாங்காமல்) அதற்கும் கோர்ட்டில் மனுச் செய்து பிரிந்தும் வாழலாம். ஆனால் அதற்கு டைவர்ஸ் வாங்குவதற்கு உரிய சட்ட காரணங்கள் இருக்க வேண்டும். பிரிந்து வாழும் காலத்தில் இருவரும் உடலுறவுக்கு அவசியம் இல்லாமல் போகிறது. அவ்வளவே. ஒருவரை ஒருவர் கட்டாயப் படுத்த முடியாது.
மற்றபடி, எல்லாத் திருமணச் சட்டங்களிலும் உள்ளபடியே இதற்கும் டைவர்ஸ் வாங்குவதற்கு காரணங்கள் கூறி டைவர்ஸ் வாங்கிக் கொள்ளவும் முடியும்.
பொதுவாக, இருவர் திருமணம் செய்து கொள்ளும் போது, வயது, சம்மதம், தீராத நோய் இல்லாமல் இருப்பது, மனநிலை பாதிக்காமல் இருப்பது, உடலுறவுக்கு தகுதி இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால், இந்த திருமணத்தை செல்லாது என கோர்ட் அறிவிக்க இயலும். இதில் சில காரணங்களால் திருமணமே செல்லாது Void marriage எனலாம். சில காரணங்களால் ஒருவர் மட்டும் திருமணத்தை ஏற்கவில்லை voidable marriage எனலாம்.
இப்படியான ஒரு சூழ்நிலையில், Void marriage மூலம் ஏற்கனவே அவர்களுக்கு குழந்தை பிறந்தால், திருமணமே செல்லாது என்பதால், அதில் பிறந்த குழந்தையும் சட்டபூர்வ குழந்தையாக இருக்காது. எனவே அவர்களுக்கு யார் தகப்பன், யார் தாய் என்ற ஒரு கேள்விக்குறி ஏற்படும். அதைத் தடுக்க, இந்த சிறப்புத் திருமணச் சட்டத்தில் பிரிவு 26-ஐ சிறப்பாகச் சேர்த்திருக்கிறார்கள். அதன்படி, திருமணம் செல்லாது போனாலும், அதில் பிறக்கும் குழந்தைகள் சட்டபூர்வமான குழந்தைகளே என்றும், அவர்களுக்கும் சட்டப்படியான எல்லா உரிமைகளும் அவர்களின் பெற்றோரிடமிருந்து கிடைக்க வேண்டும் என்று இந்தச் சட்டம் சொல்கிறது. இல்லையென்றால், அவர்களை அனாதை குழந்தைகள் ஆகி விடுவார்கள் என்று சட்ட வல்லுநர்கள் கருதுவதால் இந்த ஏற்பாடு.
இதை ஒரு சட்டம் மூலமாகவே அங்கீகரித்துள்ளனர். அந்தச் சட்டம் The Marriage Laws (Amendment) Act, 1976 என்பதாகும். இது எல்லா மதம் சார்ந்த திருமணத்தின் மூலம் இப்படிப்பட்ட நிலை ஏற்படும்போது, இந்த சட்டம் அப்படிப்பட்ட குழந்தைகளைப் பாதுகாக்க செய்யப்பட்ட ஒரு சிறப்பு ஏற்பாடாகும். 1976-ல்தான் இது கொண்டு வரப்பட்டது.
இந்த சிறப்புத் திருமணச் சட்டத்திலும், (இந்து திருமணச் சட்டத்தில் உள்ளது போலவே) இருவரின் சம்மதத்துடன் டைவர்ஸ் வாங்கிக் கொள்ள வழி உண்டு. அது பிரிவு 28-ல் சொல்லப்பட்டுள்ளது. (இந்து திருமணச் சட்டத்தில் அது பிரிவு 13பி-ஆகச் சொல்லப்பட்டுள்ளது). இதற்கும் திருமணம் முடிந்து ஒருவருடம் ஆகி இருக்க வேண்டும். அப்போதுதான் மனு போட முடியும். மனு தாக்கல் செய்து, ஆறு மாதம் காத்திருக்க வேண்டும். பின்னர்தான் Divorce by mutual consent வாங்க முடியும்.
இங்கும், மற்ற மதச் சட்டங்களில் உள்ளது போலவே ஜீவனாம்ச உரிமையும் பெறலாம். குழந்தைகளின் வளர்க்கும் பொறுப்பையும் Custody of children பெறலாம்.
**

No comments:

Post a Comment