நாட்டியக்காரி சட்டபூர்வ மனைவியா?
சிவசாமித் தேவர் என்பவர், “இராமநாதபுரம்
ஜமின்தார் உரிமைக்கு” தானும் ஒரு வாரிசு என்று ஜமீன் உரிமையைக் கோருகிறார். அப்போது போட்டியில்
இருந்த ஜமீன், அதற்கு ஈடாக அவருடன் 1861 ஜனவரியில் ஒரு உடன்பாடு ஏற்படுத்திக் கொள்கிறார்.
அதன்படி சிவசாமித் தேவருக்கு மாதா-மாதம் ரூ.700/- பணம் வாழ்க்கை ஜீவனத்துக்கு கொடுத்து
விடுவதாகவும், அந்த ஜமீனில் உள்ள சில கிராமங்களையும் கொடுத்து விடுவதாகவும் உடன்பாடு.
எனவே சிவசாமித் தேவர், ஜமின்தார் உரிமை கோரும்
அவரின் உரிமையை விட்டுக் கொடுக்கிறார்.
சிவசாமித் தேவர் பின்னர் 1861
ஜூலை மாதம் 1-ம் தேதி இறந்து விடுகிறார். அவருக்கு ஒரு மனைவி குழந்தை நாச்சியார். மற்றொரு
மனைவி ரமாமணி அம்மாள். ராமாமணிக்கு ஒரு மகன், அவர் பெயர் துரைசாமி. ஒரு மகள் இருந்து
இறந்து விட்டாள்.
சிவசாமித் தேவருக்கு வரவேண்டிய
பணப் பாக்கிகளை வசூல் செய்ய சக்சசன் சர்டிபிகேட்டை கோர்ட்டில் வாங்க வேண்டும். அதை
அவரின் மனைவி குழந்தை நாச்சியார் வாங்கி விட்டார். அதில், இரண்டாம் மனைவி ரமாமணி மனைவி
இல்லை என்றும், அவருக்குப் பிறந்த குழந்தைகள் சட்டப்படியான திருமணத்தின் மூலம் பிறந்த
குழந்தைகள் இல்லை என்றும் சொல்லி விட்டார்.
எனவே இரண்டாம் மனைவி ரமாமணி அம்மாள்,
ஒரு சிவில் வழக்கை 1864-ல் மதுரை மாவட்ட கோர்ட்டில் போடுகிறார். அதில் அவர் சட்டபூர்வ
மனைவி தான் என்றும், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் சட்டபூர்வ திருமணத்தின் மூலம்
பிறந்த குழந்தைகள்தான் என்றும் தீர்ப்பு வழங்கும்படியும், எனவே இறந்த சிவசாமித் தேவரின்
அசையும், அசையாச் சொத்துக்களில் வாரிசு உரிமை உண்டு என்றும் கேட்கிறார்.
ஆனால் முதல் மனைவி குழந்தை நாச்சியாரோ,
“இந்த ரமாமணி என்ற பெண், திருச்சுழி கோயிலைச் சேர்ந்த ஒரு நாட்டியக்காரி குலத்தைச்
சேர்ந்த பெண் என்றும், அப்படிப் பட்டவளைத் திருமணம் செய்திருந்தாலும் அது சட்டப்படியான
திருமணமே அல்ல என்றும், எனவே அதன் மூலம் பிறந்த துரைச்சாமி சட்டபூர்வ மகனும் அல்ல”
என்றும் வாதம் செய்கிறார்.
ஆனாலும், மதுரை மாவட்ட கோர்ட்,
அதை ஏற்றுக் கொள்ளாமல், ரமாமணி, சிவசாமித் தேவரின் மற்றொரு மனைவிதான் என்று தீர்ப்புக்
கொடுக்கிறது. அதை எதிர்த்து ஐகோர்ட்டுக்கு அப்பீல் போகிறார் குழந்தை நாச்சியார். ஐகோர்ட்டில்
குழந்தை நாச்சியாருக்கு சாதகமாக தீர்ப்பு வருகிறது. அதை எதிர்த்து ரமாமணி (இரண்டாம்
மனைவி) லண்டனில் உள்ள பிரைவி கவுன்சில் கோர்ட்டுக்குப் போகிறார். அங்கு, ரமாமணிக்கு
சாதகமாக தீர்ப்பு வருகிறது. அதாவது மதுரை ஐகோர்ட் கொடுத்த தீர்ப்பான, ரமாமணியும் சிவசாமித்
தேவரின் சட்டபூர்வ மனைவிதான் என்று சொன்ன தீர்ப்பை பிரைவி கவுன்சிலும் உறுதி செய்கிறது.
ஏற்கனவே சிவசாமித் தேவருக்கு
மாத-மாதம் ரூ.700 ஜீவனத்துக்காக கிடைத்த பணத்தை, அவர் இறந்து விட்டதால், இராமநாதபுரம்
ஜமீன் நிறுத்தி விடுகிறார்.
முதல் மனைவி குழந்தை நாச்சியாருக்கு
சாதகமாக மதராஸ் ஐகோர்ட்டில் தீர்ப்பு வந்தவுடனேயே, அவர், இராமநாதபுரம் ஜமின்தாரிடம்
மாத-மாதம் கொடுக்க வேண்டிய பணத்தைக் கேட்டு, ஜமின்தார் மீது 1867-ல் வழக்கு ஒன்றைப்
போடுகிறார். ஆனால் ஜமின்தாரோ, “சிவசாமித் தேவருக்கு அந்தப் பணத்தை, அவரின் வாழ்க்கை
ஜீவனத்துக்காக கொடுத்து வந்தேன். அவர் இறந்த பின்னர், அதை கொடுக்க முடியாது. இது அவருக்கு
என்று தனிப்பட்ட முறையில் கொடுத்தது. அதை அவர்களின் வாரிசுகள் கேட்க எந்த உரிமையும்
இல்லை” என்று எதிர்வாதம் செய்தார். The
Zamindar contended that the allowance was personal to Sivasami and did not
descend to his heirs.
ஆனால் கோர்ட், இராமநாதபுரம் ஜமின்தாரின்
வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அது ஜமின் உரிமையை விட்டுக் கொடுப்பதற்காக கொடுக்க வேண்டிய
மாதா-மாத ஜீவனப் பணம். எனவே அது வாரிசுகளுக்கும் உரிமை உண்டு என்று சொல்லி, இறந்த சிவசாமித்
தேவரின் முதல் மனைவி கொழந்தை நாச்சியாருக்கு சாதகமாக தீர்ப்பு கூறி விட்டது.
அதிலும் இரண்டாம் மனைவி பங்குக்கு
வந்துவிடுவார் என்று கருதிய முதல் மனைவி குழந்தை நாச்சியார், மற்றொரு வழக்கை 1873-ல்
போடுகிறார். அதில், சிவசாமித் தேவர் ஒரு உயில் எழுதி வைத்து விட்டு இறந்து விட்டார்
என்றும், அதில், இரண்டாம் மனைவி ரமாமணி என்பவர் நாட்டியக்காரப் பெண் என்று சொல்லி உள்ளார்
என்றும், அவள் ஒரு கோயிலில் நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தார் என்றும், கூறுகிறார். ஆனால்
அந்த உயிலை கோர்ட் ஏற்றுக் கொள்ளவில்லை. அது போர்ஜரியாக (மோசடியாக) தயாரிக்கப்பட்ட
உயில் என்று கோர்ட் முடிவுக்கு வருகிறது. மேலும், வாரிசுகள் யார் யார் என்பதைப் பொறுத்து
பிரைவி கவுன்சில் தீர்ப்பு உள்ளதால், மேலும் அதில் குழப்பத் தேவையில்லை என்றும் சொல்லி
விடுகிறது.
பின்னர், இறந்த சிவசாமித் தேவரின்
மகன், துரைசாமி ஒரு சிவில் வழக்கை 1879-ல் போடுகிறார். இராமநாதபுரம் பழைய ஜமின்தார்
இறந்து விடுகிறார். அவரின் மகன் இப்போது மைனராக உள்ளார். அந்த மைனரே இப்போது ஜமின்தார்.
தன் தகப்பன் சிவசாமித் தேவருக்கு உறுதி அளித்தபடி, மாத ஜீவனத் தொகையை, இப்போதுள்ள மைனர்
ஜமின்தார், சிவசாமித் தேவரின் மகனாகிய எனக்குக் கொடுக்க வேண்டும் என்று வழக்குப் போட்டார்.
(இந்த துரைசாமி, சிவசாமித் தேவரின் இரண்டாம் மனைவி ரமாமணி அம்மாளின் ஒரே மகன்).
இந்த துரைசாமி மைனராக இருந்ததால்,
இதுவரை வழக்குப் போடவில்லை. இப்போது மேஜராக ஆகி விட்டதால் இந்த வழக்கை 1879-ல் போடுகிறார்.
ஆனால் Limitation Act 1877ல் கொண்டு வரப்படுகிறது. அதன்படி, ஏற்கனவே காலாவதி ஆன உரிமைகளை, இந்த புதுச்சட்டம்
வந்த இரண்டு வருடங்களுக்குள் போட வேண்டும். அப்படிப் பார்த்தால், இந்த துரைசாமி, மேஜர்
வயதை அடைந்து, மேலும் இரண்டு வருடங்கள் கழித்துத்தான் இந்த வழக்கைப் போடுகிறார். எனவே
அந்த வழக்கை எடுத்துக் கொள்ள முடியாது என்று வாதம் செய்கிறார்கள். ஆனால் துரைசாமியின்
வக்கீலோ, “இந்த உரிமையானது a recurring right என்றும், மாதா மாதம்
பணம் கேட்கும் உரிமை என்றும், அது ஒரு தொடர் உரிமை என்றும், எனவே இந்த மாதிரியான உரிமைகளைக்
கேட்க 12 வருட கால அவகாசம் உள்ளது என்றும் சொல்கிறார். துரைசாமி வக்கீலின் வாதத்தை
கோர்ட் ஏற்றுக் கொண்டது.
ஏற்கனவே நடந்த பிரைவி கவுன்சில்
வழக்கில், இராமநாதபுரம் ஜமின்தார் ஒரு பார்ட்டியாக இல்லை. அந்த வழக்கு முதல் மனைவிக்கும்,
இரண்டாம் மனைவிக்கும் மட்டுமே உரிமையைப் பொறுத்து நடந்த வழக்கு. அதைக் கொண்டு, இங்கு
இராமநாதபுரம் ஜமின்தார் கட்டுப்பட வேண்டும் என்று கேட்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.
எனவே, இறந்த சிவசாமித் தேவரின்
மகன் தான் துரைசாமி என்று நிரூபிக்க வேண்டிய கடமை வழக்குப் போட்ட துரைசாமிக்கு உண்டு.
இங்கும் அதே பிரச்சனை மீண்டும் எழுகிறது. துரைச்சாமியின் தாயார் ரமாமணி அம்மாள், இறந்த
சிவசாமித் தேவரின் சட்டபூர்வ மனைவியா? அவர் ஒரு நாட்டியக்காரி குலத்தைச் சேர்ந்தவரா?
அவர்களுக்குப் பிறந்த துரைசாமி சட்டபூர்வ வாரிசா? அவர் இராமநாதபுரம் ஜமின்தாரிடம்,
மாதா மாத ஜீவனத் தொகையை கேட்க உரிமை உள்ளவரா? என்ற கேள்விகளுக்குப் பதிலை துரைசாமி
தான் நிரூபிக்க வேண்டும்.
இருந்தாலும், ஏற்கனவே நடந்த வழக்கில்,
மதுரை மாவட்ட நீதிபதி, இரண்டாம் மனைவி ரமாமணி அம்மாள் சட்டபூர்வ மனைவிதான் என்று சொல்லி
உள்ளதை ஒரு தீர்ப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். எதிர் பார்ட்டிகள் கொடுத்த சாட்சியத்தில்,
ரமாமணி என்ற பெண் ஒருவர் திருச்சுழி கோயிலில் நாட்டியக்காரிகள் கூட்டத்தில் இருந்திருக்கிறார்
என்பது தெரியவருகிறது. ஆனால் அவர்தான் இவர் என்று சொல்லும் எந்தச் சாட்சியமும் இந்த
கோர்ட் முன்னர் இல்லை. எனவே இந்த ரமாமணி ஒரு நாட்டியக்காரி என்று ஏற்றுக் கொள்ள முடியாது.
மேலும், சில சாட்சிகள் இப்படிக்
கூறுகிறார்கள்: “சிவசாமித் தேவர் இறந்த பின்னர், சிவசாமித் தேவரின் தாயார், இந்த இரண்டாம்
மனைவியான ரமாமணியை, தன் மருமகளாகவே கருதி உடன் வைத்துக் கொண்டார் என்றும், அவர் இறந்த
16ம் நாள் காரியத்தில், இந்த மனைவியன் தாலியை வாங்கும் நிகழ்வு அங்கு சிவசாமித் தேவரின்
தாயார் தான் நடத்தி வைத்தார் என்றும், பின்னர் மருமகளுக்கு தங்கத்தில் ஒரு செயினை அவள்
கழுத்தில் மாமியாரே போட்டார் என்றும், அந்த நிகழ்வின் போது, மூத்த மனைவி குழந்தை நாச்சியாரின்
உறவினர்களும் இருந்தார்கள்” என்றும் சொல்லி உள்ளார்கள்.
2-ம் மனைவி ரமாமணியின் மகன் துரைசாமி,
ஏன் தன் தாயாரை இந்த கோர்ட்டுக்கு கூட்டி வந்து “இறந்த சிவசாமிக்குத் தான் துரைசாமி
என்ற மகனைப் பெற்றேன்” என்று விசாரிக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. ஆனாலும், அவள்
வரத் தயங்கி இருப்பாள். கோர்ட்டுக்கு வந்தால், தன்னை எங்கே நாட்டியக்காரி என்று குறுக்கு
விசாரனை செய்து அசிங்கப்படுத்தி விடுவார்கள் என்று பயந்தும் இருக்கலாம் என்று கோர்ட்
கருதுகிறது.
எனவே இவை எல்லாவற்றையும் கணக்கில்
எடுத்துக் கொண்டால், லண்டன் பிரைவி கவுன்சில், 2-ம் மனைவி ரமாமணி என்பவள் சட்டபூர்வ
மனைவிதான் என்று தீர்ப்புச் சொல்லி உள்ளதால், இறந்த சிவசாமித் தேவரின் மகன் துரைசாமி
என்றும், அவன் சட்டபூர்வ வாரிசு என்றும், அவன், இராமநாதபுரம் ஜமீன்தாரிடம், மாதா மாத
ஜீவன உரிமை பெறத் தகுதி உள்ளவன் என்றும் இந்த மதுரை மாவட்ட கோர்ட் முடிவுக்கு வருகிறது.
**
No comments:
Post a Comment