Tuesday, December 25, 2018

கோபார்சனரி என்னும் பூர்வீகச் சொத்துக்கள்


இந்து மதத்தில் “கோபார்சனரி சொத்துக்கள்” (பூர்வீகச் சொத்துக்கள்):
(இது பூர்வீகச் சொத்தா, அல்லது தனிச் சொத்தா, அல்லது வேறு வகைச் சொத்தா, ஆணின் சொத்தா, பெண்ணின் சொத்தா, எனக்கு இதில் சட்டப்படி எவ்வளவு பங்கு கிடைக்கும் என்பது போன்ற சந்தேகங்களுக்கு):
1956 வரை இந்துக்களின் சொத்தின் நிலை:
1956 வரை இந்துகளின் சொத்துக்களில் ஒரு பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. பழைய இந்து சாஸ்திர முறைப்படியே இந்து சொத்துக்களும் அவற்றின் வாரிசு உரிமைகளும் இருந்து வந்துள்ளன. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் 1956-ல் தான் இந்த பழைய இந்து சாஸ்திர முறையை மாற்றி, தனியே ஒரு புதிய வாரிசு உரிமை சட்டத்தை இந்திய அரசு கொண்டு வருகிறது. அதன் பெயர் இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956. The Hindu Succession Act, 1956.
Survivorship and Succession:
பழைய இந்து சாஸ்திர சட்டத்தில் Succession முறையில் சொத்து வருவது இல்லை. அதில் Survivorship முறையில் மட்டுமே சொத்துக்கள் கிடைக்கும். சர்வைவர்ஷிப் என்பது, உயிருடன் மீதி இருப்பவர்கள் சொத்தை அடையலாம் என்று பொருள். பழைய இந்து சாஸ்திர சட்டப்படி, ஆண்களுக்கு மட்டுமே சொத்துரிமை என்று புரிந்து கொள்ள வேண்டும். (இங்கு பெண்களுக்கு சொத்துரிமை ஏதும் இல்லை. அவர்களை Chattel என்னும் ஒரு பொருளாகவே பார்த்து வந்திருக்கிறார்கள்). இது 1956-க்கு முந்தைய நிலை. அப்போது எல்லா இந்து குடும்பங்களுமே கூட்டுக் குடும்பமாகவே இருந்திருந்தார்கள். விவசாய காரணங்களுக்காக அல்லது வியாபார காரணங்களுக்காக ஒரு கூட்டுக் குடும்பமாக இருந்து அதில் உள்ள ஆண்கள் எல்லோரும் உழைத்திருக்கிறார்கள். எனவே அந்த கூட்டுக் குடும்பம் சம்பாதிக்கும் சொத்தில் அந்த குடும்பத்தில் உள்ள எல்லா ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெண்களுக்கு சொத்தில் பங்கு இல்லை. ஆனால் அவர்களின் வாழ்க்கை வசதிகளை ஆண்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். மகள்களை வேறு வீட்டுக்குத் திருமணம் செய்து கொடுத்து விடுவதால், அவர்கள் இந்த குடும்பத்து உறுப்பினர்கள் இல்லை. வேறு வீட்டிலிருந்து இந்த வீட்டுக்கு வரும் மருமகள்கள் இந்த குடும்பத்து உறுப்பினர்கள் அவ்வளவே.
இப்படியாக ஆண்கள் மட்டுமே கூட்டுக் குடும்பச் சொத்தில் பங்குதாரார். எனவே கூட்டுக் குடும்பச் சொத்தில் அந்த ஆண்களுக்கு யாருக்கு எவ்வளவு பங்கு என்று குறிப்பிட்டச் சொல்ல முடியாது. ஆண்கள் எல்லோருக்கும் சம பங்கு உண்டு என்பது மட்டும் தெளிவு. இந்த குடும்பத்தில் ஒரு மகன் பிறந்தால், அவனுக்கு பிறந்த உடனேயே ஒரு பங்கு வந்துவிடும். இது ஒரு Partnership என்னும் பங்குதாரர் நிறுவனம் போல. உயிரோடு இருக்கும் ஆணுக்கு ஒரு பங்கு உண்டு. அவர் தாத்தாவாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும், மகனாக இருந்தாலும், பேரனாக இருந்தாலும், கொள்ளுப் பேரனாக இருந்தாலும். ஆளுக்கு ஒரு பங்கு உண்டு. இதில் யார் பெரிய ஆள் இல்லை, சிறிய ஆளும் இல்லை. இந்த கூட்டுக் குடும்பத்தில் ஒரு ஆண் இறந்து விட்டால் அவருக்கு பங்கு இல்லை. அதாவது அவரின் பங்கு மற்ற ஆண்களுக்குப் போய் சேர்ந்து விடும். எனவே இது ஒரு முடிவே இல்லாத தொடர் மாதிரி. இதைத்தான் இந்து கூட்டுக் குடும்பம் என்கிறார்கள். இதை Coparcenary என்பர். அதாவது ஒரு வித்தியாசமான கூட்டு உரிமை கொண்டாடும் குடும்பம் என்று சொல்லாம். ஏனென்றால், இங்கிலாந்து நாட்டில், இப்படியான ஒரு கூட்டுக் குடும்ப முறை இருந்தது. அது கிட்டத்தட்ட இதுபோலவே இருக்கும். அது Joint ownership முறை. இரண்டு பேர் கூட்டாக ஒரு சொத்தை வாங்கினால், அவர்கள் இருவரும் இந்த ஜாய்ண்ட் ஓனர்ஷிப் முறையில் அனுபவிக்கலாம். ஒருவர் இறந்து விட்டால், மற்றவர் மொத்த சொத்துக்கும் உரிமையாளர் ஆகி விடுவார். இதை அங்கு Joint-Tenancy என்ற ஆங்கில வார்த்தையில் சொல்வர். (Tenant என்பதை இங்குள்ள ‘வாடகைதாரர்’ என்ற அர்த்தத்தில் புரிந்து கொள்ளக் கூடாது; மாறாக சொத்தை அனுபவிப்பவர் என்று பொருள்).
ஆங்கிலேய சொத்து முறையான Joint-Tenancy முறையை ஒத்ததுதான் இந்தியாவில் உள்ள Hindu Joint Family or Hindu Undivided Family or HUF என்பர். ஆனாலும் இந்து கூட்டுக் குடும்ப முறையில், இங்கிலாந்து முறையைக் காட்டிலும் வேறு சில மாற்றங்களும் உண்டு.
இந்து கூட்டுக் குடும்பம்:
இதில் ஆண்கள் மட்டுமே பங்குதாரர்க்ள். அந்த வீட்டில் உள்ள பெண்கள் உறுப்பினர்கள் மட்டுமே. பெண்களுக்கு பங்கு இல்லை. எனவே ‘உறுப்பினர்கள்’ ‘சொத்தில் பங்குதாரர்கள்’ இவர்களை வித்தியாசப் படுத்தி சொல்ல வேண்டியது அவசியம். எனவே பெண் உறுப்பினர்களும் சேர்ந்து இருந்தால் அந்தக் குடும்பத்தை ‘இந்து கூட்டுக் குடும்பம்’ என்று சொல்லலாம்.  ஆண்கள் மட்டும் பங்குதாரர்கள் என்பதால், அவர்களை மட்டும் ‘கோபார்சனர்கள்’ Coparceners என்று சொல்ல வேண்டும். எனவே கூட்டுக் குடும்பம் என்பது பெண்களையும் உள்ளடக்கிய குடும்பம். கோபார்சனரி என்பது ஆண்களை மட்டுமே குறிக்கும் சொல்.
யார் யார் கோபார்சனர்கள்?
பொதுவாக ஒரு இந்து ஆண் இருந்தால் அவர் ஒரு சொத்து வாங்கினால், அவர் மட்டும் உரிமையாளர் இல்லை. (இது 1956-க்கு முன்னர் இந்து குடும்பத்தின் சட்ட நிலை). அவருக்கு ஒரு மகன் பிறந்தால் அவரும் கோபார்சனர் ஆகி விடுவார். அதாவது அந்த சொத்தில் ஒரு பங்குதாரர் ஆகி விடும். மகன் பிறந்தவுடனேயே பங்குதாரர் ஆகிவிடுவார். (இப்போது தந்தை இறந்தால்தான் அவரின் சொத்தில் பங்கு வரும்). அதுபோல, அந்த மகனுக்கு ஒரு மகன் பிறந்தால் அவனும் பிறந்த உடனேயே பங்குதாரர் ஆகி விடுவான். அந்தப் பேரனுக்கு ஒரு மகன் பிறந்தால், அந்த கொள்ளுப் பேரனும் ஒரு பங்குதாரர் ஆகிவிடுவான். ஆக, தந்தை, மகன், பேரன், கொள்ளுப் பேரன் என்ற நான்கு தலைமுறை ஆண்கள் கோபார்சனர்கள் ஆவார்கள். அதற்கு மேல் கோபார்சனர் உரிமை நீடிக்காது. எப்போது மேலும் நீடிக்கும் என்றால், முதன் முதலில் சொத்தை வாங்கியவர் இறந்து விட்டால், மீதி உள்ள நான்கு தலைமுறையை கணக்கில் கொள்ள வேண்டும். முன் இருப்பவர் இறக்க, இறக்க, அதற்கு அடுத்த நான்கு தலைமுறைக்கு கோபார்சனரி கூட்டு உரிமை நீடிக்கும். இவர்கள்தான் கோபார்சனர்கள்.
கோபார்சனர்களுக்குள் பிரிவு:
என்னதான் கூட்டுக் குடும்பமாக இருந்தாலும், ஒரு நேரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவும் தவிர்க்க முடியாததுதான். எனவே ஏதாவது ஒரு கூட்டுக் குடும்பத்தில் பிரிவினை ஏற்பட்டடால், அப்போதுதான் கூட்டுக் குடும்பச் சொத்துக்களை (எல்லாச் சொத்துக்களுமே கூட்டுக் குடும்பச் சொத்துக்கள்தான்) பாகம் பிரித்துக் கொள்வார்கள். உயிருடன் இருக்கம் கோபார்சனர்கள் எல்லோருக்கும் தலைக்கு ஒரு பங்கு என்ற விகிதத்தில் பிரித்துக் கொள்வார்கள். அதாவது தந்தைக்கும் ஒரு பங்கு, மகனுக்கும் ஒரு பங்கு, பேரனுக்கும் ஒருபங்கு, கொள்ளுப் பேரனுக்கும் ஒரு பங்கு. பல மகன்கள் இருந்தாலும், பல பேரன்கள் இருந்தாலும், எல்லோருக்குமே ஒரு பங்குதான். (அதாவது தலைக்கு ஒரு பங்கு; ஒரு கூட்டத்துக்கு ஒரு பங்கு என்ற முறை இல்லை). Per head, not per stripes. Per head is called as per capita. Capita என்ற வார்த்தை லத்தீன் வார்த்தை. லத்தீன் மொழியில் கேப்பிட்டா ‘தலைக்கு’. அதாவது ஆள் எண்ணிக்கை கணக்கில்.
தொடரும் கூட்டுக் குடும்பம்:
இப்போது, அவ்வாறு தலைக்கு ஒரு பங்கு என்று, அப்போது உயிருடன் இருக்கும் ஆண்கள் எல்லோரும் பிரித்துக் கொள்வர். அத்துடன் கூட்டுக் குடும்பம் சிதறி விட்டது. ஆனாலும்,  அவ்வாறு பிரித்துக் கொண்ட ஒரு ஆண், அவரும் அவரின் மகனும், பேரனும், கொள்ளுப்பேரனும் மறுபடியும் ஒரு கூட்டுக் குடும்பமாக இயங்கி வருவார்கள். இதில் எப்போதுமே தனியாக இயங்க முடியாது. தனிச் சொத்துரிமையும் வராது. இது ஒரு தொடர்கதைதான். இது தான் “இந்து கூட்டுக் குடும்பத்தின் சிறப்பு” என்று ஆங்கிலேயர்களும் ஆச்சரியம் அடைந்தார்களாம்.
கூட்டுக் குடும்ப கடன்கள்:
கூட்டுக் குடும்பத்தில் கடன்கள் வாங்குவார்கள். அதை தந்தை செய்வார். அவர் வாங்கிய கடனை, (அவர் மட்டுமே கையெழுத்துப் போட்டு வாங்கிய கடனை) அவரும், அவரின் மகன், பேரன், கொள்ளுப்பேரன் இவர்களும் சேர்ந்தே கொடுக்க வேண்டும். அது என் அப்பா வாங்கிய கடன், நான் ஏன் கொடுக்க வேண்டும் என்று சட்டம் பேச முடியாது. அப்பா இறந்து விட்டாலும், இவர்கள் அதை கொடுத்துத்தான் ஆக வேண்டும். இது இந்த கூட்டுக் குடும்பத்தின் கடன் என்றே கருத வேண்டும். தந்தை வாங்கிய கடனை, மகனோ, பேரனோ, கொள்ளுப் பேரனோ கொடுக்க வேண்டிய சட்டக் கட்டாயம் இல்லை என்று நினைத்தாலும், இந்து தர்ம ஞாயத்தின் படி அதை கொடுத்தே ஆக வேண்டும். எனவே இந்த தர்ம நியாயத்தை Moral Obligation என்று பழைய இந்து சாஸ்திர சட்டம் சொல்கிறது. ஆனாலும், ஒரு தந்தை, அவரின் கெட்ட நடவடிக்கைக்காக, எங்காவது கடன் வாங்கி இருந்தால், அதை மகன்களோ, பேரன்களோ, கொள்ளுப் பேரன்களோ கொடுக்கவேண்டிய தர்ம நியாயம் இல்லை என்றும் அதே சாஸ்திர சட்டம் சொல்கிறது. (ரேஸ் போன்ற சூது விளையாட கடன் வாங்கி இருந்தால், அதை மற்ற கோபார்சனர்கள் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை). இப்படிப்பட்ட கெட்ட காரணங்களுக்காக வாங்கிய கடனை, இந்து சாஸ்திரமானது “அவயவகரிகா கடன்” Avyavaharika debts or immoral debts என்று சொல்கிறது. இந்த கெட்ட கடனை, கூட்டுக் குடும்பம் கொடுக்கத் தேவையில்லை, ஆனால், கடன் வாங்கியவர் அவரின் பங்கில் இருந்து கொடுக்க வேண்டும் என்பதே அதன் பொருள். (நல்ல நோக்கத்துக்கு வாங்கிய கடனை இந்து சாஸ்திரம் வயவகரிகா கடன் vyavaharika debt என்கிறது. (வயவ-கரிகா என்பதை ‘அ’ சேர்த்து எதிர் பொருளில் அ-வயவ-கரிகா என்கிறார்கள்]. இந்து சாஸ்திரத்தில், ஒரு இந்து, தன் கடனை விட்டுவிட்டு இறந்து விட்டால், அவருக்கு மோட்சம் கிடைக்காது என்கிறது. எனவே அவருக்கு பிண்டம் கொடுக்கும் மகனோ, பேரனோ, கொள்ளுப்பேரனோ, அவரின் கடனை அடைத்து, அவரை மோட்சத்துக்கு அனுப்ப உதவ வேண்டும் என்பது சாஸ்திர விதி.
வயிற்றுக்குள் இருக்கும் ஆண் குழந்தைக்கும் பங்கு:
இந்த கூட்டுக் குடும்பத் தொடர்கதையில், பிரிந்து பிரிந்து ஒவ்வொரு கூட்டுக் குடும்பமாக இயங்கி வரும். ஆண்கள் கூட்டாக கோபார்சனர்கள் என்ற பெயரில் சொத்தின் உரிமையில் இருப்பார்கள். இறந்தவருக்கு பங்கு இல்லை. இருப்பவர்கள் அனைவருக்கும் தலைக்கு ஒரு பங்கு என்ற விகிதத்தில் பங்கு உண்டு. ஆனால் அது கணக்குக்கு மட்டும். தனியே பிரித்துப் பார்க்க முடியாது. பாகம் பிரிக்கும்போதுதான் கணக்கிட்டு பிரிக்க முடியம். யாராவது ஒரு மகனோ, பேரனோ, “நான் இந்த கூட்டுக் குடும்பத்தை விட்டு விலகி விடுகிறேன், என் பங்கைப் பிரித்துக் கொடு” என்று கேட்டால், அவனுக்கு அப்போது என்ன பங்கு வரமோ, அதைக் கொடுத்து விட்டு, எழுதி வாங்கிக் கொண்டு, மற்ற கோபார்சனர்கள் தொடர்ந்து கூட்டுக் குடும்பமாக, கோபார்சனர்களாக இயங்குவார்கள். பிரிந்து சென்றவர், அவரின் பங்கை அவரின் மகன், பேரன், கொள்ளுப் பேரனுடன் மற்றொரு கூட்டுக் குடும்பமாக இயங்கி வருவார். ஒருவேளை அவருக்கு அப்போது மகன் பிறக்கவில்லை என்றால், அவர் மட்டுமே அப்போதைக்கு உரிமையாளர். அந்த நேரத்தில் அவர் அந்தப் பங்கை விற்பனை செய்யும் உரிமையும் அதிகாரமும் உண்டு. விற்பனை செய்த பின்னர், அவருக்கு ஒரு மகன் பிறந்தால் அவன் அதை கேட்க முடியாது. ஆனாலும், அவர் அப்படி விற்பனை செய்யும் நாளில், அவரின் மனைவி கர்ப்பமாக இருந்து, அந்தக் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறந்தால், அவன் பிறந்தவுடன், அந்த விற்பனை செய்த சொத்தில் அவனுக்கு சரிபாதி பங்கு உரிமை இருப்பதால், அவன் அந்த பங்கை கேட்டு வாங்க முடியும்.
ஒருவேளை, ஒரு கூட்டுக் குடும்பச் சொத்தை, தந்தையும் மகனும் பாகம் பிரித்துக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இருவருக்கும் தலைக்கு ஒரு பங்கு பிரித்து, பாகப் பிரிவினைப் பத்திரம் எழுதிக் கொண்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் பாகம் பிரித்துக் கொள்ளும் நாளில், மகனின் மனைவி கர்ப்பமாக இருந்தால், அது ஆண் குழந்தையாகப் பிறந்தால், பாகம் பிரிக்கும் நாளில், மொத்தம் மூன்று கோபார்சனர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கில் கொள்ள வேண்டும். அதாவது தந்தை, மகன், பேரன் (கருவில் இருந்தவன்) என மூன்று பேர். ஆக கருவும் ஒரு உயிருடன் இருக்கும் குழந்தைதான் என்று சாஸ்திரம் சொல்கிறது. இப்போதுள்ள சட்டமும் அதையே சொல்கிறது. எனவே தந்தை, மகன், பின்னர் பிறந்த பேரன் மூவரும் சேர்ந்து மறுபடியும் புதிய பாகப் பிரிவினையைச் செய்து கொள்ள வேண்டும். “நாங்கள் பாகம் பிரித்துக் கொள்ளும் நாளில், நீ பிறக்கவில்லை” என்று சொல்ல முடியாது.
ஆக இப்படியான இந்து கூட்டுக் குடும்பத்தில், கோபாசனர்கள் என்பவர்கள் ஆண்கள் மட்டுமே என்றும், அவர்களும் நான்கு தலைமுறைக்குத்தான் அவர்களுக்குள் கோபார்சனரி உறவுமுறை இருக்கும் என்றும், கோபார்சனர்களுக்கு தனி பங்கு என்று எதுவும் கிடையாது என்றும், கூட்டுச் சொத்தில் தலைக்கு ஒரு பங்கு கணக்கில் உண்டு என்றும், அவர் கூட்டு குடும்பத்தை விட்டு பிரிய விரும்பினால், அவரின் அப்போதைய பங்கை பிரித்துக் கொண்டு செல்லலாம் என்றும், கருவில் இருக்கும் ஆண் குழந்தையும் ஒரு கோபார்சனரே என்றும், ஒரு கோபார்சனர் வாங்கிய கடனை மற்ற கோபார்சனர்களும் கொடுக்க வேண்டிய கட்டாயம் உண்டு என்றும் இதுவரை பார்த்தோம்.
கர்த்தா:
கர்த்தா என்றால் காப்பவர் என்று பொருள். கூட்டுக் குடும்பத்தில் உள்ள மூத்த ஆண் கோபார்சனரே கர்த்தா எனப்படுபவர். இவரே அந்தக் கூட்டுக் குடும்பத்தின் முடிவுகளை எடுப்பார். இவரே மேனேஜர். அது அனைவரையும் கட்டுப்படுத்தும். அதை மற்ற கோபார்சனர்கள் கேள்வி கேட்க முடியாது. யோசனை தெரிவிக்கலாம். பிடிக்கவில்லை என்றால், அந்த கூட்டில் இருந்து பிரிந்து செல்லலாம், அவ்வளவே. எனவே கர்த்தா மட்டுமே மற்ற கோபார்சனர்களுக்காக, சொத்தை வாங்குவார், இந்த குடும்பத்து சொத்தை விற்பார், கடன் வாங்குவார், தான-தர்மம் செய்வார். சொத்தை வாங்கும்போது, கர்த்தா பெயரில் வாங்கினாலும், அதுவும் கூட்டுக் குடும்ப சொத்தே. சொத்தை விற்றாலும், அப்போது மேஜராக உள்ள மற்ற கோபார்சனர்கள் (ஆண்கள்) கிரயப் பத்திரத்தில் கையெழுத்துச் செய்ய வேண்டும். மைனராக இருக்கும் கோபாரசனரான ஆணுக்குப் பதிலாக மூத்த கோபார்சனரான கர்த்தாவே கார்டியனாக கையெழுத்துப் போடுவார். (மைனரின் தந்தை கார்டியனாக கையெழுத்துச் செய்ய அவசியம் இல்லை). ஒருவேளை கர்த்தா மட்டுமே கையெழுத்துப் போட்ட விற்ற சொத்தை, மற்ற கோபார்சனர்கள் கேள்வியும் கேட்க முடியாது. அந்த கிரயம் செல்லும்.
மித்தாச்சரா கூட்டுக் குடும்பம்:
இந்த கோபார்சனரி கூட்டுக் குடும்ப முறை இந்தியா முழுமைக்கும் இருந்து வந்துள்ளது. இதில் இரண்டு விதமான அல்லது இரண்டு வகையான இந்து கூட்டுக் குடும்ப முறை உள்ளது. ஒன்று மித்தாச்சரா கூட்டுக் குடும்ப முறை. மற்றொன்று தயாபாக கூட்டுக் குடும்ப முறை. தயாபாக முறையானது இந்தியாவில் வட-கிழக்குப் பகுதியான பெங்கால் மற்றும் அஸ்ஸாம் பகுதியில் மட்டுமே கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், மித்தாச்சரா கூட்டுக் குடும்ப முறைதான் பழைய இந்தியாவின் எல்லாப் பகுதியிலும் பரவலாக இருந்து வந்த முறை.
இந்த இரண்டு வகையான முறைகளும் இரண்டு School of thoughts ல் இருந்து வந்த கொள்கைகள். மித்தாச்சரா இந்து முறையை விஞ்ஞானேஸ்வரா என்ற இந்து சாஸ்திர பண்டிதர் கொண்டு வந்தார். தயாபாக இந்து முறையை ஜிமுதவாகனா என்ற இந்து சாஸ்திர பண்டிதர் கொண்டு வந்தார்.
இந்த இரண்டு பண்டிதர்களும், இந்து சாஸ்திரத்தை வியாக்கியானம் செய்யும்போது, வித்தியாசமாக அவரவர் கருத்தைச் சொல்லி விட்டார்கள். அவர்களின் கருத்துப்படி அவரின் School of thought இருந்தது. அவரை எற்றுக் கொண்டவர்கள் அந்த முறையே சரி என்று பின்பற்றினார்கள். இரண்டுமே கோபார்சனரி முறைதான் சொல்கிறது ஆனால் சிறிய அளவில் இரண்டுக்கும் வித்தியாசம்.
(நான் தெரிந்து கொண்ட வரையில் இதுதான் வித்தியாசம் என நினைக்கிறேன்). ஒரு இந்து இறந்து விட்டால், அவரின் ஆன்மா, சொர்க்கம் செல்ல வேண்டும். அதற்கு அவரின் தாயாதிகள் என்னும் மகன், பேரன், கொள்ளுப்பேரன் இவர்கள் பிண்டம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அந்த ஆன்மா சொர்க்கம் சேராது என்றும், நடுவழியில் சிக்கிக் கொண்டு தவிக்கும் என்று இந்துமதம் கூறுகிறதாம். இந்த அடிப்படையில்தான், எந்த ஒரு இந்து ஆணும், ஒரு திருமணம் செய்து, தன் மனைவி மூலம் ஒரு ஆண் குழந்தையைப் பெற்று, மனைவியின் துணையுடன் இந்த உலகில் தான தர்மம் செய்து, இறக்க வேண்டும். அப்போது அந்த மகன், இறந்தவருக்கு காரியங்கள் செய்து பிண்டம் கொடுத்து, இறந்தவரின் ஆன்மாவை சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதே காரணத்துக்காகத்தான் ஆண் மகன் வேண்டும் என்கிறது இந்து மதம். அதற்காகவேதான் ஆண் மகன் பிறக்காதவர், ஒரு தத்துக் குழந்தையை (ஆண் குழந்தையை) தத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறது. வேறு மதங்களில் தத்து எடுப்பது மதம் சார்ந்து இல்லை. விருப்பத்தின் பேரில் நடக்கிறது. ஒருவேளை, ஆண் மகன் பிறக்காமலேயே ஒரு இந்து ஆண் இறந்து விட்டால், அவரின் மனைவி அந்தக் கடமையைச் செய்து, கணவருக்காக ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்து, அந்த பிண்டம் கொடுக்கும் காரியத்தை செய்து, தன் கணவனை சொர்க்கம் சேர்க்க வேண்டும்.
 மித்தாச்சரா வியாக்கியான ஆசிரியர் விஞ்ஞானேஸ்வரா அவர்கள், மேலே சொன்ன சாஸ்திர தத்துவத்தை வியாக்கியானம் செய்யும்போது, பிண்டம் கொடுக்கும் கடமை, இறந்தவரின் மகன், பேரன், கொள்ளுப்பேரனுக்கு உண்டு என்பதால், அவர்களை தாயாதிகள் (கோபார்சனர்கள்) என்று சொல்லி விட்டார். எனவே ஒரு இந்து ஆணுக்கு, மகன், பேரன், கொள்ளுப்பேரன் என மூன்று தலைமுறை மட்டுமே கோபார்சனர்கள் ஆகி விட்டார்கள். மேலும், இவர்கள் எல்லோருக்கும் பிறப்பிலேயே சொத்தில் (யார் சொத்தாக இருந்தாலும்) உரிமை உண்டு என்றார்.
ஆனால், தயாபாக வியாக்கியான ஆசிரியர் ஜிமுத்தவாகனா அவர்கள், பிண்டம் என்பது மூத்த மகன் மட்டுமே கொடுப்பது என்று வியாக்கியானம் செய்து விட்டார். எனவே ஒரு இந்து ஆணின் சொத்தில், அவர் உயிருடன் இருக்கும் போது, அவரின் மகன், பேரன், கொள்ளுப் பேரன் இவர்களுக்கு பிறப்பால் எந்த உரிமையும் கிடைக்காது. அவர்கள் வெறும் கோபார்சனர்களாக இருக்கலாம். பங்கு கேட்க முடியாது. ஆனால், தந்தை இறந்து விட்டால், அவரின் சொத்தில், மகன்கள் கோபார்சனர்களாக இருப்பார்கள்.
ஆக மித்தாச்சரா முறையில், ஒருவரின் சொத்தில், அவர் உயிருடன் இருக்கும்போதே, அவரின் மூன்று தலைமுறை வாரிசுகளுக்கு பிறப்பாலேயே பங்கு உண்டு. ஆனால், தயாபாக முறையில், ஒருவரின் சொத்தில், அவர் இறந்துவிட்டால்தான், அவரின் மகன்கள் மட்டும் பங்கு பிரித்துக் கொள்வர். அதில் ஒவ்வொரு மகனின் பங்கும், அவரின் மகன்களுடன் கோபார்சனரி முறைப்படி இருக்கும்.
இதை ஒரு எழுத்தாளர் இப்படிச் சொல்கிறார், “To put it simply, “Mitakshara was based on the ‘principle of ownership by birth, and Dayabagha on principle of ownership by death’.”
மற்றொரு விதமாகவும் இதன் இரண்டு முறைகளையும் சொல்கிறார்கள். பிந்தா, பிண்டா, பிண்டம், பந்து (பந்தம்), என்ற வார்த்தைகளின் குழப்பம்தான் இந்த வேறுபாடு. பந்துக்களுக்கு பங்கு என்றும், பிண்டம் கொடுப்பவனுக்கு பங்கு என்றும் இந்து சாஸ்திர வியாக்கியானம் செய்தவர்கள் புரிந்து கொண்டார்கள் என்றும் அதனால் இந்த வேறுபாடு என்றும் சொல்கிறார்கள்.
நாம் தென் இந்தியாவில் இருப்பதால், நமக்கு மித்தாச்சரா முறையே அமலில் இருந்தது. அதுவே பெரும்பாலான இந்தியாவின் முறையாவும் இருந்தது.
எனவே நமக்கு மித்தாக்சரா இந்து கோபார்சனரி முறையே செயல்படும் என்பதால் அதைப்பற்றி மட்டுமே இங்கு அலசப்பட்டது.
இந்து விதவை மறுமணம்:
இந்த மித்தாச்சரா இந்து கூட்டுக் குடும்பம் ஒரு கோபார்சனரி குடும்பம் ஆகும். அதில் ஒரு இந்து ஆணுக்கு, அவரின் மூன்று தலைமுறைகளான மகன், பேரன், கொள்ளுப்பேரன் (ஆக மொத்தம் நான்கு தலைமுறை ஆண்கள்) கோபார்சனர்கள் ஆவார்கள். அவர்களின் மனைவிகள் கூட்டுக் குடும்பத்தின் உறுப்பினர்கள் மட்டும். அவர்களை பராமரிக்கும் பொறுப்பு அந்த கூட்டுக் குடும்பத்துக்கு உண்டு. அந்த ஆண்களின் மகள்களை திருமண வயதுவரை பாதுகாத்து, திருமணம் செய்து கொடுக்க வேண்டும். அவர்கள் வேறு வீட்டுக்கு வாழப் போகிறவர்கள். அதேபோல் இந்தக் குடும்பத்துக்கு, வேறு வீட்டிலிருந்து வரும் மருமகள்களையும் இந்த கோபார்சனர்கள் பாதுகாத்து வர வேண்டும். யாருடைய கணவனாவது இறக்க நேரிட்டால், அந்த விதவையை அவள் வாழ்நாள்வரை பாதுகாத்து வர வேண்டிய கடமையும் இந்த கோபார்சனர்களுக்கு உண்டு. அதனால்தான், கோபார்சனர்கள் மட்டுமே சொத்தை எடுத்துக் கொள்கிறார்கள். பெண்களை “ஒரு பொருளாகவே” பார்த்து வந்திருக்கிறது இந்து சமயம். இது தவறுதான்.
இந்து விதவைகள், கோபார்சனரி குடும்பத்தில் உறுப்பினராக இருப்பார்கள். சில பகுதிகளில் அல்லது சில ஜாதிகளில், கணவர் இறந்தவுடன் அவளும் அதே சிதையில் தீக்குளிப்பாள். கொடுமை. இதை பிரிட்டீஸ் அரசு ஒரு சட்டமாக இயற்றி, அதை தடுத்து, விதவைகள் மறுமணம் செய்து கொள்ளமால் என்று ஒரு சட்டத்தை 1856-ல் கொண்டு வந்தது. அதன் பெயர் The Hindu Widow’s Remarriage Act, 1856.
விதவைகளுக்கும் கோபார்சனி சொத்தில் பாதுகாப்பு உரிமை:
ஒரு இந்து பெண், மகளாக பிறந்த வீட்டில் இருக்கிறாள். பின்னர் திருமணம் ஆகி பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீடு செல்கிறாள். எனவே எப்போதும் ஒரு பெண், புகுந்த வீட்டில்தான் வாழ்கிறாள். அவள் விதவை ஆனால், அவளுக்கு ஒரு சட்டப் பாதுகாப்பும் இல்லை. அவள், அவளின் வாழ்நாள்வரை, தாயாதிகள் என்னும் அந்த வீட்டின் கோபார்சனரி ஆண்களை நம்பியே வாழ வேண்டி உள்ளது. இது ஒரு மிகப்பெரிய குறை.
இந்தக் குறையை நீக்கும் பொருட்டு, 1937-ல் ஒரு சட்டம் வருகிறது. அதன் பெயர் The Hindu Women’s Rights to Property Act, 1937. இது இந்து விதவைகளுக்கு பெரிய பாதுகாப்பாக அப்போது இருந்தது. இந்தச் சட்டத்தில் மொத்தமே நான்கு செக்சன்கள் என்னும் பிரிவுகள் மட்டுமே கொண்டுள்ள மிகச் சிறிய சட்டம். இதன்படி பழைய முறை ஒழிக்கப்பட்டு, இந்த கூட்டுக் குடும்பத்தில் உள்ள ஒரு கோபார்சனர் இறந்து விட்டால், அவர் இறப்பதற்கு முன்னர், அவருக்கும் (இறந்தவருக்கும்) அவரின் மற்ற கோபார்சனர்களுக்கும் (மகன், பேரன், கொள்ளுப் பேரன்) ஒரு கற்பனை பாகப்பிரிவினையை நடத்திக் கொள்ள வேண்டும். அதன்படி யார் யார் கோபார்சனர்கள் இருக்கிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் தலைக்கு ஒரு பங்கு என்று கற்பனையாக ஒதுக்கிக் கொள்ள வேண்டும். உண்மையில் பாகப் பிரிவினை செய்யத் தேவையில்லை. அப்படி பாகப் பிரித்தால், அந்த இறந்த கோபார்சனருக்கு ஒரு பங்கு கிடைக்கும். அந்தப் பங்கை, அவரின் விதவை மனைவி, அவள் வாழ்நாள் வரை வைத்து அனுபவித்துக் கொள்ளலாம் என்று அந்த சட்டம் சொல்கிறது. இது அந்த விதவை மனைவிக்கு பெரிய பாதுகாப்பு என்று அந்த சட்டம் கருதியது. ஆனால் அவள் தன் வாழ்நாளில் அந்தச் சொத்தை அனுபவிக்கலாம். மற்றபடி விற்பனை செய்ய முடியாது. அப்படியே யாருக்காவது விற்றாலும் அந்தக் கிரயம், அவளின் வாழ்நாள் வரை மட்டுமே செல்லும். அந்த விதவை இறந்த பின்னர், அவளுக்குக் கொடுத்த பங்கானது, அந்த குடும்பத்தின் மற்ற தாயாதிகள் என்னும் கோபார்சனர்களுக்கே திரும்ப வந்துவிடும். It is a reversion right. எனவே அந்த விதவை மனைவிக்கு அந்த சொத்தில் முழு உரிமை இல்லை. வாழ்நாள் பாதுகாப்பு மட்டுமே. கணவர் இல்லாததால், அவருக்குச் சேர வேண்டிய பங்கை, அவள் அனுபவித்து வருவாள். அவ்வளவே. இதை அளந்து கொடுத்த உரிமை என்பர். It is only a limited right or limited estate.
இப்படியாக, 1956 வரை இந்துக்களின் கோபார்சனரி சொத்து உரிமை இருந்து வந்தது.
இனிமேல் 1956-ல் புதிய இந்து வாரிசு உரிமை எப்படி வந்தது. பெண்களின் சொத்துக்கள் எவை என்று பின்னர் பார்க்கலாம்.
**




No comments:

Post a Comment