Wednesday, December 26, 2018

காணாமல் போனவரின் சட்ட நிலை


காணாமல் போனவரின் சட்ட நிலை
காணாமல் போனவர் இறந்து விட்டார் என்று கருத வேண்டும் என்று இந்திய சாட்சியச் சட்டம் சொல்கிறது.
ஒருவர் வீட்டை விட்டு காணாமல் போனால் அவர் அவ்வாறு காணாமல் போன தேதியில் இருந்து 7 வருடங்களின் முடிவில் அவர் இறந்திருப்பார் என சட்டம் கருதுகிறது.
இதற்கு, அவர் காணாமல் போன பின்னர், அவ்வாறு காணவில்லை என்றோ வீட்டை விட்டு ஓடிவிட்டார் என்றோ ஒரு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தால், அது ஒரு சாட்சியமாக அமையும். அது அவரைத் தேடுவதற்கும் உதவியாக இருக்கும். பின்னர், அவர் எங்கெல்லாம் சென்று இருப்பாரோ அந்த இடத்திற்கு எல்லாம் போய் அவரைத் தேடிவர வேண்டும். இது எதிலும் அவர் கிடைக்கவில்லை என்றால், அதிலிருந்து 7 வருடங்களின் முடிவில் அவர் இறந்திருப்பார் என நினைத்துக் கொள்ள வேண்டும். சட்டமும் அவ்வாறே அவர் இறந்து விட்டதாகவே கருதுகிறது.
இதை இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 108 சொல்கிறது. ஒருவர் காணாமல் போய் ஏழு வருடங்கள் ஆகி விட்டால், அவரை இறந்ததாக கருதலாம் என்று இந்தச் சட்டப் பிரிவு சொல்கிறது. வழக்குகளில் இந்தப் பிரிவை உபயோகித்துக் கொள்ளலாம்.
ஒருவர் உயிருடன் இருக்கிறார் என்பதை அதைச் சொல்பவரே நிரூபிக்க வேண்டும். இறந்து விட்டார் என்பதை இறப்புச் சான்றிதழ் கொண்டு நிரூபிக்கலாம். அல்லது அவர் காணாமல் போய் விட்டார் என்று நிரூபித்தால், அதிலிருந்து 7 வருட முடிவில் அவர் இறந்ததாக சட்டம் கருதுகிறது.
சொத்துக்களை விட்டுவிட்டு காணாமல் போயிருப்பார். வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, வேலையை விட்டுவிட்டு காணாமல் போய் இருப்பார்.  இளம் வயதில் குடும்பத்தை விட்டு விட்டு ஓடி இருப்பார். இவர்கள் இவ்வாறு காணாமல் போன பின்னர் இருப்பவர்களுக்கு, அவரின் சொத்தில் பிரச்சனை வரலாம். வேலையில் பணம் வர வேண்டி இருக்கும். திருமண உறவில், மனைவி எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியது என்ற பிரச்சனை இருக்கும். அவர் இருக்கிறாரா அல்லது இல்லையா என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கும்.
இதற்கான சட்டப்பிரிவுதான் இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 108. இந்தப் பிரிவின் கீழ் வழக்கு போட்டு, அவர் இறந்து விட்டதாக தீர்ப்பு வாங்கலாம். அவருக்கு வரவேண்டிய பணங்களை இந்த தீர்ப்பைக் கொண்டு வசூல் செய்யலாம். அவரின் சொத்துக்களை விற்பனை செய்யலாம். திருமண உறவில் மனைவி மறு திருமணமும் செய்து கொள்ளலாம்.
சாட்சியச் சட்டம் பிரிவு 108 என்பது, ஒருவர் காணாமல் போய், ஏழு வருடங்கள் ஆகி விட்டால், அவர் எங்கும் உயிருடன் இருப்பதாக எவருக்கும் தெரியவில்லை என்றால், கோர்ட்டில் வழக்குப் போட்டு, அவர் சட்டப்படி இறந்து விட்டார் என்ற தீர்ப்பை வாங்க வேண்டும். இந்த பிரிவு 108 என்பது அவர் இறந்து விட்டார் என்று மட்டுமே கருதிக் கொள்ளும். ஆனால் எந்த தேதியில் அவர் இறந்தார் என்று சொல்ல முடியாது. எனவே அவர் இறந்த தேதி என்பது அவர் எந்த சூழ்நிலையில் காணாமல் போனார் என்பதைப் பொறுத்து கோர்ட் முடிவு செய்யலாம் என்று பல தீர்ப்புகளில் கூறி உள்ளது.
உதாரணமாக: ஒருவர் கப்பலில் பிரயாணம் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அது புயல் காற்றில் சிக்கி மூழ்கிவிட்டது. இப்போது அவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்ற கேள்வி எழும். ஏழு வருட முடிவில் அவர் வரவில்லை என்றால், அவர் இறந்து விட்டார் என்று சட்டம் கருதுகிறது. ஆனால் எந்த தேதியில் இறந்தார் என்று தெரியவில்லை. இப்படியான சூழ்நிலையில், கப்பல் மூழ்கும்போது இறந்திருக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், அவர் கப்பல் மூழ்கும் நாளில் இறந்ததாக கோர்ட் கருதலாம்.
ஆனால், ஒருவர் வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டார். காணவில்லை. எங்கிருக்கிறார் என்றும் தெரியாது. அவர் திரும்பி வரவில்லை என்றால், ஏழு வருடம் முடிவில் அவர் இறந்திருப்பார் என்று சட்டம் கருதுகிறது. ஆனால், அவர் எந்த தேதியில் இறந்தார் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. இப்படியான சூழ்நிலையில், அவர் ஏழு வருடம் முடிந்த தேதியில் இறந்திருப்பார் என்று கருத வேண்டும் என்று கோர்ட்டின் தீர்ப்புகள் உள்ளன.
எனவே காணாமல் போனவர் இறந்து விட்டார் என கோர்ட் வழக்குக்குப் போகும்போது, பொதுவாக கோர்ட், ஏழு வருட முடிவில் அவர் இறந்திருப்பார் என்று தீர்ப்பு கொடுக்கும். அல்லது அவர் ஒரு தேதியில் அல்லது காலக்கட்டத்தில் இறந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக சாட்சியம் அளித்தால், ஒரு குறிப்பிட்ட தேதியில் இறந்திருப்பார் என்று தீர்ப்பு கொடுக்கும். அதை கோர்ட்டே தகுந்த சாட்சியத்தை வைத்து முடிவு எடுக்கும்.
வழக்கை ஏழு வருடம் கழித்துத்தான் போட முடியும். காணாமல் போய், ஏழு வருடத்திற்கு ஒரு நாள் குறைந்தால் கூட, வழக்குப் போட முடியாது.
இராணுவத்தில் வேலை செய்பவர், திடீரென்று அங்கிருந்து ஓடி விடுவார். அவரை, வேலைக்கு திரும்பவில்லை என்று கூறி, அவரை வேலையில் இருந்து நீக்கி விடுவர். அவருக்கு எந்த பணமும் கிடைக்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் காணாமல் போன ஏழு வருட முடிவில் தான், அவரின் உறவினர் வழக்குப் போட்டு அவர் சட்டப்படி இறந்து விட்டார் என தீர்ப்பு வாங்க வேண்டும். காணாமல் போன அன்றே இறந்து விட்டிருப்பார் என்று சொல்ல முடியாது என்று கோர்ட் தீர்ப்புகள் உள்ளன.
காணாமல் போனவரை சட்டப்படி இறந்தவராக கருதி தீர்ப்பு வழங்க கோர்ட்டை அணுகினால், இந்திய சாட்சியச் சட்டம் பிரிவுகள் 107 மற்றும் 108 ஆகிய இரண்டையும் பயன்படுத்தி வழக்குப் போட வேண்டும். ஒருவர் கடந்த 30 வருட காலத்திற்குள் உயிருடன் இருந்தவர், கடந்த 7 வருடங்களாக காணவில்லை என்றும் அவர் சட்டப்படி இறந்து விட்டதாக கருதி தீர்ப்பு பெற வேண்டும். 30 வருடத்திற்கு முன்னர் ஒருவர் காணாமல் போயிருந்தால் அவருக்கு இப்படியான சாட்சியம் தேவையில்லை. அவர் இறந்ததாகவே கருத வேண்டும். கடந்த 30 வருடத்திற்குள் காணாமல் போனவர், 7 வருடம் வரை அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்றாலும், அவர் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என்றாலும், அவர் சட்டப்படி இறந்ததாக கோர்ட் தீர்ப்பை, இந்த சாட்சியச் சட்டம் பிரிவு 108-ன் படி பெறலாம். அதுவே அவரின் சொத்துக்களை மற்ற பிரச்சனைகளைத் தீர்க்கும் வழி.
இந்த காணாமல் போகிறவர் பிரச்சனை வெகு காலமாகவே இருந்திருக்கிறது. இந்த சட்டத்தை பிரிட்டீஸ் ஆட்சியில் இந்தியாவில் சாட்சிய சட்டத்தின் மூலம் அமல் படுத்தி உள்ளனர்.
இங்கிலாந்து நாட்டில் உள்ளவர்கள் அதிகம் கடல் பிரயாணம் செய்தவர்கள். அவர்கள் கப்பலில் போகும்போது, அவை மூழ்கிவிட்டால், அவர் திரும்பி வருவதற்காக ஏழு வருடங்கள் காத்திருப்பர். அப்படி திரும்பி வரவில்லை என்றால், அவர் சட்டப்படி இறந்து விட்டார் என கருதி, அவரின் மனைவி மறுமணம் செய்து கொள்வர். அந்த காலத்துக்கு முந்தியே மறுமணம் செய்து கொண்டால் அது அங்குள்ள The English Bigamy Act 1603 சட்டப்படி குற்றமாகும். திரும்பி வந்தவர் மனைவி மீது, இருதார மணம் என்ற கிரிமினல் வழக்குப் போட வாய்ப்பு உள்ளது.
அமெரிக்காவில் இதுபோன்ற சட்டம் உள்ளது. அங்கும் இதேபோல ஏழு வருடங்கள் காணாமல் போனவரை இறந்துவிட்டதாக கோர்ட் சொல்லும். இந்தியாவில் 7 வருட முடிவில் இறந்ததாக சொல்வர். அங்கு எந்த தேதியில் இறந்தார் என்று சாட்சியம் அளித்து தேதியைக் குறிப்பிட்டு தீர்ப்பு வழங்குவர்.
இந்தியாவிலும் பழங்காலத்தில் இத்தகைய முறைகள் இருந்துள்ளன. பழைய சாஸ்திரங்களில், கணவர் கடல் கடந்து சென்றிருந்தால், அவர் திரும்பி வர ஒவ்வொரு ஜாதியினருக்கும் ஒரு காலக்கெடு வைத்திருந்தார்கள். பிராமணப் பெண்ணாக இருந்தால், அவள் 8 வருடம் காத்திருக்க வேண்டும். அதுவும் அவள் குழந்தை இல்லாமல் இருந்தால், 4 வருடங்கள் காத்திருந்தாள் போதும். சத்திரியப் பெண்ணாக இருந்தால், அவள் 6 வருடம் காத்திருக்க வேண்டும். அவளுக்கு குழந்தை ஏதும் இல்லாமல் இருந்தால், 4 வருடம் காத்திருந்தாள் போதும். வைசியப் பெண்ணாக இருந்தால், அவள் 4 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அவளுக்கு குழந்தை இல்லை என்றால், 2 வருடம் காத்திருந்தாள் போதும். சூத்திரப் பெண்ணுக்கு காலக்கெடு ஏதும் ஒதுக்கவில்லை. ஆனாலும் அவள் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதற்குப் பின்னர் அவள் வேறு திருமணம் செய்து கொள்ளலாம். அது சாஸ்திரப்படி பாவம் இல்லையாம். இதில், அவன் எங்காவது இருக்கிறான் என்ற தகவல் இவளுக்குத் தெரிய வந்தால், அந்த காலக்கட்டத்தைத் தாண்டி அவள் காத்திருக்க வேண்டுமாம்.
மனுதர்ம நீதியில், அவன் ஏதாவது கடமையாக கடல் கடந்து சென்றால், அவனின் மனைவி அவனுக்காக 8 வருடம் காத்திருக்க வேண்டுமாம். அவன் கல்வி கற்கச் சென்றிருந்தால், அவள் 6 வருடம் காத்திருக்க வேண்டும். அவன் ஏதாவது சுற்றுலா சென்று இருந்தால், அவள் 3 வருடம் காத்திருக்க வேண்டுமாம்.
அமெரிக்காவில் ஒரு வித்தியாசமான வழக்கு வந்தது. அமெரிக்காவின் ஒகியோ மாநிலத்தில் ஒருவர் 1986-ல் காணாமல் போகிறார். அவருக்கு ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். எனவே அவரின் மனைவி சக்சஷன் கோர்ட்டில் 1994-ல் வழக்குப் போடுகிறார்.  காணாமல் போன அவர் கணவர் சட்டப்படி இறந்து விட்டதாக தீர்ப்பு கேட்கிறார். நான்கு முறை பேப்பரில் விளம்பரம் கொடுத்து தீர்ப்பு கொடுக்கப் பட்டது. ஆச்சரியமான வகையில், 19 வருடங்கள் கழித்து, காணாமல் போனதாகச் சொல்லப்பட்டவர், அவருக்கு டிரைவிங் லைசென்ஸ் வேண்டும் என்று கேட்டு மனு கொடுக்கிறார். இறந்தவருக்கு எப்படி லைசென்ஸ் கொடுக்க முடியும் என்று அவரின் மனு நிராகரிக்கப் படுகிறது. எனவே அவர் மனைவி வாங்கிய கோர்ட் தீர்ப்பை ரத்து செய்யும்படி அதே கோர்ட்டில் மனு போடுகிறார். இது கால தாமதமான மனு என்று நிராகரிக்கப் படுகிறது. அவர் தீர்ப்பு வந்த மூன்று வருடத்திற்குள் அதை எதிர்த்து மனு செய்ய வேண்டுமாம். இறந்ததாக சட்டப்படி கருதப்பட்டவர் இறந்தவரே.
**




No comments:

Post a Comment