Thursday, December 27, 2018

1905-ல் நடந்த திருப்பதி கோயில் வழக்கு


திருப்பதி கோயில் ஸ்கீம் வழக்கு
1905-ல் நடந்த திருப்பதி கோயில் வழக்கு
Prayag Doss Ji Varu, Mahant v. Srirangacharlu varu and another, on 10th Feb 1905.
Citation: (1905 10 MLJ 144 
சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
மெட்ராஸ் பிரசிடென்சியில் வட ஆற்காடு மாவட்டத்தின் எல்லைக்குள் இருக்கும் திருப்பதி அல்லது திருமலையில் கோயில் கொண்டிருக்கும் ஶ்ரீவெங்கடேஸ்வர சுவாமி கோயில் ஒரு பழைமையான இந்து கோயில் ஆகும். இங்கு இந்தியாவில் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் தரிசனத்துக்கு வருகிறார்கள். இந்த கோயிலின் வருட வருமானம் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரை இருக்கும். பிரிட்டீஸ் அரசு இந்த கோயில் நிர்வாகத்தை எடுத்துக் கொள்வதற்கு முன்னர், இந்தக் கோயில், மன்னர்களின் நேரடி நிர்வாகத்தில் இருந்து வந்தது. பிரிட்டீஸ் ஆட்சி ஏற்பட்ட பின்னர், இந்த கோயில் நிர்வாகம், பிரிட்டீஸாரின் கிழக்கு இந்திய கம்பெனி கைக்குப் போனது. பின்னர், பிரிட்டீஸ் அரசு, ரெகுலேஷன் சட்டம் 7/1817 என்ற சட்டம் கொண்டு வந்தது. அதன்படி இந்தக் கோயில் நிர்வாகம் “போர்டு ஆப் ரெவின்யூ”-வின் மாவட்ட கலெக்டரின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.
பின்னர், 1841-ல், பிரிட்டீஸ் அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்தது. அதன்படி, இந்தியாவில் உள்ள உள்ளூர் கோயில் நிர்வாகங்களிலும், அதன் சமய வழிபாடு முறைகளிலும், அரசு தலையிடுவதில்லை என்ற நிலையை எடுத்தது.
அதன்படி, திருப்பதி கோயில் நிர்வாகத்தை, 1843-ல் அந்தக் கோயிலில் அப்போது ஹாத்திராம்ஜி மடம் என்ற மடத்தின் தலைவர் சேவா தாஸ் என்பவர் கோயில் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அந்த மடம், திருப்பதி நகர் என்று மலையின் அடிவாரத்தில் இருந்தது.  அதன்படி, பிரிட்டீஸ் அரசு அந்த மடத்துக்கு சன்னத் என்னும் பட்டயம் வழங்கப்பட்டது. அதில், இந்த மடத்தின் தலைவரான சேவா தாஸ் காலத்துக்குப் பின்னர், அவரைத் தொடர்ந்து மடத்தின் தலைவராக வருபவர்கள் இந்த திருப்பதி கோயில் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ள உரிமை வழங்கி இருந்தது. சேவா தாஸ் 1864-ல் காலமாகி விட்டார். அவருக்குப் பின்னர் தர்மா தாஸ் என்ற மடத் தலைவர் பதவிக்கு வந்தார். அவரும் 1880-ல் காலமாகி விட்டார். அவருக்குப் பின்னர், பகவான் தாஸ் என்பவர் வந்து, அவரும் 1890 வரை இருந்தார். அவருக்குப் பின்னர், 1890-ல் மகாவீர் தாஸ் என்பவரின் நிர்வாகத்தில் இருந்தது. பின்ன் 1895 முதல் 1900 வரை (இந்த வழக்கு வரும்வரை) இந்த வழக்கில் பிரதிவாதிகளாய் உள்ள ராமகிஷோர் தாஸ் என்பவரின் நிர்வாகத்தில் இருக்கிறது. இந்த இரண்டு வழக்குகளான ஓஎஸ் 31/1898 மற்றும் ஓஸ்.10/1890 வட ஆற்காடு மாவட்ட கோர்ட்டில்  நிலுவையில் இருக்கும்போதே, வழக்கின் பிரதிவாதியான மேற்சொன்ன ராமகிஷோர் தாஸ் இறந்து விட்டார். அவரைத் தொடர்ந்து, தற்போதுள்ள மடாதிபதியை பிரதிவாதியாக கோர்ட் சேர்த்துக் கொண்டது.
இப்போது, வழக்கு என்னவென்றால், 1843 வரை சேவா தாஸ் மடாதிபதி நிர்வாகத்தில் இருக்கும் வரை ஒரு குழப்பமும் கோயில் நிர்வாகத்தில் இல்லை; ஆனால் அவருக்குப் பின்னர் கோயில் நிர்வாகத்திலும், கோயில் பணத்தை பாதுகாப்பதிலும் சரியான வழிமுறை இல்லாமல் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தர்மா தாஸ் மடாதிபதி மீது மால்வர்சேஷன் என்னும் பொறுப்பில் இருக்கும்போது ஊழல் செய்வது என்ற குற்றம் சொல்லி வழக்கும் போடப்பட்டுள்ளது. கீழ் கோர்ட்டும், மதராஸ் ஐகோர்ட்டும் அதை ஒப்புக் கொண்டு டிகிரியும் கொடுத்துள்ளது. ஆனால் மதராஸ் ஐகோர்ட் தனது தீர்ப்பில் இதைப் பெரிய விஷயமாகப் பொருட்படுத்தாமல், மடாதிபதி தர்மா தாஸ் செயல்கள் தவறாக இருந்த போதிலும் கண்டிக்கத் தக்க அளவுக்கான தவறுகள் இல்லை என்று சொல்லி விட்டது. எனவே மதராஸ் ஐகோர்ட் அவரை மடாதிபதி பதவியில் இருந்து நீக்கவில்லை. எதற்காக என்றால், அவரை நீக்கி விட்டால், அடுத்த அவரின் வாரிசாக வரும் அடுத்த மடாதிபதிக்கு அவ்வளவு அனுபவம் போதாது என மதராஸ் ஐகோர்ட் கருதியது. (இந்த வழக்கு, சின்ன ஜீயன் காருல வாரு -எ- தர்மா தாஸ் ஜி, 5 மெட்ராஸ் ஜர்னல் 214 என்பதில் காணலாம்).
மேலும், மூன்றாவது நிர்வாகியான பகவான் தாஸ் நடவடிக்கைகள் ஊழல் நிறைந்ததாகவே இருந்தது, சீராக இல்லை. வழக்குகள் வந்தது. அவர்மீது, கோயில் நகைகள் ரூ.2 லட்சம் அளவுக்கு கையாடல் செய்ததாக குற்ற வழக்கும் வந்தது. வெகுகாலம் அந்த வழக்கு வட ஆற்காடு செசன்ஸ் கோர்ட்டில் நடந்து, கடைசியாக 18 மாதம் சிறை தண்டனை கொடுப்பட்டது. அப்படி அவர் சிறையில் இருந்த போதே, அவரின் அனுமதியின் பேரில், மகாவீர் என்றவரை கோயில் நிர்வாத்துக்கு அவரே நியமிக்கிறார். ஆனால், மகாவீர் மீதும் மால்வர்சேஷன் என்னும் பதவியில் இருக்கும்போது பண ஊழல் செய்த வழக்கு இருந்தது என்பது குறிப்படத் தக்கது. ஆனால், பின்னர் அவர் இறந்து விட்டதால், அவர்மீது வழக்கு முடிவுக்கு வந்து விட்டது.
தற்போது, போடப்பட்டுள்ள சிவில் வழக்குகள் ஆன ஓ.எஸ் 31/1898 மற்றும் 10/1899 ஆகிய இரண்டு வழக்குகளும், தற்போதைய நிர்வாகிகளான ராம்கிஷோர் மீது போடப்பட்டுள்ளவை. இதில், வட ஆற்காடு மாவட்ட கோர்ட் தனது தீர்ப்பை வழங்கி உள்ளது. அதில், ராம் கிஷோர் ரூ்50,000 வரை ஊழல் செய்திருக்கிறார் என்று தெளிவாகத் தெரிவதாகச் சொல்லி இருக்கிறார். மதராஸ் ஐகோர்ட் ஆகிய எங்களுக்கு அவர், ஒரு சொத்தை லீஸ்-க்கு விட்டதில் இந்த ஊழல் செய்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. ஆனால் இந்த வழக்கு நிலைவயில் உள்ள போதே ராம் கிஷோர் கொலை செய்யப்பட்டு இறக்கிறார். எனவே இங்குள்ள இரண்டு வழக்குகளில் ஒன்றான ஓ.எஸ்.10/1889 (ராம் கிஷோரை டிரஸ்டிஷிப் பொறுப்பில் இருந்து விலக்க வேண்டும் என்ற கேட்ட வழக்கை) இனி தொடர முடியாது என்பதால் அதை இன்பிரக்சுவஸ் வழக்காக முடித்து வைக்கப்பட்டது. மற்றொரு வழக்கான ஓ.எஸ்.31/1898 வழக்கு, இந்த திருப்பதி கோயில் நிர்வாகம் செய்வதை ஒரு ஸ்கீம் ஏற்படுத்தி தரும்படி கேட்ட வழக்கு. எனவே அது தொடர்ந்து நடந்து, ஸ்கீம் டிகிரியை வட ஆற்காடு மாவட்ட கோர்ட் கொடுக்கிறது.
அதை எதிர்த்து, மதராஸ் ஐகோர்ட்டில் அப்பீல் வழக்குகளான 236/1901 மற்றும் 38/1902 என இரண்டு அப்பீல்கள் உள்ளன. (இந்த இரண்டு அப்பீல் வழக்குளில்தான், மதராஸ் ஐகோர்ட் இந்த தீர்ப்பை வழங்கியது).
மஹண்ட் என்பவர்களும் பைராகிகள் என்பவர்களும் சேர்ந்து இந்த ஹாத்திராம் ஜி மட் என்னும் மடத்தை உருவாக்குகிறார்கள். (இதுவே திருப்பதியில் உள்ள ஶ்ரீவெங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தை நிர்வகித்து வந்தது). இந்த மஹண்ட் என்பவர்களு்ம பைராகி என்பவர்களும் இந்த மதராஸ் மாகாண நிலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. இவர்கள் வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள். இந்த மஹண்ட் என்பவர்கள், பொதுவாக எந்த கல்வி அறிவும் பெறாதவர்கள் என்பதும், பிரம்மச்சாரிகளாக வாழ்பவர்கள் என்பதும், இந்த உலக வாழ்க்கையை துறந்தவர்கள் என்பதும் இந்த வழக்கை படிக்கும்போது தெரியவருகிறது.
தற்போதுதிருப்பதி கோயிலுக்கு மஹண்ட் (மடாதிபதி) ஆக உள்ளவர், 1900-ல் தான், இங்கு வந்தவர். அதுவும், இவருக்கு முந்தைய மஹண்ட் இறந்து விட்டதால், அவரை வட இந்தியாவில் இருந்து வர வழைத்துள்ளனர். இந்த மஹண்ட்-க்கு இப்போது 18 வயதுதான் ஆகிறது. இங்குள்ள மொழிகள் கூட அவருக்கு தெரியவில்லை. எனவே இந்த மடாதிபதி என்னும் மஹண்ட், அங்குள்ள பைராகிகளையே கோயில் நிர்வாகத்துக்கு நம்ப வேண்டி உள்ளது. (பைராகிகள் என்பவர்கள் சாலிகிராம பூஜை செய்து கொண்டு பஜனைப் பாடல்கள் பாடி விஷ்ணுவை வணங்கி வரும் பக்தர்கள்). இந்த பைராகிகளுக்கு கோயில் நிர்வாகம் தெரியவில்லை. மேலும் ஊழலும் செய்துள்ளனர். அப்படி இவர்களை நிர்வாகத்திற்குள் விட்டால், அவர்கள் செய்யும் எம்பசெல்மெண்ட் என்னும் நிர்வாக ஊழல் பணத்தை அவர்களிடமிருந்து வசூல் செய்யும் அளவுக்கு அவர்களிடம் எந்த சொத்தும் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். மஹண்ட் என்னும் மடாதிபதிகளிடம் நிர்வாகம் இருக்கும்போது, அவர்கள் இதில் வரும் வருமானங்களை முறையாகச் செலவு செய்திடவேண்டும். இல்லையென்றால், அவர்கள் அதற்கு பொறுப்பு ஆவார்கள். ஆனால், இவர்கள் தவறு செய்து, அந்தப் பணத்தை கோர்ட் உத்தரவின் பேரில் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கும்போது, இவர்களிடம் பணம் ஏதும் இருப்பதில்லை.
எனவே ஏற்கனவே பிரிட்டீஸ் அரசு 1843-ல் இந்த கோயில் நிர்வாகத்தை, மஹண்ட் என்ற மடாதிபதிகளிடம் கொடுத்ததில், நிர்வாகக் குழப்பம்தான் மிஞ்சியது. எனவே கோயில் நிர்வாகத்தை சீர்படுத்த முறையான நிர்வாக அதிகாரிகள் தேவைப்படுகிறது என்பது தெரிய வருகிறது. எனவே வட ஆற்காடு மாவட்ட கோர்ட்டும் இந்த வழக்கில் ஒரு ஸ்கீம் (ஏற்பாடு) செய்து டிகிரி கொடுத்துள்ளது. அப்படிடி ஒரு ஸ்கீம் தேவை என்பதை மதாரஸ் ஐகோர்ட் ஆகிய இந்தக் கோர்ட்டும் ஒப்புக் கொள்கிறது. 
சர் வி. பாஷ்யம் அய்யங்கார் வக்கீல் மஹண்ட்களுக்காக மாவட்ட கோர்ட்டிலும், இந்த ஐகோர்ட்டிலும் வழக்கு நடத்துகிறார். அவரும் இதை ஒப்புக் கொள்கிறார். ஆனாலும், அந்த ஸ்கீம்-படி ஒரு நிர்வாகக் குழு ஏற்படுத்துவதில் ஐந்து கமிட்டி உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பதில் மட்டும் குழப்பம் உள்ளதாகச் சொல்கிறார். அது இந்த கோர்ட் வரைமுறைகளுக்கு அப்பாற்பட்டது. ஏற்கனவே உள்ள டிரஸ்டிகளை விட்டு விட்டு வேறு டிரஸ்டிகளை நியமிப்பது; அல்லது அவர்களுடம் புதிய பல டிரஸ்டிகளை நியமிப்பது என்பது கோர்ட் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்று வாதம். அதை இந்த கோர்ட் (மதராஸ் ஐகோர்ட்) ஏற்கவில்லை. சிவில் நடைமுறைச் சட்டம் பிரிவு 538-ன்படி புதிய டிரஸ்டிகளை நியமிப்பது பற்றிச் சொல்கிறது. எனவே பழைய டிரஸ்டிகளையும் உள்ளடக்கிய ஸ்கீம் மட்டுமே இந்தச் சட்டத்தில் செய்ய முடியும் என்று எடுத்துக் கொள்ள முடியாது.
ஆனால், புதிய வேறு டிரஸ்டிகளை நியமிக்கும் அதிகாரம் கோர்ட் ஆப் சான்சரி-க்கு உண்டு என தெளிவாக்கப் பட்டுள்ளதாக, “சாரிட்டீஸ்” என்ற புத்தகத்தில் டியூடரின் வரிகளை காண்பிக்கிறார் வாதியின் வக்கீல். அதில், ஏற்கனவே டிரஸ்ட் வரைமுறைகள் இருந்தாலும், அதையும் தாண்டி, புதிய வேறு நிர்வாகிகளை நுழைத்து நிர்வாகத்தை கொண்டு வர கோர்ட்டுக்கு அதிகாரம் இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும், எக்ஸ்பார்ட்டி பாட்டம் ஸ்கூல், 2 பிரவுன் 662 என்ற வழக்கில், பார்லிமெண்ட்டின் ஏற்படுத்திய டிரஸ்ட் சட்டத்தை மாற்றி அமைக்க, கோர்ட்டுகளுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி உள்ளதையும் கவனிக்க வேண்டும் என்று வாதம். அப்படி புதிய டிரஸ்டிகளை கோர்ட்டே உருவாக்க முடியாது என்று இருந்திருந்தால், அந்த சிவில் கோடு சட்டத்தில், அதைக் குறிப்பிட்டுச் சொல்லி இருப்பார்கள். அப்படி ஏதும் சொல்லவில்லை. மேலும், பொது சாரிட்டிகள், பொது வழிபாட்டுத் தலங்கள், இவகைளில் இந்தியாவில் உள்ள மாவட்ட கோர்ட்டுகளும், ஐகோர்ட்டுகளும் பரந்த அதிகாரம் கொண்டவைகளாகவே உள்ளன. எப்படி இங்கிலாந்தில் கோர்ட் ஆப் சான்சரி அதிகாரம் உடையதோ அதே போன்ற அதிகாரங்கள் இந்தியக் கோர்ட்டுகளுக்கும் உண்டு. அதை சின்னமான் பஜாஜி தேவ -எ- ஓண்டோ கணேஷ் தேவ, ஐ.எல்.ஆர் 15 பி.612 என்ற வழக்கிலும், மற்றும் அண்ணாஜி -எ- நாராயன், ஐ.எல்.ஆர். 21 பி.556 என்ற வழக்கிலும் சொல்லப்பட்டு உள்ளதாக வாதியின் வக்கீல் வாதம் செய்கிறார்.
ஆனாலும், இந்த விஷயத்தைப் பொறுத்து அதிகமாக குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. எனென்றால், இந்த திருப்பதி கோயில் நிர்வாக முறையானது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்த வந்து, பின்னர், மஹந்துகளுக்கு (மடாதிபதிகளுக்கு) நிர்வாக உரிமை பிரிட்டீஸ் அரசால் வழங்கப்பட்டது. (இதில் டிரஸ்ட் பத்திரம் ஏதும் இல்லை. டிரஸ்ட் ஏற்படுத்திய விபரமும் இல்லை. எப்படி டிரஸ்டிகள் நியமிக்க வேண்டும் என்ற விபரமும் இல்லை). இந்த திருப்பதி நிர்வாகம் 1843 வரை மன்னர்கள் நிர்வாகத்தில் இருந்து வந்தது. பிரிட்டீஸ் அரசு, 1843-ல் போர்டு ஆப் ரெவின்யூ என்ற அமைப்புக்கு இப்படிப்பட்ட கோயில் நிர்வாகங்கள் மாற்றி விடப்பட்டன. அது, ரெகுலேஷன் சட்டம் 1817-ல் உருவாக்கப்பட்ட போர்டு ஆப் ரெவின்யூ ஆகும்.
எனவே இப்போதுள்ள மஹண்த்தை (மடாதிபதியை) ஒரு டிரஸ்டி என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஏற்கனவே உள்ள ஏற்பாடு என்பது, இப்போதைய சட்டங்களின் அடிப்படையில் ஏற்பட்டவை அல்ல. சர் வி.பாஷ்யம் ஐயங்கார் வக்கீலும், இதை எதிர்வாதம் செய்யவில்லை. இப்படிப்பட்ட நிலையில் பாம்பே ஐகோர்ட்டுகளும் இப்படியான தீர்ப்பை கொடுத்துள்ளது. (பீ பிரவுனி ஆஸ்பிட்டல் -எ- ஸ்டாம்போர்டு, 60 லா டைம்ஸ், பக்கம் 288).
எனவே இந்த வழக்கில், வட ஆற்காடு மாவட்ட கோர்ட் நீதிபதி கொடுத்த ஸ்கீம் டிகிரிப்படி டிரஸ்டிகளை நியமிக்க ஒரு கமிட்டியை அமைக்கும்படி சொல்லி இருப்பது, சரியான நிர்வாகத்தைக் கொடுக்கும் என்ற நினைக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் சரியான நபரைத் தேர்வு செய்வது என்பதும், அதை அடுத்தடுத்து செய்வதும் அதை சரிபார்ப்பதும் இயலாது. மஹண்ட் என்னும் மடாதிபதியின் செயல்களை ஐந்து பேர் கொண்ட கமிட்டி (சம்பளம் இல்லாத கமிட்டி) மேற்பார்வையிடுவது என்றும், அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் ஓட்டுப் போட்டு, மடாதிபதியின் அன்றாட செயல்களை அனுமதி அளிப்பது என்று மாவட்ட கோர்ட் தெரிவித்துள்ள ஸ்கீம் டிகிரியில் உள்ளது.
அதற்குப்பதிலாக, இருக்கிற டிரஸ்டிகளில் மேலும் சிலரை டிரஸ்டிகளாகப் போட்டு, மடாதிபதியின் நிர்வாகத்திலேயே சேர்ந்து இருக்கும்படி செய்யலாம் என்பது ஐகோர்ட் ஆகிய எங்களின் கருத்து. அப்படி நியமிக்கும் டிரஸ்டிகள், போதுமான படிப்பு உள்ளவர்களாகவும், பொறுப்பு உள்ளவர்களாகவும், அதற்குறிய பயிற்சி எடுத்தவர்களாகவும் இருப்பது அவசியம் எனக் கருதுகிறோம். அவர்களுக்கு மாதம் ரூ.400 அல்லது ரூ.500 சம்பளமும் கொடுத்துவிடலாம். வட ஆற்காடு மாவட்ட கோர்ட்டே அவர்களை நியமித்துக் கொள்ளும் அதிகாரத்தையும் கொடுத்து விடலாம். அப்படி நியமிக்கப்படுபவர் ஒரு இந்து ஜாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலமான 5 வருடங்களுக்கு அந்த பதவியில் இருப்பது போல செய்யலாம். அவரை மறுபடியும் நியமிக்கவும் செய்யலாம். இந்த டிரஸ்டிகளுக்குள் பிணக்கு ஏற்பட்டால், அதை பெரிய ஜீயங்கர் முடிவுக்கு விட்டுவிடலாம். அப்படி நியமிக்கப்படும் டிரஸ்டிகளை மாவட்ட கோர்ட்டே நீக்கும் அதிகாரத்தையும் கொடுத்து விடலாம். மாவட்ட நீதிபதியின் முடிவை மறுபரிசீலனை செய்வதை ஐகோர்ட்டுக்கு கொடுக்கலாம்.  மேலும், அந்த கோயிலில் கிடைக்கும் அபரிமிதமான வருமானத்தை நல்ல வழிகளில் சேமிப்பு செய்யவும், செலவு செய்யவும், ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இந்த கோயிலில் அன்றாட சுவாமி காரியங்கள் சரியாக நடப்பதாகவே சொல்கிறார்கள். அதில் குறை ஒன்றும் இல்லை. ஆனால், கிடைக்கும் வருமானத்தை மடாதிபதி கையிலேயே வைத்துக் கொள்கிறார். இது ஊழலுக்கு வழி வகுக்கும். இப்படி மேல் வருமானம் வருடத்திற்கு ரூபாய் ஒரு லட்சத்துக்கு மேல் இருக்கும் என்கிறார்கள்.
சீ-பிரி (Cy-pres) என்பது டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒரு கொள்கை. அதாவது ஆரம்ப டிரஸ்டை ஏற்படுத்தியவர் சொல்லிவற்றை அப்படியே செய்ய முடியாமல் போனால், முடிந்தவரை அதை ஒட்டி அவற்றை செய்ய வேண்டும் என்பதே சீ-பிரி கொள்கை.
அப்படி சீ-பிரி கொள்கையை எடுத்துக் கொண்டால், மேலே சொல்லி எல்லாமே சரி என இரண்டு பக்கமும் உள்ள வக்கீல்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.
அதன்படி –
1) கீழ் திருப்பதியில் ஒரு காலேஜ் ஆரம்பிக்க வேண்டும். அது இந்துக்கள் கல்வி அறிவு பெறுவதற்காக இருக்க வேண்டும். அந்தக் கல்லூரிக்கு “ஶ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா” என்ற பெயரிட வேண்டும். அதில் ஒரு லைப்ரரி, ஆஸ்டல், எல்லாம் ஏற்படுத்தி அதற்குறிய வருடச் செலவுகளாக தற்போதைக்கு ரூ.24,000 வரை செலவு செய்து  நிர்வாகம் செய்ய வேண்டும்.
2) நன்றாகப் படிப்பவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும். இந்து சாஸ்திரங்களைப் படிப்பவர்களுக்கு அவ்வாறான உதவிகள் வழங்க வேண்டும். இதை மாவட்ட கோர்ட்டின் ஒப்பதலுடன் டிரஸ்டிகள் செய்து வர வேண்டும்.
3) ஒரு ஆஸ்பத்திரி கட்டி (திருப்பதி மலையிலேயே) அங்கு வரும் பக்தர்களுக்கு அது உயோகமாக இருக்க வேண்டும்.
4) திருப்பதி மலையிலேயே தங்கும் விடுதிகள் கட்டி, அங்கு வரும் எல்லாப் பக்தர்களும் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
5) திருப்பதி மலையில், நல்ல குடிநீர் கிடைக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
6) திருப்பதி மலைக்குச் செல்வதற்கு உரிய நல்ல பாதை, ரோடு வசதிகளைச் செய்ய வேண்டும்.
7) இது இல்லாமல், அங்கு சுவாமிக்கு கிடைக்கும் நகைகளை, சொத்துக்களை, பணம் முதலியவற்றை, அரசு சார்ந்த துறைகளில் வைப்பீடு செய்து அதில் வருமானத்தைப் பெறுக்க வேண்டும். அன்றாடச் செலவுக்கு தேவைப்படும் பணம் போக, மீதியை உடனே வங்கியில் செலுத்த வேண்டும்.
பக்தர்கள் கொடுக்கும் தர்ம பொருள்களுக்கு அப்போதே ரசீது வழங்கி, நிர்வாகத்தில் சேர்க்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் முறையான கணக்கு வழக்கு வைத்துக் கொண்டு, அதை முறையாக ஆடிட்டர் வைத்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒருவருட முடிவில் வரவு செலவு கணக்கை பொதுவெளியில் வெளியிட வேண்டும்.
மடம் தனி, கோயில் தனி. எனவே மடத்துக்கும் கோயிலுக்கும் இடையிலோ, அங்கு வேலை செய்யும் நபர்களுக்கு இடையிலோ மடமோ, கோயிலோ எந்தவித வியாபார ஒப்பந்தமும் செய்து கொள்ளக் கூடாது.
பாம்பே ஐகோர்ட் வழக்கான, தாமோதர் பட் -எ- போகிலால், ஐ.எல்.ஆர்.24 பி.45 என்ற வழக்கில் கூறி உள்ளதைப் போல, இந்த ஸ்கீம் செயல்பாடுகளை  மாவட்ட கோர்ட், அவ்வப்போது, இதில் அக்கறை உள்ளவர்கள் கொடுக்கும் மனு மீது முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த திருப்பதி கோயில் ஸ்கீம், 1906-ம் வருடம், ஜனவரி மாதம், 1-ம் தேதி முதல் அமல் படுத்த வேண்டும்.
இரண்டு பார்ட்டிகளின் கோர்ட் செலவுகளை, கோயில் பணத்திலிருந்து கொடுக்க வேண்டும்.
(இப்படி இந்த தீர்ப்பை மதராஸ் ஐகோர்ட் 10.2.1905-ல் கொடுத்துள்ளது).
*



No comments:

Post a Comment