இந்து
பெண்கள் சொத்துரிமைச் சட்டம் 1937-ன் படி ஒரு வழக்கு:
கந்தசாமி
ரெட்டியாரும், நாராயண ரெட்டியாரும் சகோதரர்கள். இவர்கள் இந்து கூட்டுக் குடும்பமாக
இருந்தார்கள். பின்னர் 1947-ல் இந்து கூட்டுக் குடும்பத்தைப் பிரித்துக் கொண்டார்கள்.
அதன்படி அவர்களின் பொதுச் சொத்துக்களை தனித்தனியே பாகம் பிரித்துக் கொண்டு விலகி விட்டார்கள்.
மூத்தவர் கந்தசாமி ரெட்டியார் இறந்து விட்டார். அவருக்கு ராமச்சந்திர ரெட்டியார் என்று
ஒரே ஒரு மகன்.
இளையவர்
நாராயண ரெட்டியாருக்கு சுப்பையா, திருவேங்கடம் என இரண்டு மகன்களும் லெட்சுமி என்று
ஒரு மகளும் உள்ளனர். இதில் சுப்பையா திருமணம் செய்து கொள்ளாமலேயே 1948-ல் இறந்து விட்டார்.
திருவேங்கடம் திருமணமாகி, அலமேலு என்ற மனைவியையும், சீத்தாம்மாள் என்ற மகளையும் விட்டுவிட்டு
1949-ல் இறந்து விடுகிறார்.
இளையவர்
நாராயண ரெட்டியார், தன் இரண்டு மகன்களான சுப்பையா, திருவேங்கடம் இருவரும் இறந்தவுடன்,
மருமகள், அவரைச் சரியாக
கவனிக்கவில்லை. எனவே நாராயண ரெட்டியார், தன் மகள் லெட்சுமி, மற்றும் நாராயண ரெட்டியாரின்
சகோதரி லட்சுமி அம்மாள் இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு, மருமகள் அலமேலுவையும் அவள்
மகள் சீத்தாம்மாளையும் தன் வீட்டைவிட்டு வெளியேறுமாறும், அவளின் பெற்றோர் வீட்டுக்குச்
சென்று விடுமாறும் கட்டாயப் படுத்துகிறார்.
பின்னர்
1950 ஆகஸ்ட் மாதம், நாராயண ரெட்டியார் இரண்டு செட்டில்மெண்ட் பத்திரங்களை எழுதுகிறார்.
அதில் அவரின் மூன்று சொத்துக்களை அவரின் சகோதரி லட்சுமி அம்மாளுக்கு ஆயுட்கால உரிமையும்,
அதன் முழு உரிமையை தன் மூத்த சகோதரர் கந்தசாமி ரெட்டியாரின் மகனான ராமசந்திர ரெட்டியாருக்கும்
எழுதிக் கொடுக்கிறார். மற்றொரு செட்டில்மெண்ட்டில் அவரின் மற்ற சொத்துக்களை தன் மகள்
லெட்சுமிக்கு முழு உரிமை கொடுத்து எழுதி வைக்கிறார்.
இதை
எதிர்த்து, 1950-ல் நாராயண ரெட்டியாரின் மருமகள் அலமேலு அம்மாள், சிவில் வழக்கை இராமநாதபுரம்
சப் கோர்ட்டில் வழக்குப் போடுகிறாள். வழக்கில், தன் மாமனார் நாராயண ரெட்டியார், அவரின்
சகோதரி லட்சுமி அம்மாள், அவரின் மகள் லட்சுமி, இவர்களைப் பார்ட்டியாகச் சேர்த்திருக்கிறாள்.
அவரின் சகோதரரின் மகன் ராமசந்திர ரெட்டியாரைப் இதில் பார்ட்டியாகச் சேர்க்கவில்லை.
வழக்கு
நடந்து கொண்டிருக்கும்போதே நாராயண ரெட்டியார் இறந்து விடுகிறார். அதனால், இரண்டு லட்சுமிகளும், வழக்குப்போட்ட மருமகள்
அலமேலுவுடன் சமரசமாகச் செல்வதாக முடிவு எடுக்கிறார்கள். அதில், ஒரு உடன்படிக்கை (ராசினாமா
பத்திரம்) எழுதிக் கொண்டு, அதன்படி, இரண்டு செட்டில்மெண்ட் பத்திரங்களும் செல்லாது
என்றும், எல்லோரும் ஆளுக்கு ஒரு சொத்தாக எடுத்துக் கொள்வது என்றும் முடிவாகிறது.
இதைத்
தெரிந்து கொண்டு ராமச்சந்திர ரெட்டியார், “எனக்குச் சொத்தில் பின் உரிமை இருக்கும்போது,
என்னை வழக்கில் சேர்க்காமல் எப்படி இவர்களாகவே கோர்ட்டில் சமரசம் செய்து கொள்ள முடியும்”
என்று கூறி, அவர் தனியாக ஒரு சிவில் வழக்கை 1952-ல் அதே ராமநாதபுரம் சப் கோர்ட்டில்
போடுகிறார். அதில், தன் இறந்த சித்தப்பா நாராயண ரெட்டியாரின் சகோதரி லெட்சுமி அம்மாள்,
மகள் லட்சுமி, மருமகள் அலமேலு அம்மாள், அலமேலுவின் மைனர் மகள் சீத்தாம்மாள் இவர்களைப்
பார்ட்டியாகச் சேர்க்கிறார். அந்த வழக்கில், அவர் கேட்பது, ஒரு செட்டில்மெண்ட் பத்திரப்படி,
இந்த சொத்து லெட்சுமி அம்மாள் ஆயுட்காலத்துக்குப் பின்னர் தனக்கு முழு உரிமை கிடைக்க
வேண்டும் என்று எழுதப் பட்டுள்ள நிலையில், தனக்கு அதில் உரிமை இருப்பதாகவும், அந்த
உரிமையில் இவர்கள் தலையிட முடியாது என்றும் கேட்டுள்ளார்.
எதிர்த்து வழக்காடுபவர்களின் வாதம் என்னவென்றால்: நாராயண ரெட்டியார், தன் மருமகள் மேல் கோபமாக இருந்தபோது இந்த செட்டில்மெண்ட் எழுதப்பட்டது. அவர் மனம் விரும்பி இதை எழுதி வைக்கவில்லை. எனவே அது ஒரு அவசரத்தில் பெயருக்காக (nominal deed) எழுதிய பத்திரம் என்பதால் செல்லாது. எனவே இதைக் கொண்டு ராமசந்திர ரெட்டியார் உரிமை கோர முடியாது என்கிறார்கள்.
(Nominal deed என்றால், பெயருக்காக
எழுதிய ஒரு பத்திரம். சொத்து வேறு ஒருவருக்குப் போய்விடக் கூடாது என்பதற்காக பெயரளவுக்கு
மாற்றி எழுதி வைக்க வேண்டும் என்று எழுதி வைப்பது. இன்கம் டாக்ஸ், கடன் தொல்லை இதற்குப்
பயந்து கொண்டும் பெயரளவுக்கு ஒரு பத்திரத்தை எழுதி வைப்பார்கள். பிரச்சனை தீர்ந்தவுடன்
மாற்றி எழுதிக் கொள்வார்கள். இப்படிப்பட்ட பத்திரங்களை Sham and Nominal
deed என்று சட்டம் சொல்கிறது.)
மேலும்
அவர் வாதம் என்னவென்றால்: இந்து பெண்கள் சொத்துரிமை சட்டப்படி, நாராயண ரெட்டியார் மருகளின்
ஜீவனாம்ச உரிமையை மீறி இவ்வாறு ஒரு கூட்டுக் குடும்பச் சொத்தை, அவர் மட்டும் செட்டில்மெண்ட்
எழுதி வைக்க சட்டப்படி அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. எனவே, அந்த செட்டில்மெண்ட்
பத்திரத்தைக் கொண்டு ராமச்சந்திர ரெட்டியார் உரிமை கோர முடியாது என்கிறார்கள்.
இராமநாதபுரம்
கீழ்கோர்ட் தன்னுடைய தீர்ப்பில் பிரதிவாதிகள் கூற்றை ஒப்புக் கொண்டு, இது மருமகளை ஏமாற்றும்
நோக்கில் அவசரத்தில், கோபத்தில் எழுதிய பத்திரம்தான் என்றும் எனவே அதற்கு சட்ட அங்கீகாரம்
இல்லை என்றும் சொல்லி, ராமச்சந்திர ரெட்டியாரின் வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது.
ராமச்சந்திரன்
அந்த தீர்ப்பை எதிர்த்து இராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டில் 1953-ல் அப்பீல்
செய்கிறார். மாவட்ட நீதிபதி, கீழ்கோர்ட் தீர்ப்பை உறுதி செய்து, ராமச்சந்திரனின் அப்பீல்
வழக்கையும் தள்ளுபடி செய்து விட்டது. அந்த தீர்ப்பில் ஒரு பத்திரம் பெயருக்காக எழுதப்
பட்டிருந்தால், அதில் எழுதப்பட்டுள்ள விபரங்களை விசாரிக்கத் தேவையில்லை என்றும், பெயரளவுக்கு
எழுதி பத்திரம் என்பதாலேயே அது செல்லாது ஆகிவிடும் என்றும் தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது.
“Once
the transction was found to be “nominal”, the plaintiff could not longer
maintain the suit, and the question of legality of the transaction cannot arise
for determination.”
அதையும்
எதிர்த்து ராமச்சந்திர ரெட்டியார், சென்னை ஐகோர்ட்டில் இரண்டாம் அப்பீல் வழக்கை 1954-ல்
போடுகிறார். அந்த இரண்டாம் அப்பீல் வழக்கை அப்போது நீதிபதியாக இருந்த ஜஸ்டிஸ் கிருஷ்ணசாமி
நாயுடு விசாரிக்கிறார். அவரின் தீரப்பு என்னவென்றால், “ஒரு பத்திரம் பெயரளவுக்கு எழுதப்பட்டிருந்தாலும்,
அல்லது அப்படி இல்லையென்றாலும், அது எழுதப்பட்டு, அதன்படி நடைமுறைக்கு வந்துவிட்ட ஒரு
பத்திரத்தை ரத்து செய்துவிட முடியாது. அந்த பத்திரப்படி ராமச்சந்திர ரெட்டியாருக்கு
கொடுத்த உரிமை செல்லுபடியாகும்” என்று ராமச்சந்திர ரெட்டியாருக்கு சாதகமாக தீர்ப்புக்
கூறி விட்டார். “I
am of opinion that the settlement deed was executed and acted upon and the Plaintiff’s
rights under the settlement deed cannot therefore be denied on this ground” என்பது அவரின் தீர்ப்பு.
அவ்வாறு
சென்னை ஐகோர்ட் இரண்டாம் அப்பீல் வழக்கில் ஜஸ்டிஸ் கிருஷ்ணசாமி நாயுடு தீர்ப்புக் கொடுத்து
விட்டாலும், அதை எதிர்த்து லெட்டர்ஸ் பேடண்ட் அப்பீல் என்னும் கடைசி அப்பீல் செய்து
கொள்ள அனுமதியும் கொடுத்து விட்டார். (லெட்டர்ஸ்
பேடண்ட் அப்பீல் என்பது ஐகோர்ட்டின் ஒற்றை நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து இரண்டு அல்லது
அதற்கு மேற்பட்ட பென்ஞ் நீதிபதிகளின் முன்பாக
வரும் LPA
(Letters Patent Appeal வழக்காகும்).
அதன்படி
இந்த வழக்கு அதே சென்னை ஐகோர்ட்டில், இரண்டு நீதிபதிகள் அடங்கிய பென்ஞ்சான (அமர்வு)
ஜஸ்டிஸ் பி.ராஜமன்னார் மற்றும் ஜஸ்டிஸ் ஜெகதீசன் ஆகிய நீதிபதிகள் முன்னர் LPA
வழக்காக விசாரனைக்கு வருகிறது.
இந்த
அமர்வில் வழக்கின் சட்டப் பிரச்சனை மட்டுமே அலசப்படும். வழக்கின் மற்ற பிரச்சனைகளைப்
பற்றிப் பேச மாட்டார்கள்.
இங்கு
என்ன சட்டப் பிரச்சனை எழுப்பபடுகிறது என்றால்: “Whether a widow
of a deceased coparcener in a Hindu Joint family can, without working out her
rights of partition under the Hindu Women’s Rights to Property Act 1937,
interdict an alieantion made by the surviving coparcener of the family on the ground
either that it is a gift and therefore void in law or that it is an alienation
not for necessity or binding purpose?” என்ற சட்டப் பிரச்சனையை விவாதிக்கிறார்கள்.
அதன்படி,
பொதுவாக இந்து கூட்டுக் குடும்பச் சொத்தில், அதாவது இங்கு நாராயண ரெட்டியாரும் அவரின்
மகன் இறந்த திருவேங்கடமும் கூட்டுக் குடும்ப கோபார்சனர்களாக இருந்தார்கள். மற்றவர்களான
இந்த கோபார்சனர்களின் மனைவி மக்கள் இந்து கூட்டுக் குடும்ப உறுப்பினர்கள் ஆவார்கள்.
பொதுவாக இந்து கூட்டுக் குடும்பத்தில் மூத்த ஆண், கர்த்தாவாக (குடும்பத்தை நிர்வகிப்பவராக)
இருப்பார். அவர் கூட்டுக் குடும்பச் சொத்தை தானம், விற்பனை போன்றவற்றைச் செய்யலாம்.
மற்ற உறுப்பினர்களின் அனுமதி தேவையில்லை. ஆனாலும் அது குடும்ப நன்மையைக் கருதியும்,
குடும்பத்தின் அவசரத் தேவைக்கும், குடும்ப பழைய கடன்களை அடைப்பத்றாகவும் மட்டுமே அவ்வாறு
செய்ய முடியும். குடும்பத் தலைவர் என்ற முறையில் தனக்கு அதிக அதிகாரம் இருப்பதாக நினைத்துக்
கொண்டு அவரின் கெட்ட நடவடிக்கைகளுக்காக சொத்துக்களை
விற்பனை தானம் இவைகளைச் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அந்த விற்பனை செல்லாது. மற்ற
குடும்ப உறுப்பினர்கள் அதைக் கேள்வி கேட்கலாம், பாகப் பிரிக்கச் சொல்லி கேட்கலாம்.
இங்கு
இறந்த திருவேங்கடத்தின் மனைவி அலமேலு தன் இறந்த கணவனின் சொத்துரிமையில் இந்து பெண்கள்
சொத்துரிமை சட்டப்படி உரிமை உள்ளவள். அவளுடைய உரிமையை அவளின் மாமனார் பறிக்க முடியாது.
1937-ல்
இந்து பெண்கள் சொத்துரிமை சட்டம் வருகிறது. அதற்கு முன்னர், பெண்களுக்கு கூட்டுக் குடும்பச்
சொத்தில் எந்த பங்கும் கிடையாது. அவர்கள் வாழ்நாள் வரை சாப்பிட்டுக் கொண்டு வாழும்
உரிமை மட்டுமே இருந்தது. 1937 சட்டப்படி, கூட்டுக் குடும்ப உறுப்பினர் இறந்து விட்டால்,
அந்த ஆணின் சொத்தின் பங்கானது, அவனின் விதவை மனைவிக்கு சென்று விடும். அவள், அவளின்
கணவனின் பங்கை தன் வாழ்நாள் வரை ஜீவனாம்ச உரிமையாக வைத்து ஆண்டு அனுபவித்து வரலாம்.
ஆனால் விற்பனை செய்ய முடியாது. அவளின் ஆயுட்காலத்துக்குப் பின்னர் அந்த சொத்து, அந்த
குடும்பத்தின் மற்ற கோபார்சனர்களுக்கு (ஆண்களுக்கு) சென்று விடும். இதுதான் 1937 சட்டம்.
(பின்னர் 1956ல் வந்த இந்து வாரிசு உரிமை சட்டத்தில் இப்படி கிடைக்கும் அவளின் ஆயுட்கால
உரிமையை முழு உரிமையாக மாற்றிச் சட்டம் கொண்டு வரப்பட்டது).
எனவே
இந்த வழக்கில் இறந்த திருவேங்கடமும் அவரின் தகப்பனார் நாராயண ரெட்டியாரும் கூட்டுக்
குடும்ப கோபார்சனர்கள். திருவேங்கடம் இறந்தபின்பு, 1937 சட்டப்படி அவரின் மனைவி அலுமேலுவுக்கு
திருவேங்கடத்தின் பங்கு கிடைக்க வேண்டும். அதை மாமனார் நாராயண ரெட்டியார் யாருக்கும்
எழுதி வைக்க முடியாது. அப்படி இங்கு எழுதி வைத்திருப்பது செல்லாது. அப்படி எழுதி வைத்திருந்தாலும்,
அவளின் உரிமையைக் கேட்கும் உரிமை இல்லாமல் போய்விடாது.
Subba
Rao v. Krishna Prasadam என்ற வழக்கில் இப்படிப்பட்ட 1937 சட்டத்தில்
அவளுக்கு கிடைக்கும் உரிமையைப் பற்றி தெளிவாகத் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. மேலும் Madras
High Court Full Bench judgement in Parappa v. Nagamma என்ற வழக்கில்
இந்த உரிமையைப் பற்றி தெளிவு படுத்தப் பட்டுள்ளது.
The
term “coparcener” under the Hindu law is based upon the twin principles of a
right vested by birth in the male issue only and of unabstructed heritage. மருமகள் கோபார்சனரா என்ற கேள்வியை
விவாதிக்கத் தேவையில்லை. அவள் கோபர்சனர் இல்லை என்ற போதிலும், 1937—ல் வந்த இந்து பெண்கள் சொத்துரிமை சட்டப்படி விதவை மனைவி இறந்த
கணவனின் கூட்டுரிமை பங்கில் உரிமை உடையவள் என்பதால், அவள் கூட்டுக் குடும்பச் சொத்தில்
உரிமை உடையவள் ஆகிறாள் என்றே கருத வேண்டும்.
எனவே
இந்த லெட்டர்ஸ் பேட்டண்ட் அப்பீல் வழக்கை அனுமதிக்கிறோம். ராமச்சந்திர ரெட்டியார் போட்ட
சிவில் வழக்கு தள்ளுபடியாகிறது.
(இந்த
தீர்ப்பு1960-ல் கொடுக்கப்பட்டது. See: AIR 1960 Mad 568
Lakshmi Ammal and others v. Ramachandra Reddiar.)
**
No comments:
Post a Comment