Thursday, June 25, 2020

Mesne Profits - மீன் புராபிட்ஸ்

Mesne Profits மீன் புராபிட்ஸ்

Mesne என்பதை “மீன்” என்று உச்சரிக்க வேண்டும். மீன் புராபிட்ஸ் என்பது கோர்ட்டில், சொத்தின் அனுபவத்தை ஒருவரிடமிருந்து திரும்பப் பெறும் போது, அந்த சொத்தை விட்டு வெளியேறச் சொன்ன பின்னாலும் அதை அனுபவித்து வந்த காலத்துக்கு நஷ்ட ஈடாக கொடுக்கும் (வாடகைப் பணம் அளவுக்கு) தொகையை இந்த பெயரில் சட்டம் சொல்கிறது.

ஒரு வழக்கில், சொத்தின் சுவாதீனமும் (Possession) இந்த மீன் புராபிட்ஸ் தொகையையும் சேர்த்தே கேட்க வேண்டும். சுவாதீனம் மட்டும் கேட்டு வழக்குப் போட்டுவிட்டால், பின்னர் தனியாக மீன் புராபிட்ஸ்-க்கு தனி வழக்குப் போட முடியாது.

மீன் புராபிட்ஸ் (Mesne Profits) என்பதை உருது மொழியில் Wasilat (வசிலத்) என்கிறார்கள். ஒவ்வொரு வழக்கும் Possession with Wasilat என்று கூட்டாகவே தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த மாதிரி வழக்கில், இரண்டு வகையான டிகிரியை கோர்ட் கொடுக்கும். ஒன்று சொத்தின் சுவாதீனத்தை அதன் உரிமையாளர் பெற்றுக் கொள்ளலாம் என்று ஒரு டிகிரி. இது பைனல் டிகிரி. மற்றொன்று, மீன் புராபிட்ஸ் தொகைக்கு ஒரு டிகிரி. இதை அப்போது எவ்வளவு காலத்துக்கு கொடுக்க வேண்டும் என்று உறுதி செய்ய முடியாது. ஏனென்றால், அத்துமீறி இருப்பவர் எப்போது சொத்தை திருப்பிக் கொடுப்பார் என்று சொல்லிவிட  முடியாது. எனவே இந்த மீன்புராபிட்ஸ் டிகிரியை இடைக்கால டிகிரியாகவே கோர்ட் கொடுக்கும்.

The Decree in this case is divisible into two parts: one for possession of land and the other for mesne profits. That part of it which directs possession to be awarded to the decree holder is final. But the other part of it is merely an inerlocutory decree,declaring that the decree holder is entitled to recover mesne profits, and it would become final when the amount of the mesne profits would be fixed by the Court. The decree-holder may apply to the trial Court for such final decree. Although in form it is an application for execution, in reality it is not so.  

இதை இரண்டு வகையான வழக்குகளில் பெற, அந்தச் சொத்தின் உரிமையாளருக்கு உரிமை உண்டு.

முதலாவது: ஒரு சொத்தில் ஒருவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். சொத்தின் சொந்தக்காரர் அவரைக் காலி செய்யச் சொல்லி எழுத்து மூலம் தகவல் கொடுத்து விட்டார். இருந்தாலும் குடியிருப்பவர் தொடர்ந்து காலி செய்யாமல் இருந்து வருகிறார். வேறு வழியில்லாமல், சொத்தின் சொந்தக்காரர், அந்த வாடகைதாரரைக் காலி செய்ய Ejectment வழக்குப் போடுகிறார். இதில் சொத்தின் சுவாதீனத்தை (Possession) கேட்பார். அதைத் தொடர்ந்து, அவர் சட்டத்தை மீறிக் குடியிருந்து வருவதற்குறிய நஷ்ட ஈட்டுத் தொகையையும் கேட்பார். இந்த நஷ்ட ஈட்டுத் தொகையானது, முடிந்தவரை வாடகைத் தொகை அளவுக்கே இருக்கும். இந்த நஷ்ட ஈட்டுத் தொகையே Mesne Profits எனப்படும்.

இரண்டாவது: ஒருவர், அடுத்தவரின் சொத்தில் அத்துமீறி நுழைந்து கொண்டு அதை அனுபவித்து வருகிறார். சொத்தின் சொந்தக்காரர் அவ்வாறு அத்துமீறி நுழைந்தவரிடமிருந்து சொத்தைத் திரும்பப் பெறுவதற்கு, வழக்குப் போடுகிறார். அப்போது சொத்தின் சுவாதீனத்தை (Possession of the property) கேட்பார். அத்துடன், அந்த சொத்தை அவ்வளவு நாளுக்கு அனுபவித்து வந்ததற்கு நஷ்ட ஈடும் கேட்பார். இந்த நஷ்ட ஈட்டுக்குப் பெயர் Mesne Profits.

இந்த Mesne Profits என்பது ஆங்கிலேய சட்ட முறையில் இருந்து வந்தது. Mesne என்பது Demesne என்ற தாய் வார்த்தையில் இருந்து வந்த வேர்ச் சொல். டிமெய்ன் (Demesne) என்பது the land retained by the Lord என்று இங்கிலாந்தில் நிலச்சுவாந்தார் வைத்திருக்கும் நிலத்துக்கு சொல்வர். எனவே மீன் புராபிட்ஸ் என்பதை நில சொந்தக்காரின் வருமானம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

அதாவது, சொத்து வேறு ஒருவரின் கையில் இருக்கும்போது, (அது சட்டப்படி இருந்தாலும், சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமித்து இருந்தாலும்), அந்த நபர் அந்தச் சொத்தில் இருந்த காலம் வரை, அந்த சொத்தின் சொந்தக்காரருக்கு ஒரு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்பதே இங்கிலாந்து நாட்டின் சட்ட முறையாகும். அதைக் கொண்டே இந்திய சட்டங்களும் குறிப்பாக சிவில் நடைமுறைச் சட்டமும் இயங்கி வருகின்றன.

இந்தியாவின் பழைய சிவில் நடைமுறைச் சட்டம் Act No.VIII of 1859. இதன்படி, மீன் புராபிட்ஸ் எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும் கேட்கலாம். அதாவது வழக்குப் போடுவதற்கு முன்னர் எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும் கேட்கலாம். எவ்வளவு காலம் அந்த சொத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தரோ அவ்வளவு காலத்திலிருந்து, அந்த சொத்தை, அதன் உரிமையாளருக்கு ஒப்படைக்கும் நாள் வரை, அந்த நஷ்ட ஈட்டைக் கேட்க  உரிமையுண்டு என்று 1859 சிபிசி சட்டம் அனுமதி கொடுத்து இருந்தது. ஆனால் அதற்குப் பின்னர் வந்த சிபிசி சட்டமான The Civil  Procedure Code 1908 ன்படி இது கட்டுப்படுத்தப் பட்டது. புதிய 1908 சிபிசி—யின்படி (தற்போது நடைமுறையில் உள்ளது) மீன் புராபிட்ஸ் தொகையை வழக்குப் போடுவதற்கு முன்னர் உள்ள மூன்று ஆண்டுகள் மட்டுமே கேட்க முடியும் என்றும், அதற்குப் பின்னர் சொத்தின் சுவாதீனம் பெறும்வரை கேட்கலாம் என்று வரையறுத்து விட்டது.

**


No comments:

Post a Comment